நன்றி !மீண்டும் வருக !

This entry is part [part not set] of 12 in the series 20010722_Issue

ருத்ரா


தாஜ்மஹால் எனும்

கலைமாளிகையே.

உன் நிழலில்

கலைந்து போனது எப்படி

இந்த உச்சி மாநாட்டின்

கனவுகள் ?

சாதனைக் கட்டிடமே !

உனக்கு

எத்தனை பாிமாணங்கள் ?

உன் பார்வைக்கு

எத்தனை கோணங்கள் ?

பளிங்கு சதையால்

படைக்கப்பட்டவை

இங்கே

உன் கனவுகள்.

உன் உள்மூலைகளில்

எதிரொலித்துக்கொண்டிருக்கும்

ஒற்றுமையின் கீதம்

எப்ப்டி இவருக்கு

அடைபட்டுப்போனது ?

மனக்கதவை

இறுக்கிப்பூட்டிவிட்டு

நேசமனப்பான்மை எனும்

அந்த சாவியையும்

வேண்டுமென்றே..எங்கோ

வீசியெறிந்து விட்டு..இங்கு

என்னத்தை தேடி

இந்த நெடும்பயணம் ?

அழகிய ‘சலவைக்கல் ‘ மாளிகையே !…இந்த

அழுக்குமனக்காரர்களின்

அசுத்தங்கள்..இன்னும்

அகற்றப் படவில்லையே.

உன் சித்திரவேலைப்பாடுகளை

இவர்கள் இன்னும்

துப்பாக்கி கொண்டு

தடவிப்பார்க்கும்

குருடர்களாக அல்லவா இருக்கிறார்கள்.

கண்ணுக்குத் தொியாத..அந்த

காதல் சுவாசத்தில்

மானுட நேயங்கள் கைகோர்த்த

சமாதான வாசனையை

இவர்கள்

எப்போது புாிந்து கொள்ளப்போகிறார்கள் ?

இங்கே மாியாதை குண்டுகள்

இவர்களுக்கு

மலர் தூவிக்கொண்டிருக்கும்போது

அங்கே..எல்லைமீறிய

அவர்களது பீரங்கிகள்

கொலை வெறியை அல்லவா

உமிழ்ந்து கொண்டிருந்தன.

காஷ்மீர் ரோஜாவை

கசாப்பு செய்து

விருந்து தரும்படி

விடாப்படியாய் க் கேட்டவர்

உன் பளிங்கு மனத்துக்குள்

எப்படி நுழைந்திருக்கமுடியும் ?

உலக சமாதானத்தை எப்போதும்

தலைகீழாகவே

பார்வையிட்டுக்கொண்டிருக்கும்

வெளவால்களின்

இருட்டுக்கூடம் அல்ல

தாஜ்மஹால்.

தீவிரவாதிகளை

ஒளித்து வைத்துக்கொள்ளும்

வெடிமருந்து கிட்டங்கி அல்ல

தாஜ்மஹால்.

இனங்கடந்த

சகோதரத்துவத்தின்

இனம்புாியாத

வெளிச்சம் ஒன்று

கசிந்து கொண்டேயிருக்கும்

அமைதிச் சுரங்கம்

தாஜ்மஹால்.

ஆக்கிரமிப்பு

பாடத்தை மட்டுமே

மனனம் செய்து கொண்டிருப்பவருக்கு

‘ஆக்ரா ‘ மாளிகைகூட

ஆயுதசாலையாய் தொியுமானால்…எங்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள் அவருக்கு.

உடன்படிக்கைக்கு

உடன்பட்டு வந்தவர்

தடம் மறந்து

அகால இரவில் திரும்பியதேன் ?

காதில் ஓதிய

ஹூாியத்துக்களின்

கருத்துகளை

தூவி விடுவதற்கா..இத்தனை

தூரம் வந்தார் ?

இந்தியா எனும்

இதயத்தைப்பிளந்து

எங்கு வேண்டுமானாலும்

அவர் நுழைந்து பார்க்கட்டும்.

அதற்குள் இன்னொரு இதயம்

அங்கு துடித்துக்கொண்டிருக்கும்

அது தான் காஷ்மீர்.

உடலையும் உயிரையும்

பிாித்துப் பார்ப்பவர்களுக்கு

மட்டுமே

காஷ்மீர் எனும் உச்சாிப்பு

தனியாய் கேட்கும்.

காஷ்மீருக்குள்

இருக்கும் இந்தியாவுக்கும்

இந்தியாவெங்கிலும்

நரம்பு துடிக்கும்

காஷ்மீருக்கும்

இங்கே

ஒரே தொப்பூள்கொடியில்தான்

தேசியக்கொடி.

அவருக்கு விாித்த

சிவப்புக்கம்பளம்

அத்தனையும்…எங்கள்

கார்கில் தியாகத்தின்

ரத்தம் அல்லவா ?

இப்போது தான் தொிந்தது

அவர்களது

ராணுவச்சீருடையை

குறுக்கிழை நெட்டிழையாய்

குலவிக்கிடந்து நெசவு செய்தது

தீவிரவாதம் எனும்

தீயவாதம் என்று.

அடுத்த முறையாவது வாருங்கள்

அமைதி காணும்

உள்ளம் அணிந்து கொண்டு.

அடுத்த முறையாவது வாருங்கள்..இந்த

வல்லூறுகளின்

வாகனத்தை தவிர்த்துவிட்டு

வட்டமடிக்கும்

புறாக்கள் புடைசூழ.

அடுத்த முறையாவது வாருங்கள்

எங்கள்

இதயமெனும் காஷ்மீரை

ரத்தம் சொட்ட

அறுத்துப்பார்க்கும் கத்தியை

அங்கேயே வைத்துவிட்டு.

இப்போது போய்வாருங்கள்.

மீண்டும் பேசலாம்.

அதற்கு தயாராய் இருங்கள்.

போனவுடன்

உங்கள் துப்பாக்கிகளை

தூசி துடைத்து வைப்பதற்குப்பதில்

உங்கள்

இதயங்களின்

நூலாம்படைகளை

துப்புரவு செய்யுங்கள்.

நன்றி !மீண்டும் வருக !

===============================================ருத்ரா

Series Navigation

ருத்ரா

ருத்ரா