நினைத்தேன்…சொல்கிறேன்…தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி…

This entry is part [part not set] of 36 in the series 20030223_Issue

PS நரேந்திரன்


கி.பி. 2222.

‘டெய்லி டுமீல் ‘ காலைச் செய்திகள்.

‘நேற்று இரவு, பத்து மணியளவில், இந்தியாவின் தென்பகுதியிலுள்ள தமிழ்நாடு என்ற மாநிலத்தில், இரண்டு சினிமா நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே நடந்த மோதலில் ஒரு லட்சம் பேர் மரணமடைந்தார்கள். மேலும் மூன்று லட்சம் பேர் படுகாயமடைந்தார்கள் என நமது ‘டெய்லி டுமீல் ‘ தென்னிந்திய நிருபர் தெரிவிக்கிறார். தமிழ்நாடு உலகத்திலேயே மிகவும் பின் தங்கிய பகுதி என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே…. ‘

கற்பனைதான். பயப்படாதீர்கள்.

இன்றைக்கு தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் ‘கூத்து ‘ இப்படியே தொடர்ந்தால், மேற்கண்ட செய்திபோல நடந்தாலும் நடக்கலாம்.

யாருக்குத் தெரியும் ?

அப்படியே நடந்தாலும், அந்த ‘கண்கொள்ளாக் காட்சியை ‘க் காண நாமெல்லாம் இருக்க மாட்டோம் என்பது மிகவும் ஆறுதலான விஷயம்.

நான் இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்திருக்கிறேன். பலதரப் பட்ட மக்களுடன் பழகி இருக்கிறேன். அவர்களும் சினிமா பார்ப்பார்கள். அவர்களுக்கு பிடித்த நடிகர்கள், நடிகைகள் உண்டு. அவர்கள் நடித்த படங்களை விரும்பிப் பார்ப்பார்கள். அவ்வளவே. ஆனால், தமிழ்நாட்டு ரசிகர்களைப் போல வெறித்தனமான ரசிகர்களை எங்குமே பார்த்ததில்லை.

முதலில் ஒன்றை சொல்லி விடுவது நல்லது என்று நினைக்கிறேன். சினிமாவை சினிமாவாகவே பார்க்கும் ‘பிரகிருதி ‘களில் நானும் ஒருவன். நிழலுக்கும் நிஜத்திற்கும் உள்ள வேறுபாடு எனக்கு நன்றாகவே தெரியும்.

தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்த எனக்கே இந்த ரசிகர்கள் படுத்தும் பாடு, சில சமயங்களில் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் (சமயத்தில் அவமானமாகவும்) இருக்கிறது. வெளியாட்களைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

ஒரு பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு முன்பு, காஞ்சிபுரத்தில் ஒரு தியேட்டரில் படம் பார்க்கப் போயிருந்தேன். கூட்டமான கூட்டம். சிவாஜி கணேசன் நடித்த பழைய படம் என்று நினைக்கிறேன். படம் ஆரம்பித்து ஒரு அரை மணி நேரம் கழித்து, இரண்டு பேர் ஒரு பெரிய பூசணிக்காயை தூக்கி வந்து திரைக்கருகில் நின்று கொண்டார்கள். அதன் மேல் ஒரு கால் கிலோ கற்பூரம். அதைக் கொளுத்தி விட்டு, ஆளுக்கொரு பக்கம் பிடித்துக் கொண்டு காத்திருந்தார்கள். திரையில் சிவாஜி முகம் வரும். உடனே ஒரு சுற்று (திருஷ்டி கழிக்கிறார்களாம்!). சட்டென்று காட்சி மாறி, திரையில் நம்பியார் முகம் வரும். உடனே, பூசணிக்காயை சடக்கென்று இழுத்துக் கொள்வார்கள் (நம்பியார்தான் வில்லனாயிற்றே..அவருக்கு எதற்கு திருஷ்டி ?). திரும்பவும் சிவாஜி முகம் வரும்போது இன்னோரு சுற்று…

இப்படி இவர்கள் செய்து கொண்டிருக்கும் போது, பூசணிக்காயின் மேலிருந்த கற்பூரம் இப்படியும் அப்படியும் ஆடிக்கொண்டிருந்தது. எனக்கோ நெஞ்சு அடித்துக் கொள்கிறது. திரையிலிருந்து சுமார் ஒரு அடி அல்லது ஒன்றரை அடி தூரத்தில்தான் அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். கற்பூரம் உருண்டு திரையில் விழுந்தால் என்ன ஆவது…நல்ல வேளையாக அப்படி ஒன்றும் ஆகவில்லை. கரணம் தப்பி இருந்தால் ?…

பூசணிக்காயர்கள் போன பிறகு, இன்னொருத்தன் வேகமாக ஓடி வந்து, தேங்காயை மடேரென்று போட்டு உடைத்தான். முன்னால் உட்கார்ந்திருந்தவர்கள் மேலல்லாம், தண்ணீரும், தேங்காய் ஓடும் சிதறி விழுந்தது…யார் மேலேயாவது அடி பட்டால் என்னாவது ? அது பற்றி யாரும் கவலைப் பட்டதாக தெரியவில்லை. அவர்கள்பாட்டுக்கு படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எதுவுமே நடக்காத மாதிரி.

****

இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில், நண்பர் ஒருவர் ‘ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தில் ‘ ஏதோ பொறுப்பில் இருந்தார். எனவே அவருக்கு எந்த ரஜினிகாந்த் படம் ரிலீஸானாலும், முதல் நாள் டிக்கெட் கிடைத்துவிடும். என்னையும் எப்போதாவது கூட்டிப் போவார். எந்த படம் என்று நினைவில்லை. தேவிபாரடைஸ் தியேட்டரில் ரிலீசான ஏதோ ‘சத்யா ஸ்டுடியோஸ் ‘ படம் என்பது மட்டும் நினைவிருக்கிறது.

ரஜினிகாந்த் படம், அதுவும் முதல் நாள் என்பதால் ஏகப் பட்ட ரசிகர்கள் கூட்டம்.

வழக்கம் போல பூ எறிதல், சீட்டுப் பஞ்சை பிய்த்து எறிதல், சில்லறை எறிதல், காட்டுக் கூச்சல் போடுதல் போன்ற சடங்குகள் முடிந்து, ஒருவழியாக படம் ஆரம்பித்தது.

படம் ஆரம்பித்து, கொஞ்ச நேரத்தில் பர பரப்பாக ஒருவர் பக்கத்து சீட்டில் வந்து உட்கார்ந்தார். உட்கார்ந்து, உட்காராமலே,

‘சார்…கைய காமிச்சாச்சா ?..கைய காமிச்சாச்சா ? ‘ என்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை.

‘என்ன கேட்டாங்க ? ‘ என்றேன்.

‘தலைவர் கைய காமிச்சிட்டாங்களான்னு கேட்டேன் சார்… ‘

உடனே நண்பர் குறுக்கிட்டு,

‘ஹலோ..படம் ஆரம்பிச்சு பத்து நிமிஷம் ஆச்சி…இப்ப வந்து கேட்டா எப்படி ? பேசாம படத்த பாருங்க ‘ என்றார்.

‘அடடா…மிஸ் பண்ணிட்டனே.. ‘ என்றார் அந்த ஆசாமி. வருத்தத்தோடு.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. இடைவேளையில் நண்பரிடம் கேட்டேன்.

‘அதுவா…சத்யா ஸ்டுடியோ எம்.ஜி.ஆரோடது…அவர் இப்ப நடிக்காட்டியும், படம் ஆரம்பத்துல ‘சத்யா ஸ்டுடியோன்னு ‘ டைட்டில் போடறப்ப, அவரோட கை மட்டும் பூ போடறாமாதிரி காட்டுவாங்க…அதத்தான் அந்தாளு கேட்டாரு… ‘ என்றார்.

அடடா என்னே ஒரு ரசிகப் பண்பு!. வெறும் ‘கைக்கு ‘ ஒரு ரசிகனா ?

அன்று, அதே தியேட்டரில் இன்னொரு கலாட்டா.

தொன்று தொட்டு வரும் தமிழ்நாட்டின் ‘தியேட்டர் கலாச்சார ‘ப்படி, நடிகர் ரஜினிகாந்த்தின் ஒவ்வொரு அசைவையும் அனுபவித்து, சத்தமாக ஊளையிட்டும், ‘கொள்த்திட்ட தலிவா ‘ போன்ற வசனங்களைச் சொல்லிக் கொண்டும், ரசிகர்கள் படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

திடாரென்று முன்பக்கத்திலிருந்து சத்தமாக ஒரு குரல்,

‘தலிவனா அவன் ?. சரியான ‘கரிவண்டி ‘…!!! ‘

தியேட்டரில் மயான அமைதி.

பின், அத்தனை பேரும் முன்னோக்கிப் பாய்ந்தார்கள். தியேட்டரில் விளக்கு போடப் பட்டது.

அதற்கு மேல் என்னாகியிருக்கும் என்று உங்களுக்கு சொல்லத் தேவையில்லை.

தியேட்டர் ஊழியர்கள், முகமெங்கும் ரத்தம் வழிய ஒருத்தனை தூக்கிக்கொண்டு போனார்கள். அவ்வளவுதான் சொல்வேன்.

*****

சிறுவர்கள்தான் தமிழ் சினிமா நடிகர்களின் முக்கிய ரசிகர்கள். எதிர்கால ரசிக வெறியர்கள். சிறுவர்களை, சினிமா நடிகர்கள் எந்த அளவுக்கு பாதித்திருக்கிறார்கள் என்பதை காட்டுவதற்காக கீழ்க் கண்ட சம்பவத்ததைச் சொல்லுகிறேன்.

அப்போது நான் ஹைதராபாதில் வேலை செய்து கொண்டிருந்தேன். கோடை விடுமுறையில், எனது சித்தப்பா மகன் ஹைதராபாத் வந்திருந்தான். பத்து அல்லது பன்னிரெண்டு வயதிருக்கலாம் அவனுக்கு. நடிகர் ரஜினிகாந்த்தின் ரசிக வெறியன்.(அது என்னமோ எல்லா சின்னப்பசங்களும் ரஜினி ரசிகர்களாகவே இருக்கிறார்கள்!). எனக்கு அந்த விஷயம் அப்போது தெரியாது. தெரிந்திருந்தால் கொஞ்சம் உஷாராக இருந்திருப்பேன்.

அந்த சமயத்தில், அமிதாப் பச்சனும், ரஜினிகாந்த்தும் இணைந்து நடித்த ஏதோ இந்தி படம் ரிலீஸ் ஆகியிருந்தது. பொடியன் என்னை துளைத்து எடுத்ததால், நாராயண் குடாவிலிருந்த ஒரு டாசண்டான தியேட்டருக்கு அழைத்துப் போனேன்.

பொதுவாக ஹைதராபாதிகள், அமைதியாக படம் பார்ப்பார்கள். அது யார் நடித்த படமாக இருந்தாலும் சரி. நம் ஊர் மாதிரி, படம் துவங்கும் போது நடக்கும், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், குரங்காட்டம்…எல்லாம் அங்கு நடக்காது. நிற்க,

படம் தொடங்கி நடந்து கொண்டிருந்தது. அந்தப் படத்தில் ரஜினி ஆரம்பத்திலியே வரமாட்டார். இடைவேளைக்கு கொஞ்சம் முன்னதாகத்தான் வருவார்.

திடாரென்று ஒரு சத்தம்,

‘தலீஈஈஈஈஈஈஈஈவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ‘

எனக்கு தூக்கிவாரிப் போட்டது. அதிர்ச்சியில் உடம்பெல்லாம் வேர்த்து விட்டது.

நிசப்தமான தியேட்டரிலிருந்து, திடாரென அப்படி ஒரு சத்தம் வந்தால் என்னாகும் என்று நினைத்துப் பாருங்கள்.

இந்த மஹாபாரதத்தில் வரும் பீஷ்மர் ‘துர்யோதன்…ஆஜ்கா யுத் கதம் ஹோகயா ஹே! ‘ என்று சொல்லி, ஒரு பெரிய சங்கை எடுத்து ‘பூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ‘ என்று ஊதுவாரே, அது போல அடிவயிற்றிலிருந்து ஒரு சத்தம்.

அந்த சத்தம் நமது பயலிடமிருந்துதான் வந்ததென்று எனக்கு அப்புறம்தான் புரிந்தது. திரையில் ரஜினிகாந்த் வந்ததைப் பார்த்து, உணர்ச்சி வசப்பட்டு ஊளையிட்டு விட்டான்.

நம் ஊர் திரைப்பட கலாச்சாரப்படி, பிடித்த ஹீரோ திரையில் தோன்றியவுடன் ‘குலவை ‘ இடுவது மரபு. அந்த மரபு தமிழ் மண்ணுக்கு மட்டுமே உரித்தானதென்று, பாவம் சின்னப் பயலுக்கு எப்படித் தெரியும் ?

இதற்கிடையில், தியேட்டரில் ஒரே சத்தம்.

‘ஏமாயிந்தி ? ஏமாயிந்தி ? ‘

‘க்யா ஹுவா எ பச்சேக்கு ? ‘

என்று தியேட்டரில் ஒரே ‘களோபர் ஹே ‘ பண்ணிவிட்டான்.

அப்புறம் நான் சென்னைப் பக்கம் வரும்போதல்லாம், சினிமா பார்க்கக் கூப்பிடுவான். நான் ஏன் போகிறேன் ?

அதுவும் ரஜினிகாந்த் நடித்த படத்திற்கு அழைத்தானென்றால், பின்னங்கால் பிடறியில் இடி பட காத தூரம் ஒடிப்போவேன். எனக்கென்ன கிறுக்கா பிடித்திருக்கிறது ? இவன் கூடப் போய் ரஜினி படம் பார்க்க…

இந்த ஜென்மத்திற்கு ஒரு ‘தலீஈஈஈஈஈஈஈஈவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ‘ போதும் எனக்கு.

******

அது என்னவோ, தமிழர்களிடையே ஒரு பழக்கம். தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து, தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்களை ஒருபோதும் ‘நம்பர் ஒன் ‘ ஆக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வெளிமாநிலத்திலிருந்து வந்து, தமிழை கடித்து, மென்று, தின்று, துப்புபவருக்கே அந்த இடம் நிரந்தரமாக ஒதுக்கப் பட்டிருக்கிறது.

இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால்….

வேண்டாம்…..கொஞ்ச நாளைக்கு இந்த மாதிரி ‘கான்ட்ராவெர்சியல் சப்ஜக்ட் ‘டை விட்டு விலகி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

‘வாளெடுத்துச் சுழற்றும் இடமல்ல நாங்கள்

பார்த்துக் கட்டிய ‘திண்ணை ‘ – உன்

தோள் தினவெ டுத்தால் எங்கேனும்

தொலைந் தழிந்து போ. ‘

என்று ‘வன் ‘பா பாடி ‘திண்ணை ‘யை விட்டு ‘எறக்கி ‘ விட்டு விடுவார்களோ என்று யோசனையாக இருக்கிறது. அவர்களைச் சொல்லி குற்றமில்லை. காலம் அப்படித்தானே இருக்கிறது ?

எனவே கொஞ்சம் ‘அமுக்கி ‘ வாசிக்க முயன்று கொண்டிருக்கிறேன்.

அப்பறம் பார்க்கலாம்.

***

psnarendran@hotmail.com

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்