நகர் வலம்

This entry is part [part not set] of 23 in the series 20021102_Issue

வ.ந.கிரிதரன் –


பெரு
நகரின் இருண்டதொரு
அந்தியில் தொடங்கினேன்
என்
நகர் வலத்தை ஒரு
மன்னனைப் போல.

சகதிக்குள் குளித்துக் கொண்டிருக்கும்
ஓர் எருமையைப் போல்
புரண்டு புரண்டு குளித்துக்
கொண்டிருந்தது
நகரம்.

வீதிக் கால்வாய்கள் வழியாக
மெதுமெதுவாய்
நகர்ந்து கொண்டிருந்த
வாகனப் பாம்புகளை
அவை வயிற்றில் சுமப்பவர்களை
வியப்புடன் ஒருவித அருவருப்புடனும்
பார்த்துக் கொண்டிருந்தனர்
நகரத்து மாந்தர்.

உயரமான, பழையதொரு
கோதிக் பாணியில் அமைந்திருந்த
கிறித்தவ ஆலயமொன்றின்
உச்சியில் வாசம் செய்யும் புறாக்கள்
சில பறப்பதும் சிறகுகளை
உதறுவதுமாக பறவைகளின்
இருப்பின் சாட்சியாகச்
சோர்ந்து கிடந்தன.
இரவின் கருமையை கார்
மேகங்கள் மேலும் அதிகரித்துப்
பார்வைப் புலத்தினைப்
பழுதாக்கின.

அழகான பெண்கள் அலங்கரித்தபடி
கரைகளில் நின்றபடி
கால்வாய்களில் நகரும் பாம்புகளையும்
அவற்றில் பயணித்தவர்களையும்
ஆர்வத்துடன் பார்த்துக்
கொண்டிருந்தார்கள்.
இந்த இரவு முழுக்க
இவர்களது பொழுது
இவ்விதமே கழியும் ?

ஆகாயமே கூரையாக
வாழும் ஊர் உலாத்தி மனிதர்கள்
உற்சாகம் குன்றி
நகரின் நடுநடுவே தெரியும்
நந்தவனங்களில்
போர்வைகளிற்குள்
நடுங்கி, முடங்கிக்
கிடந்தனர் எந்தவிதக்
கணப்புமின்றி.

கிளப்புகளில்
களியாட்டம் தொடங்கி விட்டது. மேடைகளில்
ஆண்கள், பெண்கள்
ஆடைகளின்றி ஆடினர்
முலைகளைக் குறிகளைக்
குலுக்கியபடி. பாயும் மதுவெள்ளத்தில்
நீந்தி நீந்தி
மூழ்கினர் நகரத்தின் பெருங்குடி
மக்கள்.

போதை வஸ்த்து, பியர், விஸ்கி
பொங்கி நகரை வெள்ளக்த்தில்
மூழ்க வைத்தன. திருடர்கள்
கன்னக்கோல் வைத்தழகு
பார்க்கத் தொடங்கினர்.
துப்பாக்கிக் கரங்கள் நீண்டு
நகரைச் சுற்றி வளைக்கத் தொடங்கி
விட்டன.

பகல் முழுக்கச் சட்டங்கள் இயற்றிவர்கள்,
உரிமை பற்றி வாய் கிழிய முழங்கியவர்கள்,
பார்களில், ஓட்டல்களில் சல்லாபித்துக்
கிடந்தனர்.

நகரை நோக்கி
இன்னும் பலர் படையெடுப்புகள்
நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள்.
ஆலைகளில், உணவகங்களில்
இன்னும் மனிதர்கள்
உழைத்துக் கொண்டுதானிருந்தார்கள்
எந்தவித களிப்புமின்றி
இருப்பிற்காக ஆனால் பெருங்
கனவுகளுடன்.

களியாட்டமிடும் நகரை
ஓரமாக ஒதுங்கி நின்று
பார்த்து
ஏக்கத்துடன் சோகித்துக் கிடந்தன
கிராமங்கள்.

நகரத்தின் விளையாட்டைச்
சகிக்க முடியாத விண்மீன்கள்
தங்களை மூடித் தொலைந்து
போயின எங்கோ.
விரிந்து கிடந்த
பெருவானோ
எந்தவிதச் சலனமுமின்றி
மெளனித்துக் கிடந்தது
இது வழக்கமானதொரு நிகழ்வு
போல.

சுடர்களற்ற
இந்த இரவில்,
இந்த மழையில்
எதற்காக நான்
என் நகர்வலத்தை
ஆரம்பித்தேன் ?

***
ngiri2704@rogers.com

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்