நன்றி. மீண்டும் வராதீர்கள்.

This entry is part [part not set] of 35 in the series 20061012_Issue

ருத்ரா


சினிமா நட்சத்திரங்களின்
ஜிகினா மழை நின்ற பிறகு
அந்த பரபரப்புகளின்
தூரலும் நின்னு போச்சு.
கலைவிழா என்ற பெயரில்
கோடம்பாக்கத்தின்
காக்கைகள்
அந்த பக்கமும்
இந்த பக்கமும்
இரைச்சல் கிளப்பி
இறக்கைகள் ஓய
அங்கும் இங்கும்
பறந்து முடித்தபின்
தீவாவளி ரிலீஸ்களின்
பாக்ஸ் ஆபீஸ் வசூல்களை
வாரிக்குவிக்க
சாரி சாரியாய்
கிளம்பிப்போய் விட்டன.

“பத்தாயிரம் குடும்பங்கள்
எங்கள்
பின்புறத்தில்
இன்னும்
அன்னாடம் காய்ச்சிகள்
தான்.
கொடிகட்டி பறந்து
உயர்ந்து நின்றவர்கள் கூட
“பங்களாக்கள்”
ஏலத்துக்கு வந்து
ஏமாந்து போன சோகக்கதைகளும்
இங்கு உண்டு.
எங்களைப்பார்த்தா
சில வால் கூட
வாலின் முடி கூட
விமர்சிப்பது ?.. என்ற
ஆவேசங்கள்
வேசங்கள் கட்டி ஆடியது
அந்த அரங்கத்தையே
ஆட வைத்தன.

ஓ! அரிதார அவதாரங்களே!
இந்த கோடிக்கணக்கான
மக்களுக்கு
நீங்கள் என்ன செய்து
கிழித்தீர்கள்
” கோடி கோடியாய்
சம்பளம் வாங்குவதைத் தவிர ?”
கேட்டால்
கால்ஷீட்டுகளுக்குள்
வேர்வை சிந்தியதை
பிலாக்கணம் பாடுவீர்கள்.

கலை இலக்கியம்
மக்களை
நெகிழ வைக்கவும்
நெருட வைக்கவும் தான்.
சினிமாப்பாதையின்
மைல்கல்களை
வசூல் அரக்கர்கள்
வந்து
பிடுங்கியெறிந்தபின்
இங்கு
திசைகள் இழந்துபோயின.
உயிர்ப்போடு
முளைக்கவெண்டிய கதைகள்
சில பார்முலாக்களில்
அதன் “ஏரியா விற்பனை”யின்
சூதாட்டக்கிடங்கில்
சுருண்டு படுத்து கொண்டன.

இரத்த சதைக்குள்ளிருந்து
காதலை
இதயமாக்கி
உதயமாக்கவேண்டிய
கதைகள்
அந்த சதைகளுக்குள்ளேயே
சங்கமம் ஆகிப்போயின.

நீங்களும்
ஆடுகிறீர்கள்
பாடுகிறீர்கள்.
இளைய யுகத்தின்
சிந்தனயைப் பொசுக்கி
விடுவதற்கு தான்
“தீப்பிடிக்க தீப்பிடிக்க”
ஆடுகிறீர்கள்.
எப்படி
அந்த தீ
வெளிச்சத்திற்கு பதில்
இருட்டை மட்டுமே
ஒளி பரப்புகிறது?

உங்கள் கேமரா லென்சுகள்
வேண்டுமானால்
21 ஆம் நூற்றாண்டையும்
தாண்டிப்போயிருக்கலாம்.
ஆனால்
காதலுக்காக
இளைஞர்களை நரபலி கேட்கும்
காட்டுமிராண்டியுகத்தில்
அல்லவா
உங்கள் ஹை-டெக்
செட்டிங் போடப்படுகின்றன.

உங்கள்
வெற்றிவிழாக்களுக்கு
“பேனர்” கட்ட
தங்கள் கோவணத்தை கூட
அடகு வைக்க
தயாராய் இருக்கும்
ஏழைகளின் தேசம் இது.
வரலாற்றைப் படைத்த
சினிமாக்களும் உண்டு.
வரலாற்றைக் கெடுத்த
சினிமாக்களும் உண்டு.
இந்தா!
இது வெறும்
பொழுது போக்கு கருவிதான்
என்று
சினிமாவை கொடுத்தார்கள்
சினிமாக்காரர்கள்.
பிடி இந்த செங்கோலை
என்று
சினிமாக்காரர்களிடமே
திருப்பிக்கொடுத்தார்கள்
இந்த பச்சைத்தமிழர்கள்.
நாகரிகத்தில் வேகாத
இந்த பச்சைமண் குதிரைகள்
தான்
ஜனநாயக ஆற்றை கடக்க
இன்னமும் திரண்டு
வருகின்றன.

இந்த “ரசிகர்களை” வைத்து
மஞ்ச
குளித்துக்கொண்டிருக்கும்
மன்னாதி மன்னர்களே.
உங்கள்
வசூல் ராஜ்யங்களை
தக்க
வைத்துக்கொள்ளுவதற்கு
கலைத்”தாய்”களுக்கும்
கலைச்”சூரியன்”களுக்கும்
நீங்கள்
வெண்சாமரம்
வீசிக்கொள்வதில்
ஆட்சேபணை ஒன்றும் இல்லை.
மக்கள் சமுதாயங்களின்
ரத்தநாளங்களில்
துடிக்கின்ற
கதைகளை
இவர்கள் கண்முன்
நிறுத்துவதில்
கவனம் வையுங்கள்.
வளமான மாற்றங்கள்
ஏற்படுவதற்கு
வகை செய்யுங்கள்.
தொகை கிடைத்தால்
போதுமென்று
காதல் எனும்
கந்தல் கூளங்களையும்
காக்காய் இறகுகளையும்
அள்ளிச்செருகிக்கொண்டு
குயில் பாட்டுகள் பாடியது
போதும் இனி.

கசாப்புக்கடையில்
இறைச்சியாக
ஆடுகள் தொங்கலாம்.
மாடுகள் தொங்கலாம்.
அவற்றோடு
உரித்த கோழியாக
காதலும் அல்லவா
தொங்குகிறது.
காதலி காதலனிடம்
இப்படித்தான்
கசாப்புத்தமிழில்
பாடுகிறாள்:
என்னைக்
கொஞ்சம் கொஞ்சமாக
கொல்லுடா!
கொஞ்சம் கொஞ்சமாக தின்னுடா
சப்பு கொட்டித்தின்னுடா!
என்னைக்
கடித்துக் கடித்து
சுவைத்து சுவைத்து
மென்னுடா!
நான் நீ விரும்பும்
கோழிக் குருமாப்பொண்ணுடா!
இன்னும்
எத்தனையோ டா..டா.டாக்கள்!
இதை ஒப்பிடுகையில்
நாற்பது-ஐம்பதுகளில் வந்த
“வாழ்க்கையின்”
“ட டா” ப்பாட்டுக்கு
சங்கீத அகாடெமி விருதுகள்
தாராளமாக தரலாம்.
அப்போதைய
தகர டப்பா
தஞ்சை ரமையாதாஸ்கள் கூட
இப்போதைக்கு
தங்கமான கவிஞர்கள் தான்.

இது என்ன தலைகீழ் பரிணாமம்?
கோணல்புத்தியின் இந்த
கோடம்பாக்கத்து
டார்வின்கள்
கொம்பு முளைத்து
கூர்நகமும் கோரைப்பல்லும்
உடைய மனிதர்களையா
உருவாக்கத்துடிக்கிறார்கள்?
சினிமாக்கலைஞர்களே!
இனிமா கொடுத்து
இப்படியெல்லாம் எங்களை
“கலக்கியது” போதும்.
நட்சத்திர கலை விழாக்கள்
நச்சரிக்கும் கலை
விழாக்களாக
மாறியது போதும்.
நன்றி
மீண்டும் வராதீர்கள்.

=ருத்ரா.

epsi_van@hotmail.com

Series Navigation

ருத்ரா

ருத்ரா