தொன்மமும், குழந்தை மரணமும் அல்லது ஆண்களுக்கு காது குத்துதல்

This entry is part [part not set] of 30 in the series 20050909_Issue

ம.ஜோசப்


சங்க காலத்தில் தமிழர்கள் காதல், மானம், வீரம் என்றக் கட்டுக்கோப்பில் வாழ்ந்தவர்கள்.

சங்க கால தமிழ்ப் பெண் ஒருத்தி முதல் நாள் போரில் தனது தந்தையை இழந்தாள்.

இரண்டாம் நாள் போரில் தனது கணவனை இழந்தாள். மூன்றாம் நாள் போருக்கு, பால் மணம்

மாறா பச்சிளங் குழந்தையை அனுப்பினாளாம் அத்தமிழ்ப் பெண். அக்குழந்தை போர்க் களத்தில்

மார்பில் விழுப்புண் பட்டு மரணமடைவதையே விரும்பினாளாம். அக்குழந்தையும் அவ்வாறே

மரணமடைந்ததை அறிந்து பூரித்து போனாளாம்.

வீரமே பிரதானமாக வாழ்ந்தவர்கள் சங்க கால தமிழர்கள். ஆண்கள் விழுப்புண்

பெறுவதையே பெரும் பேறாக கருதிய காலம் அக்காலம். சாதரணமாக அல்லது நோயுற்று இறக்கும்

ஆண் மகனின் மார்பில் வாளால் கீறி புதைப்பதும் சங்க கால தமிழர்களின் வழக்கம். போரில் விழுப்புண் பெற்று

தாய் நாட்டிற்காக மடிவதே ஒரு ஆணின் தலையாய நோக்கம். ‘களிறு எறிந்து பெயர்தல் காளைக்கு

கடனே ‘, என்கிறார் திருவள்ளுவர். இன்றும் கிராமங்களில் ஆண்களை காளை என்று அழைக்கின்றார்கள்.

சின்ன காளை, முத்துக் காளை என பெயர் வைத்துக் கொள்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க இன்றும் தமிழ்ச் சமூகத்தில் வழக்கத்தில் உள்ள ஒரு செயல்,

ஆண்களுக்கு காது குத்துதல். நீண்ட நாள்களாக எனக்கு பிடிபடாத ஒன்றாகவே இது இருந்து வந்தது.

ஏன் ஆண்களுக்கு காது குத்த வேண்டும் ? வரலாற்று காலத்தில் ஆண்களுக்கு காது குத்திக் கொண்டனர்,

முடி வளர்த்து வந்தனர். மேலை நாகரீகம் பல பழக்க, வழக்கங்களை ஒழித்து விட்டது.

மேலை நாகரீகம் இன்று வரை அழிக்க முடியாத ஒரு வழக்கமாக இப்பழக்கம்

உள்ளது. எனக்கு தெரிந்த வரையில் கர்நாடகாவிலும் இப்பழக்கம் நிலவி வருகிறது.

கி.பி. 1600 களிலிருந்து தமிழ் மக்கள் கிறித்தவ மதத்தை தழுவினர். பல்வேறு சமூக, பொருளாதார

அரசியல் காரணங்களுக்காக மதம் மாறினர் என்பது வரலாறு. ஏறக்குறைய இருநூறு வருடங்களுக்குமுன்

எங்களது குடும்பமும் மதம் மாறியிருக்கக்கூடும்.

கிறித்துவ சமூக அமைப்பில், தமிழ் சமூகத்தில் நிலவும் சாதியக் கூறு, அப்படியே நிலவி வருகிறது.

மேலும் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் தமிழ் பண்பாட்டுக் கூறுகள், கிறித்துவ மக்களிடையே பின்பற்றப்

படுகின்றன. பாதுகாக்கப்படுகின்றன. குறிப்பாக ரோமன் கத்தோலிக்க கிறித்துவ மக்களிடையே பின்பற்றப்படுகின்றன.

தாலி கட்டிக் கொள்ளுதல், மெட்டி அணிதல், தாய் மாமன் உறவு முறை வழக்கம், இறப்புச் சடங்குகள்,

சமைந்த பெண்ணுக்கு சடங்கு செய்தல், அந்தோணியார் பொங்கல் (தை மாதத்தில், பொங்கல் பண்டிகையின் போது),

இப்படி பலவற்றை கூறலாம்.

எங்களது முதல் குழந்தை, மருத்துவர்களின் தவறான அணுகுமுறையால் பிறந்த 5 மணி நேரத்தில்

இறந்து போனது. என் மனைவிக்கும், எனக்கும் தாங்கொணா வேதனை. அது ஆண் குழந்தை.

அதிகாலை என்னிடம் தெரிவித்து விட்டு, என் வீட்டினர் குழந்தையை அடக்கம்

செய்ய எடுத்துச் சென்று விட்டனர். கிராமத்தில் உள்ள எங்கள் பூர்வீக வீட்டின் முன்புறம் அதை அடக்கம்

செய்தனர். இப்படி இறந்து போகும் முதல் குழந்தையை வீீட்டின் முன்புறமும், இரண்டாவது

குழந்தையை வீீட்டின் பின்புறமும் அடக்கம் செய்வது தொன்று தொட்டு நடந்து வரும் ஒரு வழக்கம்.

அக்குழந்தைக்கு ஊர் முழுவதும் கூடி வந்து இறுதி மரியாதை செய்தனாராம். அதற்கு

‘மாசில்லாக் குழந்தை ‘, எனப் பெயரிட்டு, முள்ளால் காதுகளை குத்தி அடக்கம் செய்தனராம்.

நான், ஏன் காது குத்த வேண்டும் ? எனக் கேட்டேன். ‘ஒச்சம் இல்லாமல் குழந்தையை அடக்கம் செய்யக்

கூடாது ‘, அதானால்தான் காது குத்தி அடக்கம் செய்தோம், என்றனர்.

இது குறித்து யோசிக்கும் போது எனக்கு சில விஷயங்கள் தோன்றின.

காயம் ஏற்படுத்திதான் குழந்தையை புதைக்க வேண்டும், என்கிற செயல், இன்று, நேற்று ஏற்பட்ட

பழக்கமாயிராது என்பது என் திடமான எண்ணமாகும். அது பன்னெடுங் காலத்திற்கு முன், பின்பற்றப்பட்டு வந்த

ஆண்மகன் விழுப்புண் பெற்று மரணமடய வேண்டும் என்ற கொள்கையின் மாறுபட்ட வடிவமேயாகும். சாதரணமாக

மரணமடையும் ஆண்களின் மார்பில் வாளால் கீறி புதைக்கும், நம் மூதாதையினரின் தொன்மமான பழக்கமே இன்று

காது குத்திப் புதைக்க வேண்டும் என்ற வழக்கமாக உள்ளது, என நான் நினைக்கின்றேன்.

இது அனுமானத்தின் அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது. ஆராய்ச்சியின் அடிப்படையில் கண்டு அறியப்பட்ட

உண்மை அல்ல. ஆயினும் யாரேனும் இது குறித்த விபரங்கள், உண்மைகள், அனுமானங்களைத் தெரியப்படுத்தினால்

அறிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன்.

—-

michaelarulabel@yahoo.co.uk

Series Navigation

ம.ஜோசப்

ம.ஜோசப்