வ.ந.கிரிதரன்
நண்பர்களிருவரும் ‘லாங் ஐலண்ட்’ நகரை அடைந்தபொழுது மாலை நான்கு மணியாகிவிட்டது. மாநகர் மாலை நேரப் பரபரப்பில் மூழ்கிக் கிடந்தது. இந்தியத் தம்பதியினரின் வீடு நகரத்துப் பாதாள இரயில் 36வது தெருச் சந்திப்பிற்கண்மையிலிருந்தது. ‘மான்ஹட்டன்’னில் ‘லெக்ஸிங்க்டன் 59வதுத் தெருச் சந்திப்பில் பச்சை நிற அடையாளத்துடனான பாதாள இரயில் G எடுக்க வேண்டும். முதன்முறையாக இளங்கோ பாதாள இரயிலில் பிரயாணம் செய்கின்றான். நிலத்திற்கடியில் பல்வேறு அடுக்குகளில் விரையும் பாதாள இரயில்களும், மாநகரின் காங்ரீட் வனமும் பிரமிப்பினைத் தந்தன. பாதாள இரயிற் சந்திப்பிலிருந்து மிக அண்மையில்தான் அந்த இந்தியத் தம்பதியினரின் வீடும் இருந்தது. அருகிலேயே உணவுப் பொருட்கள் விற்கும் பெரியதொரு பல்பொருள் அங்காடியொன்றும் வீட்டுக்கு அண்மையிலிருந்தது. அழைப்பு மணியினை அழுத்தியதுமே அவர்களை எதிர்பார்த்திருந்த வீட்டுக்காரி பத்மா அஜீத் கதவினைத் திறந்து “நீங்கள்தானே இளங்கோ. சற்று முன்னர் அழைத்தது இருப்பிடத்திற்காக” என்று வரவேற்றாள்.
அதற்கு இளங்கோ “நானேதான். இவன் என் நண்பன் அருள். இருவரும்தான் சிலகாலம் இங்கு தங்கவுள்ளோம்” என்று நண்பன் அருள்ராசாவை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தான். அவள் அருள்ராசாவின் பக்கம் திரும்பி “ஹாய்” என்றாள். அத்துடன். அவர்களிருவரையும் பத்மா அஜீற் உள்ளே வரும்படி அழைத்தாள். அத்துடன் “ஏன் வெளியிலேயே நின்று கொண்டிருக்கின்றீர்கள். உள்ளே வாருங்கள். அறைகளைக் காட்டுகின்றேன். பிரித்திருக்கிறதாவென்று பாருங்கள்.” என்றும் கூறினாள்.
முதற்தளத்துடன் மேலதிகமாக மூன்று தளங்களை உள்ள்டக்கிய அழகான சிறியதொரு இல்லம். முதற் தளத்தில் பத்மா அஜித்தும், அவளது கணவர் அஜித்தும் வசித்து வந்தனர். இதற்குள் பத்மா அஜித்தின் கணவர் அஜிற்றும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். இவர்களைப் பார்த்து “ஹாய்” என்றார். அத்துடன் “நீங்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களா?” என்றும் கேட்டார்.
அத்ற்கு இளங்கோ ” நாங்கள் தமிழர்கள். இலங்கைத் தமிழர்கள் ” என்றான். இனக்கலவரத்தைத் தொடர்ந்து உலகெங்கும் செய்தி ஊடகங்களில் இலங்ககைத் தமிழர்களின் பிரச்சினை அடிபட்டுக் கொண்டிருநத சமயம்.
“ஓ ஸ்ரீலங்காவா.. அங்கு நடப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். உங்களது குடும்பத்தவர்களெல்லோரும் இன்னும் அங்குதான் வசிக்கிறார்களா?” என்று அஜித் கூறவும் அவருடன் சேர்ந்து பத்மா அஜித் “மிகவும் துயரகரமான நிகழ்வு. நானும் அறிந்திருக்கிறேன். அங்கு பிரச்சினைகள் விரைவிலேயே முடிந்து அமைதி பிறக்கட்டும்” என்று ஆறுதல் கூறினாள். இவ்விதமாக அளவளாவியபடி அவர்களை திருமதி பத்மா அஜித் முதலாவது தளத்திற்குக் கூட்டிச் சென்றாள். திரு. அஜித் கீழேயே நின்று விட்டார். முதலாவது தளத்தில் மூன்று அறைகளிருந்தன. பொதுவாகக் குளியலறையும், சமையலறையும் இருந்தன. அறைகள், ஒவ்வொன்றும் நன்கு விசாலமான, அறைகள். முதலாவது அறையில் மெல்லிய, வெளிர்நிறத்தில் , நன்கு அழகாகக் கத்தரித்து விடப்பட்ட நிலையிலான மீசையுடன், மெல்லியதொரு சிரிப்புடன் கூடிய வதனத்துடன் காணப்பட்ட வாலிபனொருவன் தரையில் விரித்திருந்த படுக்கையில் படுத்திருந்தவன் இவர்களைக் கண்டதும் எழுந்தான்.அவ்வாலிபனை நோக்கிய திருமதி அஜித் இவர்களிடம் “இவர்தான் கோஷ். மேற்கு வங்காலத்தைச் சேர்ந்தவர். இங்கு உங்களைப் போல்தான் அண்மையில் வந்திருக்கிறார். இவரிடம் நீங்கள் நல்ல தகவல்கள், ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்” என்று கூறிவிட்டு கோஷ் என்று அழைக்கப்பட்ட அந்த மேற்கு வங்க வாலிபனிடம் “கோஷ். இவர்கள் ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர்கள். இப்பொழுதுதான் அமெரிக்கா வந்திருக்கிறார்கள். தஙகுவதற்காக இடம் தேடி வந்திருக்கிறார்கள்” என்றாள். அவனும் பதிலுக்கு “ஹாய். உங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் இங்கு தங்கும் சமயத்தில் என்னால் முடிந்த உதவிகளைச் செய்யக் காத்திருக்கிறேன்” என்றான். அவனது இளமையான, களையான சிரித்த முகமும், பேச்சும் நண்பர்களிருவரையும் கவர்ந்தன. அவனுக்குப் பதிலுக்கு நன்றி கூறினார்கள். திருமதி பத்மா அஜித் அவனிடம் விடைபெற்றுக் கொண்டு நண்பர்களிருவரையும் அடுத்த அறைக்கு அழைத்துச் சென்றாள். அத்துடன் பின்வருமாறு கூறினாள்:
“கோஷ் நல்ல பையன. எல்லோருக்கும் நன்கு உதவக் கூடியவன். உங்களுக்கு ஆரம்பத்தில் வேலைகள் தேடும் விடயத்தில் மிகவும் பயனுள்ளவனாக அவன் விளங்கக் கூடும். தற்பொழுது அந்த அறையில் அவன் மட்டும்தான் இருக்கிறான். அதிகபட்சமாக மூவரைத் தங்க அனுமதிப்போம். கட்டிலில்லை. தரைதான். விருப்பமானால் நீங்கள் கட்டில் வேண்டிப் போடலாம. ஆட்சேபணையில்லை. கடிதங்கள் எழுதவதற்கு நீங்கள் சமையலறையிலுள்ள மேசையினையும், கதிரையினையும் பாவித்துக் கொள்ளலாம். நீங்கள் தங்க விரும்பினால் இங்கு கோஷுடன் உங்கள் இருப்பிடத்தினைப் பகிர்ந்து கொள்ளலாம.”
அடுத்த அறையில் உயர்ந்த ஆகிருதியுடன், மீசையும் தாடியுமாக ஒருவன் படுத்திருந்தான். பார்வைக்கு பஞ்சாப் இனத்தைச் சேர்ந்தவன் போலிருந்தான். அவன் இவர்களைக் கண்டுகொள்ளாத நிலையில் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தான். திருமதி பத்மா அஜித் மெல்லிய குரலில் “மான்சிங் தூங்கிக் கொண்டிருக்கிறான். அவனது துக்கத்தை நாம் கெடுக்க வேண்டாம். தறபொழுது இந்த அறையில் அவன் மட்டும்தான் இருக்கிறான். மான்சிங் இங்கு பிரபலமான நிறுவனமொன்றுக்கு ‘ட்றக்’ சாரதியாக இருக்கிறான். கலிபோர்னியாவில் வசிப்பவன். இங்கு வரும் சமயங்களில் இங்குதான் அவன் தங்குவது வழக்கம். எங்களது நீண்டகாலத்து வாடிக்கையாளன் ” என்று கூற்சி சிரித்தவள் மேலும் கூறினாள்:” நல்லவன். ஆனால் சிறிது முரடன். அவதானமாக அவனுடன் பேச வேண்டும்.”.
அடுத்த அறை மூடிக் கிடந்தது. அவ்வறையினைச் சுட்டிக் காட்டிய திருமதி பத்மா அஜித் “அந்த அறையில் ஒருவர் நிரந்தரமாக மாத வாடகை கொடுத்துத் தங்கியிருக்கின்றார். அவர் ஒரு பிராமணர். யாருக்கும் தொந்தரவு செய்ய மாட்டார். தானும் தன்பாடுமாகவிருப்பவர். இங்குள்ள ஆஸ்பத்திரியொன்றில் ஆண் தாதியாக வேலை பார்க்கின்றார். மருத்துவராக வரவேண்டுமென்பது அவ்ரது இலட்சியம். அதற்காக அவர் பல வருடங்களாக முயன்று கொண்டிருக்கின்றார். அதற்காக எந்த நேரமும் படித்துக் கொண்டிருப்பார்” என்றார்.
அதன்பின் அவர்களைத் திருமதி பத்மா அஜித் குளியளறைக்குக் கூட்டிச் சென்று காட்டினார். நண்பர்களிருவருக்கும் அவ்விடமும், மனிதர்களும் பிடித்துப் போய் விட்டது. திருமதி பத்மா அஜித் கேட்டாள்: “அடுத்த தளத்திலும் இதுபோல் மூன்று அறைகளுள்ளன. தனியாகச் சமையலறையும், குளிப்பிட வசதிகளுமுள்ளன. பார்க்க வேண்டுமா? தற்பொழுது அங்கு யாருமே வாடகைக்கில்லை. வெறுமையாகத்தானிருக்கிறது” என்றாள்.
நண்பர்களிருவரும் தமக்குள் தமிழில் கூடிக் கதைத்தார்கள். இளங்கோ அருள்ராசாவிடம் இவ்விடம் கூறினான்: “எனக்கு இந்த இடம் பிடித்து விட்டது. வீட்டுக்காரியும், இங்கிருப்பவர்களும் நல்லவர்களாகப் படுகிறார்கள். என்ன சொல்லுகிறாய்”. அதற்கு அருள்ராசா ” எனக்கும் பிடித்து விட்டது. பேசாமல் இங்கேயே தங்கி விடுவோம். இங்கிருந்துகொண்டே வேலைகளைத் தேடலாம்” என்று பதிலிறுத்தான்.
அவர்களிருவரும் பேசி முடிக்கும்வரையில் காத்திருந்த திருமதி பத்மா அஜித் கேட்டாள்: “என்ன சொல்லுகிறீர்கள். இடம் பிடித்திருக்கிறதா?”
இளங்கோ கூறினான்: “எங்களுக்குப் பிடித்திருக்கிறது. நாங்கள் இங்கேயே தங்கேயே முடிவு செய்திருக்கிறோம். எவ்வளவு வாடகை கேட்கிறீர்கள்?”
அதற்கு திருமதி பத்மா அஜித் கூறினாள்: “வாடகை கிழமைக்கு முப்பத்தைந்து டாலர்கள். உங்களுக்கு நான் முப்பது டாலர்களுக்குத் தருகிறேன். உங்கள் நாட்டு நிலைமை கவலைக்குரியது. உங்களையும் எனக்குப் பிடித்துவிட்டது. தொந்தரவு தராத குடியிருப்பாளர்களென்று பார்த்தாலே தெரிகிறது”.
அதற்கு இளங்கோ” திருமதி பத்மா ஆஜித் அவர்களே. உங்களது பெருந்தன்மைக்கும் தயாள குணத்துக்கும் நன்றி பல” என்றான். அவளிடம் முதல் வாரத்திற்குரிய வாடகைப் பணமாக அறுபது டாலர்களைக் கொடுத்துவிட்டுத் தமது பிரயாணப் பைகளை அறைகளில் வைத்துவிட்டு வீட்டுத் திறப்புகளையும் வாங்கிக் கொண்டார்கள். அருகிலுள்ள பல்பொருள் அங்காடிக்குச் சென்று அவ்வாரத்துக்குத் தேவையான அவசியமான உணவுப் பொருட்களை வாங்கி வந்தால் நல்லதென்று பட்டது. அதற்கு முன் சிறிது நேரம் கோஷுடன் அளவளாவுவது நல்லதாகப் பட்டது. கோஷுக்கும் அவர்களைப் பிடித்துப் போய் விட்டது. அவனுடன் பல்வேறு விடயங்களைப் பற்றியும் சம்பாஷித்தார்கள். விடயம் இலக்கியத்தில் வந்து நின்றது. இளங்கோ கூறினான்: “வங்க இலக்கியத்தின் அற்புதமான பல நூல்களை நான் வாசித்திருக்கிறேன். தமிழில் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, த.நா.குமாரஸ்வாமி போன்ற பலர் வங்க நூல்களை அற்புதமாக மொழிபெயர்த்திருக்கின்றார்கள். தாகூர், சரத்சந்திரர் என்று பலரின் நாவல்களைப் படித்திருக்கின்றேன். எனக்கு மிகவும் பிடித்த நாவல் அதீன் பந்த்யோபாத்யாயவின் ‘நீலகண்டப் பறவையத் தேடி..’ . எஸ்.கிருஷ்ணமூர்த்தியின் அற்புதமான மொழிபெயர்ப்பில் இந்திய தேசிய நூலகப் பிரிவினரால் வெளியிடப்பட்டிருந்தது. இந்திய சுதந்திரப் போராட்ட காலத்து நிகழ்வுகளை, இந்து, முஸ்லீம் பிளவுகளை, பெண்கள், விதவைகளின் நிலைமைகளையெல்லாம் விபரிக்கும் நாவல். அற்புதமான இயற்கை வர்ணனைகளையுள்ளடக்கிய நாவலது.”
டாகுர் வீட்டுத் தனபாபுவுக்குப் பிள்ளை பிறந்த சேதியினை அறிவிப்பதற்காகச் செல்லும் ஈசம் ஷேக்கை விபரிப்பதுடன் ஆரம்பமாகும் நாவல் ஷோனாலி பாலி ஆறு பற்றியும், வானத்தை நோக்கி அண்ணாந்திருக்கும் தர்முஜ் கொடிகள் பற்றியும், அங்கு வாழும் மனிதர்கள், பூச்சிகள், காற்றில் வரும் தானியத்தின் மணம், பள்ளம் நோக்கி வீழும் நீரொலி பற்றியெல்லாம் ஆறுதலாக விபரித்துக் கொண்டே மெல்ல மெல்ல விரியும். அதில்வரும் இயற்கை வர்ணனைகளை மட்டும் படித்துக் கொண்டே சுகத்திலாழ்ந்து விடலாம்.
இளங்கோவின் வங்க இலக்கிய அறிவு கண்டு கோஷ் மிகவும் மகிழ்ந்து போனான். அவனும் இயற்கையிலேயே இலக்கியத்தில் மிகவும் நாட்டமுள்ளவன். “நீங்கள் முதலில் கடைக்குச் சென்று வாருங்கள். ஆறுதலாகக் கதைப்போம்” என்று உண்மையான திருப்திகரமானதொரு மகிழ்ச்சி கலந்து உணர்வுடன் அவர்களை வழியனுப்பி வைத்தான்.
[தொடரும்]
ngiri2704@rogers.com
- காதல் நாற்பது (18) ஒருபிடிக் கூந்தல் உனக்கு மட்டும்!
- 7 th FILCA International Film Festival
- தமிழரைத் தேடி – 2
- தங்கம் வாங்குவது பாவச்செயல்- பசுமைத் தாயகம்
- அற்றைத் திங்கள்
- சுழல்
- கோடை விடுமுறை (சிறுவர் பாடல் )
- நாவல்: அமெரிக்கா II – அத்தியாயம் ஏழு: திருமதி பத்மா அஜித்.
- தனியறை: 1
- கருப்பை கவிதைகள் அல்லது சொற்களின் இடைவெளி தமிழ் பெண்கவிதையின் அடையாளம்
- கவிதைகள்
- சொட்டும் மழையிலும் சுவைத்தார்கள் தமிழை!
- தமிழ் இணையமும் நாட்டுப்புறவியலும்: முனைவர் மு.இளங்கோவன் முன்வைக்கும் கருத்தாடல்
- அந்த நாள் ஞாபகம் – பாட்டும் நானே!பாவமும் நானே!!
- சிவாஜி – சிறப்புப் பார்வை
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 16
- கடிதம்
- ஹெச்.ஜி.ரசூல் – அரபு மார்க்சியம் நூல் அறிவிப்பு
- இலை போட்டாச்சு ! 26 – பாசிப்பருப்புக் கதம்பக்கூட்டு
- பூமியைப் போன்ற புதிய கோளைக் கண்டுபிடித்த விண்வெளி விஞ்ஞானிகள்
- அடையாளம் துறக்கும் அந்தி மந்தாரைகள்
- அலைகளின் விளிம்பில்
- ஹைக்கூ
- அருள்வாக்கு
- இரவில் காணமுடியாத காகம்
- பெரியபுராணம்– 130 : 49. அதிபத்த நாயனார் புராணம்
- கவிதைகள்
- மலையாளக் குடிவார மசோதா – பெரியார்
- கால நதிக்கரையில்… – அத்தியாயம் – 4
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:7 காட்சி:9)
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 7
- மடியில் நெருப்பு – 35