வெங்கட் சாமிநாதன்
உடையாளூர் தன் 19-ம் நூற்றாண்டு சூழலையும் மீறி 20-ம் நூற்றாண்டின் 1940-க்களின் தமிழ் வாழ்க்கைக் கூறுகள் சிலவற்றைத் தனக்குப் பெற்றுக்கொள்வதில் எப்படியோ வெற்றி அடைந்தது என்று தான் சொல்லவேண்டும். தபால் அலுவலகம் போகவேண்டியிருந்தால் மூன்று மைல் தொலைவில் உள்ள வலங்கிமானுக்குத் தான் நடை போடவேண்டும் என்று சொன்னேன். ஆனால் எப்படியோ தமிழர் வாழ்க்கையில் இன்றியமையாத அம்சங்களான ஆனந்த விகடன், கல்கி பத்திரிகைகளை உடையாளூர் தனக்கு மறுத்துக் கொள்ளவில்லை. அவை கிடைத்தன. எப்படி என்று சொல்ல இப்போது எனக்கு நினைவில் இல்லை. எங்கள் ஊரிலும் ஒரு சிறிய வாசக சாலை. ஊருக்கு ஏற்ற எளிமை கொண்டது அது. உடையாளூருக்கே வந்த ஒரே ஒரு ஆனந்தவிகடனும் கல்கி பத்திரிகையும் எங்கள் வீட்டுக்கு தவறாமல் கும்பகோணத்தில் வெளிவந்த அடுத்த நாள் வந்து விடும். எங்கள் ஊர வாசக சாலைக்கு வந்த பத்திரிகைகள் இவை இரண்டு மாத்திரமே. குமுதம் அப்போது இன்னம் தமிழ் நாட்டுக் கடைகளில் தொங்கத் தொடங்கவில்லை. எங்கள் வீட்டுக்குவரக் காரணம், என் அப்பா தான் வாசகசாலையில் பொறுப்பாளர், செயலாளர், பொருளாளர் எல்லாம். எங்கள் வீட்டுக்கு அடுத்த வீடு காலி வீடு. ஆனால் அதன் உரிமையாளர், வெளியூரில் எங்கோ இருப்பவர் எப்போதாவது வருவார். அவர் மட்டும். அதற்கும் அடுத்த வீடும் காலி வீடு. அது வீடல்ல. திண்ணையற்ற ஒரு கூடாரம். நாட்டு ஓடு வேய்ந்த ஒரு கூடம், கதவைத் திறந்தால், அக்கூடம் விரியும். அதில் ஒரு அலமாரி. ஒரு பெஞ்ச் இருக்கும். அந்த அலமாரியில் தான் பழைய ஆனந்த விகடன், கல்கி பத்திரிகைகள் அடுக்கி யிருக்கும். அதோடு, தொடர்கதைகள் முடிவுற்றால் அவற்றைத் தொகுத்து பைண்ட் செய்து பத்திரமாக அடுக்கு வைத்திருப்பார் அப்பா. இந்த காலி வீடு தான் எங்கள் ஊர் வாசகசாலை.
பத்திரிகை வந்ததும் அதை வாங்க நான் ஓடுவேன். முதலில் படிப்பது நானா அம்மாவா என்பது சமயத்தைப் பொறுத்தது. அம்மா எல்லா பத்திரிகைகளையும் வெகு ஆர்வமாகப் படிப்பாள். தான் தான் முதலில் படிக்கவேண்டும் என்று என்னுடன் போட்டி போடுவாள். ஆக நிலக்கோட்டையில் தொடங்கிய ஆனந்த விகடன், கல்கி பித்து, எதிர்பாராத ஆச்சரியமாக உடையாளூரிலும் தொடர்ந்தது. அங்கு இருக்கும் போது தான் லட்சுமியின் லட்சியவாதி, கல்கியின் பொன்னியின் செல்வன் எல்லாம் தொடராக வரத்தொடங்கின என்று நினைக்கிறேன். ஒரு வேளை அது கல்கியின் அலை ஓசையாக இருக்கலாமோ என்னவோ. அந்நாட்களில் இவ்விரண்டைத் தவிர வேறு வெகுஜனப் பத்திரிகைகள் எதுவும் இருந்ததில்லை. காவேரி, கலைமகள் போன்ற பத்திரிகைகள் இருந்தன தாம் ஆனால் அவை சாதாரண மாக எல்லோரும் படிக்கும் பத்திரிகைகளாக இல்லை. காவேரி பத்திரிகை கும்பகோணத்திலிருந்தே பிரசுரமாகி வந்தது. நான் பாணாதுரை ஹை ஸ்கூலுக்குப் போகும் வழியில் தான் அந்த பத்திரிகையில் அலுவலகம் இருந்தது. என் வகுப்புத் தோழன் ஷண்முகம் அதில் அவன் கவிதையும் கட்டுரையும் வந்திருப்பதைக் காட்டி அவன் மூலம் தான் காவேரி பற்றி நான் தெரிந்து கொண்டேன்.
அப்பா பத்திரிகைகளுக்குப் பொறுப்பாளராக இருந்தாதே ஒழிய பத்திரிகைகளில் அதிகம் ஆர்வம் காட்டியதில்லை. ஆகவே அதிகம் தலையிடுவதில்லை. அவருக்கு இந்த தொடர்கதைகளில் எல்லாம் ஏதும் ருசி இருந்ததில்லை. அவரிடம் ஒரு பொறுப்பு தரப்பட்டதால் அதை நன்றாகச் செய்யவேண்டும் என்ற அளவில் தான் அவர் ஈடுபாடு அதில் இருக்கும். அதிலும் அவர் படித்தது கிரந்த எழுத்துக்களில். தமிழ் எழுத்துக்களும் தெரியும் தான். வீட்டில் தர்ம சாஸ்திரப் புத்தகங்களோடு, காளிதாசனின் ரகுவம்சமும், எல்லாமே கிரந்த எழுத்துக்களில் அச்சிடப்பட்டு இருந்ததைப் பார்த்திருக்கிறேன். இதெல்லாம் கூட பாடசாலையில் சொல்லிக் கொடுப்பார்களா என்று இப்போது அது பற்றி எழுதும் போது தோன்றுகிறதே ஒழிய அப்போது இது பற்றியெல்லாம் நினைத்துப் பார்த்ததில்லை.
இதையெல்லாம் படிக்கும்போது நான் ஏதோ சிறு வயதிலிருந்தே ஒரு பெரிய படிப்பாளியாக, அறிவு நிறைந்த சிறுவனாக இருந்தேன் என்ற அபிப்ராயத்தைச் சிலர் பெறலாம். இந்த விவரங்களில் ஏதும் சிறப்பு இல்லை. சாதாரண விவரங்கள் தான். அத்தோடு நான் வகுப்பில் அமைதியாக இருந்து தன் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டவன். வகுப்பில் ஓரு பையன் என்னிடம் கோபம் கொண்டால் இங்கிலீஷில் பேச ஆரம்பித்து விடுவான். நன்றாகவே இயல்பான லாகவத்துடன் பேசுவான். நான் பதில் சொல்லத் திணறிப் போவேன். பேசாமல் இருப்பது தான் உத்தமம் என்று முடிவுக்கு வரும் புத்திசாலித்தனம் என்னவோ அப்போதே என்னிடம் படிந்திருந்தது. இப்படித்தான் ஹிந்தி வகுப்பிலும். என் வகுப்பில் இருந்த ஆறு பெண்களும் ஹிந்தி வகுப்பில் ஆஜர் ஆனார்கள். இது எப்படி பெண்களுக்கு உகந்த பாடம் ஆயிற்று என்பது எனக்குப் புரிந்ததில்லை. தையல், எம்ப்ராய்டரி மாதிரி ஹிந்தியும் பெண்கள் படிப்பதற்கான பாடமோ என்று தோன்றும். என்னைத் தவிர இன்னொரு பையன், மிக அழகானவன், நல்ல உயரமும் ஒரு கண்ணிய தோற்றமும் கொண்டவன். வீரராகவன் என்பது பெயர். சென்னைக்கு நேரு வருகிறார் என்று பள்ளியிலிருந்து விடுமுறை கேட்டு சென்னை சென்று நேருவைப் பார்த்துவிட்டு வந்தவன். அதனாலேயே, ஒரு பெரிய அட்டகாசமான வீர சாகஸ காரியத்தைச் செய்த சாதனையாளன் என்ற பிம்பத்தை என்னில் அவன் பதித்துவிட்டிருந்தான். ஒரு நாள் அந்த பெண்கள் வகுப்பில் ஹிந்தி ஆசிரியருடன் பேசிக்கொண்டிருந்தனர். அதில் ஒருத்தி துளசி தாசரின் ராமசரித் மானஸ் புத்தகத்தை வீட்டிலிருந்து எடுத்து வந்து ஹிந்தி ஆசிரியருக்குக் கொடுத்தாள். அதைப் பற்றி ஹிந்தி ஆசிரியரும் இரு பெண்களும் பேசிக்கொண்டிருந்தது என்னில் ஒரு பெரிய பிரமிப்பையே உண்டாக்கிவிட்டது. இதுகளுக்கு என்ன புரியும்? அது என்ன பாஷை, ஹிந்தியா, அவதியா என்று நினைப்பேன். எதற்காகச் சொல்கிறேன் என்றால், இப்படி சிலரைப் பார்த்து எனக்கு மிகவும் மலைப்பாக இருக்கும். அப்போது ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் எதுவும் தொடங்கப் படவில்லை. பின்னர் தான் வரவிருந்தது. கும்பகோணத்தில் தான் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. கும்ப கோணம் காந்தி பார்க்கில் தான் அந்த வெற்றி விழாக் கூட்டம் நடந்தது. அதற்கு திராவிட கழகத் தலைவர் எல்லோரும் வந்திருந்தார்கள். அதில் கருணாநிதி இல்லை. அப்போது அவர் தலைவர் ஸ்தானத்தை அடைந்திருக்கவில்லை. அந்தக் கூட்டத்தின் பேச்சுக்களைக் கேட்கவேண்டும் என்றே நான் உடையாளூரிலிருந்து கும்பகோணம் வந்திருந்தேன்.
உடையாளூருக்குப் படிக்க வந்த முதல் சில மாதங்களிலேயே பல சம்பவங்கள் ஒன்றையொன்று தொடர்ந்து அடுக்கடுக்காக நடந்துவிட்டன. நிலக்கோட்டை மாமி வருஷத்தில் பாதி நாட்கள் நிலக்கோட்டையிலும் பாதி நாட்கள் தன் பெற்றோரிடமும் கழிப்பாள் என்று சொன்னேனே. நான் உடையாளூருக்குக் கிளம்பிய போது மாமி மதுரையில் இருந்தாள். உடையாளூருக்கு வந்த சில மாதங்களுக் குள்ளேயே மாமி உடம்பு சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்ததாகவும் ஆனால் உடம்பு குணமாகாமல் இறந்து விட்டதாகவும் ஒரு கார்டு வந்தது மாமாவிடமிருந்து. இது எனக்கு துக்கம் தந்த இழப்பு. மாமியின் சண்டைகள் எல்லாம் மாமாவுடனும் பாட்டியுடனும் தான். எங்களிடம் அவள் மிக பிரியமாக இருந்தாள். அதிலும் ரொம்ப சின்ன வயசிலேயே காலமாகிவிட்டது ஒரு துக்கம். மாமிக்கு 27-28 வயசு தான் இருக்கும் அப்போது. கடைசிக் குழந்தைக்கு ஒரு வயது தான் இருக்கும். மாமா அதன் பிறகு கல்யாணம் செய்துகொள்ளவில்லை. நான்கு குழந்தைகளை வளர்க்கும் பொறுப்போடு தாம்பத்திய வாழ்க்கை வாழ்ந்த வரை அவருக்கு எவ்வித சந்தோஷந்த்தையும் கொடுக்கவில்லை. எப்போதும் பணப் பற்றாக்குறை. பாட்டியும் மாமியும் சுமுகமாக இருந்த நேரங்கள் மிகவும் குறைவு. இடையில் நான் உடையாளூரிலிருந்து நிலக்கோட்டைக்கு விடுமுறையில் சென்ற ஆரம்ப காலத்தில், மாமாவுக்கு பெண் கொடுக்க வந்தவர்களை நான் பார்த்திருக்கிறேன். மாமா அவர்களை அதிகம் பேசவிடுவதில்லை. கல்யாணம் செய்து கொள்வதாக எண்ணமே இல்லை என்று நிர்தாக்ஷண்யமாகச் சொல்லி அவர்களை அனுப்பி விடுவார். மாமி இறந்த போது மாமாவுக்கு 37 வயது இருக்கும். அது காறும் வாழ்ந்த வாழ்க்கை அவருக்கு அவ்வளவு விரக்தியைத் தந்துவிட்டது ஒரு சோகம் தான். ஆனால் அவர் எடுத்த முடிவு தான் அவரைப் பொறுத்தவரை சரியானது என்பது மட்டுமல்லாமல் நடைமுறைச் சாத்தியமானது மாகும். இருப்பினும் இப்போது அது பற்றி நினைத்துப் பார்க்கும் போது, வாழ்க்கை அவருக்குத் தந்தது எதுவும் இல்லை என்ற எண்ணம் வேதனையானது.
என் இரண்டாம் தங்கை, வயது 8 இருக்கும். லக்ஷ்மி என்று பெயர். திடீரென்று மஞ்சள் காமாலையால் பீடிக்கப்பட்டாள். ஊரில் இருந்த நாட்டு வைத்தியர் சிகித்சையால் எந்த குணமும் இல்லாது போகவே மாட்டு வண்டியில் அவளை ஏற்றி கும்பகோணம் – வலங்கிமான் ரோடில் இருந்த சாக்கோட்டை என்னும் கிராமத்தில் இருந்த ஒரு பேர் வாங்கிய நாட்டு வைத்தியரிடம் காண்பித்தோம். அவரும் ஏதோ தனக்குத் தெரிந்ததைச் செய்தார். ஆனால் தங்கை உடல் மஞ்சள் பூத்து, ஊதிக்கொண்டே வந்தது. ஒரு நாள் அந்த சாக்கோட்டை வைத்தியர், ” குழந்தைக்கு பிரியமானது எதுவும் வேண்டுமென்று கேட்டால், மறுக்கவேண்டாம், செய்து கொடுங்கள்” என்று சொல்லி விட்டார். அதன் அர்த்தம் எனக்கு அன்று புரியாவிட்டாலும், அப்பாவுக்கும் அம்மாவுக்கும் புரிந்து விட்டது. எங்கள் பார்வை படாது மனதுக்குள் குமைந்து குமைந்து அழுதுகொண்டிருந்தனர். ஒரு நாள் பிற்பகல் மணி 4 இருக்கும். தாழ்வாரத்தில் லக்ஷ்மி படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தாள். மஞ்சள் பூத்து கனத்து விட்ட உடம்பு. கர் கர் என்று குறட்டை விடுவது போல மூச்சு பெரிதாக வந்துகொண்டிருந்தது. நாங்கள் எல்லோரும் சுற்றி உட்கார்ந்திருந்தோம். அம்மா தலையில் கை வைத்தபடி ஒரு பக்கம் சுவற்றில் சாய்ந்திருந்தாள். அப்பா எதிரில் ஒரு தூணில் சாய்ந்துகொண்டு வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார். நாங்கள் கொஞ்சம் தள்ளி என்ன செய்வது என்று தெரியாமல் மாறி மாறி எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தோம். திடீரென்று அந்த கர் கர் சத்தம் நின்றது. அவ்வளவு தான். அம்மா அப்பாவின் கதறல் தாழ்வாரத்தை நிறைத்தது. லக்ஷ்மியின் கதை முடிந்தது. ஒரு உயிர் பிரிவதைப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு பார்த்திருப்பது அது தான் முதல் தடவை. கடைசித் தடவையும் கூட.
மறு நாள் ஒரு ஆள் வந்து சொன்னான். “உடம்பெல்லாம் ஒரே தண்ணியா இருந்துச்சா. உடம்பு வேகவே மாட்டேன்னுடுச்சுங்க ரொம்ப நேரம்” என்று சொல்லி விட்டான். அம்மா கதற ஆரம்பித்து விட்டாள். பின் ஒரு நாள் ஏதோ காரியத்துக்காக அழைத்து, ஏதோ நினைவில் ‘லக்ஷ்மி’ என்று நான் குரல் கொடுத்து விட்டேன். அதைக்கேட்டு விட்ட அம்மா, ‘லக்ஷ்மி’தான் போய்ட்டாளேடா” என்று மறுபடியும் ‘ஒ’ வென்று அழ ஆரம்பித்து விட்டாள். அப்போது தான் என் தவறு தெரிந்தது.
ஒரு நாள் திடீரென்று 35 வயதுள்ளவர், நல்ல சிகப்பும் தாட்டியான உடலும் கொண்டவர், தன் மனைவி, 9 வயது மகனோடு வந்தார். அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த என்னை, ‘”யாருடா இது, இவ்வளவு சௌஜன்யமா இங்கே வந்து உட்கார்ந்து கொண்டுருக்காளேன்னு திகைச்சுப் பாக்கறான்” என்று வந்தவர் சொல்லவே, அப்பாதான், “இனிமே தான் அவன் நம்ம மனுஷாள்ளாம் யார் யாருன்னு தெரிஞ்சிக்கணும், இது உன் அத்திம்பேர்டா, அது உன் ஜெயம் அத்தை, இது மணி, அத்தை பிள்ளை. எல்லாரும் லாகூர்லேயிருந்து வந்திருக்கா. இனிமே இங்கே தான்டா இருப்பா. லாகூருக்குத் திரும்பிப் போகமாட்டா.” என்றார். பிறகு தான் அவர்கள் கதை பூராவையும் தெரிந்து கொண்டேன். அத்திம்பேர் லாகூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ரொம்ப வருஷமா. ஆனால் அங்கு தொடர்ந்து நடந்து கொண்டிருந்த மதக் கலவரங்கள் உச்ச கட்டமடையவே, அவர் வாடகைக்குத் தங்கியிருந்த வீட்டுச் சொந்தக்காரர், ஒரு முஸ்லீம், சொல்லி விட்டார். ” ஏற்கனவே ஊர் இருக்கற நிலவரம் உங்களுக்குத் தெரியும். இப்போ இன்னம் ரொம்ப மோசமா போயிண்டிருக்கு. நான் இது வரைக்கும் உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது காப்பாத்திட்டேன். இனி என்னால் முடியாது என்று தோன்றது. என் கண் முன்னாலே எதுவும் வேண்டாதது நடந்து அதை நான் பாக்கக்கூடாது. பஞ்சாப் பூராவுமே இப்படித்தான் இருக்கு. நீங்க இங்கேயே வேறே எங்கேயும் போய் இருக்கலாமான்னு யோசிக்க வேண்டாம். முடியாது. இந்த இடத்தை விட்டு சீக்கிரமா உங்க ஊருக்குப் போறது தான் நல்லது. உடனே கிளம்புங்க,” என்று சொல்லிவிட்டானாம். “வேறு எங்கே போறது?. அவசர அவசரமாகக் கிளம்பி வந்தோம். பாங்கில் கிட்டத் தட்ட ரூபாய் 25,000 இருக்கும் . அதைக் கூட எடுக்க முடியவில்லை. அப்படியே எல்லாத்தையும் போட்டது போட்டபடி விட்டுட்டு வரவேண்டியதாயிடுத்து. இனிமே இங்கே வந்து தான் ஏதாவது வேலை பாக்கணும்” என்று அவர் வந்திருக்கிறார். அத்தையை இங்கு விட்டு விட்டு அவர் மதராஸ் போவதாக எண்ணிக்கொண்டிருப்பதாகச் சொன்னார். நான் அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
வெங்கட் சாமிநாதன்/21.8.08
- ஊமைச் செந்நாய் சிறுகதையை வைத்து ஜெயமோகனுடன் ஓர் உரையாடல் – 1
- வியப்புகளும் உவமைகளும் சிரிப்புகளும் : Six Suspects a Novel By Vikas Swarup (Author of Q&A a.k.a Slumdog Millionaire)
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! வால்மீன்களும் முரண்கோள்களும் (Asteroids) ஓரினமா அல்லது வேறினமா ?(கட்டுரை 52)
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -4 பாகம் -1
- கலில் கிப்ரான் கவிதைகள் << காதலியுடன் வாழ்வு >> (வசந்த காலம்) கவிதை -2 (பாகம் -1)
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -24 << காதலிக்குக் கேள்வி >>
- நான் கடவுள் பற்றிய மணி அவர்களின் கட்டுரை மிக அருமை
- சிங்கப்பூரில் எழுத்தாளர் சை.பீர்முகம்மதின் நூல் அறிமுக விழா
- தமிழ்நூல்.காம் வழங்கும் வாழ்வியற் களஞ்சியம் மற்றும் ஈழத்து நூல்கள்
- அடவி காலாண்டிதழ்
- தமிழ் ஸ்டுடியோ நடத்தும் ஐந்தாவது குறும்பட வட்டம்
- நூல் நயம்: தெரிந்த – கவனிக்கத் தவறிய முகங்கள்
- சங்கச் சுரங்கம் – 3 : குப்பைக் கோழி
- நகரத்தில் வாழும் கிழவர்கள்
- ஊமைச் செந்நாய் சிறுகதையை வைத்து ஜெயமோகனுடன் ஓர் உரையாடல் – 2
- முடிவு உங்கள் கையில்
- இருக்கை
- காதலின் பரிமாணங்கள்
- வேத வனம் விருட்சம் 24
- பறக்கத்தான் சிறகுகள்
- இன்னொரு கரை…
- “வேலியை உடைக்கும் மரணம்”
- வார்த்தை பிப்ரவரி 2009 இதழில்
- நினைவுகளின் தடத்தில் – (26)
- அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 3 -தேவநேயப் பாவாணர் (2)
- அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 3 -தேவநேயப் பாவாணர் (1)
- மோந்தோ -5(2)
- மோந்தோ -5 (1)
- கருணையினால் அல்ல!
- சாம்பல்நிறப் பூனை