பாவண்ணன்
கல்லுாரித் தேர்வுகளின் முடிவுக்காகக் காத்திருந்த நேரம். நட்பின் இழப்பை வலியுடன் மனம் ஏற்றுக்கொண்ட சமயம். கூட இருந்த நண்பர்கள் அனைவரும் தத்தம் கிராமங்களுக்கும் மாற்று இடங்களுக்கும் பறந்து போய்விட்டார்கள். ஒரே ஒரு நண்பனை மட்டும் தொடர்ந்து பார்த்துப் பேசும் வாய்ப்பு கிடைத்ததில் நான் பெரும் நிம்மதியாக உணர்ந்தேன். நாங்கள் இருவருமே அப்போது புதுச்சேரி காளத்தீஸ்வரன் கோயில் தெருவில் நிறுவப்பட்டிருந்த காந்திஜி இந்தி வித்யாலத்தில் இந்தி கற்றுக்கொண்டிருந்தோம். கட்டுவதற்குப் பணமில்லாத சூழலில் நான் என் பயிற்சியைக் கைவிட முடிவெடுத்தேன். நண்பன் எனக்காக நிறுவனத் தலைமையுடன் பேசி ஒரு வழிசெய்து கொடுத்தான். தொடக்கநிலைத் தேர்வுகள் அனைத்திலும் தமிழக அளவில் நான் முதலாவதாகத் தொடர்ந்து தேறியிருந்தேன். நான் கற்கிற மேல்வகுப்புகளுக்கு மாதக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை. அதற்கு மாற்றாக தினமும் ஒரு மணிநேரம் தொடக்கநிலை வகுப்புகளுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும். இதுதான் அவன் செய்துகொடுத்த வழி.
கற்பிக்கும் வகுப்பு முடிவடையும் வரை அவன் எனக்காகக் காத்திருப்பான். பிறகு இருவரும் கடற்கரைக்குச் சென்று பேசத் தொடங்குவோம். வானத்தின் விளிம்பையோ கடலின் விளிம்பையோ பார்க்க முடியாத இருட்டில் எங்கள் பார்வைகளைப் படரவிட்டு அவரவர்கள் பிரச்சனையையும் கனவுகளையும் பேசுவோம். தன் முடிவுகளைத் தீர்மானமான தொனியில் முன்வைப்பான் அவன். தன் மனவுகள் அனைத்தும் நடந்தே தீரும் என்பதில் அவனுக்கு அசைக்க முடியாத உறுதி இருந்தது.
தொடர்ந்து படிக்க இருக்கும் முதுகலை நிர்வாக வணிகவியல் படிப்பைப்பற்றி ஒருநாள் ஆவலுடன் விவரித்தான் அவன். சிதம்பரத்தில் அல்லது சென்னையில்தான் சேரவேண்டியதாக இருக்குமென்றும் சேர்ந்தபிறகு மறக்காமல் தினமும் நான் கடிதங்கள் எழுதிக்கொண்டிருக்க வேண்டுமென்றும் சொன்னான். நான் தலையசைத்துக்கொண்டேன். வேலைக்குச் செல்வதைப்பற்றியும் எதிர்காலத்தைப்பறற்ியும் அவனிடம் பற்பல திட்டங்கள் இருந்தன. படிப்பைத் தொடர்வதைப்பற்றியோ வேலைக்குச் செல்வதைப்பற்றியோ எந்த முடிவையும் சொல்ல முடியாத அளவுக்குக் குழப்பத்தில் மூழ்கியிருந்தேன் நான்.
கல்வி, வேலையைத் தொடர்ந்து அவன் கனவு திருமணத்தைத் தொட்டது. அவன் கூறிமுடித்த பிறகு வேறு வழியின்றி நானும் என் நிலையை எடுத்துரைக்க வேண்டியதாயிற்று. மாதச் சம்பளமாக ஆயிரம் ரூபாய் பெறும்வரை திருமணத்தைப்பற்றி யோசிக்கக் கூட முடியாது என்றேன். இதைச் சொன்னது 1978 ஆம் ஆண்டில். இரண்டு தம்பிகள், இரண்டு தங்கைகள் கொண்ட குடும்பத்தைத் தாங்கவேண்டிய துாணாக நான் மாற வேண்டிய சூழலெல்லாம் அவனுக்கும் தெரியும். இங்கே குடும்பம் நல்லபடி நடக்க 500 ரூபாயும் எங்கே இருந்தாலும் நான் குடும்பம் நடத்த 500 ரூபாயும் இருந்தால்தான் இதைப்பற்றி யோசிக்க முடியும் என்றேன்.
தேர்வு முடிவுகள் வந்தன. எதிர்பார்த்தைப்போலவே அவன் சிதம்பரம் சென்றான். என்னால் படிப்பைத் தொடர முடியாமல் போனது. புதுச்சேரியிலும் தொடர்ந்து தங்கியிருக்க முடியாத சூழல் உருவாக கிராமத்துக்குத் திரும்ப நேரிட்டது. நுாலகமும் ஏரிக்கரையும் ரயில்வே ஸ்டேஷனுமே என் உலகமானது. போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பம் அனுப்பிவிட்டு தேர்வுக்குத் தயாரித்துக்கொண்டிருந்தேன். உள்ளூரில் இருந்த மருந்துக்கடைக்கு ஆள் தேவைப்படுகிறதென்றும் மாதம் 250 ரூபாய் தருவர்கள் என்றும் செல்லி என்னைப் போகுமாறு துாண்டிக்கொண்டே இருந்தார் என் அப்பா. என் மறுப்பு அவரை மேலும் சீற்றத்துக்குள்ளாக்கிப் பேச்சு வார்த்தையை நிறுத்த வைத்தது. அழைக்கும் நேரத்துக்கு நேர்காணல்களுக்குச் செல்ல முடியாமல் போகும் என்பதும் ஆழ்ந்த தயாரிப்புக்குத் தடையாக இருக்கும் என்பதுமே என் மறுப்புக்குக் காரணம். ஆனால் அதை அப்பா நேர்மாறாகப் புரிந்துகொண்டார். நல்ல வேளையாக இந்த ஊமைப்போர் வெகுகாலத்துக்குத் தொடராமல் அஞ்சல் நிலையத்தில் வேலை கிடைத்தது. அடிப்படைச் சம்பளம் ரூ.260. மொத்தச் சம்பளம் ரூ.410. அங்கே ஓராண்டுக்காலம் இருந்தேன். பிறகு அங்கிருந்து தொலைபேசித் துறைக்கு வந்தேன். அங்கேயும் அதே சம்பளம். வீடு சற்றே நிம்மதியடையத் தொடங்கியது. என் கனவான ஆயிரம் ரூபாய்ச் சம்பளம் எங்கோ தொலைவில் இருந்தது. மேலும் தேர்வுகள், மேலும் தயாரிப்புகள் என்று என் கவனத்தைக் குவிக்கத் தொடங்கினேன். ஒன்றிரண்டாண்டுகளில் என் கனவு மெய்ப்பட்டது. ஆனால் நான் தமிழ்ச்சூழலை விட்டே வெளியேற வேண்டியிருந்தது. கர்நாடகத்தில் இளநிலைப் பொறியாளர் பணி. தொடக்கத்தில் என் சம்பளம் ரூ.910. ஆயிரத்தைத் தொட மேலும் இரண்டாண்டுகள் பிடித்தன. அதற்கப்புறம்தான் என் திருமணத்தைப்பற்றிப் பேச மற்றவர்களை அனுமதித்தேன்.
ஐந்தாறு ஆண்டுகள் உழைப்பைத் தொடர்ந்து என் கனவுப்புள்ளியைத் தொட முடிந்ததைப் பெரும்பாக்கியம் என்றே சொல்லவேண்டும். பத்துப் பதினைந்து ஆண்டுகள் தொடர்ந்து உழைத்தும்கூட கனவின் அருகில் நெருங்க முடியாத பலரைப் பார்த்திருக்கிறேன். பாதிக்கும் மேலான மனிதர்களின் கனவுகள் நிறைவேறாத கனவுகளே. நாற்பதைத் தொடும் வயதிலும் தன் கனவை நெருங்க முடியாத சலிப்புடன் வெறுப்புடனும் நடமாடும் என் நண்பர்கள் பலரைச் சந்திக்கும் போதெல்லாம் என்மனத்தில் பரவும் துக்கத்தைத் தாங்கிக்கொள்ள இயல்வதில்லை. அப்போதெல்லாம் மிகக்கடுமையான குற்ற உணர்வால் என்மனம் சுருங்கிவிடும். பலவிதமான மானுடக் குமுறல்களுக்கும் மனச்சிதைவுகளுக்கும் ஆளுமை மாற்றங்களுக்கும் இந்த நிறைவேறாமையே காரணமாகும்.
நிறைவேறாத கனவால் மனம் ஒடுங்கிப்போகும் நண்பர்கள் பார்வையில் படும்போதெல்லாம் மனத்தில் மற்றொரு உருவமும் தோன்றுவதுண்டு. அது இலங்கை எழுத்தாளர் வ.அ.இராசரத்தினம் தன் கதையில் தீட்டிக்காட்டிய தோணிக்கார இளைஞனுடைய உருவம்.
சிறுவனின் குரலாகத் தொடங்கி இளைஞனின் குரலாக முடிவடையும் அக்கதையின் பெயர் ‘தோணி ‘. மீனவக் குடும்பத்தில் பிள்ளையாகப் பிறந்தவன் அச்சிறுவன். அவன் அப்பா கோழிகூவும் முன்னமேயே எழுந்து தோணியுடன் கடலுக்குச் சென்று விடுவார். தாய் வெளிவேலைகளைக் கவனிக்கச் சென்றுவிடுவாள். அம்மாவும் அப்பாவும் வீட்டில் இல்லாத நேரங்களில் ஆடிக்கழிப்பான் சிறுவன். முகடு பிய்ந்த கூரையின் ஊடாகத் துள்ளிப்பாய்ந்து வெள்ளித்துண்டுகளாக நிலத்தில் விழும் வட்ட ஒளியைக் கைகளால் பற்றிவிட முயற்சி செய்வான் சிறுவன். அந்த ஒளி அவன் புறங்கையில் விழும். உடனே அடுத்த கையை உயர்த்தி மூடுவான் சிறுவன். ஒளி மீண்டும் புறங்கையில் விழும். அந்த ஒளியைக் கையால் பற்றிவிடும் ஆவலில் மீண்டும் மீண்டும் கைகளை உயர்த்திக்கொண்டே செல்வான் சிறுவன். கூரைக்கூடாக ஒளி பாய்ந்துவரும் துவாரம் கைக்கு எட்டமுடியாத உயரத்தில் இருப்பதால் அச்சிறுவனால் அந்த எல்லைவரை செல்ல இயல்வதில்லை. கதையின் தொடக்கத்தில் ஒரு விளையாட்டுக் குறிப்பைப்போல இடம்பெறும் இவ்வரிகள் கதையின் ஆதாரப்படிமமாகவும் தொழிலாளர் வாழ்வின் படிமமாகவும் விரிவுகொள்ளும் சாத்தியப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன.
சிறுவனுடைய தந்தையும் பிறகு சிறுவனும் மனத்தில் மிகப்பெரிய கனவொன்றைச் சுமந்தவர்களாக இருக்கிறார்கள். ஒரு தோணியைச் சொந்தமாக வாங்குவதுதான் அக்கனவு. செய்யும் முயற்சிகள் ஒவ்வொன்றும் பலனற்றுப் போகின்றன. இறுதிவரையில் அவர்கள் வாழ்வில் அக்கனவு நிஜமாவதே இல்லை. விளையாட்டில் பிடிக்க முடியாத ஒளியைப்போல. தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கனவைச் சுமந்தவர்களே. சிலருக்கு தோணிக்கனவு. சிலருக்கு வீடுவாங்கும் கனவு. சிலருக்குச் சொந்தத் தொழிலுக்கான பொருட்களை வாங்கும் கனவு. காலம் காலமாகவே இக்கனவுகளை அவர்கள் நெஞ்சில் ஏந்தியபடி இருக்கிறார்கள். ஆனால் வாழும் சூழல் இக்கனவுகளைச் சிதைத்துக் கூழாக்கிவிடுகின்றன. நிறைவேறும் அறிகுறிகள் தென்படுவதே இல்லை. நிறைவேறாத அக்கனவுகளின் ஒட்டுமொத்தமான படிமமே தோணி.
தந்தை பயன்படுத்தும் தோணியைத் தம் சொந்தத்தோணி என்றுதான் முதலில் நினைக்கிறான் சிறுவன். ஒருநாள் அவனும் தந்தையுடன் ஓடைக்கரைகை¢குச் செல்ல நேர்கிறது. கோரைப்புற்களிடையே அத்தாங்கை வீசி இறால்பிடிக்கத் தொடங்குகிறார். பறி நிறைய இறால் பிடித்ததும் சமுத்திரத்தை நோக்கிச் செல்கின்றனர். துாண்டிலில் இறாலைக்குத்திக் கடலுக்குள் எறிகின்றனர். ஆளுக்கு ஐந்து கரங்கண்ணிப்பாரை மீன்களைப் பிடிக்கின்றனர். அவற்றைப் பார்த்ததும் அம்மா கொள்ளும் சந்தோஷத்தைப் பற்றியும் சந்தையில் அவற்றுக்குக் கிடைக்கும் விலையைப் பற்றியும் அப்பணத்தைக் கொண்டு வாங்க நினைக்கும் பொருட்களைப் பற்றியும் பகல்கனவில் ஆழ்கிறான் சிறுவன். ஆனால் கரையை நெருங்கியதும் மீன்களை வேறொருவரிடம் போட்டுவிட்டு வெறுங்கையுடன் திரும்பும் தந்தையைப் பார்த்து ஏமாற்றம் கொள்கிறான். தோணிக்குச் சொந்தக்காரன் அவன்தான் என்றும் கடனைக் கழித்துக்கொள்வதற்காக மீன்களைத் தரவேண்டியது அவசியமென்றும் சொல்லும் தந்தையின் வார்த்தைகளைக் கவலையுடன் கேட்கும்போதுதான் தாம் தோணியற்றவர்கள் என்கிற உண்மை நிலையைப் புரிந்துகொள்கிறான். அப்போதுதான் தோணிவாங்குவது ஒரு கனவாக அவன்மனத்தில் முளைவிடுகிறது.
சிறுவன் இளைஞனாக வளர்கிறான். அப்பாவின் வழியிலேயே கடன்வாங்கி வாழ்ந்து கடனை அடைக்க இரவல்தோணியில் கடலுக்குள் சென்ற மீன்பிடித்து வந்து தருகிறான். அப்போதும் அதே பழைய கனவு அவன் நெஞ்சில் வளைய வருகிறது. என்றாவது ஒருநாள் தன் கனவு நிறைவேறும் என்கிற நம்பகேகையில் நாட்களை ஓட்டுகிறான். தன் அவலநிலையை எண்ணி, தான் மணக்க வேண்டிய பெண்ணைக்கூட தியாகம் செய்கிறான். நிறைவேறாத கனவுடன் இப்போது நிறைவேற்றிக்கொள்ளாத காதலின் வேதனையும் சேர்ந்துகொள்கிறது.
கதையில் இடம்பெறும் ‘தோணி வாங்குவது ‘ என்னும் கனவை ஒரு குறியீடாக எடுத்துக்கொள்ளாலாம். ஒரு தையல் தொழிலாளி தனக்கென்று ஒரு தையல் எந்திரத்தை வாங்க நினைப்பது, வாடகைக்கு ஆட்டோ ஓட்டுபவன் சொந்தமாக ஒரு ஆட்டோ வாங்க நினைப்பது என இதன் பொருளை விரிவாக்கியபடியே செல்லலாம். தன் நிலையைச் சற்றே உயர்த்திக்கொள்வது என்பதுதான் இதன் பொருள். இருக்கும் நிலையத்திலிருந்து ஒரே ஒரு அங்குலமாவது உயர்ந்து வாழும் ஆவல். ஆனால் எதார்த்தத்தில் பாதிக்கும் மேற்பட்டவருக்கு இந்த ஆவல் நிறைவேறுவதே இல்லை. எல்லாருக்கும் ஜாண் ஏறினால் முழம் சறுக்கும் வாழ்க்கைதான். உழைக்க ஆவலிருப்பவர்களுக்குப் போதிய வழிகளில்லை. ஓரளவு வழியிருந்து உழைப்பவர்களுக்கு உயர்வதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. இன்றைய தேதியில் ஒரு குமாஸ்தாவாக ஒரு அலுவலகத்தில் காலெடுத்து வைப்பவன் முப்பதாண்டுகள் கழித்து ஓய்வு பெறும்போது சீனியர் குமாஸ்தாவாக மட்டுமே வெளியேற முடியும். ஒரு தொழிற்சாலையில் ஒரு டர்னராகவோ பிட்டராகவோ அடியெடுத்து வைப்பவன் வெளியேறுகிற வரைக்கும் அதுவாகவே இருக்க வேண்டியதுதான். கூலிக்காரர்கள் நிலையைப்பற்றிச் சொல்லவே தேவையில்லை. மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட உழைக்கும் மக்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது. மாறிவரும் தொழில் கலாச்சாரச் சூழலில் எதிர்காலத்தில் இந்நிலை மேலும் மேலும் மோசமடைவதற்கான வாய்ப்புகளே அதிகமாகத் தோன்றுகிறதே தவிர வெளிச்ச்முட்டும் நம்பிக்கை ரேகைகள் குறைவாகவே காணப்படுகின்றன. காலம் மாறினாலும் சூழல் மாறினாலும் ‘தோணி ‘ சிறுகதை இன்னும் நமக்குப் பொருந்திவரக் கூடியதாகவே இருக்கிறது.
*
கிழக்கிலங்கையின் மூத்த எழுத்தாளர் வ.அ.இராசரத்தினம். இலக்கிய நண்பர்களால் அன்புடன் ‘வனாஅனா ‘ என்று அழைக்கப்படுபவர். ‘தோணி இராசரத்தினம் ‘ என்று அவர் எழுதிய கதையின் பெயரையே அடைமொழியாக்கி அழைப்பவர்களும் உண்டு. கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் என எல்லாத்துறைகளிலும் தடம்பதித்தவர். ‘கிரெளஞ்சப்பறவைகள் ‘ இவருடைய முக்கிய நாவல். ‘தோணி ‘ என்னும் இச்சிறுகதை கொழும்பில் இருந்து அரசு வெளியீடாக 1962 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘தோணி ‘ என்னும் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.
paavannan@hotmail.com
- ‘எல்லாமே கூற்று! ‘
- மீண்டும் பசுமை..
- லண்டனுக்கு வெகு அருகில் மிக மலிவாக – உரைவெண்பா
- நீ
- நிலையற்ற வாழ்வும் நிறைவேறாத கனவும் (வ.அ.இராசரத்தினத்தின் ‘தோணி ‘- எனக்குப் பிடித்த கதைகள்-53)
- கூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள் [Russian VVER-1000 Reactor]
- அறிவியல் துளிகள்-19
- முற்றுப் புள்ளியாகாது முரன்பாடுகள்
- வஞ்சம்
- நசுக்கப்பட்ட ஆல விதைகளில்…
- கனவாய்…
- சுடும்வரையில் நெருப்பு…
- ‘நாளை ‘ வரும்…
- எழுது ஒரு கடுதாசி
- ஆலமரம்.
- நம்பு
- பன்முகத் தன்மை (pluralism) பற்றி
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 16 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான
- அணுஉலைகளுடன் பல்குத்தும் துரும்பையும் குறித்து: 3 பாரதத்தில் சாண எரிவாயு தொழில்நுட்பத்தின் பரிணாமமும் பரவுதலும்
- நினைத்தேன்…சொல்கிறேன். கூத்தணங்கும், கருணைத் தம்பிரானும் பற்றி
- போர் நாட்குறிப்பு
- கடிதங்கள்
- The Fifth Annual Cultural Event -WORLD TAMIL ARTS AND CULTURAL ORGANIZATION -JAMAICA, NEW YORK 11432.
- அயோத்தி -அகழ்வாராய்ச்சி -அமெரிக்கா இராக் மற்றும் சில கக்கூஸ்கள்
- யுத்தம்
- வாயு – அத்தியாயம் ஆறு (இறுதிப்பகுதி)
- உடைந்த மனிதனும் ‘உடைந்த காலும் ‘
- பியர் ரிஷார்