நினைவுகளின் சுவட்டில் – (45)

This entry is part [part not set] of 25 in the series 20100411_Issue

வெங்கட் சாமிநாதன்


எனக்குத் தான் பரிட்சை, சர்வீஸ் கமிஷன் என்று வந்து பயமுறுத்திய சொப்பனங்கள் மறைந்து இயல்பான சகஜ நிலையில் ஜெம்ஷெட்பூர் பயணம் பற்றிய நினைவுகளில் ஆழ்ந்திருந்தேனே ஒழிய, வீட்டில் சுற்றி என்ன நடக்கிறது, பெற்றோருக்கு என்ன புதிய கவலைகளை என் ஜெம்ஷெட்பூர் பயணம் முன் நிறுத்தியது என்பது பின்னர் தான் தெரிந்தது. புதிதாக துணி வாங்கி உடைகள் தைக்க வேண்டும், ஜெம்ஷெட்பூரு க்குப் போக ரயில் டிக்கட் வாங்கவேண்டும், அங்கு வேலை கிடைக்கும் வரை செலவுக்கு ஏதாவது பணம் வேண்டும், மாமா வீட்டில் தான் இருப்பேன் என்றாலும், வெறும் கையோடு போகமுடியுமா? இதற்கெல்லாம் பணத்துக்கு என்ன செய்வது என்ற கவலை அவர்களுக்கு இருந்திருக்கவேண்டும். திடீரென்று ஒரு நாள் அப்பா வீட்டுக்கு வந்த போது, அம்மா கவலையுடன் காத்திருந்தவள், என்ன கிடைத்ததா? என்று கேட்டாள்.அப்பா கையில் ரூ 200. நான் இருவரையும் விழித்துப் பார்த்தேன். “உனக்காத்தாண்டா. நீ போறதுக்கு பணம் வேண்டாமா? என் சங்கிலியை அடகு வச்சு வாங்கிண்டுவந்திருக்கு. நீ சம்பாதிச்சு பணம் அனுப்பினேன்னாத் தான் அது எனக்குத் திரும்பி வரும். அப்பாவாலே முடியாது.” என்றாள் அம்மா. பொட்டில் அறைந்த மாதிரி இருந்தது. இதெல்லாம் பத்தி நான் யோசிக்கவே இல்லை. யோசிக்கணும்னும் எனக்குத் தோணலை. ஆனால் அப்பு மாமாவின் ரண்டாவது லெட்டர் வந்ததிலிருந்து அவர்களுக்கு இந்தக் கவலை தான் அரித்துக்கொண்டிருந்திருக்கிறது. இந்தக் கவலைக்கு வழி பார்த்தாய் விட்டது. இனி இப்போது இல்லாவிட்டாலும், கொஞ்ச நாள் கழித்து, தன் கழுத்து செயின் எப்போ திரும்பி வரும் என்று கவலைப் படத் தொடங்குவாள். அந்தக் கவலையும் என் கண்ணுக்குப் படாத கவலையாக இருக்கும்.

இனி துணி வாங்கி புதிதாக உடைகள் தைக்கவேண்டும். டிரில் என்றால் என்ன? பாண்ட் என்றால் என்ன என்ற கேள்விகள் எழுந்தாலும் அது ஒரு பெரிய பிரசினையாகவில்லை. எங்கள் தெரு முனையில் நாலு வீடு தள்ளி கிழக்குத் தெரு ஆரம்பிக்கும் முனை வீட்டின் திண்ணையில் புதிதாக ஒரு டெய்லர் கடை தொடங்கி சில மாதங்களே ஆயிருந்தன. எனக்கு ஐந்தாறு வயது மூத்தவன். எனக்கு நண்பனாகி விட்டவன். பொழுது போகாத நேரங்களில் அவன் கடையில் உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருப் பேன். உடையாளூரில் ஒரு டெய்லரிங் கடை வைத்தால் வருமானம் வரும் என்று அவனுக்கு நம்பிக்கை இருந்தது கும்பகோணமோ, வலங்கைமானோ போவதாக இருந்தால் தான் சட்டை கூட அவசியமில்லை. ஒரு பனியன் போதும். உள்ளூரில் இருந்தால் வேஷ்டி, ஒரு துண்டு போதும் என்று எளிமையான வாழ்க்கை வாழும் மனிதர்களைக் கொண்ட ஊர் இது. ஆச்சரியமான விஷயம் தான். என்ன தையல் வேலை இருந்தாலும் கும்பகோணத்துக்கோ, வலைங்கைமானுக்கோ ஓடவேண்டாமில்லையா, என்றும் ஒரு நினைப்பு இருந்திருக்கலாம். எதாக இருந்தாலும் இப்போது ஒரு பெரிய ஆர்டர் எங்களிடமிருந்து அவனுக்கு கிடைக்கவிருந்தது. அத்தோடு , டிரில், பாண்ட் சமாசாரங்கள் என்னவென்று அவனுக்குத் தெரிந்திருக்குமே. அப்பா ஒரு நாள் அவனிடம் விவரம் கேட்டுக்கொண்டு கும்பகோணம் போய் துணி வாங்கிவந்ததும் என் அளவுகளை எடுக்கச் சொல்லி, தைக்கக் கொடுத்துவிட்டார்.

பயண ஏற்பாடுகள் இப்படி ஒவ்வொன்றாக நடக்கத் தொடங்கியதும் தான், தங்கை தம்பிகளை விட்டு, உடையாளூரை விட்டு, கும்பகோணத்தை விட்டு, வெகுதூரம் போகப்போகிறோம், இனி எப்போது திரும்பி வரப் போகிறோமோ என்ற நினைப்புகள் மனதில் தைக்கத் தொடங்கின. வரப்போகிற பிரிவைப் பற்றிய எண்ணம், இது வரை வாழ்ந்த வாழ்க்கையை விட்டு முற்றிலுமாக நீங்கி புதிய இடத்தில் புதிய மனிதர்களோடு, பழக்கமில்லாத புதிய வாழ்க்கை எதிர்கொள்ள இருக்கிறது என்ற நினைப்பு இதுவரை பழக்கமானது, தெரிந்தது எல்லாவற்றையும் விட்டுப் பிரியப் போகிறோம் என்ற நினைப்பு மனத்தை மிகவும் சஞ்சலிக்கத் தொடங்கியது.

எல்லாவற்றையும் விட கும்பகோணமும் அங்கு கிடைத்த சில நட்புக்களும் ஒரு இரண்டு வருட வாழ்க்கையை மிக ரம்மியமானதாக ஆக்கியிருந்தன். மிக முக்கியமாக மனத்தில் அடிக்கடி தோன்றி மறையும் காட்சி, உடையாளூரிலிருந்து ஒரு மைல் வயல்கள் வழி நடந்ததும் தூரத்தில் காட்சி தரும் கும்பகோணத்தின் கோயில் கோபுரங்கள். காஞ்சிபுரத்தைப் போல கும்பகோணம் கோயில்கள் நிறைய கொண்ட ஊர். எங்கு திரும்பினாலும், ஒரு ·பர்லாங் தூரம் நடந்தாலே அங்கு ஒரு கோயில் கோபுரம் விண்ணைத் தொட்டு நிற்கும். இன்று நேற்று அல்ல. குறைந்தது ஆயிரம் ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளாக வானளாவ நிற்கும் கோபுரங்களைக் கொண்ட கோவில்கள். கும்பகோண்த்துக்கு பெயர் கொடுத்த கும்பேஸ்வர ஸ்வாமி கோயிலை விட பெரிய சாரங்கபாணி ஸ்வாமி கோயில். மூலவரும் மிகப் பெரிய உருவம் கொண்டவர். சயனித்த திருக்கோலத்தில். எல்லாக் கோயில்களையும் விட மிக மிக அழகான சிற்பங்களைக் கொண்ட ராமஸ்வாமி கோயில். அவற்றின் அழகை விட்டுப் பிரிய கண்கள் விரும்பாது. எல்லாம் வெகு அருகாமையில் ஒன்றுக் கொன்று. சோழர் காலத்தைச் சேர்ந்த பிரகாரத்தில் அனேக சிற்பங்களைக் கொண்ட நாகேஸ்வர ஸ்வாமி கோயில். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

கும்பகோனம் மட்டுமல்ல. அதைச் சுற்றி நான்கு அல்லது ஐந்து மைல் வட்டத்துக்குள் அதேபோல ஆயிரம் ஆயிரத்தைந்நூறு வருடங்கள் சரித்திர நீட்சியில் தானும் வாழ்ந்து நம்மையும் அச்சரித்திரத்தை நினைவு படுத்தி நம்மை அதனூடே வாழச்செய்யும் கோயில்கள். எப்போதுமே எனக்கு அவை மிக வசீகரமான தோற்றத்தோடு பிரமிக்க வைக்கும் கணங்களை நம் அனுபவத்திற்குத் தரும், என் பள்ளி நண்பனோடு, கும்பகோணம் இருப்புப் பாதையின் தண்டவாளத்தின் மீது நடந்தே ஒரு சமயம் திருநாகேஸ்வரம் போவோம். இன்னொரு சமயம் தாராசுரம், சுவாமி மலை என்று போவோம். நடுவில் அரசிலாற்றுப் பாலம் வரும். அதை மாத்திரம் தவிர்த்து விடுவோம். அது மாத்திரமல்ல. சுற்றி இரண்டு அல்லது நான்கு மைல் தூரத்தில் பட்டீஸ்வரம், பழையாறை, திருவலஞ்சுழி, நந்திகேஸ்வர விண்ணகரம் என்று சரித்திரத்தில் அறியப்பெற்ற நாதன் கோயில் என்று அனேக தமிழ் சரித்திரத்திலும், இலக்கியத்திலும் சிறப்புப் பெற்ற கோயில்கள். திரு வலஞ்சுழி, பெயரே சொல்வது போல, வலதுபக்கம் தன் துதிக்கையைச் சுழித்துக்கொண்டிருக்கும் சிறிய வினாயகரை மூலவராகக் கொண்ட கோயில் இன்னும் சிறப்பு மூலவர் கடல் நுரையால் ஆன, வெண்ணிற தோற்றம் கொண்ட வினாயகர். நக்கீர தேவநாயனாரால் மும்மணிக்கோவையில் பாடப்பெற்றவர். மிகவும் அழகான கோயில். நாதன் கோயில் மிக அதிசயமாக, மேற்கு நோக்கிய கோவில் பட்டீஸ்வரம் அவ்வப்போது சாமிநாதய்யரின் ஆசான், மீனாட்சி சுந்தரம் பிள்ளை நடமாடிய ஊர். தாராசுரம் அச்சிறு வயதிலேயே என்னை மிகவும் பிரமிக்க வைத்த கலை பிரம்மாண்டம். பின்னாட்களில் அது பற்றிப் படிக்கப் படிக்க என் பிரமிப்பு அதிகமாகி வந்தது. இந்தச் சிறப்புக்கள் எல்லாம் பின் வருடங்களில் நான் படித்தறிந்த சிறப்புக்கள். என் பள்ளி நாட்களில், என்னை அவை கவர்ந்தது அவற்றின் உள்ளே நுழைந்தாலும், அல்லது தூரத்திலிருந்து காட்சி தரும் கோபுரங்களப் பார்த்தாலும் மெய் சிலிர்க்கும். என்னவோ வேறு எங்கும் கிடைக்காத ஒரு உணர்வு நரம்புகளில் ஓடும். இவற்றில் அனேகம் தேவார நால்வரால் பாடப்பெற்றவை. ஆழ்வார்களால் போற்றப்பட்டவை. சாரங்கபாணி கோயில் பேயாழ்வாரும், பூதத்தாழ்வாரும் மங்களா சாசனம் செய்த கோயில். தேவார நால்வருக்கும் முன், ஆழ்வார்களிலும் முன்னவர்களான பேயாழ்வாரும் பூதத்தாழ்வாரும் பாடி யுள்ளனர் என்றால் அத்தனை பழமையானது சாரங்கபாணி கோயில். எத்தனையோ எழுத்தாளர்கள் வாழ்ந்த ஊர்தான். ஆனால் அன்று 1947-49 களில் எனக்குத் தெரிந்ததெல்லாம், சாமிநாதய்யர் வாழ்ந்த, ஆசிரியராக பணி செய்த ஊர். அவர் வசித்த, நடமாடிய பக்தபுரி அக்ரகாரமும், காவிரிக்கரையில் மிக அழகாக அமைந்திருக்கும் கும்பகோணம் கல்லூரியும். கணித மேதை ராமானுஜன் வாழ்ந்த ஊர். பள்ளி நாட்களிலேயே கேள்விப்பட்ட பெயர் அது. எல்லாவற்றையும் விட என்னோடு மிக நெருக்கமாக அன்போடு பழகிய, அவனது தமிழறிவையும், கவிதைத் திறனையும் நான் வியந்த ஆர். ஷண்முகம். அவனையும் அல்லவா விட்டுப் பிரிய வேண்டும்.

இவ்வளவு அரிய நினைவுகளையும், வாழ்ந்த நாட்களையும் விட்டுப் பிரிந்து எங்கோ வேலை தேடிப்போவதென்றால்….. ஆனால் அதைத் தானே சில நாட்கள் முன் நான் வேண்டி கனவு கண்டதும். எதை விட்டுப் பிரிகிறோம் என்று மனம் தத்தளிக்கும் இப்போது ரம்மியமாகத் தோன்றுபவை எல்லாம், பின்னொதுங்கி, பரிட்சையும், சர்வீஸ் கமிஷனும், திரும்பப் படிக்கவேண்டும் ஆங்கிலப் பாடங்களும் தானே முன்னின்றன. ஒரே அனுபவத்தின் பல பக்கங்கள். அவ்வப்போதைய மனநிலைக்கு ஏற்ப ரம்மியமான பக்கங்கள் ஒரு சமயமும், கசப்பானவை வேறு ஒரு சமயமுமாக மனத்தை ஆக்கிரமித்துக்கொள்லும் போலும் அல்லது எந்த ஒரு நிகழ்வும், திருப்பமும், முற்றிலும் சந்தோஷம் தருவதும் அல்ல. முற்றிலும் துக்கம் நிரம்பியதும் அல்ல. எல்லாமே ஒரே நிகழ்வின் இரு அல்லது அதற்கு மேற்பட்ட பரிமாணங்கள். அவ்வப்போதைய நம் மனச்சாய்வுக்கு ஏற்ப நாம் தேர்ந்து கொள்கிறோம். ஒவ்வொன்றின் நிகழ்விலும் நமக்குப் பிடித்தமான பரிமாணத்தை மாத்திரம் பார்த்துக்கொண்டு மற்றதற்கு கண்மூடிக்கொள்கிறோம் என்று தோன்றுகிறது.

நிலக்கோட்டை மாமாவுக்கு அப்பா லெட்டர் எழுதிவிட்டார். மேலே படிக்கறதுக்கோ, பரிட்சை எழுதறதுக்கோ அவனுக்கு இஷ்டமில்லை. அப்புக்கு லெட்டர் எழுதியிருக்கான். அப்புவும், சரி வா பாக்கலாம்னு எழுதிட்டதினாலே, அவன் இஷ்டப்படியே விட்டுடலாம்னு நினைக்கிறேன். அவன் தனியா இருந்து பாக்கட்டுமே, அதுவும் நல்லதுக்குத் தான்’ என்கிற மாதிரி அப்பா எழுதியிருந்தார். பாண்ட், ஷர்ட் எல்லாம் தைத்து வந்துவிட்டது. மூன்று வீடு தள்ளி இருக்கும் சித்தப்பா, தன் மச்சினன் வால்டேரில் ரயில வேலையில் தான் இருப்பதாகவும் உன்னை வால்டேர் ஸ்டேஷனில் வந்து பாக்கச் சொல்லியிருக்கேன் என்று சொன்னார். அப்பா ஒரு நல்ல நாள் பார்த்து, ஜூலை மாதம் 27-ஓ அல்லது 28-ஒ நினைவில் இல்லை, இப்படித் தான் மாதக்கடைசியில் ஒரு நாள் கிளம்புவது என்று நிச்சயமாயிற்று. அப்பு மாமாவுக்கும் கிளம்பும் தேதியைக் குறித்து அப்பா லெட்டர் எழுதினார்.

ஒரு டிரங்குப் பெட்டி. துணிமணிகள், செர்டிபிகேட், பின் சாப்பாடு எல்லாம் வைத்துக்கொள்ள. ஒரு ஜமக்காளம், தலையணை. இவ்வளவு தான் எடுத்துச்செல்ல. அப்பா மதராஸ் செண்டிரல் வரை வந்து கல்கத்தா மெயிலில் ஏற்றிவிட்டு ஊர் திரும்பி விடுவார். எப்படி கும்பகோணம் ஸ்டேஷனுக்கு நானும் அப்பாவும் போனோம் என்பது நினைவில் இல்லை. மாட்டு வண்டியில் போவதென்றால் வலங்கைமான் போய்த் தான் போகவேண்டும். சுற்று வழி. சுமார் எட்டு மைலுக்கு மேல் இருக்கும். எப்போதும் ஸ்கூலுக்குப் போவது போல குறுக்கே வயல்வெளியினூடே நடந்து செல்லமுடியாது, பெட்டி படுக்கையைத் தூக்கிக்கொண்டு. எனக்கு நினைவில் இருப்பது கும்பகோணம் ரயில் நிலையத்தில் நானும் அப்பாவும் ரயில் வரக் காத்திருந்தது தான். இரவு நேரம். ஏழு மணி இருக்கும். அப்போது தான் என் பள்ளி நண்பனும் கவிஞனுமான ஆர் ஷண்முகத்தை ரயில் நிலையத்தில் பார்த்தேன். தற்செயலாக சந்தித்தோமா, இல்லை, என் விடுமுறை நாட்களில் அவனும் நானும் பரிமாறிக்கொண்ட கடிதங்கள் மூலம் விஷயம் தெரிந்து வந்தானா என்பது நினைவில் இல்லை. அவனுக்கு ஊர் மணல் மேடு. மாயவரம் பக்கம். ரயிலில் போகமுடியாது. ஆக, ஏதோ காரியமாக கும்பகோணம் வந்து என்னை தற்செயலாக ரயில் நிலையத்தில் அந்த நேரத்தில் சந்தித்தான் என்று சொல்ல முடியாது. மிகவும் அன்னியோன்னியமாக பழகிய நண்பன். இப்போது பிரியும் நேரம். இனி இருவர் வாழ்க்கையும் வேறு வேறு பாதைகளில் தான் செல்லும். இனி சந்திப்போம் என்பது நிச்சயமில்லை. பேச என்ன இருக்கிறது? என்ன பேசமுடிகிறது. அப்பா நின்ற இடத்திலிருந்து தள்ளி நின்று கொண்டோம். வண்டி வரும் வரை.

வெங்கட் சாமிநாதன்/22.10.09

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்