நட்பின் தடம் (அன்புள்ள அய்யனார்- சுந்தர ராமசாமியின் கடிதங்கள்)

This entry is part [part not set] of 39 in the series 20110410_Issue

பாவண்ணன்



தமிழின் மிகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவர் சுந்தர ராமசாமி. தமிழில் எழுதப்படுகிற சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் அனைத்தும் உயர்ந்த தரத்தில் கலையாழத்துடன் அமைந்து வாசகர்களின் சுவையுணர்வையும் வாழ்க்கையைப்பற்றிய பார்வையையும் மேம்படுத்தக்கூடியவையாக அமையவேண்டும் என்று வாழ்நாள் முழுதும் வலியுறுத்தி வந்தவர். அதையொட்டி விவாதங்கள் எழுந்தபோதெல்லாம் கலையாழத்தின் தரப்பில் நின்று தொடர்ச்சியாகக் கருத்துகளை முன்வைத்தவர். கலையின் மீது நம்பிக்கையும் ஆர்வமும் கொண்டவர்கள் பலரும் அவருக்கு நண்பரானார்கள். அவருடைய படைப்புகள் பலரை அவரை நோக்கிச் செலுத்தின. தம் நெஞ்சில் இருக்கிற கேள்விகளுக்கான விடைகளை அறிந்துகொள்ளும்பொருட்டும் தெளிவுபெறும்பொருட்டும் அவரை நோக்கி வந்தவர்கள் பலர். முரண்கொண்ட கருத்துகளோடு வந்து விவாதத்தின் முடிவில் ஒத்த கருத்தினராக மாறியவர்கள் பலர். இப்படி அவருடைய நட்பு வட்டம் மிகப்பெரியது. அந்த வட்டத்தில் வயது வித்தியாசம் என்பதே இல்லை. பதின்ம வயதில் இருந்தவர்கள்முதல் அவரைவிட வயதில் மூத்தவர்கள்வரை அவரோடு ஆர்வத்தோடு நட்பு பாராட்டினார்கள். அவருடைய மனம் மிகப்பெரியது. சாதி, மதம், செல்வம் சார்ந்து உருவாகும் வேறுபாடுகளை அவர் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. எல்லோரையும் சமமாகக் கண்டு நடத்துகிற பக்குவம் அவருக்கிருந்தது. அவருடைய நண்பர்களில் ஒருவர் அய்யனார். சுந்தர ராமசாமியின் படைப்பைப் படித்துவிட்டு 1986 ஆம் ஆண்டில் முதன்முதலாக அவரைச் சந்திக்கச் சென்ற அய்யனார், பார்த்த முதல் நாளிலிருந்தே அவருடைய அன்புக்கும் நட்புக்கும் உரியவராக மாறிவிட்டார். ஏறத்தாழ இருபதாண்டுகள் – சுந்தர ராமசாமியின் மறைவு வரை – அந்த நட்பு சீராகவும் நெருக்கம் குன்றாததாகவும் இருந்திருக்கிறது. இருவருக்கும் இடையே தொடர்ச்சியான கடிதப் போக்குவரத்தும் இருந்திருக்கிறது. நட்பு வளர்ந்த தடத்தின் அடையாளமாக அக்கடிதங்கள் அமைந்துள்ளன.
சுந்தர ராமசாமி எழுதிய ஏறத்தாழ இருநூறு கடிதங்கள் இத்தொகுப்பில் உள்ளன. அவர் எழுதியவை இன்னும் கூடுதலாகவே இருக்கலாம். பாதுகாப்பாக வைத்திருந்தவை மட்டுமே இங்கு நூல்வடிவம் பெற்றுள்ளன. அவ்வப்போது வெளிவந்த நூல்கள் பற்றியும் படித்த படைப்புகள்பற்றியுமான குறிப்புகள் இக்கடிதங்களில் மிகக்குறைவாகவே உள்ளன. ஓர் இலக்கிய ஆளுமையின் கடிதங்களில் இலக்கியம் சார்ந்த விவரங்களை ஆவலோடு எதிர்பார்க்கிற ஒருவருக்கு இத்தொகுப்பு ஒருவேளை ஏமாற்றமளிக்கக்கூடும். ஆனால் இலக்கியம் என்பது படைப்பாளியின் ஒரு முகம்மட்டுமே. ஒரு சமூக மனிதனாக, குடும்பத்தலைவனாக, தந்தையாக, தொழில் செய்பவனாக, நண்பனாக எனப் பல தளங்களிலும் அவன் இவ்வுலகில் இயங்கவேண்டியிருக்கிறது. அய்யனாருக்கு சுந்தர ராமசாமி எழுதிய கடிதங்களில் நட்பின் தடத்தை அழுத்தமாக உணரமுடிகிறது.
தன் நண்பர் வாழ்வின் எந்தக் கட்டத்திலும் நம்பிக்கை இழந்துவிடக்கூடாது என்பதில் சுந்தர ராமசாமிக்கு இருந்த அக்கறையை அவருடைய எல்லாக் கடிதங்களிலும் காணமுடிகிறது. போதுமான கல்வியின்மையை முன்னிட்டு அவர் மனம் கலக்கமடையும்போதெல்லாம், அதைத் தம் இதமான வரிகளால் சு.ரா. நீக்கிவிடுவதை உணரமுடிகிறது. புதிய இடங்களை நோக்கி அவர் பயணப்படும்போதெல்லாம், அந்த இடங்களில் வாழ்கிற தன் நண்பர்களை நோக்கி அவரை ஆற்றுப்படுத்துவதையும் அவர்களுடைய துணையை அவர் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று அவர் விழைவதையும் காணமுடிகிறது. அவர் படிப்பதற்குத் தேவையான புத்தகங்களுக்கு ஏற்பாடு செய்வதையும் படித்த புத்தகங்களைப்பற்றி அவர் எழுதிய வரிகளை உற்சாகமாகப் படித்துவிட்டுக் கருத்து சொல்வதையும் காணலாம். ஒரு பத்திரிகையில் கிடைக்கும் வேலை, தறி நெய்யும் வேலை, திரையரங்கில் படம் இயக்குபவருக்குத் துணைசெய்யும் வேலை, விவேகானந்தா கேந்திரத்தில் வேலை, மருத்துவமனைகளில் விழிப்புணர்வு முகாம் நடத்தும் வேலை, குழந்தைகளுக்கான பள்ளியைத் தொடங்கி நடத்தும் வேலை, மீண்டும் இதழொன்றில் வேலை என ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத வேலைகளில் மாறிமாறி இயங்கியவராக அய்யனார் இருந்த பழங்காலத்துச் சுவடுகளை இக்கடிதங்கள் காட்டுகின்றன. ஒவ்வொரு புதிய வேலையில் அவர் இணையும்போதும் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டி அவருக்கு நம்பிக்கையூட்டி எழுதியிருப்பதையும் சூழல்களின் நெருக்கடிகள் காரணமாக அவ்வேலைகளை விட்டுவிட்டு அவர் வெளியேறிய தருணங்களில் மனம் சோர்ந்துவிடாதபடி அவருக்கு ஆதரவான வரிகளை எழுதியிருப்பதையும் காணமுடிகிறது. ஒரு மூத்த சகோதரனைப்போல அல்லது ஒரு தந்தையைப்போல எல்லாத் தருணங்களிலும் அவர்மீது ஒரு கண்ணைப் பதித்தவராகவும் அவருடைய முன்னேற்றத்தை உள்ளூர ஆசைப்படுகிறவராகவும் சு.ரா. காணப்படுகிறார். தினசரி அனுபவங்களைக் குறிப்பேட்டில் குறித்துவைக்கவேண்டிய அவசியத்தைத் தொடர்ந்து வலியுறுத்தியிருப்பதையும் காணலாம்.
வற்றாத அன்புக்கும் அக்கறைக்கும் சாட்சியாக அய்யனாருக்கு எழுதப்பட்ட கடிதங்கள் உள்ளன. தன் கடைசிக்கடிதத்தை சுந்தர ராமசாமி அய்யனாருக்கு எழுதினார் என்னும் குறிப்பு நெகிழ்ச்சியாக இருக்கிறது.

(அன்புள்ள அய்யனார். சுந்தர ராமசாமியின் கடிதங்கள். மீனாள் பப்ளிஷிங் ஹவுஸ், 3/363, பஜனை கோயில் தெரு, கேளம்பாக்கம். சென்னை – 103. விலை. ரூ.150)

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்