நான் பண்ணாத சப்ளை

This entry is part [part not set] of 18 in the series 20010204_Issue

அஸ்வகோஷ்


என் புத்தி எதிலுமே இந்த மாதிரிதான்—துப்புக்கெட்ட புத்தி பதினைந்து ரூபாய் என்றதும் தலையாட்டி விட்டு வந்தாய் விட்டது. கொஞ்சம் பேசியிருந்தால் எப்படியும் குறைத்திருப்பான். பன்னிரண்டு ரூபாய்க்கு முடித்துவிட்டிருக்கலாம். கூட இருந்தவர்கள் என்ன சொல்கிறார்களோ அதுவே சரியென்று ஒப்புக்கொள்வதாக ஒருவார்தை நாக்கு நீட்டி சொன்னது குற்றமாகப் போய்விட்டது. உள்ளூர்காரனுக்கு வஞ்சனையா செய்வான் ? நாயத்தை பேசுகிறமாதிரி வாய் கூசாமல் சொல்லி விட்டார்கள். பதினைந்து ரூபாயாம் ‘ எலக்ஷன்காரன் இருபத்தைந்து கொடுத்தானாம்.

அப்படித்தான் வீடு என்ன பெரிய வசதியா….முன்புறம் ஒரு நடை, ரெண்டு பக்கமும் ரெண்டு அறை, பின்பக்கம் சமையல்கட்டு, சின்ன தோட்டம், ஜன்னலையாவது கொஞ்சம் பெருசாய் வைத்துக் கட்டக் கூடாதா அவன் சின்னச் சின்னதாய் முகம் பார்க்கிற கண்ணாடி மாதிரி……

சே ‘ என்ன வெய்யில்……இப்படி மண்டையைக் கொளுத்துகிறதே நன்றாகக் காய்ந்தால் நன்றாகக் கொட்டுமாம். எங்கே கொட்டுகிறது ? தினம்தான் காய்கிறது. காய்கிறதில் ஒன்றும் பஞ்சம் இல்லை.

அவள் என்ன சொல்லப் போகிறாளோ ‘ நீங்கள் எதற்குப் போனாலும் இப்படித்தான் ஒண்ணத்துக்கும் உருப்படியில்லாமல்….எல்லாம் நமக்கு பெரிய சனியன். நமக்கு என்று எல்லாம் பொருந்துகிற மாதிரியா அவனவன் வீட்டைக் கட்டிவைத்திருக்கிறான்.

வீட்டைப் பார்த்ததுமே திகைத்து நிற்கப்போகிறாள். இதற்கா பதினைந்து ரூபாய் என்று எரிப்பாள். ஒவ்வொண்ணுத்திலும் உங்க பொவுஷ்உ வெளங்குதே போதாதா….என்று சுடப் போகிறாள். அப்புறம் எதற்கெடுத்தாலும் அதே குறைதான், அடுத்த ஊருக்கு ட்ரான்ஸ்பர் வந்து அந்த வீட்டைக் காலி செய்கிற வரைக்கும் அந்த வீடே அவளுக்கு சாசுவதமான குறை. பிள்ளைகள் ஓடியாடி விளையாடத்தான் ஒரு இடம் உண்டா….. ‘ பட்டணமா இது பார்க்கில் போய் விளையாட…. தேடிப் புடிச்சி கண்டு பிடிச்சீங்களே இந்த ஊட்ட…..

காக்காய்க்கு என்ன கவலை ? புளிய மரத்தில் உட்கார்ந்து கத்த…. தொண்டையைப் பிடித்து திருகிப் போட்டால் தேவலாம்.

பஸ் எத்தனை மணிக்கென்று தெரியவில்லை. ரோட்டா இது…. ரோட்டைப் பார்த்தாலே பஸ் சவாரி செய்கிற லட்சணம் தெரியவில்லையா; ஈ ஓட்டுகிறது.

‘ஏங்க, இப்ப திண்டிவனம் பக்கம் பஸ் எத்தனை மணிக்கி ? ‘

‘ரெண்டே கால் மணிக்கு…. ‘

சரிதான்….நல்ல நேரத்தில் புறப்பட்டு வந்து மாட்டிக் கொண்டேன். தூங்கி எழுந்திருக்கலாம் தூங்கி…ரெண்டே கால் மணிக்கு…அப்பா ‘

அது என்ன…. ? ஓட்டலா…. ‘ ஓட்டல் மாதிரியாயிருக்கிறது. பகவதி விலாசாம். படிப்பதற்குள் கண்ணே பழுதாகி விடும் போலிருக்கிறது. அழுக்கேறி… மங்கி…. போர்டே இந்த அந்துசு என்றால் உள்ளே என்ன இருக்கப் போகிறது ? இருந்தாலும் வாயில் வைக்கிற மாதிரியா யிருக்கும்….

பசிக்கிற மாதிரிதான் தோணுகிறது. காலையில் புறப்படும்போது ஒரு டம்ளர் காபி சாப்பிட்டது. வீட்டுக்குப் போனால் ஒரேயடியாய் சாப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால் இந்த கண்றாவி பஸ் இப்போதைக்கு எங்கே வரப்போகிறது. எதையாவது ரெண்டு உள்ளே தள்ளலாம்….

என்ன உள்ளே ஒருத்தனையும் காணோமே….. ‘ கல்லாவிலே கூட எவனையும் காணோம். இப்படி அழுதுவிடிகிறதே…. ‘ ஏன் என்று கேட்கக்கூட எவனுக்கும் நாதியில்லை. சுத்தமாய் ஆளே இல்லை போலிருக்கிறது. இந்த அழகில் காபி சாப்பாடு ஓட்டலாம்…. பெயரில் ஒன்றும் குறைச்சல் இல்லை.

அப்பா அது மட்டும் எவனோ வருகிறான். யார் அவன்….. ‘ சர்வரா, முதலாளியா, கிளீனரா…. எவனோ….பீடை; அழுமுஞ்சி….. ‘

‘என்ன சார் வேணும்…. ‘

‘என்னா இருக்குது…. ? ‘

‘ராவா தோசை; காபி….. ‘

பேஷ் பேஷ். கொறட்டை விட்டாலும் அயிட்டத்தில் ஒன்றும் குறைச்சல் இல்லை. ரவா தோசையாம் ரவா தோசை. என்ன ரவா தோசையோ–பார்ப்போமே…..

‘சரி ரெண்டு தோசை….சொல்லு…. ‘

‘இப்படி ஒக்காருங்க சார்…. ‘

எங்கே உட்காருவது ? வாய்க்கு சுளுவாக சொல்லி விட்டான் தடியன் ‘ ஏதாவது பேச்சு ஒழுங்காய்ப் பேசத் தெரிய வேண்டாம். உட்கார்ந்தாலே பெஞ்சியிலிருப்ப தெல்லாம் சோமனில் ஒட்டிக் கொள்ளும் போலிருக்கிறது வாயில் சோமன். சலவை இன்றைக்குத்தான் எடுத்து கட்டியது….. ஒரே நாளில் புரட்டி எடுத்துவிட வேண்டுமா….

அந்த இடம் கொஞ்சம் தேவலாம் போல் தெரிந்தது. எதற்கும் நியூஸ் பேப்பரையே மடித்து போட்டு உட்காரலாம். நியூஸ் பேப்பர்….எங்கே அதை பையில் காணோமே ‘ எங்கே வைத்தேன் ? சே ‘ வீட்டுக்காரன் வீட்டிலேயே….மறந்து வைத்தாகி விட்டதா சரியான ஞாபகப் பிசகு. இதுவேறே பதினெட்டு பைசா தெண்டமா….எல்லாம் நேரம்.

எலக்ஷன்காரன் கொடுத்தான் என்றால் அது அவன் சவுகரியம் ஒரு மாசமோ ரெண்டு மாசமோ தங்கியிருப்பான். தண்ணியாய் செலவழிக்கிற காசில் ஏதோ ஒரு கணக்கு இடுப்பொடிய, கூனு வளைய எழுதுகிற காசில் அப்படி முடுயுமா…. ரொம்ப தாராளமாய் குறைத்து விட்டானாம். பெரிய தாராளம். பதினைந்து ரூபாய்…..

பச்சங்….ஒரு வார்த்தை குறுக்கே புகுந்து பேசாத குற்றம்…. எப்படியும் குறைத்திருப்பான். இந்த ஊரில் சும்மா கிடக்கிற அந்த வீட்டுக்கு தன்னை விட்டால் எவன் முழுசாப் பதினைந்து ரூபாய் எடுத்துக் கொடுக்கப் போகிறான் ?

என்னவோ வீடு, சரிந்த விழல்களும் செல்லரித்துப்போன தூண்களும், காரை பெயர்ந்த தரையும்….அவள் நன்றாய் டோஸ்விடப் போகிறாள். எல்லாவற்றையும் வாங்கிக் கட்டிக் கொள்ளவே இந்த ஜன்மம் எடுத்தாய்விட்டது. போதாத காலம், தலையெழுத்து ‘

நம்ப புத்தியை அடித்துக் கொள்ளவேண்டும், சோம்பேறிப் புத்தி. இன்னும் ரெண்டு தெரு சுற்றிப்பார்த்திருக்கலாம். இதைவிட நல்ல வீடாகக்கூட கிடைத்திருக்கும். மழமழ வென்று…. சிமெண்ட் பூசி, பெரிய ஜன்னல் வைத்து மெத்தை ஒட்டி ரொம்ப ‘நீட் ‘டாகவே கிடைத்திருக்கும்.

பதபதவென்று மின்னண்டையிலேயே வாய் வைத்தாகி விட்டது. அந்தக் கவுண்டரும் சொல்லி வைத்தா மாதிரி கொண்டு போய் விட்டு விட்டார். எவ்வளவோ சொல்லி வைத்து என்ன பிரயோசனம். உருப்படியாக ஏதாகிலும் ‘சீப் ‘பாய் முடிந்ததா….வாடகைதான் போகட்டும் வீடாவது வசதி உண்டா….தெண்டம்…. தெண்டம் ‘

அவள் வந்து குடித்தனம் பண்ணுகிற காலத்தில் பக்கத்துத் தெருவில் பத்து ரூபாய் வாடகையில் பிரும்மாண்டமான மெத்தை வீடு காலியாயிருக்கிறது என்று கேள்விபட்டாளானால்…. அதுவும் எனக்குப் பிறகுதான் எவனோ வந்து குடியேறி விட்டான் என்று தெரிந்தால்…. வேற வம்பே வேண்டாம். பெருச்சாளி வேறு வளர்க்கிறானா இந்த ஓட்டலில்…. இவன் என்ன–போனவன் ஆளையே காணோம் ? எப்பவோ போனான். என்ன ரவா தோசைக்கு மாவு அரைக்கிறானா…. பெருச்சாளி வேறு காலை எங்காவது கடித்துத் தொலைக்கப் போகிறது. எம்மாம் நேரம்….. ‘

‘ஏம்ப்பா….. ‘

‘தோ ஆச்சி சார்…. ‘

சரியாப் போச்சி போ ‘ இப்பத்தான் அடுப்பே பற்ற வைக்கிறானா….. இவன் எப்ப சூடுபண்ணி எப்ப சுட்டு…. எப்ப நமக்கு தோசை தருகிறவன்.

சரியான தூங்கு மூஞ்சி ஓட்டல்தான். ஆளைப்பாரேன் நல்லா தடித்தாண்டராயனாட்டம். அவனும் அவன் தலையும், வேஷ்டியும்…. அடுப்புல நெருப்பு இல்ல சார் நேரமாவும்னு சொல்லக் கூடாது ? முண்டம் மாதிரி உக்கார வச்சிட்டுப் பூட்டானே….. மூஞ்சை பாத்தியா நல்லா செங்கொரங்காட்டம். அதுக்கு தான் நல்லா அழகு ஒழுவ ஒக்காருங்க சார்….னு சொல்லிட்டு உள்ள பூட்டானா. எல்லாம் நமக்கு பேரெழவு…..

இப்பத்தான் குனிஞ்சி குனிஞ்சி ஊதறான். ஊதுறா….ஊது. இவனெல்லாம் எதுக்குத்தான் ஆத்தமாட்டாத ஓட்டல் வச்சி நடத்தறானோ….. ஆடிக்கு ஒரு தோசை….. அமாவாசைக்கு ஒரு தோசை சுடுவாம் போல இருக்குது; ஊதுறதப் பாரேன்…. நல்லா அவனும் அவன் வாயும் பண்ணி மாதிரி…. அப்படியே அவன் மூஞ்சைப் பிடித்து தரையில் தேய்த்தால் தேவலாம்.

இருக்கிற தொல்லையில் இது வேற இம்சை. இவன் சுட்டுக் குடுக்கறதுக்குள்ள பசியெல்லாம்கூட தீர்ந்துடும்….அதுக்கு அப்பவே ஒண்ணும் இல்லேண்ணு சொல்லிட்டுப் போறது….. பார்க்கப் பார்க்க பற்றிக் கொண்டு வருகிறது. பீடை…..

இது என்னா இது புதுசா எவனோ….ஆமா ‘ இங்கே இருக்கிற எனக்கே சுட்டுமாளல அவனால்…. இதுக்குள்ள நாலு பேர் உள்ள நொழைஞ்சீட்டாங்களா…..

‘என்னப்பா சாப்பாடு ரெடியா….. ‘ ‘

‘ஓ ‘ எல்லாம் தயார்தாண்ணே கொஞ்சம் ஒக்காருங்க…. தோ வந்துட்டேன் ‘

‘ஆவட்டும் ஆவட்டும்….. பொறுமையா ஆவட்டும் ‘

அவர்களுக்கென்ன சாவகாசமாய் சொல்லிவிட்டு, அந்த அழுக்கு பெஞ்சே வழக்கமாகிவிட்டது போல் உட்கார்ந்து கொள்ள வாடிக்கைகாரர்களா…. இந்த ஓட்டல் இருக்கிற பொவிஷில் வாடிக்கை ஒரு கேடா….. மாமுல்காரன் மாதிரி சகஜமாய் அல்லவா கிடக்கிறான்கள். எந்த இழவாவது கிடந்துவிட்டுப் போகட்டும். தோசை என்ன ஆயிற்று. ரவா தோசை என்ன ஆயிற்று. ரவா தோசை…. சரியான எருமை மாடு ‘ செக்கு உலக்கை ‘

‘உங்க எல்.எம். என்னா ரொம்ப எகுர்றாரு ? ‘

‘ம்…..நீவேற….. அவர் எப்பவுமே அப்பிடித்தாம்பா…. சும்மா கத்துவாறே தவிர அப்பறம் ஒண்ணும் இருக்காது—சுபாவமே அப்பிடித்தான்…. ‘

எலக்ட்ரிசிடி போர்டில் வேலை செய்பவர்களா….. ‘ ஹெல்பர்கள் மாதிரி தெரிகிறது…..

‘புது எல்ஐ அடுத்த வாரம் இங்கியே குடும்பம் வச்சிடப் போறாராமே….. ‘ ‘

‘ஆமா, சொல்லிக்கினுதான் இருக்காரு. இந்த ஊருல ஊடு எங்கருந்து ஆப்புடப் போவது….. சும்மா கெடந்த ஊருலதான் அந்த ஆபிஸஉ இந்த ஆபிஸஉன்னு அது மாட்டுன்னு ஓபன் பண்ணிப்புட்டு….அங்கங்க எங்கப் போனாலும் ஊடு பஞ்சம் பெரிய பஞ்சமா இருக்குதே…. ‘

‘நம்ம இவரு ஊடு என்னாச்சி வாள் காரமூடு….. ‘

‘அதுவா; அதுகூடம் இன்னிக்குத்தான் ஆரோ வந்து அட்வான்ஸ் பண்ணிட்டுப் பூட்டாங்களாம். கொஞ்சநாள் முன்னாடி காலியாகத்தான் கெடந்தது எவ்வளவோ சொன்னேன். அப்ப அவரு கேக்கல…. ‘

‘அப்படியா…. அடப் பாவமே ‘ வாடக எவ்வளோ ‘

‘பாஞ்சி ரூபாதான். நேத்தே சொல்லியிருந்தார்னாகூடம் எப்படினா முடிச்சிட்டிருக்கலாம். இப்பத்தான் ஆருக்கோ உட்டாங்களாம்…. ரெண்டு நாள் மிந்தியே மன்னாதக்கவுண்டர்கிட்ட சொல்லி வச்சிருக்காங்க ‘

‘என்ன பண்றது எல்லாம் அவர் நேரம் ‘

என்ன பேசிக் கொள்கிறான்கள் இவன்கள். நம்ம கதைதானா….. சரிதான் ‘ அப்பா….. இப்பத்தானே மனசுக்கு நிம்மதியாயிருக்கிறது. நம்ப நேரம் நல்ல நேரம்தான். இந்த வீட்டை முடித்ததில் தான் ரொம்ப அதிர்ஷ்டசாலிதான். அவள் ஒன்றும் சொல்ல முடியாது. அப்பாடா… மக்கித் தொங்கும் விழல்களும் ஒட்டையையும் ஓட்டலே என்னமோ மாதிரிதான் இருக்கிறது. நிராதரவாய் அனாதைப் பிள்ளை மாதிரி. அடுப்பில் ஈரம் பட்டு விட்டதோ என்னவோ; அதான் சீக்கிரம் பற்றமாட்டேன் என்கிறது. கொஞ்ச மண்ணெண்ணையாவது ஊற்றிக் கொளுத்தக் கூடாதா அவன் வாய்நோக குனிந்து குனிந்து ஊதிக்கொண்டிருக்கிறானே ‘ அழுக்குக் கோமனமும் அழுக்குச் சட்டையும், காய்ந்து போன தலையும் பஞ்சடைந்த கண்களும் பார்க்கவே பரிதாபகரமாய்த்தான் இருக்கிறான்.

டவுனா இது ? நினைத்த நேரத்துக்கு சொன்னதும் டக்கென்று ஒரு தேய், தேய்த்துப் போட்டு எடுத்துக் கொண்டு வர.

இந்தப் பட்டிக்காட்டில் ஒரு நாளைக்கு எத்தனை பேர் தோசை சாப்பிடுவானோ….. அவன் என்ன செய்வான் பாவம் ‘

எலி வளை மாதிரி எங்கேயோ ஒரு மூளையில், எதிரிலேயே அழுந்திப்போன மாதிரி அம்போ என்று கிடக்குறானே என்ன சுகத்தைக் கண்டிருப்பான் அவன் ‘ அவனைப் போய், நாய் மாதிரி அவன் மேல் விழுந்து ஒடுங்கவேண்டு மென்று ஒரு வெறி வந்ததே சற்று முன் என்ன புத்திசாலித்தனம்…..

அரக்கப் பறக்கச் சுட்டுக் கொடுத்துத்தான் இப்போ என்ன ஆகப்போகிறது…. வெளியே போய் என்ன வெட்டி பிளக்கப் போகிறோமா….. ரெண்டே காலுக்குத்தானே பஸ், இன்னம் முக்கால் மணி நேரம் இருக்கிறதே…..

‘தோ ஆச்சி சார்….. ‘

‘பரவால்லபா பொறுமையா ஆவட்டும். ஒண்ணும் அவசரமில்ல ‘

***

Series Navigation

- அஸ்வகோஷ்

- அஸ்வகோஷ்