ராம்ப்ரசாத்
‘வேற வழியில்லபா. ஒரு தபா யோசிச்சிக்க. அப்பால சொல்லு தனா’
என்றபடியே காதோரம் செருகியிருந்த பீடியை எடுத்து வாயில் வைத்து, இடுப்பு வேட்டிக்கிடையில் திணித்திருந்த சின்ன தீப்பெட்டியை இடதுகை ஆள்காட்டி விரலால் நெம்பி எடுத்து ஒரு தீக்குச்சியை லாவகமாய் இரு உள்ளங்கைகளைக் குவித்து உரசி எரியவிட்டு, வாயிலிருந்த பீடியை பற்ற வைத்தான் சலீம். தனாவும் சலீமும் தனித்திருந்த அந்த மீனவர் குடியிருப்புக் கடலோரத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் இல்லை. கடலோரக் காற்று இருவரின் காதுகளில் உஸ் உஸ்ஸென்று ஏதேதோ ரகசியம் சொல்லிக்கொண்டே இருந்தது. தூரத்து கடலலைகள் பின்னனி இசை கோர்த்துக்கொண்டிருந்தன.
தனா ஆழ்ந்த யோசனையில் சிலையாய் அமர்ந்திருந்தான். சலீம் சொல்வது போல் வேறுவழியில்லைதான். வீட்டைச்சுற்றிக் கடன். தினம் தினம் மானம் போகிறது. ஆறேழு மாதங்களாகிறது வீட்டு வாடகை தந்து. எப்போது வேண்டுமானாலும் வீட்டைவிட்டு வெளியேற்றப்படலாம். அக்காவுக்கு வயது இருப்பத்தி ஐந்தாகிறது. அவளுக்கு கல்யாணம் செய்து வைக்க வக்கில்லை. இந்த லட்சணத்தில் தனாவும் பன்னிரண்டாவது பெயில். படிப்பு ஏறவேயில்லை. சொற்ப வருமானத்தில் அப்பா. செய்வதறியாமல் மகனாவது ஏதாவது செய்வானா என்று அம்மா.
எந்த வேலைக்கு அப்ளை செய்தாலும் +2 தான் குறைந்தபட்ச தகுதியாக இருக்கிறது. அப்படியில்லையென்றால், எடுபிடி வேலைதான் கிடைக்கிறது. நிலையான வருமானம் இருப்பதில்லை. இரண்டு நாள் பணம் கிடைக்கும். அதற்கே அடுத்தவன் சாப்பிட்ட ப்ளேட்டை கழுவவேண்டும். இல்லையெனில் மூட்டை தூக்க வேண்டும். உடல் வலி மறக்க தண்ணியடிக்க அது அந்த நாளே செலவாகிவிடும். அடுத்த பத்து நாளுக்கு வேலை கிடைக்காது. ஒழுங்காய் +2 முடித்திருந்தாலும் எங்காவது வேலைக்கு முயற்சிக்கலாம். படிக்கின்ற வயதில் தெனாவட்டாய் சுற்றியதில் டுவெல்த் கோவிந்தா. அதை தெனாவட்டு என்று சொல்ல முடியாது. எல்லாரையும் போலத்தான் பள்ளிக்கூடம் போனது. பாடம், கணக்கு, அறிவியல். வீட்டுப்பாடம் செய்ய முடியாத போதெல்லாம், திட்டு வாங்கி வாங்கி நாளடைவில் மரத்துவிட்டது. சூடான ரத்தமல்லவா. தான் ஒன்றும் சோடையல்ல என்பதாய் காட்டிக்கொள்ள நினைத்து, தன்னையே ஏமாற்றி கட் அடித்து சுற்றித் திரிந்ததில் அனேகம் பாடங்களில் ஃபெயில்.
இப்போது நடுத்தெருவில். தனாவின் அப்பாவிற்கு மகனையாவது மீனவன் ஆக்காமல் படிக்கவைத்து நல்ல நிலைக்கு ஆளாக்கிவிட வேண்டும் என்று நினைப்பு. எங்கே நீச்சல் கற்றுக்கொடுத்தால் மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து தன்னைப் போலவே மீன் பிடிக்க வந்துவிடுவானோ என்று, தனாவுக்கு நீச்சல் கூட கற்றுத்தராமல் வளர்த்தார். அப்படியிருந்தும் தனா நண்பர்களுடன் சேர்ந்து கொட்டமடித்ததில், கடலுக்குள் விசைப்படகு ஓட்ட மட்டும் கற்றிருந்தான். இப்போது அதுதான் அவனைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தது.
‘தனா, மறுபடியும் ஒருக்கா சொல்லுறேன். சேட்டோட மேட்டர மட்டும் நீ கடலுக்குள்ள ஒரு இரண்டு மணி நேரம் சேஃபா நிறுத்திட்டனா மத்தத சேட்டோட ஆளுங்க பாத்துக்குவாங்க. நீ மீன் புடிக்க போய்ட்டு திரும்பி வராமாதிரி வந்துடு. உன் மேல சந்தேகமே வராது. இருபதாயிரம் கிடைக்கும். நீ நல்லா பண்டீன்னா சேட்டு இன்னும் நிறைய வேலை குடுப்பாரு. இன்னா சொல்ற’. தனாவை ஆழம்பார்த்தான் சலீம்.
‘அல்லாம் சர்னா, அது இன்னானா மேட்டரு. கஞ்சாவா?’ புரியாமல் கேட்டான் தனா.
‘என்ட்ட கேட்டாமாறி சேட்டாண்ட கேட்றாத. அது இன்னாவா இருந்தா உன்க்கின்னா. சேட்டு உன்னாண்ட பாதி நோட்டு தருவாறு. கடல்ல சேட்டோட ஆளு மீதி நோட்டு தருவான். ரெண்டும் ஒன்னுதான்னா மேட்டர கைமாத்திட்டு நீ வந்துடு. அவ்ளோதான். இன்னா ஓகே வா?’.
தனா சற்று நேரம் ஏதும் பேசாமலிருந்தான். வீட்டில் நிலைமை சரியில்லை. இருபதாயிரம் என்பது பெரிய பணம். வீட்டு வாசலில் வந்து கத்தி மானத்தை வாங்கும் கடன்காரர்கள் முகத்தில் அடிக்கலாம். அம்மா வெளியே போக வெசனப்பட மாட்டாள். அக்கா பக்கத்துவீட்டிற்கு சென்று கரிகாய், அரிசி கடன் கேட்க வேண்டியதில்லை. ப்ளேட் கழுவவேண்டாம். மூட்டை தூக்கி அஞ்சு பத்துக்கு நாயாய் உழைக்க வேண்டாம். ஒரே ஒரு ரிஸ்க். தனக்கு நீச்சல் தெரியாது. ஆனால், அது பெரும்பாலும் தேவை இருக்காது என்றே சலீம் சொன்னான். வெட்டியாய் இருப்பதை விட, ஆண்பிள்ளையாய் லட்சணமாய் வீட்டுக்கு உதவியாய் இருப்பது உத்தமம்.
தனா ஒரு முடிவுக்கு வந்தான். சரி என்பதாய் தலையசைத்தான். இருவரும் எழுந்து நடந்தார்கள். அந்த கடற்கரை மணலில் சலீமின் கால்தடங்கள் தனாவின் பாதங்களால் நிரைந்தன. காரியம் மளமளவென நடந்தது. அடுத்த நாள் மாலை ஆறு மணிக்கு ஒரு விசைப்படகு யாருக்கும் தெரியாமல் கடலுக்குள் பாய்ந்தது. தனா காம்பஸின் உதவியுடன் ஒரு குறிப்பிட்ட திசையில் விசைப்படகை செலுத்தினான். சரியாக 45 நிமிடங்கள் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் கடலுக்குள் பயணித்து பின் விசைப்படகின் என்ஜினை நிறுத்தினான். நின்ற படகு கடலின் நடனத்திற்கேற்ப ஆடிக்கொண்டிருந்தது. எல்லாம் பேசியபடியே நடந்தது. இன்னும் ஒரு மணி நேரம் காத்திருக்கவேண்டும். காத்திருக்கையில் கோஸ்ட் கார்டு வராது. எல்லாம் சேட் ஏற்பாடு. சேட்டின் ஆள் இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் இங்கு வர வேண்டும். அவனிடம் இருக்கும் தாளை சரி பார்த்துவிட்டு, சேட் கொடுத்த சதுர தண்ணீர் புகாத பெட்டியை அவனிடம் தரவேண்டும். பின் கரை திரும்ப வேண்டும். இவ்வளவுதான் வேலை.
தனக்கு ஒரு நிமிடம் நீச்சல் தெரியாதென்பதை நினைத்துக்கொண்டான். பயமாக இருந்தது. அதற்க்காகத்தான் படகிலேயே ஒரு காற்று நிரப்பப்பட்ட நீச்சலுக்கான மிதவையை எடுத்து வந்திருந்தான். அதை தொட்டுப்பார்த்துக்கொண்டான். கொஞ்சம் தைரியம் வந்தது. சேட்டின் ஆள் வர காத்திருக்கத் தொடங்கினான் தனா. ஏதாவது ஒன்றுகிடக்க ஒன்று நடந்து, இரண்டு மணி நேரம் கழித்தும் தனா வராவிட்டால், மிதவையுடன் கடலில் தத்தளிக்கிறான் என்று அர்த்தம். சலீம் உடனே ஒரு படகில் வந்து காப்பாற்றிவிடுவதாய் வாக்குறுதி கொடுத்திருந்தான். இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பு மிகவும் குறைவு என்று சொல்லி தனாவை தெரியமூட்டியிருந்தான் சலீம். வானத்துக்கூரைகளில் மின்மினிகள் அசையாமல் ஒட்டிக்கிடந்தன. தூரத்தில் ஆங்கொரு மின்மினி தவறி விழுந்தது.
இது சட்டவிரோதம் தான். அப்பாவுக்குத் தெரிந்தால் கொலை விழும் வீட்டில். ஆனால் வேறுவழியில்லை. உறுப்படியாய் படித்திருந்தால், +2 பாஸ் செய்திருந்தால் இந்த பிரச்சனையே இல்லை. எங்காவது ப்யூன், ஆபிஸ் பாய் அல்லது கணக்கெழுத உதவி என்று வேலையில் சேர்ந்திருக்கலாம். நிரந்தர வருமானத்துடன் கூடிய வளர்ச்சி கிடைத்திருக்கும். நாளடைவில் ஒரு உன்னத இடத்தை சென்று சேரலாம். கெளரவமாய் இருந்திருக்கும். இப்படி இருட்டில், யாருக்கும் தெரியாமல், சட்டவிரோத காரியம் செய்யவேண்டியிருக்காது. மாட்டினால் கம்பி எண்ணவேண்டியதுதான். ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில், கையாலாகாத தனத்தின் உச்சகட்டத்தில் வந்த வெறுப்பில்தான் சட்டென முடிவெடுத்து இந்த வேலையை ஒப்புக்கொண்டது. இப்படித்தான் உருவாகிறார்களோ சமூக விரோதிகளும் குற்றவாளிகளும். தனா தளும்பிச் சிதறும் கடல் நீரை வெறித்துப் பார்த்தபடி யோசனையில் ஆழ்ந்திருந்தான்.
பரந்து விரிந்து கிடந்தது கடல் இருளைப் போர்த்திக்கொண்டு. எங்கும் இருள். படகின் ஆட்டமும், காற்றின் ஹோவென்ற பேரிரைச்சலும், வானத்து மின்மினிகளும் சற்றே பயமுருத்தின. நொடிகள் யுகங்களாய் கடந்து கொண்டிருந்தன. இருள் சூழ்ந்த குளிர் காற்று உடலை நனைத்தது. முகத்திலும் , உடலிலும் உப்பு நீரின் பிசுபிசுப்பு ஒட்டிக்கொண்டிருந்ததை உணர முடிந்தது. கடலலைகள் இல்லாமல், கடல் நீர் ஆக்ரோஷமாய் தளும்பிக்கொண்டிருந்ததில் படகு சில நேரம் மிக மோசமாக ஆடியது. கடல் நீர் அவ்வப்போது தெறித்து படகுக்குள் வந்து விழுந்து ஓரமாய் வைக்கப்பட்டிருந்த அந்த பெட்டியை நனைத்தது.
தனாவின் பார்வை இப்போது அந்த பெட்டியில் நிலைகுத்தியது. என்னவாக இருக்கும்? இருபாதாயிரம் ரூபாய் இதை கைமாற்றிவிட மட்டும். அத்தனை விலையுயர்ந்த பொருளா இது? அப்படி என்னவாக இருக்கும்? தனா யோசித்துக்கொண்டிருந்தான். சேட்டின் ஆள் வருவதற்க்கு நேரமாகும் போலிருக்கிறது. அதற்குள் இது என்னவென்று திறந்து பார்த்தால் என்ன? யாருக்குத் தெரியப்போகிறது? தனாவின் மனம் உந்தியது. மெல்ல அந்தப் பெட்டியின் அருகே மண்டியிட்டு அமர்ந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் இல்லை. எந்தப் படகும் தென்படவில்லை. மெல்ல அந்தப் பெட்டியின் மேல் கைவைத்தான்.
திடீரென்று பலத்த வேகத்துடன் ஏதோ ஒன்று பலமாய் தனாவின் விசைப்படகை மோதியது. தனா நிலைகுலைந்து விழுந்தான். படகு வேகமாய் ஆடியது. கவிழ்ந்து விடுமோ என்று பயம் கொள்ளும் அளவிற்கு ஆடியது. தனா அவசரமாய் அந்த காற்றடைத்த மிதவையை பற்றி எடுக்க முயல அது எதிலோ சிக்கிக்கொண்டு வரமறுக்க, வேகமாய் கவிழ்ந்துவிடும் நோக்கில் ஆடிய படகிலிருந்து கடலுக்குள் விழுந்துவிடுமுன் அந்த மிதவையை கையில் எடுத்துக்கொள்ளும் நோக்கில் தனா அதை பலமாய் பிடித்து இழுக்க எதிலோ இழுபட்டு டர்ரென அது கிழியும் சத்தம் கேட்டு, தொடர்ந்து அதனுள்ளிருந்த காற்று வேகமாய் வெளிவரும் ஓசை கேட்டது.
தனாவிற்கு வயிற்றைக் கலக்கியது. நடுக்கடல். நீச்சல் தெரியாது. ஆத்திர அவசரத்திற்கென எடுத்துவந்த மிதவையும் சர்வ நாசம். இப்போது உயிர் மேல் பயம் வந்துவிட்டிருந்தது தனாவிற்கு. அடுத்து ஏதேனும் விபரீதம் நிகழ்வதற்குள் விசைப்படகை ஸ்டார்ட் செய்து கரைக்குக் திரும்ப வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே மீண்டும் ஏதோ முன்னைவிட பலமாய் படகைத் தாக்க அந்த அதிர்ச்சியில் கடலுக்குள் தூக்கி எறியப்பட்டான் தனா. கையை காலை ஆட்டி எக்கி எதைப் பிடிக்க முயன்றாலும் அது நீராய் இளகி கைகளுக்குள் நழுவி ஓட, எந்தப் பிடிமானமும் இல்லாமல் கடலில் தனா அமிழ, ஓரளவுக்குமேல் மூச்சடக்கமுடியாமல் திணற, விசுக்கென்று நீர் மூச்சுக்குழலில் நுழைந்து இதயத்தைக் கிழிக்கும் வலியுடன் மார்புக்கூட்டில் நுரையீரலில் நிரைய, அணிச்சையாய் வாய் திறந்து சுவாசிக்க முயல அதற்குள் உப்புக்கரிக்கும் கடல் நீர் வாய்க்குள் நிறைந்து தொண்டைக்குழிக்குள் இறங்க எத்தனிக்க…..
எக்க்..ஹக்.. ப்ளப்……..ம்ம்ம்ம்ம்ம்……
ஒரு ஆழ்ந்த அவசர பெருமூச்சுடன் விருட்டென்று கண்விழித்தான் தனா. முகத்தில் பீதி அப்பிக்கிடந்தது அவனுக்கு. கண்கள் இரண்டும் அதிர்ச்சியில் மருண்டிருந்தன. தனா சுற்றிலும் பார்த்தான்.
எனக்கென்ன என்று உத்தரத்தில் மின்விசிறி சுழன்று கொண்டிருந்தது. தாழ்போடாமல் சாத்தப்பட்ட கதவில், தொங்கிக்கொண்டிருந்தன அவனின் கிழிந்த நாள்பட்ட ஜீன்ஸ் பாண்டும், ட்சர்ட்டும். பக்கத்திலேயே +2 தேர்வுத் தேதிகளின் அட்டவணை. கலைந்து கிடந்த தலைவலித்தைலம், சீப்பு, கண்ணாடி, சின்ன கத்திரிக்கோல் என அனைத்தையும் காட்டிக்கொண்டு திறந்திருந்த அலமாறிக் கதவுகளில் தொங்கிக் காய்ந்துகொண்டிருந்தது ஒரு டவல்.
ச்சீ…. எல்லாம் கனவா?…
தேர்வுகள் தொடங்க இன்னும் நாட்களிருந்தது. தனா சுற்றும் முற்றும் பார்த்து ஊர்ஜிதம் செய்துகொண்டான். கனவே தான். எத்தனை உண்மையாக இருந்தது. நிஜத்தில் நடப்பது போலவே இருந்தது. நல்லவேளை கனவுதான். இன்னும் தேர்வுகள் ஆரம்பிக்கவில்லை. இன்னும் நேரமிருக்கிறது.
தனாவின் அக்கா ஒரு டம்ப்ளரில் டீ போட்டு ஆற்றி தனாவின் அருகே வைத்துவிட்டுப் போனாள். அம்மா வழக்கம்போல் வெளியில் செல்ல வெசனப்பட்டு சமையற்கட்டினுள்ளேயே, பக்கத்து வீட்டிலிருந்து அக்காள் கடனாக வாங்கிவந்த சொற்ப காய்கறிகளைக் கொண்டே மோர்க்குழம்பு சமைத்துக்கொண்டிருந்தாள்.
தனா பேயறைந்தார்போல் உட்கார்ந்திருந்தான். வெளிறி இருந்த முகம் நேரம் செல்லச் செல்ல சாந்தமானது. சன்னலினூடே வெயில் அவனுக்கு மிக அருகில் வழிந்து விழுந்திருந்தது. அதன் கனவுகள் தூசிகளாய் இறங்கிக்கொண்டிருந்தன. தனா நீண்டதொரு பெருமூச்சுவிட்டான். எழுந்து பல்துலக்கி, குளித்திவிட்டு வந்து பாடப்புத்தகங்களுடன் அமர்ந்தான். முதலில் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும். அதைவிட முக்கியம் +2 தேர்வில் பாஸாகவேண்டும். +2 தேர்வுக்கு பாடம் படிக்கலானான் தனா. இந்தத் தேர்வில் பாஸாகிவிட வேண்டுமென்கிற உறுதி அவனுள் ஆழமாய் வேர்விட்டிருந்தது.
– ராம்ப்ரசாத் சென்னை
- சார்த்தர், பூவாஹ், எங்கல்ஸ் – நேர்மையும், உதாரண புருஷர்களும்
- நண்பர்கள் வட்டம்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -11 – பாகம் -3
- வேத வனம் விருட்சம் 89 –
- நடப்பு
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) என்னைப் பற்றி – போதை மருந்துகளும் பிளக்கும் கத்திகளும் கவிதை -29 பாகம் -3
- பரி நகரில் கம்பராமாயாணம் முற்றோதல் நிறைவு விழாவும்
- To Kill a Mockingbird
- சாகித்ய அகாதெமி இலக்கிய நிகழ்ச்சி
- அன்புடையீர்
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -18
- செவ்வாய்க் கோளைச் சுற்றிவரும் இரு வக்கிரச் சந்திரன்கள் ·போபாஸ் & டைமாஸ் (Mars Two Irregular Moons : Phobos & Deimos)
- குழந்தைகள் எப்போதும் மூக்கை குடைவது ஏன்?
- நடக்கப்பழகியிருந்தேன்…
- உஷ்ண வெளிக்காரன்
- கால தேவன்
- விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபத்தைந்து
- காதலில் விழுந்தேன்
- ரிஷி கவிதைகள்
- சுவடு
- குமிழ் மொட்டெனப் பூத்த பால் வீதி..!
- ஹிந்துக்களா? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
- ஆதியோடு அந்தமுமாக ஒளிவு மறைவில்லாத இந்து சமய தத்துவங்கள் God Project: Hinduism as Open-Source Faith
- அந்தமானில்……
- முள்பாதை 33
- களம் ஒன்று கதை பத்து – 4 ஆப்பிள் அறிவித்த ஏவாள்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -21
- காகிதக் கால்கள்
- ஆட்டோ பயோகிராபி ஆப் சைல்ட் 1 (சைப் டைட்டில் : நித்திய சோதனை)
- நடுக்கடலில்…
- ஏ.தேவராஜன் 2 கவிதைகள்