ஜெயமோகன்
அத்யாயம் ஆறு
கணேஷ் ஓட்டலின் கீழ்தளத்தில் டைனிங் ஹாலில் அமர்ந்து ஒரு தயிர்வடையை மெதுவாக ஸ்பூனால் சாபிட்டுக் கொண்டிருக்கும்போது எதிரே ஒருவர் வந்து கூர்ந்து பார்த்து ‘உங்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன் ‘ என்றார் .
‘என்னையா ? ‘ என்றான் கணேஷ் .அந்த பெரியவர் கையில் துப்பாக்கி ஏதும் இல்லை .
‘முக்கியமான ஒரு விஷயம் சொல்வதற்காகத்தான் ‘ என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே வெயிட்டர் லெட்சுமணப்பெருமாள் வந்து பணிவைக் காட்டினான் .
‘ ‘ அடுப்பின்மீது வைத்து போதிய அளவில் சூடுபடுத்தப்பட்ட வட்டவடிவமான இரும்புத்தகடின் மீது அகப்பையால் மொள்ளப்பட்டு சமமாக பரப்பப்பட்ட உளுந்து மற்றும் அரிசி மாவின் உரிய முறையில் புளித்த கலவையை ஆறு நிமிடங்கள் வேகவைத்தபிறகு சட்டுவம் என்ற இரும்புக்கருவியால் மெதுவாக புரட்டிப்போட்டு சிவந்து ஆவிஎழ காத்திருந்து அதேசமயம் கருகாமல் மெல்ல எடுத்து எவர்சில்வர் தட்டின்மீது வடிவத்தூய்மையுடன் வட்டமாக வெட்டப்பட்ட வாழை இலையை வைத்து அதன் மீது போதிய அளவு தேங்காய் சட்டினி மற்றும் சாம்பாருடன் அழகியல் லாவகமாக கொண்டுவந்தால் நல்லது ‘ என்றார் அவர் .
சர்வர் பவ்யமாக தலையாட்டி , திரும்பிச்சென்றபடியே சமையலறையை நோக்கி ‘ போடு ஒரு சாதாத் தோசேய்ய்ய்!! ‘ என்று வீரிட்டதை அவர் கவனிக்கத்தவறவில்லை . ‘ பார்த்தீர்களா ,நான் சொல்வதை மக்கள் மிக எளிதாகப் புரிந்துகொள்கிறார்கள் . இதை மறைத்து சில விஷமிகள் பொய்ப்பிரச்சாரம் என்ற ஆணவ கன்ம மலங்களை வாலைத்தூக்கி கழித்துக் கொண்டிருக்கிறார்கள் . இவர்கள் மனநோய்க்கூறுகளை பேரளவில் தன்னகத்தே கொண்டவர்களாக மட்டுமே இருக்கமுடியும் என்று சொல்ல வாய்ப்பு இருக்கிறது என்று மட்டும் சொல்லலாம் ‘ என்றார் .
‘நீங்கள் என்னிடம் எதைப்பற்றிப் பேசவேண்டும் ? ‘ ‘
‘சொல்கிறேன். மனிதமனத்தில் உறைந்து கிடக்கும் கருமையின் ஊற்றுக்கண்களை தூர்க்கவிடாமல் தடுக்கும் தீயசக்திகளுக்கு எதிரான மெய்மையின் சாரத்தின் விகசிப்பை நம் கைகளில் ஏந்திக் கொள்ளும் நிலையிலேயே நமது சகல மேன்மைகளும் கைகூடுமென்றாலும் சுதந்திரக் கலைஞர்களுக்கும் அரசியல் கலைஞருக்கும் இடையேயான இப்போதைய இடைவெளி இன்றும் புகைமூட்டமாக தொடரும் நிலையில் கருத்துவேற்றுமைகளின் நுட்பம் கூடி துல்லியப்படுவதும் முன்முடிவுகள் மற்றும் பொறுப்பின்மைகள் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள சில ஐயங்களை களையும்பொருட்டும் மூளையில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஜீவ உண்மைகள் தெருவிலிறங்கி கோஷமிட்டபடி ஓடுகையில்… ‘
‘இருங்கள் . எனக்கெல்லாம் ஏழு வார்த்தைகளில் சொல்லப்படுவது மட்டும் தான் இலக்கியம் . இதெல்லாம் என்ன ஏது என்றே புரியவில்லை ‘ ‘
‘தெளிவாக சொல்கிறேனே …பிரக்ஞையின் இடையீடு யதார்த்த பின்னணி சார்ந்து அனுபவத்தில் ஜீவகளை கூடுகையில் நமது போதம் … ‘
‘மொத்தத்தில் என்ன சொல்லவருகிறீகள் ? லெச்சூ, இங்கே வா .சார் என்ன சொல்ல வருகிறார் என்று சொல்லு.. ‘
‘என்னா சார் ? ‘ ‘
‘இல்லேப்பா .இப்போ நான் என்ன சொல்லிட்டிருந்தேன்ன்னா…உள்ளுணர்வுகளின் சாரத்தில் உறையும் மெய்மைகளின் நிழலை பெயர்த்து நமது கலாச்சார சக்திகளின் முன்னால் போட்டு அவை எழுப்பும் சாரமான ஜீவகளை பொருந்திய கேள்விகளை எழுப்புகையில் கனவுகள் மாய்மாலங்கள் போலி லட்சியங்கள் போலி மதிப்பீடுகள் போலி ஒழுக்கங்களின் டைகர் பூட்டுகள் பழம்பெருமையின் வாய்ச்சவடாலை விற்று உண்டிக்கு வழிதேடும் மொண்ணைத்தனங்கள் ஆகிய சகல துறைகளிலும் உள்ளடங்கி கிடக்கும் ஆழமான அடித்தளம் நோக்கிய நகர்வை கண்டடைதல்… ‘
‘சார் குமுதத்திலே துப்பறியும் கதை எழுதப்போறார் .அதுக்கு முன்னுரை எழுதிட்டிருக்கார். அதப்பத்திச் சொல்றார் … ‘ என்றான் லெட்சுமணப்பெருமாள் .
‘ஆமா ஆமா. பாத்தேளா , அவருக்கு கரெக்டா புரிஞ்சுடுது ‘
‘இவ்வளவுதானா விஷயம் ? இந்த பாஷையிலேயா எழுதப்போறீங்க ? ‘ ‘
‘நேக்கு இதானே தெரியும் ? ‘
‘ஒண்ணு பண்ணலாம் . வாரவாரம் அத அத்தியாயத்தோட சாரம்சத்தையும் ஜீவகளையையும் கண்டுபிடிக்கறவங்களுக்கு ஏதாவது போட்டி வெக்கலாம்… ‘
அவர் பிரகாசம் பெற்று ‘அப்படியா சொல்றேள் ? ‘ என்றார்
தொலைவில் வசந்த் வருவது தெரிந்தது . ‘ ‘அப்ப நான் வரேன் ‘ ‘ என்றபடி அவர் எழுந்தார் .
‘அந்தாளை டிரேஸ் பண்ணிட்டேன் பாஸ் . காலைல சோதிடர் ரூமுக்குள்ள போயிருக்கான். ஒரு மணிநேரம் என்னமோ பேசியிருக்கான். வெயிட்டர் ஏன் அவ்வளவு நேரம் பேசணும் , அங்கேயே பிரச்சினை இருக்கு . கொலை நடக்கிறதுக்கு முன்னாடி அவன் சாப்பாடு வண்டிய தள்ளிட்டு போயிருக்கான். அவனைபிடிச்சு கொடைஞ்சா எல்லாத்தயும் கக்கிடப்போறான்… ‘ வசந்த் அமர்ந்து கொண்டதும் ‘ லெச்சூ ரெண்டு தயிர்வடை கொண்டா கண்ணா ‘ என்றான் பிறகு வசந்த் ‘நாம அவனை விசாரிக்கிறது யாருக்கும் தெரியம இருந்தா நல்லது பாஸ்.ஏகப்பட்ட துப்பறியும் நிபுணர்கள் உலவறாங்க.. ‘ என்றான்.
எதிர் மேஜைக்கு இருவர் வந்தார்கள் . இளையவன் ‘ லெச்சூ ஒரு ஃபில்டர் காபி பொடு கண்ணூ ‘ என்றான்.
வசந்த் ‘ ‘அந்தாள் குரல் என்னை மாதியே இருக்கு பாஸ் ‘ என்றான்.
‘ ‘ குரல் மட்டுமில்லைடா , ஆள் பாக்கிறதுக்கும் உன்னைமாதிரித்தான் இருக்கான். வெள்ளைக்காரனா இருந்தாலும். ‘
‘பாஸ் , அந்த மத்த ஆசாமி கூட உங்களை மாதிரித்தான் இருக்கான்… ‘
எதிர்மேஜை ஆட்களும் இவர்களை கவனித்து பேசிக் கொண்டார்கள். வசந்த ‘ ஹி !நான் வசந்த் .இது என் பஸ் லாயர் கணேஷ் .சென்னைல இருக்கோம் … ‘
‘எதைச் சுற்றி வருகிறீர்கள் ? ‘
‘திருவல்லிக்கேணியத்தான், ஏன் கேக்கறீங்க ? ‘
‘நாங்கள் உலகத்தை எண்பதாயிரம் நாட்களிலே சுற்றிவருகிறோம் . ‘
‘ எய்ட்சுக்கு நிதி வசூலிக்கிறீங்களா ? கைவசம் நிதி இல்லீங்க , எய்ட்ஸ் வேணா… ‘
‘நீங்க.. ? ‘ என்றான் கணேஷ் .
‘தெரியவில்லை ? இந்தக்கால ஆட்களுக்கே முன்னோடிகளை தெரிவதில்லை . என் பேர் பாஸேபாத்தூத். இது என் மாஸ்டர் , ஃபிலியாஸ் ஃபோக் . ‘
‘மெட் ரிகுலேஷன்லே நான்டாடேலுக்கு பாடமா இருந்தீங்க . சந்திச்சதிலே ரொம்ப சந்தோஷம் . ‘
‘இப்ப என்ன கேஸ் ? ‘
‘என்ன ஏதுன்னு தெரியலை .புரட்சித்தலைவியோட மினிஸ்டர்ஸ் மாதிரி துப்பறியறவங்க வந்துட்டே இருக்கிறாங்க. வந்தவங்களுக்கு என்ன ஏது பண்றதுன்னும் ஒண்ணும் புரியலை … ‘
‘என்னை மாதிரியே பேசுகிறீர்கள் ‘ பாஸேபாத்தூத் வியந்தான் ‘ எல்லா மொழியிலும் எங்களை மாதிரி இரண்டுபேர் இருக்கிறார்கள் ‘
‘நீங்க உலகத்த சுத்தி முடிக்கலையா ? ‘
‘ எங்கே ? நாங்கள்தான் அசல். அதற்குள் ஒரு போலி ஆசாமி லண்டனை சுற்றிவந்து லண்டன்தான் உலகம் உலகம்தான் லண்டன் என்று சொல்லி லூசிஃபரிடமிருந்து விஸ்டம் ஆப்பிளை வாங்கி சாப்பிட்டுவிட்டான் .நாங்கள் எங்கள் பயண விபரங்களை ஜூல்ஸ் வெர்னுக்கு எழுதி அனுப்பினோம். கல்கத்தாவுக்கு போக ஒரு யானையை வாங்கினோம் பாருங்கள் அது வரைத்தான் உண்மை. அதற்கு பிறகு அவரே கதைவிட்டு நாவலை முடித்து பணம் வாங்கிவிட்டார் . கதை முடிந்த விஷயத்தை போன வருடம்தான் கல்கத்தாவிலே பத்தாம் வகுப்பு பாடத்தில் அப்ரிட்ஜ்ட் எடிஷனில் படித்து தெரிந்து கொண்டோம் ‘
‘ ‘என்ன ஆச்சு ? ‘ ‘
‘அந்த யானை கோயில்யானை சார் . பாகன் அதை கடைகடையாக பிச்சை எடுக்க பழக்கியிருக்கிறான். ஒவ்வொரு பெட்டிக்கடையாக நின்று வாழைபழத்தோல் சில்லறை எல்லாம் வாங்கி ,அது கல்கத்தா போய்ச்சேர நான்கு வருடம் ஆகிவிட்டது . கல்கத்தாவில் ஒரு இடுங்கலான கலியில் நுழைந்து மாட்டிக் கொண்டோம் . அது மிகசிக்கலான கலி .அங்கே எல்லாருமே அப்படி மாட்டிக் கொண்டவர்கள்தான் .வெளியே வர வழி தெரியாமல் சுற்றி கடைசியில் அங்கேயே வாழப் பழகிவிட்டோம்.. ‘
‘ கலி புராணத்திலே நாரதர் கூட இப்படி வந்து மாட்டியதாக கதை இருக்கு… ‘
‘ ‘ கடவுள் பிளாட் வாங்கிபோட்டிருக்கிற இடம் என்று கேரளப்பகுதியைப்பற்றி படித்து இங்கே வந்தோம். மாஸ்டர்கூட கல்கத்தா கலிகளைப்பற்றி ‘ கலீலியோ கலியிலே ‘ என்று ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறார் ‘
‘ எப்ப முடியும் ? ‘
ஃபிலியாஸ் ஃபோக் சற்று சிரித்தார் . பாசேபாத்தூத் ‘ உங்களுக்கு பிரிட்டிஷ் மரபு தெரியாது போலிருக்கிறது . முதுமையில் எப்போது போர்க் இறைச்சி செரிக்காமல் ஆகிறதோ உடனே பிரிட்டிஷ் ஜெண்டில்மேன் புத்தகம் எழுத ஆரம்பித்துவிட வேண்டும் . மாஸ்டர் அக்கணத்திலேயே டாய்லெட் சீட்டில் இருந்தபடி டாய்லெட் பேப்பரிலேயே ஆரம்பித்துவிட்டார் . ‘
‘அடாடா ‘ என்றான் வசந்த் . ‘இங்கேயெல்லாம் சாதி சங்கம் ஆன்மிகம் அப்டான்னு போய்டறாங்க.. ‘
‘ அதனால் மாஸ்டருக்கு அந்த இடத்தில் அமர்ந்தால்தான் மூடு வரும் . அங்கே டேபிள் லாம்பெல்லாம் கூட ஏற்பாடு செய்திருக்கிறோம் ‘ சொல்லிவிட்டு குரலைதாழ்த்தி ‘ லண்டனிலே வாயு உபத்திரவம் ஏதாவது உண்டா ? ‘ என்றான்
‘இல்லியே . அங்கே மாட்டுக்கறிகூட தடைசெய்யப்பட்டிருக்கிறதாக கேள்விப்பட்டேனே.. ‘
‘அதில்லை .நான் கிளம்பும்போது எரிவாயு விளக்கை அணைக்காமல் வந்துவிட்டேன் என்று படித்திருப்பீர்கள் .அது ஆயிற்று நூறு வருடம் …சரி பார்க்கலாம்.. ‘
‘ பாஸ் அந்த வழுக்கை ஆசாமி பேசவே மாட்டேன் என்கிறானே ‘
‘அது கேரக்டர் அப்படித்தான். நானும் அதேமாதிரி கமுக்கமான கேரக்டர் தாண்டா . இந்த புது எழுத்தாளன் கொஞ்சம் வளவள டைப்புங்கிறாங்க . அவன் கேரக்டர்ஸ்லாம் பக்கம்பக்கமா பேசிக்கிட்டே இருக்குமாம் . வாய வலிக்குது. இந்த மட்டும் ஆன்மீகத் தேடல் , பாழடைஞ்ச கோயில்னு எறக்கிவிட்டுடாம இருந்தானே அதுக்கு நன்றி சொல்லணும்… ‘
‘பாஸ் தயிர்வடை வீரத்த தூண்டி விட்டுருச்சு . நாம அந்த மாமாப்பயலை ஒருகை பாக்கிறோம் ‘ என்று வசந்த் எழுந்தான்.
***
திடுக்கிட்டுப்போன சங்கர்லால் கண்ணாடியை அவசரமாக எடுத்து ரிசீவரை பிடுங்கப்போனார் . பகீரத பிரம்ம பிரயத்தனங்களை முறைப்படி பட்டும்கூட அதை எடுக்க முடியவில்லை .கிளம்பும்போதுதான் அதை பர்மாஜாரில் காசிமேடு கபாலியிடமிருந்து சகாயவிலையில் வாங்கியிருந்தார் . அதை கழற்றுவதெப்படி என்று அவன் சொல்லித்தரவில்லை.
லிஃப்ட் நின்றதும் சங்கர்லால் மீண்டும் கறுப்புக் கண்ணாடியை மாட்டி, ‘ ‘ தோசை ஒண்ணேய் ..மசால் ரோஸ்ட் ரெண்டு..டண் டணாய்ங் ..பூரி மாசால் .. சாம்பார் பக்கேட் ..சூரி எங்கேடா ஒழிஞ்சான் ? டண் டண் டண் டணால் …ஊத்தப்பம் ஆச்சா ? தோசை ஒண்ணேய்..வடை இட்லி ரெண்டுபிளேட்.. ஸ்ட்ராங் ஃபில்டர் காபி ரெண்டேய்.. ‘ ‘ என்று முழங்கிய ஒலிப்பெருவெள்ளத்தில் அமிழ்ந்தார்.
துப்பறிதலின் நான்காவது பொன்விதியே சங்கர்லாலுக்கு தடையாக இருந்தது என்பதை இந்நேரம் வாசகர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள் . துப்பறியும் நிபுணர்கள் தங்கள் உடை நடை பாவனை மற்றும் முக்கிய சொற்றொடர்களை மாற்றவே முடியாது .செத்தாலும் தங்கள் வழக்கமான வசனத்தை சொன்னபடியேதான் சாகவேண்டும். ஒருமுறை ஷெர்லக் ஹோம்ஸ் கால் தடுக்கி கீழே விழுந்தபோது ‘ ‘ எலிமெண்டரி மிஸ்டர் வாட்சன் …. ‘ என்று சொல்லியபடி விழுந்ததாக சொல்லப்படுகிறது . இதை கானன் டாயில் எழுதவில்லை .
அறை வந்ததும் வெயிட்டர் காதளாவிய வாயால் இளிதல் கொண்டு பேசியதை ‘பூரிமசால் மூணு , உப்புமா ஏழு , வடேய்.. சார் ரூம் பாருங்க .. ரெண்டு தயிர்வடை.. பிடிக்கலேன்னா மாத்திடலாம் சார் … காபீ .. இட்லி எங்கேப்பா .. நாராயணா அந்த சாம்பார்ப் பயலை கூப்பிடு.. ரெண்டு தயிர்வடை .. எல்லா செளகரியமும் உண்டு சார் ஹிஹிஹி எல்லா செளகரியம்னா எல்லா செளகரியமும் தான் சார்… சாம்பார்! சாம்பார் வடை ரெண்டு ! போண்டா ரெண்டு .. ‘ என்று கேட்டுவிட்டு சங்கர்லால் கம்பீரமாக நூறு ரூபாய்த்தாளை உருவி அவனிடம் சரேலென்று வீசிவிட்டு ‘ தோசை ரெண்டு , நெய் ரோஸ்ட் ரெண்டு ..ஊத்தப்பம் ஒண்ணு..இந்தா வைத்துக்கொள் .உன் சேவை தேவைப்படும்போது அழைப்பேன் …மசால் வடை ஒண்ணூ…என் அறைக்கு நான் கூப்பிடாமல் வரக்கூடாது ..டணால்… எங்கேடா அந்த பயல் ? மசால்வடேய் … ‘ என்று தான் சொல்வதையும் கேட்டார் .
வெயிட்டர் அகன்றதும் படாரென்று கதவை மூடி கண்ணாடியை கழற்றி வீசிவிட்டு சங்கர்லால் தன் தொப்பியை எடுத்ததும் கோவள வெயிலில் கொதித்துக் கொண்டிருந்த அவரது தலையிலிருந்து சூடான கெட்டில் போல நீராவி எழுந்தது . கையுறை காலுறை கோட்டு என்று அவர் கழற்றக் கழற்ற சூழலின் வாசனை பலவிதமாக மாறுபட்டபடியே வந்தது .எல்லாவற்றையும் கழற்றிவிட்டு கோடுபோட்ட காடாத்துணி அண்டர்வேருடன் பெருமூச்சுவிட்டபடி கட்டிலில் படுத்துக் கொண்டு ‘படா பேஜார்மா . இன்னா ஹீட் அடிக்குதுபா பேமானிப்பய ஊர்லே.. .. ‘ என்று புரசைவாக்கம் மொழியில் சொல்லிக் கொண்டார் .
‘இப்ப இன்னா பண்றது ? இன்னிக்குள்ள அந்த சாமானை கண்டுபிடிக்காட்டி நேர கீழ்ப்பாக்கத்துக்குல்ல கூட்டிட்டுப் போயிடுவானுங்க ! ‘ என்று சலித்துக் கொண்டார் .ஃபோனை
எடுத்து ‘ யாரது , நிர்வாக முனையா ? என் அறைக்கு குளிர்ப்பதமாக ஒரு பதாம்கீர் கொண்டுவர ஆவன செய்யுங்கள் ‘ என்று சொல்லிவிட்டு ‘கஸ்மாலம் புடிச்சவனுங்க ‘ என்று முனகியபடி திரும்பிப் படுத்தார்.
***
‘ ‘வெல்! வெல்! வெல் ! மிஸ்டர் வாட்சன் இந்தபுள்ளியை வைப்பதில் இத்தனை சூட்சுமம் இருக்குமென நானும் எண்ணவில்லை ‘ ‘ என்று ஹோம்ஸ் சொன்னார் .
முப்பத்தியெட்டாவது முறையாக ஸ்டிக்கரை ஒட்டிய வாட்சன் கண்ணாடியில் பார்த்தபோது ஒருகணம் சரியாக இருப்பதுபோலவும் மறுகணம் சரியாக இல்லை என்று பட்டது .
நெற்றிமுழுக்க பிசுபிசுவென்ற பசையுடன் வாட்சன் ‘இதெற்கென இந்தியர்கள் ஏதோ கருவி வைத்திருக்க வாய்ப்பு உண்டு என்று நம்பத் தேவையான காரணங்கள் உண்டு என்று நான் எண்ணத்தலைப்படுகிறேன் ஹோம்ஸ் ‘ என்றார் .
‘ இருங்கள் வாட்சன் , நான் சொல்லித்தருகிறேன் . முதலில் உங்கள் இடுப்பின் நடுப்பகுதியிலிருந்து — சிரிக்கவேண்டாம் , சிரிக்காதீர்கள் வாட்சன் , தயவுசெய்து நிறுத்துங்கள்! — ஒரு நேர்கோட்டை இழுத்து தொப்புள் வழியாக மூக்குநுனிக்கு கொண்டுவந்து அப்படியே மேலே இழுத்து –ஆம் பார்த்தீர்களா ,இதுதான் அந்தப்புள்ளி … எப்படி உணர்கிறீர்கள் ? ‘
‘புல்ஸ் ஐ பதிக்கப்பட்ட சுடும்பலகை போல , மிஸ்டர் ஹோம்ஸ்.. ‘
இருவரும் காரிடாருக்கு வந்து பிரிட்டிஷ் நடை நடக்கும்போது இரு ஆசாமிகள் வாட்சனை ‘ அங்கிள் வைட் கர்ல்ஸ் , ஹவ் மச் ? ? ‘ என்று கேட்டதும் ஒருவர் , ‘ பிரிட்டிஷ் அங்கிள் ‘ என்று சொன்னதும் நடந்தேறியது
‘புதிய குறியீட்டுச் சொற்கள் கேட்கின்றன வாட்சன் .நாம் இப்போது வலைக்குள் நுழைகிறோம் ‘ ஹோம்ஸ் சொன்னார் . ‘ நாம் இரையாகப் போகிறோமா இல்லை , வலையை அறுத்து தப்பப் போகிறோமா என்பது அந்த சிலந்தியின் வலிமையை பொறுத்தது… ‘
‘ ஹோம்ஸ் என் தலையில் ஆயிரம் சிறகுகளின் துடிதுடிப்பை உணர்கிறேன்… ‘
‘ஓ , மை வாட்சன் , என்னதான் நாம் வேட்ஸ்வெர்த்தின் ஊர்க்காரர்களாக இருந்தாலும் இப்படி எப்போதும் கவிதையில் பேசுவது தற்பெருமை என்றே கொள்ளப்படும்….. ‘
‘ஹோம்ஸ் என் நெற்றியின் பசையில் பூச்சிகள் ஒட்டியிருப்பதைப் பற்றிச் சொன்னேன். ‘
‘வாட்சன் , துப்பறியும் நிபுணனின் உதவியாளன் என்பவன் துப்பறியும் நுட்பங்களை செவிமடுப்பது மற்றும் எதிரியால் தாக்கப்படுவது ஆகிய கடமைகளை நிறைவேற்றும் பொருட்டே உருவானவன் . இது துப்பறியும் நூலின் ஐந்தாவது பொன்விதி . ஒப்பீட்டளவில் இது சிறிய பிரச்சினைதானே ? ‘ ‘
‘ ஹோம்ஸ் நாம் வழி தவறிவிட்டொமென்று நினைக்கிறேன் .இப்படியொரு வாசலை இங்கு நான் பார்த்ததே இல்லை ‘
‘பயப்பட வேண்டாம் வாட்சன் ஒரு துப்பறியும் கதையில் துப்பறியும் நிபுணர் ஒருபோதும் மரணமடைய முடியாது . இது ஆறாவது பொன்விதி ‘ என்றார் ஹோம்ஸ்.
[தொடரும் ]
- ஒரு கடிதம்…
- கலாச்சாரக் கதகளி
- தேவதேவன் கவிதைகள் 5: வானும் ஒளியும்
- இதுவும் உன் லீலை தானா ?
- தோழியரே! தோழியரே!
- திண்ணை அட்டவணை – செப்டம்பர் 6 , 2002
- நாய் வாங்கும் முன்பாக
- கவிதாசரண் பத்திரிக்கை
- பொருளின்மை என்னும் கணம்நோக்கி (எனக்குப் பிடித்த கதைகள் – 26 -தாராசங்கர் பானர்ஜியின் ‘அஞ்சல் சேவகன் ‘ )
- காவிரி நீர் போர்
- அறிவியல் மேதைகள் சர்.சி.வி. இராமன் (Sir.C.V.Raman)
- பாரத நாட்டின் பெளதிக மேதை ஸர்.சி.வி. ராமன் (1888-1970)
- பூமியில் உயிர் தோன்றுதலுக்கு வேற்றுலக பங்களிப்பு
- விளக்கெண்ணெயிலிருக்கும் விஷத்துக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
- புதிய வகையான கடல் அலை கண்டறியப்பட்டுள்ளது
- நான்காவது கொலை!!!(அத்யாயம் ஆறு)
- எழுத / படிக்க
- நடிகர்கள்!
- கவலையுள்ள மனிதன்!
- இரு கவிதைகள்
- பயணங்கள் முடிவதில்லை
- யார்தான் துறவி ?
- புதிய பாலை
- அதுவரை காத்திருப்போம்.
- காவிரி நீர் போர்
- குழந்தைகளை புதைத்து எடுத்த குழிமாற்றுத் திருவிழாவில் தவறேதும் இல்லை
- இருவேறான நீதிமுறை அளவுகோல்களுக்கெதிராக…….. ஆகன் சமாதானப்பாிசு
- இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 6 2002 (காவிரி, முஷாரஃப், ஸ்டாலின், மனீஷா,மேற்கு வங்கம், சீனா)
- வீர நாயகர்களுக்கும் விதியால் பலியானவர்களுக்கும் வணக்கம்
- குப்ஜாவின் பாட்டு