தொழிற்றுறை விரிவும்,மனிதவதையும்!

This entry is part [part not set] of 43 in the series 20051028_Issue

ப.வி.ஸ்ரீரங்கன்


இன்றெமது காலத்து உயிர் வாழ்வானது உயிர்த்திருப்பதற்கான நோக்குநிலையாக மாறியபின் நமதுவாழ்வூக்கம் அதுசார்ந்த உணர்தலை சமூகமட்டத்திலும்,அறிவத்தளத்திலும் உறுதியாகப் பதியம் போட்டுவிட்டது. இந்தப் பொருள் வாழ்வானது நமது இருப்பைக் குறுகிய மதிப்பீடுகளால்(இன்றைய வாழ்வியல் மதிப்பீடுகள்)அன்நியப்டுத்தியபோது,நமது வாழ்வு விலங்கிடப்பட்டு ‘ இருப்பழிந்த-உளமிழந்த ‘ நிலையாகிப் போனதால் ஜந்திரத்தனமானோம். இப்போதெல்லாம் வாழ்வினது பெறுமானம் நிம்மதியான வேலையும்,அதைத்தக்கவைப்பதற்கான விடாமுயற்சியுமே மனித வாழ்வினது பெருநோக்கில் முக்கியமான பெறுமானம்! எந்தவொரு சூழலிலும் இந்த வகைப் புரிதலோடுதாம் நமது உயிர்வாழ்வு இருப்பை உறுதிப் படுத்துகிறது.இதன்போக்கு தொழில்சார் கல்வியின் தேவையை உந்தித் தள்ளி,அறிவுப்பரப்பை ஊனப்படுத்தியதாக மாற்றியுள்ளது.

பண்டுதொட்டு ஆத்மீகத்தேவையைச் சிதைத்து மலினப்படுத்திய மதங்கள்-பொருளியல் நலன்கள் மனிதர்களின் மனித முகத்தைப் பறித்தெடுத்துவிட்டு,ஜந்திரத்தின் உதிரிப்பாகமாக மனிதர்களை அத்துடன் இணைத்துவிட்டுள்ளது.இதுதாம் நமதான இன்றைய வாழ்வும்,அதன் பெறுமானமும்!இதிலிருந்து விடுபடக்கூடிய வழிவகைகளை கல்வியிலிருந்து தொடக்கி வைக்க கல்வியும் மானுடர்சார்ந்த நோக்குநிலையிலிருந்து பயிற்றுவிப்பதாகவுமில்லை.அதைக் கட்டுப்படுத்தும் பெருமூலதனம் தனது இருப்கேற்றவாறு கல்வியைத் தயார்படுத்தி,ஒழுங்கமைந்த தொழில்சார் முறைமைகளுக்கே முன்னுரிமை கொடுப்பதால் நமது எதிர்காலம் இன்னும் அமைதியிழந்தும்,ஆறுதலின்றியும் போகப்போகின்றது.மனித முகமிழந்த வெறும் ஜந்திரத்தனமான உணர்வுகளோடு மனிதர்கள் சமூகக்கடமையிலீடுபடுவது எதைநோக்கி ? உற்பத்தியிலீடுபடுவதும்,பெருமூலதனம் உபரியீட்டுதலுக்காகக் காரியஞ் செய்வதுதாம் வாழ்வின் பெறுமானமா ?

நேற்று ஊரோடு வாழ்ந்த வாழ்வு பறிபோனது.

இன்று உடலோடு உயிர்த்திருப்பதுகூட முடியாதவொரு சூழலைத் தந்துள்ள நமது பொருளாதாரப் பொறிமுறை,இனிப் பெரும்பாலும் பூமியில் மானுட வாழ்வுக்கேற்ற பகுதிகளை இல்லாதாக்கிவிடும்.நர்மதா அணைக்கட்டு,மின் திட்டங்கள்-எண்ணையூற்று வயல்கள்,இன்னும் எத்தனையோ கனிவளச் சுரண்டல்களுக்காக மானுடமற்ற திட்டங்கள் நம் வாழ்வைச் சிறப்புறச் செய்யப்போவதில்லை.இந்த இருள்சூழ்ந்த வாழ்வில் எப்படியொரு நம்பிக்கை முகிழ்த்து, எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ளும் ?பிரிடிஷ் பெற்றோலியம் நையீரியாவில் செய்யும் அனியாயக் காரியம் அந்தப் பகுதி மானுடர்களில் வாழ் நிலங்களை நஞ்சாக்கி மக்களின் இருப்பையே அழித்துக் கொண்டிருக்கிறது.

இந்தியாவிலோ பாரிய ஏகாதிபத்தியத் தொழில் நிறுவனங்கள் தமது வேட்டையைத் தொடங்கி நமது பக்க வாழ்சூழலைக் கெடுத்து வருவது தொடர்கிறது.மனித இனம் வாழ்வதற்காக இடம் பெயர்ந்த காலங்கள் போய்,இப்போது தொழிற்கழகங்கள் தாம் உயிர்த்திருப்பதற்காக இடம் பெயரும் காலம் இன்றைய காலம்.இங்கே அனைத்து மனிதவிழுமியங்களும் சிதைக்கப்பட்டு உருத்தெரியாது அழிக்கப்படுகிறது!நமது அறிவுஜீவுகளும் தமது பொன்னான அறிவை இந்தக் காட்டுமிராண்டித் தொழில் கழகங்களுக்கே வழங்கி நமது வாழ்வையின்னும் மோசாமாக்கிவிட்டார்கள்.

1993 இல் தொடங்கி இன்றுவரை தென்கிழக்காசிப் பிராந்தியம் அன்நியக் கம்பனிகளால் வேட்டையாடப்பட்டு வருகிறது.

இந்தியத் துணைக்கண்டம் தனது வாழ்சூழலைத் தொழிற்கழகங்களுக்காக ஏலம்விட்டு மனிதவதையைச் செய்தத் தொடங்கியுள்ளது.

இதனால் யுத்தங்கள்,அரசியற்கொலைகள்,அமைதியின்மை,சமூகப்பதட்டம்,இராணுவமயப்படுத்தலாகக் குடிசார் வாழ்வு அழிந்துபோகிறது.நாமெல்லாம் வாழ்விழந்தோம் வாழ்வதற்காய்!வாழ்வுதாம் கிட்டவில்லை,வதைபடுகிறோம்.எதிலுமே ஆதாயம்தேடும் ஐரோப்பிய மனம் எமது காலத்தை தொழில் கழகங்களின் உயிர்ப்புக்கான காலமாகமாற்றியுள்ளது.இங்கே மனிதர்கள் வெறும் கச்சாப்பொருளே.இதனால் வதைபடுகிறோம்.வார்த்தையிற் சொல்லமுடியாத வேதனைகளை அகதி வாழ்வு தந்துவிடுகிறது.உற்றார்களில்லை,உறவில்லை,சுற்றமில்லை,சூழலில்லை.எங்கே போய் வாழ்வின் சுகத்தைத்தேடுவது ?யாரோடுபோய் எதைநோக ?நமக்கான குறியீடென்ன ? அகதி! அற்புதமான காலம் அவதியோடும்,அழுகையோடும்போவதா ?

எதைநோக்கி ?…

மானித்தைநோக்கி மதங்கள் காட்டிய பாதை அடிமைத்தளையைத் தந்தது.முன்னேற்றம் காட்டிய பொருளாதாரமோ உயிர்ப்பலியைத் தந்தது.

ஆன்மாவின்றி அவதிப்படும் உலக மனிதர்கள் அங்கங்கம் வகிக்கம் பொருளாதாரப் பொறிமுறை அழிவைநோக்கித்தாம் செல்லுமேயொழிய அற்புதங்களைச் செய்யமுடியாது. வர்த்தக ஒப்பந்தங்கள் வதைகளையே தந்துவிடுகின்றன,வரும் காலமெல்லாம் மனித அழிவின்றி வளமான வாழ்வு வரப்போவதில்லை.

அழிந்துதாம் ஆக்கமானல்,மனிதத்தோடு வாழ்வதற்கு-எல்லோரும் சமமுற ஏதுசெய்வோம் ?…

ப.வி.ஸ்ரீரங்கன்

13.05.05

Series Navigation

ப.வி.ஸ்ரீரங்கன்

ப.வி.ஸ்ரீரங்கன்