நினைவார்ச்சனை – கவிக்கட்டு 19

This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

சத்தி சக்திதாசன்


நெஞ்சத் தோட்டத்திலே மலர்ந்த
நினவுப் பூக்ககளை அழகாய்
கோர்த்தெடுத்து நான் தொடுத்தொரு
நினைவுமாலை கொண்டு வந்தேன்

பாசம் எனும் மலர்களை நான் கொய்து
பக்குவமாய் தொடுத்த மாலை
பரிசாகப் போனது தெய்வங்களாம்
பார் சிறந்த அன்னை தந்தையர்க்கே !

நட்பு எனும் அந்த அழாகன மலர்களின்
நறுமணத்தை அணைத்தெடுத்து என்
நல்ல பல தோழர்களோடு தொடுத்த
நீண்டதொரு மாலை இன்றுவரை
நிலைத்திருக்கும் வாடாத மாலையன்றோ

பருவ வயதினிலே ஆசை மலர்களெடுத்து
பகற்கனவெனும் நாரினிலே கோர்த்த மாலை
பாவையவள் கடைக்கண் பார்வைக்கு நான்
படைத்ததொரு விருந்தாகும்

உண்மைக் காதல் பூவெடுத்து அதை
உள்ளம் நிறைந்த என் இதயத்தாமரை
உத்தமப் பெண்ணவளின் கூந்தலில்
உரிமையுடன் செருகி நான் அன்று
உடமையாக்கிக் கொண்ட என் மனைவி
அவள் கூந்தலில் ஆடும் .
உலகத்தின் உயர்ந்த மாலை அதுவென்பேன்
உதிராமல் கூந்தலில் இன்றும்
உயிர்வாழும் மாலையன்றோ

என் வாழ்க்கை பூந்தோட்டத்தில் பூத்த
என்னருமை மைந்தன் எனும் பூ எடுத்து
என்கையால் நான் தொடுத்தேன் வாரிசு
என்றுமே வாசம் வீசும் ஒர் மாலை தான்

கண்டேடுத்தேன் வாழ்வினிலே நானும் பல
காகிதப் பூக்களை; அழகாய்த் தோன்றி
கவலையை என்னெஞ்சில் விதைத்ததந்த
காகிதப் பூ மாலைகளே . மறவேன் அவை
கண்ணீராய் எனக்களித்த நயவஞ்சக மாலைகளை

இவையெல்லாம் நான் கோர்த்த மாலைகளே
ஈடில்லா தமிழ் எனும் வாடாத மல்லிகையால்
இதயத்து கோவிலில் அர்ச்சனை செய்தேன்
இன்றும் என் மனதின் இன்பத்தின் காரணம் அதுவே

அனைத்தையும் ஒன்றாய் எடுத்து நான்
அர்ப்பணித்தது , மனதில் குடி கொண்ட
அண்ணாமலையான் எனும் என்றென்றும்
அணையாத ஜோதியவன் அடிகளுக்கே

sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்