நிறைய அமுதம். ஒரு துளி விஷம். வைரஸின் கவிதைகள் எனது பார்வையில்.

This entry is part [part not set] of 42 in the series 20110508_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


தகிதா பதிப்பகம் இந்த வருடம் வெளியிட்ட பத்து நூல்களில் ஒன்று கவிஞர் வைரஸின் நிறைய அமுதம். ஒரு துளி விஷம். கல்லூரி மாணவனான வைரஸின் கவிதைகளில் இளமை மிளிர்கிறது..பதிப்பாளர் மணிவண்ணன் கூறியபடி படிக்கும் காலத்திலேயே படைக்கும் ஆற்றல் பாராட்டுதலுக்குரியதுதான். தன் தந்தை., தாய்., சகோதரன்., சகோதரிக்கு இந்த நூலை அர்ப்பணம் செய்திருக்கிறார் கவிஞர். நூலின் விலை ரூபாய் 50/-

”என் சமூக சூழ்நிலைகள் விஷமாக இருந்தபோதும், அதனையே உணர்ச்சியால் கடைந்து கடைந்து அமுதமாக்கி இருக்கிறேன். சில நேரங்களில் அந்த அமுதமே அளவுக்கு மீறி விஷமாகவும் மாறி இருக்கலாம் “ என்று தன் முன்னுரையில் குறிப்பிடுகிறார் வைரஸ்.

கற்பகம் பல்கலைக் கழக ஆசிரியப் பெருமக்களுக்கும்., நீலகிரி வாழ் மக்களுக்கும்., நிறைய நண்பர்களுக்கும் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

இன்றைய கல்லூரி இளைஞர்களின் பிரதியாய் இருக்கும் வைரஸின் கவிதைகள் காதல்., அன்பு., சமூகப் பார்வை ., இயற்கை., குழந்தைத்தொழிலாளிகள்., பெண் பாலியல் தொழிலாளிகள்., நிலவு., முத்தம்., அம்மா., திருவிழா., தெருநாய்கள்., பூனைகள்., மதப்போர்., நான் என பல தலைப்புகளில் இளைய சிந்தனையோடு கூடிய கவிதைகள்..

இளைஞர்களுக்கான ஒரு மேம்போக்கான செல்போன் கலாச்சாரத்தில் கட்டுண்டு அலையாமல் தன் எழுத்து மூலம் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எழுச்சியோடு எழுதபட்ட சில கவிதைகள் ஈர்த்தன.

“சிறகுகளின்றி அலையும்
சிகப்பு பட்டாம் பூச்சிகள்
சிகரங்களை எண்ணுவது
சிக்கலானது. “

நாவினால் இட்ட சொல் எனும் விதை வளர்ந்து வேரோடிப் போவதையும்., காதல் என்பது ஒரு உள்ளிருப்புப் போராட்டமாகவும்., இளமையில் தாடி வியாதியைக் களையச் சொல்வதும்., மரத்தின் மரண வாக்குமூலமும்., வித்யாசம்.

காதல் வயப்படாத இளைஞர்கள் உண்டா என்ன. அது வசந்தகால பருவம் அல்லவா. காதல் உணர்வுகள் முகிழ்க்க கவிதைகள் அமிர்தமாய் பெருகுகின்றன.

நூலகத்தில்.,

“ ஏன் என் எதிரே அமர்கிறாய்
உனக்குத் தெரியாதா..
எனக்கு
எதிர்ப்பு சக்தி இல்லையடி..

நீ
இமைகளைக் கவிழ்க்கையில்
நான்
இதயம் நிமிர்கிறேன்.

ஒரு தவத்தை விடக்
கொடியது
அழகியின் முன்னால்
அமைதியாக இருப்பதுதான்.

சற்று நேரத்தில்
நீ பறந்து போய் விடுவாய்.
அந்த வெற்று நேரத்தில்
நான் இறந்து போய் விடுவேன். ” என்றும்

பொம்மை பற்றி.,

“ தயவு செய்து
குழந்தைகளை அடிக்காதீர்கள்.
பொம்மைகளுக்கு
வலிக்கிறது. “

விலை மகளிர் பற்றியும் கவலை மீதூர

“வாழும் போதே
உடல்தானம் செய்த
தியாகிகள் “ எனவும் குறிப்பிடுகிறார்.

இவரின் கவிதைகளில் மிகப் பிடித்தது., எல்லைச்சாமி கவிதை.. இராணுவத்தில் காவலாய் இருக்கும் வீரர்களை சிறப்பிக்கும் கவிதை.

முதிர்கன்னி பற்றிய கவிதையில்

”ஆளாகி நாளாகி போச்சு – இளமை
தூளாகி வீணாகி போச்சு “

”பொண்ணா பொறந்தும் பயனென்ன
கன்னி இன்னும் ருசிக்கலையே
உடம்பெ வித்துப் பொழக்கிறதுக்கும்
ஊருக்கு இன்னும் பசிக்கலையே..” என படிக்கும் போது மனம் வலிக்கிறது.

அரசு பள்ளிகள் பற்றி

”அரசு பள்ளியும்
அன்னைதான் .
அதனாலதானோ
அனாதையாகி விட்டது “ என்று கேள்வி எழுப்பும் போது சொல்ல நமக்கு பதில் இல்லை. ஆங்கில வழிக் கல்விப் பள்ளியில் அனைவரும் பிள்ளைகளைக் கொண்டு சேர்க்கும் போது குறைந்து கரைந்து கொண்டே வரும் அரசுப்பள்ளியின் நிலை வருத்தத்திற்குரியது.

நிலவு., இரவு., மழை., மரம்., ., காதல் தோல்வி ., ஒரு தலைக்காதல்., உடல் சார்ந்த காமம் பற்றிப்பேசும்போதே கைபேசியின் தீமைகள் தெருநாய்களை திருமணம் செய்வதை எள்ளுதல்.,மின்சாரமற்ற இரவை சுடுகாடு எனல்., நான் என்பது அனுபவம் எனல் என வித்யாசமான கவிதைகளும் அநேகம்.

கிராமப்புற பேச்சு வழக்கிலான கவிதைகள் சுவாரசியம்.

நான் பேசும்
சொற்பொழிவுகள்
என் சொற்ப நிலைதான் என்று வைரஸே சொல்வது போல வாழ்க்கையில் இன்னும் நிறைய அனுபவங்கள் காத்திருக்கிறது.. அனைத்தையும் அழகான கவிதைகளாக்குங்கள் வைரஸ். மணிவண்ணன் சொல்வது போல ”எழுதுகோல் ஆயுதம் ஏந்தி., கவிதை க்ரீடங்களைச் சூடி., இலக்கிய சாம்ராஜ்ஜியத்தில் கவிதை இளவரசனாக கம்பீரமாக களமிறங்கி இருக்கிறார் வைரஸ்.” இன்னும் கவிதை பேரரசனாக வாழ்த்துக்கள் வைரஸ்.

Series Navigation

தேனம்மை லெக்ஷ்மணன்

தேனம்மை லெக்ஷ்மணன்