இரா முருகன்
——————————-
கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தன் சரித்திரக் கீர்த்தனைகளுக்குள் நுழைவதற்கு முன் சில ‘அதான் எனக்குத் தெரியுமே ‘க்களோடு வலது காலை (மார்க்சீய கோத்ரம் என்றால் இடது கால்) எடுத்து வைப்பது நல்லது.
முதலாவது இது. நந்தன் கதையின் அடிப்படை ஒரு வரலாற்றுச் செய்தி. செவிவழியாகப் பரவியது. தலித்தும், நிலமற்ற ஏழை விவசாயிக் கூலியுமான நந்தனை மேல் சாதி நிலவுடைமையாளர்கள் உயிரோடு எரித்துக் கீழவெண்மணிக்குக் கடைகால் போட்ட நிகழ்ச்சி அது. அந்த நிலவுடைமையாளர் வர்க்கம் பார்ப்பனர்கள் என்று அடையாளம் காட்டப்படாமல் வேறு மேல் சாதியாக அடையாளம் காட்டப் பட்டாலும், அடிப்படையான வரலாறு மாறி இருக்காது. கூலி குறைத்துக் கொடுத்து வயிற்றில் அடித்ததைத் தட்டிக் கேட்டதற்காகவோ, தன் உரிமைகளைக் கொஞ்சம் குரல் உயர்த்தி முன்வைத்ததற்காகவோ கொடுக்கப்பட்ட தண்டனை அது.
விவசாயத் தொழிலாளர்களைச் சுரண்டியதை எதிர்த்துக் குரல் கொடுத்ததை அப்படியே புனைவு ஆக்குவதை விட, நந்தனைச் சிவ பக்தனாக்கி, அதற்காகவே அவன் உயிரைக் கொடுத்தான் என்று கதைப்பதால், இரண்டு நன்மை. அந்த முகமற்ற மனிதன் எரிந்து சாம்பலாகிப் போய் எத்தனையோ வருடம் கழித்து விளிம்பு நிலை மாந்தர், கீழ்த்தட்டு சமுதாயத்தில் கொண்டாடப் பட்டுக்கொண்டிருக்கிறான். அந்தக் கொண்டாட்டம் பெருகி வந்தபோது, போனால் போகிறது என்று நந்தனை அங்கீகரித்தே ஆக வேண்டிய கட்டாயம். அந்த அங்கீகாரம் நந்தனை வழிபட்ட ஒரு பெரிய கூலித் தொழிலாளர் கூட்டத்தை நெக்குருக வைத்து, தொண்டனாக, தொண்டச்சியாக அவர்கள் தொடர்ந்து பாடுபட உதவியிருக்கும்.
நந்தனுக்கு அங்கீகாரத்தோடு, சமய அடையாளங்களை பட்டையாகச் சார்த்தி மதவழிப் புனிதனாக்கி விட்டால், உடமைச் சமூகம் பேணும் மதங்களுக்குக் காசு செலவில்லாமல் இன்னொரு அடியான் கிடைக்கிறான். அவனுக்குக் கிடைத்த அங்கீகாரம் உங்களுக்கும் கிடைக்கவேண்டும் என்றால் உங்கள் எதிர்க் கலாச்சாரத்தை, நீங்கள் இயற்கை சார்ந்து, உங்கள் வாழ்வை, வரலாற்றைச் சார்ந்து ஏற்படுத்திக் கொண்ட சிறு தெய்வங்களை (அவர்களில் பலரும் சாமானிய மக்களின் மூதாதைகள்) நன்றியோடு நினைவு கூர்ந்து வழிபடுவதை விட்டொழியுங்கள் என்று தெரிவிக்கிற மறைமுகமான செய்தியின் வழியே, தங்களுக்கு ஏற்பில்லாத இனக்குழு, கலாச்சார அடையாளங்களை நசிப்பது அல்லது கட்டுக்குள் கொண்டு வருவது.
தலித் விவசாயக் கூலியை நில உடைமையாளர்கள் எரித்ததற்கு ஏகப்பட்ட பக்தி இலக்கிய முலாம் பூசப்பட்டு, உயிரோடு கொளுத்தப்பட்ட நந்தன் கைலாயம் போய்ச் சேர்கிறான். இந்தப் புனைவில் தொன்மம் நிறையக் கை கொடுத்திருக்கிறது – அசுரர்கள் ஆண் அல்லது பெண் தெய்வத்தால் அழிக்கப்பட்டு, அடுத்த நொடி அந்த தெய்வத்தின் வாகனமாக, கொடியாக மாறுவது, என்று நிசமும் புனைவும் எல்லைக் கோடு மசங்கிப்போய்க் கலந்து, தொன்மமானவையும், யானை மேல் ஏறிச் சேரமான் பெருமாள் மனித உடம்போடு கைலாயம் போனது, அப்பர் கைலாயம் போனது போன்ற பக்தி இலக்கிய காலக் கவின்மிகு கற்பனைகளும் இதில் அடக்கம்.
இரண்டாவது தெரிந்த செய்தி – நந்தன் கதையை எழுதிய கோபால கிருஷ்ண பாரதியார் ஓர் அந்தணர். பத்தொன்பதாம் நூற்றாண்டு கால மேலோர் – கீழோர் பற்றிய பொதுவான மேல்சாதி கண்ணோட்டம் அவரிடம் இருந்ததோடு நந்தன் சரித்திரக் கீர்த்தனைகளின் அடிநாதமும் ஆனது. இதற்கு அவரைக் குறை சொல்ல முடியாது. அவர் மூச்சு விட்டுக் கொண்டிருந்த சமூக அமைப்பில் சுப்பிரமணிய பாரதியோ, பெரியாரோ, வ.ராவோ, தோழர் ஜீவாவோ கிடையாது.
மூன்றாவது தெரிந்த செய்தி – கோபால கிருஷ்ண பாரதியாருக்கு வரலாற்றையும், புராணத்தையும் பதிவதை விட, இசை என்ற கலை வடிவத்தில் ஆர்வம் அதிகம். அதன் வெளிப்பாடு தான் இந்தக் கீர்த்தனைகள். இசைக்கு அடுத்த தளங்களிலேயே கதை நிறுத்தப்படுகிறது.
இந்தத் தெரிந்த சமாச்சாரங்களோடு நந்தன் சரித்திரக் கீர்த்தனைகளுக்குள் நுழைவோம்.
கந்தன் றனையளித்த காதலனாற் பேறுபெற்ற
நந்தன் சரித்திரத்தை நானியம்பச் – சுந்தரஞ்சேர்
தில்லை மணிகோபுரத்திற் தேடிவளர் கற்பகத்தாள்
அல்லும் பகற்றுணையே யாம்.
இப்படித் தளை தட்டாத வெண்பாவில் தொடங்குகிறார் கோபால கிருஷ்ண பாரதியார். கற்பக விநாயகர் தோத்திரமாக வந்த காப்புச் செய்யுள் இது.
ஒன்று புரிகிறது. கோ.பாரதியார் தமிழ் கற்றவர். அது காவியம் இயற்றப் போதாதிருந்திருக்கலாம். ஆனாலும், எளிய முயற்சிகளாகத் தனி வெண்பாவும், விருத்தமும் எழுத வந்தது அவருக்கு.
ஆனாலும் அவர் அந்தக் காலத் தமிழ்ப் புலவர்களால் புறக்கணிக்கப் பட்டார். அவர்கள் கோ.பாரதியாரிடம் எதிர்பார்த்ததும் அவர் படைத்துக் கொண்டு வந்து அவர்கள் அங்கீகாரத்துக்குக் காத்து நின்றதும், கால் தேய நடந்ததும் வேறு வேறானவை.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியன இந்தக் காலகட்டத்தில் தமிழ் இலக்கியம் தன் வளர்ச்சியில் ஒரு முக்கியமான இடத்தில் நின்றிருக்கிறது. பழமை போற்றி, அது மட்டும் போதுமென்று இருந்த புலவர்கள் பலர். பழமை போற்றினாலும், இலக்கிய வடிவ மாற்றங்களை அங்கீகரிக்கக் கொஞ்சம் சிரமப்பட்டாலும், குற்றங் குறை பொறுத்து கோ.பாரதியின் பாடல் பொருளான பக்தியில் இணக்கம் கண்டு, ‘இருந்துட்டுப் போகட்டுமே, இதுவும் ‘ என்று நல்ல மனதோடு சாற்று கவி எழுதிக் கொடுத்த மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை போன்றோர் சிலர். மரபார்ந்த இசையையும், மரபிலக்கியத்தையும் பயின்று, எந்தக் குழப்பமும் இன்றி இரண்டையும் அனுபவிக்க முடிந்த உ.வே.சா போன்ற அந்தக் கால இளைஞர்கள் சிலர். சுப்பிரமணிய பாரதி இந்தக் கடைசி வகையில் வந்தவன். அந்தத் தளத்திலிருந்து வானம் தொட வளர்ந்து மகத்தான பன்முக ஆளுமையானவன். அவனைப் பற்றியதில்லை இக்கட்டுரை. இன்னொரு பாரதி – கோபாலகிருஷ்ண பாரதி பற்றியது.
கோ.பாரதி மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தன் நூலுக்குச் சிறப்புப் பாயிரம் அளிக்க வேண்டும் என்பதற்காக நாள் கணக்கில் பிள்ளையவர்களைச் சந்திக்கக் காத்திருந்தது உ.வே.சாவின் ‘என் சரித்திரம் ‘ நூலில் இருந்து தெரிகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேல் சாதி ஆதிக்கத்தின் மையங்கள் சற்றே மாறிக் கொண்டிருந்ததின் எடுத்துக்காட்டு இது. கற்றதால் தன்னைவிட மேல் தட்டில் இருந்த வேளாளராகிய மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் அங்கீகாரம் அவரை விடக் குறைவாகக் கற்ற அந்தணரான கோ.பாரதிக்கு வேண்டியிருந்தது. இந்த அங்கீகாரம் ஒரு விதத்தில் சமூக அங்கீகாரமாகவும் இருந்திருக்க வேண்டும்.
பிள்ளையவர்களின் சம காலத்தவராகிய முன்சீப் வேதநாயகம் பிள்ளையின் சிறப்புப் பாயிரம் வேண்டி கோ.பாரதியார் நடந்ததாக வரலாறு இல்லை. முன்சீப் வேதநாயகம் பிள்ளை அப்படி அங்கீகரித்திருந்தால், அது மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் நற்சான்றுக்கு இணையானதாக, அல்லது அதை விடக் கூடுதல் சமூக வலுப் பொருந்தியதாக இருந்திருக்கும். பிராமணர் கோ.பாரதியார், கிறிஸ்துவரான முன்சீப் வேதநாயகம் பிள்ளையைத் தேடிப் போகாததற்குக் காரணம், அவரிடம் போய் நிற்கக் கூடத் தனக்குத் தகுதி இல்லை என்று நினைத்ததால் இருக்கும்.
கல்வியானது சமூக மாற்றங்களை இப்படி மெல்லக் கொண்டு வர ஆரம்பித்திருந்த காலம் அது. ஆனாலும் சமூக அந்தஸ்து குறித்த அந்த மாற்றங்கள் பெரும்பாலும் மேல் வருணங்களுக்குள்ளே மட்டுமே நிகழ்ந்து கொண்டிருந்தன.
சாற்றுக் கவி இருக்கட்டும். நந்தன் சரித்திரக் கீர்த்தனைகளுக்குத் திரும்புவோம்.
கோ.பாரதியாருக்கு இசை தான் முதலானது. நந்தன் சரித்திரக் கீர்த்தனை ஒவ்வொன்றையும் அவர் முதலில் வாய்விட்டுப் பாடிப் பார்த்துவிட்டு, மாற்றி மாற்றி வார்த்தைகளைப் போட்டு அழகு பார்த்து, சரி, இனி எழுதலாம் என்று சாவகாசமாக எழுத உட்கார்ந்திருப்பார். இசை அவரை நந்தனாக, சேரியில் மற்ற தலித்களாக, வேதியராக கூடு விட்டுக் கூடு பாய வைக்கிறது. இசை அவர் சொல்லைச் சமகாலத் தளத்திற்கு இறக்கி எடுத்து வந்து நிறுத்துகிறது. இசை அவரைத் தன்னை அறியாமல் நிகழ் காலச் சரித்திர ஆவணமாக ஒரு படைப்பை உருவாக்க வைக்கிறது.
பாடல்களுக்கு இடையிடையே வரும் வசனங்களில் அவர் கட்டி நிறுத்தும் பறைச் சேரி இது –
‘பழன மருங்கணையும் புலைப் பாடியது. கூறைவீடுதனில் சுரையோ படர்ந்திருக்கும். அதைச் சுற்றிலும் நாய்கள் குலைத்திருக்கும். பரந்தோடி வட்டமிடும் இளம் பச்சைப் பிசிதை மேலிச்சை கொண்டு கோழி கூவுங் கூக்குரலும், பாழுங் கொல்லையருகினில் வெள்ளெலும்பும் நரம்பும் குவிந்திருக்கும். பல நெட்டி மிதந்திடும் குட்டைகளில் நண்டோ குடியிருக்கும். சிறு நத்தை மடம் வலுத்திருக்கும். தோலூறும் கேணிகளில் வெகு தொல்லைப்படும் வாடை.
(ஆசாரக் கட்டுப்பாடுகள் மிகுந்திருந்த காலத்தில், அந்தப் பிராமணர் எப்படி, எப்போது சேரிக்குப் போய் இப்படப்பிடிப்பைச் செய்தார் என்று விளங்கவில்லை. என் ஊகம், சிறுவனாக இருந்தபோது, கட்டுகள் அவ்வளவாக இல்லாத காரணத்தால் ஓடித் திரிந்த போது கண்டதாக இருக்கும்).
கோ.பாரதிக்கு இன்னொரு லட்சியமும் இருக்கிறது. தான் படைப்பது சாதாரணக் குடிமகனுக்குப் போய்ச் சேர வேண்டும். அதைப் புரிந்து கொள்வது எளிமையாக இருக்க வேண்டும் என்பது அது.
தயங்காமல் பேச்சு மொழியை (அங்கங்கே கொஞ்சம் தூய்மைப் படுத்தி) கையாண்டிருக்கிறார் அவர்.
புலையர்கள் நந்தனுக்குச் சொல்வது –
பிடிப்பது நண்டு பொசிப்பது இறைச்சி
குடிப்பது கள்ளு குலசம்பிரதாயம்.
கையிலே கலையம் காலிலே சேறு
பையிலே பாக்கு பறைசம்பிரதாயம்.
நந்தன் கூலி விவசாயத் தொழிலாளியாகப் பணி செய்யும் நிலத்துடைமையாளரான வேதியர் நந்தனிடம் சொல்வது –
பேசாதே கை வீசாதே
வீரனைத் தொழடா ஏரியையுழடா.
ஆகாது வினை போகாது
விரை தெளி… அறுதலி மகனே.
மாடுதின்னும் புலையா உனக்கு மார்கழித் திருநாளோ.
ஆடுதின்னும் புலையா உனக்கு ஆனித் தரிசனமோ.
நண்டுக்குக் கலியாணமும் நரிக்குச் சங்கராந்தி
பண்டிக்குப் பூசத் திருநாளுண்டோ பறையா நீபோடா.
கோபால கிருஷ்ண பாரதியார் சித்தரிக்கிற புலையர்களும், பார்ப்பனரும் நிச மனிதர்களாக, அவர் அறிந்த, பழகியவர்களாக, உள்ளபடிக்கே வெளிப்படுகிறார்கள். அது அவர் படைப்பின் பலம்.
நந்தன் சரித்திரக் கீர்த்தனைகளில் பல இடங்கள் பேச்சு – எதிர்ப் பேச்சு வடிவத்திலேயே இடம் பெறுகின்றன. நந்தனும் சக தலித்துகளும் உரையாடுவது, நந்தனும் வேதியரும் பேசுவது என்று வரும் இடங்களில் எல்லாம், நந்தன் சொல்வதாக ஒரு கண்ணி, அல்லது ஒரு வரி, அதற்கு எதிர்வினையாக மற்றவர் சொல்வது அடுத்தது, நந்தன் தொடர்வதாக மூன்றாவது என்பது போல் தான் அமைந்திருக்கிறது. அல்லது மற்றவர் தொடங்கி, நந்தன் மறுமொழியிறுப்பதாக.
கனடா பேராசிரியர் பசுபதி நந்தன் சரித்திரம் பழங்காலத்தில் இசைப் பேருரையாக நிகழ்த்தப் பட்டிருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.
வசனமாகத் தொடங்கி, விருத்தமாக நீண்டு, தொடர்ந்து ஒருவர் கூற்றான கீர்த்தனமாக வரும் பகுதிகள் இதை உறுதிப்படுத்துகின்றன.
உதாரணமாக –
வசனம் :
நந்தனார் தெரிசனஞ் செய்ய உத்தரங் கேட்க அந்தணர் சொல்லுகிறார்.
விருத்தம் :
புத்தி சொல்லிக் கேளாத மூடா உந்தன்
புரட்டெல்லாம் நானறிவேன் போடாபோடா
பக்தியென்றும் சித்தியென்றும் பறையர்க்கேது
பார்ப்பாரத் தெய்வமது பாலிக்காது.
குத்தம் உண்டு உன்சாதியிலே வழக்கமில்லாக்
கொள்கையது சேரியிலே கூடாதப்பா
பித்தமது கொண்டவன் போலிங்கே வந்து
பேசாதே போபோவென்றே ஏசுவானே.
கீர்த்தனம் – இராகம் – அசாவேரி – ஆதிதாளம்
பல்லவி
சிதம்பர தெரிசனமா – நீயதைச் – சிந்திக்கலாமா பறையா
சிதம்பர தெரிசனஞ் சதுமறையோர்கள்
செய்வது ஞாயம் நீ சொல்வது மாயம்
சொல்லாதே – இங்கே – நில்லாதே
சேரிக்குப் போடா நாளைக்கு வாடா (சிதம்பரம்)
கதாகாலட்சேப வடிவத்தில் நிகழ்த்தியிருந்தால், யார் என்ன சொல்கிறார் என்ற குழப்பமில்லாமல் கீர்த்தனைகளில் இடம் பெறும் ‘சம்வாதங்கள் ‘ அரங்கில் பார்வையாளர்களை முழுமையாக எட்டியிருக்குமா என்ற சந்தேகம் வரவழைக்கும் இடங்களும் உண்டு.
நந்தனார் – தில்லையம்பலமென்று சொல்லச் சொன்னார்.
புலையர் – கள்ளப் பேச்சென்று மெள்ளச் சொன்னார்.
நந்தனார் – திருச்சிற்றம்பலமென்று பிலக்கச் சொன்னார்.
புலையர் – வெறிச்ச கம்பளமென்று பிலக்கச் சொன்னார்.
நந்தனார் – சேரியில் நல்ல காரியமிதென்றார்.
புலையர் – ஏரியில் நல்ல மாரியிதென்றார்.
நந்தனார் – தேவாதிதேவனைத் தரிசிப்பீரென்றார்.
புலையர் – பாவாடைராயனைப் பாவிப்பீரென்றார்.
இந்த ஒற்றை வரி, மாற்று வரிப் பனுவலைக் கதை கூறுதலாக நிகழ்த்த எளிது.
அதே நேரம் கீழே உள்ள பகுதியை மேடையில் ஒருவர் மட்டும் நின்று, குரலில் மாற்றமும், கூடவே தகுந்த அங்க அசைவுகளும் இல்லாமல் நிகழ்த்துதல் அவ்வளவு எளிதில்லை என்று நினைக்கிறேன்.
சாக்கியார் கூத்தில் இந்தச் சாத்தியம் உண்டு என்பதும் நினைவு வருகிறது. அங்கே இப்படி இரண்டு வரிக்கொரு தடவை பார்வைக் கோணம் மாறாதிருக்கும் என்பதால் அவ்வளவு சிரமம் வராது.
புலையர், பாப்பார தெய்வமது பலிக்காது பறையரைக்
காப்பாற்ற மாட்டாது கைவிடுவீரென்றார்
நந்தனார், பாப்பாரத் தெருவென்று பாத்துபரிதுபோல்
காப்பாற்றுமல்லவோ கண்ணுதலேயென்றார்
புலையர், அடுக்காத வார்த்தையை அல்லும் பகலோதியே
பிடிக்கிறீர் பிடிவாதம் போதுமேயென்றார்
நந்தனார், கடுக்காயைத் தின்பாரோ கன்னலது போலவே
கொடுக்காத தானாலும் கொள்ளுவீர் என்றார்.
இந்த வாதப் பிரதிவாதங்களை கருத்து – எதிர்கருத்தாகப் பார்க்கும்போது ‘சபாஷ், சரியான போட்டி ‘ என்று ரசித்துக் கைதட்டி இருப்பார்கள் அந்தக் கால சாமானியர்கள்.
இதே வாதப் பிரதிவாதப் பகுதிகளில் வாதத்தையும், பிரதிவாதத்தையும் தனித்தனியாகத் தொகுத்து வாசிக்கும்போது (இதற்கு இரண்டு வரி படித்து, அடுத்து இரண்டு வரி விட்டுத் தாவிப் படிக்கிற சிரமத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும்) தெளிவான கருத்தாக்கங்கள் கிடைக்கப் பெறுகின்றன.
இப்படி எடுத்துத் தொகுத்த ஓர் உதாரணம் :
புலையர் கூற்று :
சேரியே சொர்க்கம் ஏரியே கயிலாசம்
மாரியே தெய்வம் மதசம்பிரதாயம்
பிடிப்பது நண்டு பொசிப்பது இறைச்சி
குடிப்பது கள்ளு குல சம்பிரதாயம்
ஆழத்தில் குளிப்போம் அருங்கோடை வந்தால்
கூழைக் குடிப்போம் குல சம்பிரதாயம்
பூசைகள் புரிவோம் பொன்னேருழுவோம்
கூசாமல் வாழ்வோம் குல சம்பிரதாயம்.
கையிலே கலையாம் காலிலே சேறு
பையிலே பாக்கு பறைசம்பிரதாயம்.
இந்த இருப்பிலே என்ன ஈனத் தன்மை ? பன்முக வாசிப்பில் இது ஒரு தன்மானமிக்க வெளிப்பாடாகவே உணரக் கிடைக்கிறது.
கோபாலகிருஷ்ண பாரதியாரின் கவிதைச் சுவையில் அமிழ்ந்து இதை நிறைவு செய்ய விருப்பம்.
மகாகவி பாரதியின் மனம் கவர்ந்தவை இக்கீர்த்தனங்கள் என்பதே அவற்றை எம்மை அன்போடும் மரியாதையோடும் அணுக வைக்கின்றன.
மகாகவி உரிமையோடு தன் கவிதையின் சட்டகமாக்கியவை சில கீர்த்தனங்கள். கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றிய இவற்றைப் படிக்கும்போது இதே சந்தத்தில் நம்ம ஆள் நிதானக் கட்சி பற்றி எழுதியது வரி விடாமல் நமக்கு நிச்சயம் நினைவு வரும் – திருவருட்பா என்றதும் மார்லியும், கர்சன் துரையும் நினைவு வருவது போல்.
பியாகு ராகம் – ஆதி தாளம்
(பெரிய கிழவன் நந்தனுக்குச் சொல்வது)
ஞாயந்தானோ நீர்சொல்லும்ஓய் நந்தனாரே
நம்ம சாதிக்கடுக்குமோ.
சேரியிலில்லா வழக்கம் நீர்
செய்து கொண்டுவந்த பழக்கம் இந்த
ஊரிலெங்குமது முழக்கம் வெகு
உறுதியாச்சுது ஒழுக்கம் இது
சிதம்பரமென்கிற பேச்சு நாங்கள்
செய்திடுங்காரியம் போச்சு அது
மதம் பிடித்தது போலாச்சு இந்த
மண்டலப் பறையருக்கு ஏச்சு.
புன்னாகவராளி – ரூபக தாளம்
(புலையர் பெரிய கிழவனிடம் சொல்வது)
நாமென்ன செய்வோம் புலையரே இந்தப்
பூமியில்லாத புதுமையைக் கண்டோம்.
நந்தனொருவனாலேயிப்படி யாச்சு
நன்மையுந் துன்மையுமில்லாமற் போச்சு.
சந்நிதிக்குச் சந்நிதி கூத்தாட லாச்சு
சாமியுமில்லாமல் எங்கையோ போச்சு.
நந்தனிலிருந்து கலைவாணரின் கிந்தன் நினைவு வரும் பாடல் இது –
லாவணி – ஆதி தாளம்
(வேதியர் நந்தனைக் கண்டிப்பது)
பறையா நீ சிதம்பரம் என்று சொல்லப்
படுமோடா போகப் படுமோடா அடே (பறையா)
அறியாத் தனமினி சொன்னால் இனிமேல்
அடிப்பேன் கூலியைப் பிடிப்பேன் பாவிப் (பறையா)
சிதம்பரம் என்பதை விடு கொல்லைச் சேரடியிலே வந்து படு நாத்தைப்
பதத்தில் பிடுங்கி நடு கருப்பணனுக்கே பலி கொடு அட (பறையா)
எப்போதுமொரு தடிபிடி கையிலெடுத்துக் கொண்டே தமுக்கடி
உள்ளங்க் கற்பனையாய்ப் பள்ளுபடி கால் நோகாமலே காடியைக் குடி (பறையா)
(என்.எஸ்.கே இதை ‘அட பயலே நீ பட்டணம் என்று சொல்லத் தகுமோடா ‘ என்று கிந்தனாரில் மாற்றிப் பாடுவார்.)
பக்தியுள்ளம் கொண்டவர்களை நெக்குருக வைக்கும் ஒரு பாடலோடு முடிக்கிறேன். அவர்களின் பக்தியில் எனக்கு மதிப்பு உண்டு. ‘உள்ளங்காலில் வெள்ளெலும்பாட ஓடி உழைத்தேனையே ‘ என்ற பாட்டாளியின் குரலிலும்.
கீர்த்தனம் – கண்ணி – ராகம் – பியாகு – ஆதி தாளம்
(நந்தன் வேதியரிடம் தில்லை போக அனுமதி கேட்டு மன்றாடுவது)
மார்கழி மாதத் திருவாதிரைநாள் வரப் போகுதையே
மனதைப் புண்ணாகப் பண்ணாமலொரு தரம்
போய்வா வென்று சொல்லையே.
கட்டையிருக்கையில் சிதம்பரம் போயே காணவேணுமையே
கசடனாகினும் ஆசை விளையுது உன் காலுக்குக் கும்பிடையே.
காலில் நகமுளைத்த நாள்முதலாய் உமக்கு அடிமைக்காரனையே
காலபாசத்தில் காட்டிக் கொள்ளாமல் காப்பாத்திடுமையே.
உள்ளங்காலில் வெள்ளெலும்பாட ஓடி உழைத்தேனையே
உண்டதும் உறங்கினது அன்றியில் வேறே யொன்றும் காணிலையே.
————————
- விருமாண்டி – தேவர்மகன் – சாதிஅரசியல்
- தமிழ் லினக்ஸ் – எழுத்தாளர் சுஜாதா, குழுவினரின் அறிவுத் திருட்டு
- குடியரசுக் கொண்டாட்ட தினத்தில் குஜராத்தில் கோரப் பூகம்பம்! [2001 ஜனவரி 26]
- சில மாற்றுச் சிந்தனைகள்
- இயற்கைத்தோட்டம் – 2 களை பிடுங்குதலும், பூச்சி அழிப்பும்
- வண்ணாத்திக்குளம்
- தமிழ் இலக்கியம் – 2004
- ஈரநிலம்
- நந்தன் சரித்திரக் கீர்த்தனைகள்
- எனக்குப் பிடித்த கதைகள் – 95 – வெறுப்பும் அன்பும்- சாந்தனின் ‘முளைகள் ‘
- கதைஞர்களும் கவிஞர்களும்
- வெங்கட்சாமிநாதனின் விமரிசனப் பயணம்
- கவிதைகள்
- மொழிச் சிக்கல்கள்
- அவன்
- வாரபலன் – புத்தக யோகம்
- சிறந்த குறும்படங்களுக்குப் பரிசு-சக்தி 2003 இலக்கிய விருது
- தீர்ப்பு சொல்கிறேன்
- வறுமையின் நிராகரிப்பில்
- ஒரு உச்சிப்பனிக்காலத்தில்
- காதலன்
- உண்மையொன்று சொல்வேன்
- உருளும் உலகே
- திருமணமாம் திருமணம்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திரெண்டு
- விடியும்! – நாவல் – (32)
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -8)
- நீலக்கடல் – (தொடர்) அத்தியாயம் – 3
- மனசும் மாங்கல்யமும்
- எங்கள் வீட்டுக் காளைக்கன்று
- அறிவிப்பு
- கடிதங்கள் – ஜனவரி 22, 2004
- கேப்ராவின் ‘புலப்படாத உறவுகள் ‘ (Hidden Connections)
- குழந்தைகளின் உலகம்
- யுத்தம்
- உலகமயமாக்கத்திற்கு மனிதமுகம் பொருத்தும் முயற்சி
- அறிவுக்கே போடப்படும் முக்காடு
- இவர்களைத் தெரிந்து கொள்வோம்.
- சென்னை..என்னை…
- விளையாட்டு
- நானும் நானும்
- அன்புடன் இதயம் – 4 – அழிவில் வாழ்வா
- நண்பன்
- கோலம் , வீட்டில் ஒரு பூனை , உட்கடல்
- யாரடியோ ?