தொடர்ந்து அறுக்கப்படும் வேர்கள்

This entry is part [part not set] of 35 in the series 20030518_Issue

சின்னக் கருப்பன்


எங்கள் ஊரின் பெரியவர்களுக்கு இருக்கும் பெயர் சற்று நீளமானது. திருவிடைமங்கலம் சுந்தரநயினா முத்துலிங்கக் கோனார், மருதூர் வினாயகமூர்த்தி வரதப்ப முதலியார் இன்னபிற. பெயரிலேயே ஆள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ன ஜாதியைச் சேர்ந்தவர், தந்தையார் பெயர் என்ன போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

இன்று அப்படி யாரையும் சொல்லமுடியாது. எல்லோருடைய பெயர்களும் இன்று ஒரே மாதிரியானதாக ஆகி வருகின்றன. சொல்லப்போனால், ஆகிவிட்டன. எங்கள் ஊரில் என் சொந்தக்காரர்கள் இன்று, கருப்பன் என்றோ, அல்லது மாடசாமி என்றோ யாரும் பெயர் வைத்துக்கொள்வதில்லை. எல்லோரும் இன்று சுரேஷ், வினோத், சுனில் போன்ற பெயர்களில் தங்கள் குழந்தைகளுக்கு பெயர்வைக்கிறார்கள். யாரும் தங்கள் பெயருக்கு முன்னால் ஊரின் பெயரையோ அல்லது தன் பெயருக்குப் பின்னால் ஜாதி அல்லது பட்டப்பெயரையோ வைத்துக்கொள்வதில்லை. ஜாதி பெயரை அல்லது பட்டப்பெயரை தன் பின்னால் வைத்துக்கொள்வது பிற்போக்கானதாக ஆகிவிட்டது. இது தமிழ்நாட்டுக்கே உரிய ஒரு விஷயம்தான். திராவிட கட்சிகளின் வளர்ச்சி, ஆட்சிபீடத்தில் அதன் தொடர்ந்த இருப்பு இன்னும் அதிகமாகி சமீபத்தில் தாயின் பெயரை மட்டுமே தன் பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்வது போதும் என்ற அளவுக்கு பரிணாமம் அடைந்திருக்கிறது.

அடுத்தது என்ன ? எல்லோருக்கும் அறிவியல் புனைகதைகளில் வருவது போன்று எண்கள் கொடுக்கப்படுமா என்று தெரியவில்லை.

இது, தன்னுடைய கலாச்சாரத்தின் மீது, தன்னுடைய மொழியின் மீது, தன்னுடைய வழமுறையின் மீது, தன்னுடைய வம்சத்தின்மீது ஒரு அவமானமான பார்வை கொண்ட விடலைத்தனமான செய்கையாகவே எனக்குத் தோன்றுகிறது.

சொல்லப்போனால் தமிழ்நாடு தவிர்த்த மற்ற மாநிலங்களில் முழுப் பெயர்கள்தான் உலவி வருகின்றன. அங்கு யாரும் தன்னுடைய ஜாதிப் பெயர்களையோ அல்லது தந்தை பெயர்களையோ ஊர் பெயர்களையோ விட்டு விடுவதில்லை. சமீபத்தில் ஜ்ஊனியர் விகடனில் படிக்கும்போது ஒரு தலித் தலைவர் தன்னுடைய பெயரை கிருஷ்ணப் பறையனார் என்று சட்டப்பூர்வமாக வைத்து புழங்குவதைப் படித்தேன். இந்தக் கூத்துக்கு ஒரு எதிர்வினையாக தன்னுடைய பெயரை வைத்திருக்கும் கிருஷ்ணப்பறையனாரே இந்த கட்டுரைக்கு தூண்டுகோல்.

முதலில் ஜாதிப்பெயர் வைத்திருந்தால், ஜாதி வெறி தலைவிரித்தாடும் என்று நான் ஒப்புக்கொள்ளவில்லை. ஜாதிப்பெயரைப் பின்னால் சேர்த்துக் கொள்ளாமலேயே ஜெயலலிதா என்ன ஜாதி, சங்கராசாரியார் என்ன ஜாதி, கிருஷ்ணசாமி என்ன ஜாதி என்று தெரியாமலா போய்விட்டது ? காமராஜ நாடார், வி கலியாணசுந்தர முதலியார், உ வே சாமிநாத அய்யர், கோவிந்த ராஜ்உலு நாயுடு, தியாகராஜ செட்டியார் , டி டி கிரிஷ்ணமாச்சாரி, என்றெல்லாம் இருந்ததாலேயே அவர்கள் எல்லாம் ஜாதி உணர்வு கொண்டிருந்தார்கள் என்று பொருளா ? இவர்கள் ஒருவரையொருவர் விளிக்கும்போதும் ‘நாயக்கரே, முதலியார்வாள் ‘ என்று தான் அழைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். சொல்லப் போனால் அந்தத் தலைமுறையினரைக் காட்டிலும் , ஜாதிப்பெயரை பெயருக்குப் பின்னாலிருந்து ஒழித்துவிட்ட இந்தத்தலைமுறையில் தானே ஜாதிச்சங்கங்களும், ஜாதிக்கட்சிகளும் பெருகிப் பல்கியிருக்கின்றன ? ஜாதிப்பெயர்கள் கட்டாயமாக நீக்கப்பட்டிருக்கும் தமிழ்நாட்டில் எள்ளளவும் ஜாதிவெறி குறைந்துவிடவில்லை. ஜாதி என்பதும், பரம்பரை என்பதும், குடும்பம் என்பது நம்மிடையே இருக்கத்தான் போகின்றன. அதனை ஒப்புக்கொள்வதும் அதற்கு ஒரு தகுதியான இடத்தை அளிப்பதும், அதனைக் கடந்து மக்களை மதிப்பதுமே சரியான போக்கு.

சென்னையில் வாழும் எனக்கு பலவிதமான நண்பர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பாதிக்குப் பாதி கலப்புத் திருமணம் செய்திருக்கிறார்கள். கலப்புத் திருமணம் என்றாலே காதல் திருமணம் அல்ல என்பதையும் சொல்ல வேண்டும். என் பிராம்மண நண்பரின் தம்பிக்கு செவ்வாய்தோஷம் போன்ற சமாச்சாரங்கள் இருப்பதால் குடும்பத்தினரே பத்திரிக்கையில் விளம்பரம் போட்டு முதலியார் பெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள். திருமணம் ஆனபின்னர், கணவனின் குடும்பத்தாரின் வழிமுறைகளை பெண்கள் பின்பற்றுகிறார்கள், ஒரு விதிவிலக்கு இல்லாமல் (எனக்குத் தெரிந்து). என் சொந்தக்கார பையன் ஒரு முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்து கொண்டான். குடும்பத்துடன் குழந்தைகளுடன் கோவிலுக்கு மட்டுமே செல்கிறார்கள்.

பெண்கள் கணவனின் குடும்பத்துடன் ஐக்கியமாவது என்பது தமிழ்நாட்டுப் பழக்கம். புகுந்த வீட்டு கலாச்சாரமும் புகுந்த வீட்டுக் கலாச்சாரமும் வித்தியாசப்படுவது என்பதை தெளிவாகவே புரிந்து கொண்டு நடந்து கொள்ளவும், புகுந்த வீட்டுக் கலாச்சாரத்தை பேணுவதும் போற்றுவதும் சரிவரச் செய்வதும் அனைத்து பெண்களும் செய்யும் ஒரு விஷயம்.

பெண்களுக்குத் தங்கள் பிறந்த வீட்டுக் கலாச்சாரத்தை தொடர்ந்து பேண வேண்டும் என்ற நோக்கம் இருக்கக்கூடாது என்பதல்ல. அதிகப் பிரச்னைகள் இல்லாமல் வாழ்வதற்காக சமூகம் ஏற்றுக்கொண்ட ஒரு நடைமுறை அவ்வளவுதான். இதுவே பல இந்திய வடகிழக்கு மாநிலங்களில், கேரளாவிலும் கூட ஆண் தன்னுடைய பிறந்த வீட்டுக் கலாச்சாரத்தை விட்டுவிட்டு புகுந்த வீடான பெண் வீட்டில் அதன் கலாச்சாரத்தை போற்றி பேணுகிறான். பெண் வீட்டுக் கலாச்சாரமும் அழிந்து விடுவதில்லை. ஆண் வீட்டுக் கலாச்சாரமும் அழிந்து விடுவதில்லை. அதனை பேண போற்ற பாதுகாக்க பெண் வழியினரோ, ஆண் வழியினரோ இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டுக் கலாச்சாரம் பல பகுதிகளாக இயங்குகிறது. பல தளங்களில் இயங்குகிறது. ஆண், பெண், குடும்பம், ஜாதி, ஊர், மாவட்டம், மாநிலம் ஜாதிக்குள் உபஜாதி என்ற அளவில் சில பொதுமைப் பண்புகளை ஒவ்வொரு கலாச்சார அளவிலும் நாம் கொண்டிருக்கிறோம்.

உதாரணமாக எல்லா ஆண்களும் வேட்டி கட்டுகிறார்கள், எல்லா பெண்களும் புடவை கட்டுகிறார்கள், எல்லா பெண் சிறுமிகளும் தாவணி போடுகிறார்கள் என்பது போன்றவை ஆண் பெண் அளவில் இருக்கும் கலாச்சார கூறுகள். குடும்ப அளவில், இந்த குடும்பத்தில் இந்த வழிமுறைகளைப் பேணுகிறோம் என்று வைத்துக்கொள்கிறார்கள். இந்த ஜாதியின் இந்த வழிமுைறைகளைப் பேணுகிறோம் என்று வைத்துக்கொள்கிறார்கள். இந்த ஊரைச் சேர்ந்த இந்த ஜாதியினர் இந்த வழிமுறைகளைக் கொண்டிருக்கிறார்கள். அதே ஜாதியைச் சேர்ந்த வேறொரு ஊரினர் வேறொரு வழிமுறைகளைப் பேணுகிறார்கள். இவற்றில் எது உயர்ச்சி அல்லது எது தாழ்ச்சி ? ஒரே ஜாதிக்குள் உயர்வு தாழ்வு பார்ப்பதில்லை.

நகரமயமாகும் இந்தியாவில், தொழில்மயமாகும் இந்தியாவில் இந்த ஜாதிகளுக்கு இருக்கும் உயர்வு தாழ்வு போய், வெறும் பட்டப்பெயராகவும், வழிமுறை குறிக்கும் ஒன்றாகவும் ஆகிவிடும். அதுதான் நாம் விரும்புவதாக இருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு ஜாதி ஒழியவேண்டும் என்று கோருவது போகாத ஊருக்கு வழி சொல்வது போன்றது. ஏற்கெனவே நகரத்தில் ஜாதி உணர்வு மிகவும் குறைந்துவிட்டு, பல கலப்புத் திருமணங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஜாதி உணர்வுக்குத் (பொருளாதார) தேவை இல்லை நகரங்களின் கலப்புக் கலசாரங்களினால் ஜாதி உணர்விற்கான கலாசாரத் தேவையும் இல்லை. அதனால் குறைகிறது, மறைந்து கொண்டிருக்கிறது என்பதே என்னுடைய ஹைபாதஸிஸ்.

ஆனால், ஜாதி வெறியும், குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லும் பழக்க வழக்கங்களும் போகவேண்டும் என்று நான் விரும்பினாலும், அவை குறைந்து கொண்டிருப்பதைப் பார்த்து நான் மகிழ்ந்தாலும், குல வழியும், ஊர் வழியும், அழிந்து மக்கள் வெற்று எண்களாக ஆவதை நான் திகிலுடன் நோக்குகிறேன். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று எழுதியவரின் ஊர் பூங்குன்றமாய் இருக்கலாம். தொழில் கணியராய் இருக்கலாம். அதனாலேயே அவர் ஜாதி வெறியராய் இருக்க வேண்டியதில்லை என்பதற்கு அவர் கவிதை வரிகளே சான்று.

ஆண் வழி சமூக உறவுக்கு பெரும் பாரம்பரியம் இருக்கிறது. அதன் பொருளும், அதன் தேவையும், அதன் உள்ளுறையும் சமூக இணக்கமும் உணராதவர்கள் இன்று பெண்ணுரிமை என்றும், ஜெண்டர் இன்-ஈகுவாலிடி என்றும் மறைமுகமாக செய்யப்படும் ஆணாதிக்க அடக்குமுறை என்றும் பேசுகிறார்கள்.

ஒரு குழந்தையை இந்தப் பெண்ணின் குழந்தை என்று இயற்பியலாக தீர்மானம் ஆகிறது. அதற்கு சாட்சி இருக்கிறது. அந்தப் பெண் உட்பட, அந்த பெண் குழந்தை பெற உதவிய மருத்துவர், மருத்துவமனைப் பதிவேடு உட்பட அனைத்தும் சாட்சியாக நிற்கிறது. ஆனால் இந்த ஆண்தான் அந்தக் குழந்தையின் தந்தை என எது சொல்லும் ? இன்றைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்து பார்த்தால் அது சொல்லும். ஆனால் இதுவரை எது சொல்லிக்கொண்டிருந்தது ? வெறும் நம்பிக்கை மட்டுமே சொல்லும். அந்த நம்பிக்கையே குடும்பத்தின் ஆதாரம். குடும்பமே சமூகத்தின் ஆதார வித்து. அந்த அடிப்படை நம்பிக்கையை உடைப்பது என்பது சமூகத்தை உடைப்பதுதான்.

எதிர்காலத்தில் ஒவ்வொரு குழந்தையும் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்படுமா ? செய்யப்படலாம். இதுதான் தந்தை இதுதான் தாய் என்று அரசாங்கம் நிர்ணயம் செய்துதருமா அல்லது பெற்றோர்களே செய்துகொள்வார்களா ? அப்படி செய்வது நம்பிக்கையின்மையின் ஆதாரமாகப் பார்க்கப்படாதா ? யோசித்துப்பாருங்கள்.

ஒரு குழந்தை தன்னுடைய தந்தையின் பெயரை தன் முன்னால் போட்டுக்கொள்வதும், இன்னாரின் மகன், மகள் என்ற உணர்வும், இந்த ஊரைச் சேர்ந்தவன், இந்த குலத்தைச் சேர்ந்தவன் என்ற பிரகடனமுமே இந்த சமூகத்தை சமூகமாக, ஒருவர் மீது இன்னொருவர் கொள்ளும் நம்பிக்கையின் ஆதாரமாக இருக்கிறது. இந்த பரஸ்பர நம்பிக்கையே சமூகத்தின் அடித்தளம். இந்த நம்பிக்கை அற்றுப்போய்விட்டால், காடுக்கும், மக்கள் சேர்ந்துவாழும் சமூகத்துக்கும் வித்தியாசம் இராது.

சமூகமாக, குழுமமாக இருந்த நம் சமூகம் காலனியாதிக்கத்தின் கீழ் வந்தபோது நம் நாட்டின் அனைத்து கலாச்சாரமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. நல்லதுதான். ஆராயாத வாழ்க்கை வீண். ஆனால், கேள்விக்குள்ளாக்கப்பட்டபோது, ‘நம் கலாச்சாரம் கெட்டது, நம்மை ஆள்பவனின் கலாச்சாரமே நல்லது. ஐரோப்பியன் தான் அறிவாளி, நமக்கு அறிவில்லை, நம்முடைய மொழி காட்டுமிராண்டி பாஷை. ‘ என்ற அடிப்படை நோக்கோடு கேள்வி கேட்டபோதுதான் வினையே வந்தது. நம் கலாச்சாரத்தின் சிறந்த கூறுகளைத் தக்கவைத்துக்கொள்ளவும், காலத்துக்கு உதவாத கலாச்சாரக் கூறுகளை மாற்றவும் முனையாமல், கண்மூடிப் பழக்கம் மண்மூடிப்போகவேண்டும் என்ற அடிப்படையோடு நம் கலாச்சாரம் அணுகப்பட்டது. இதன் மறு திசையில், நம் கலாச்சாரமே உயர்ந்தது, மேலை நாட்டுக் கலாச்சாரம் அசிங்கமானது என்ற கருத்தாக்கம் பரவுகிறது. இரண்டுமே நல்லதல்ல. இன்றைய தேதிக்கு காலனியாதிக்க சிந்தனைப் போக்கு அழிந்து ‘நம் கலாச்சாரமே சிறந்தது ‘ என்ற கருதுகோள் கட்சி சார்பானதாக, வீறுகொண்டு எழுந்திருக்கிறது. அது முந்தைய காட்டுமிராண்டித்தனத்துக்கு சமமான காட்டுமிராண்டித்தனத்துடன் இன்று தேதிக்கு இல்லையென்றாலும், எதிர்காலத்தில் காட்சியளிக்கும் என்பதற்கான அனைத்து முன்னோடிகளும் இன்று தெரிகின்றன.

சங்கப்பாடலில் கூறும் அனைத்து மக்களின் சந்ததியினரும் நம்மிடையே இன்று வாழ்ந்து வருகிறார்கள். நமக்கென நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. அந்த வேர்களை ‘முற்போக்கு ‘ என்ற பெயரில் அறுத்துக்கொள்வதில் என்ன பிரயோசனம் ? நமது பாரம்பரியம் சுமை அல்ல. நமது பாரம்பரியத்தின் சில கூறுகள் சுமையாக இருக்கலாம். அவைகளையும், ‘அதற்கு ஒரு காரணம் இருந்திருக்கும் ‘ என்ற அனுதாபப்பார்வையுடன் அணுகவேண்டுமே தவிர, அனைத்து பாரம்பரியத்தையும் அழித்து எண்களாக நாம் மாறவேண்டும் என்று போல்பாட் பண்ணக்கூடாது. குழந்தையைக் குளிப்பாட்டிய தண்ணீரோடு சேர்த்து குழந்தையையும் வீசியெறிவதை முற்போக்கு என்று கொண்டாடத் தொடங்கிவிட்டோம்.

***

ஆனால் போல்பாட் ஒரு பத்தாண்டுகளில் செய்ததை நாம் 100 ஆண்டுகளாகச் செய்துவருகிறோம். முதலில் நம்மிடமிருந்து நம் ஊர்ப்பெயர்கள் நீக்கப்பட்டன. அது ஆங்கிலேயர் காலத்தில் நடந்தது. பிறகு திராவிட கட்சிகளின் காலத்தில், நம் ஜாதிப்பெயர்கள் நீக்கப்பட்டன. கிருஷ்ணமா ரோடும், ராஜகோபால் சாலையுமாக பெயர் மாற்றங்கள். அதன் தொடர்ச்சியாக இன்று ஜெயலலிதா காலத்தில் தந்தை பெயர் நீக்கப்படுகிறது.

நம் அடிமை வாழ்வு காரணமாக, நம் மொழியில் ஆங்கிலம் புகுத்தப்பட்டது. ( ‘ஸன் ‘ தொலைக்காட்சியில் மண் சட்டியில் கருவாடு கூட்டு செய்து காட்டும் கிராமத்து பாட்டி, ஜிம்பிள் (Simple) ஜ்ஊப்பர் (Super) என்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார்). அந்த ஆங்கில அடிமைத்தனத்தை திராவிட கட்சிகள் தொடர்ந்து புகுத்தி வந்திருக்கின்றன. கோடிக்கணக்கில் ஊழல் நடக்கும் தமிழ்நாட்டில், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு தொடர்ந்து மொழிபெயர்க்க ஒரு அமைப்பு கூட இல்லை. அப்படி ஒரு அமைப்பை உருவாக்க, திராவிட ஆட்சிகளுக்குக் கசக்கிறது. இன்றைக்கு அறிவியற்பூர்வமாக தமிழில் நடந்திருக்கும் அனைத்து வேலைகளுக்கும் ஆர்வமுள்ள தனிமனிதர்களே காரணம் என்றால் அது மிகை இல்லை. இன்று, முற்போக்கென தன்னை குறித்துக்கொள்கிறவர்களின் முற்போக்கு விஞ்ஞானப் பார்வையை வளர்ப்பதல்ல. காலாவதியான அறிவியற்கொள்கைகளை, கலாச்சாரக்கொல்கைகளாக (ல் எழுத்து வேண்டுமென்றே போடப்பட்டது) தூக்கிப்பிடித்துக்கொண்டிருப்பவர்கள் இவர்கள்.

நம் உடைகள் ஆங்கில உடைகளாக ஆகிவிட்டன. வேகாத வெய்யலில், டையும், இறுக்கமான செயற்கை துணிகளும், வேர்வையில் நனைய, ஷ்ஊ போட்டுக்கொண்டு செல்பவர்கள் வெகுஜன ஊடகங்களாலும் விளம்பரங்களாலும் மதிக்கப்படுகிறார்கள். கதர் சட்டை போட்டு, தோல்செருப்பு போட்டு, ஜோல்னாப்பையும் வைத்திருப்பவர்கள் கிண்டல் செய்யப்படுகிறார்கள். (நல்லவேளை புடவையை இன்னும் கிண்டல் செய்ய ஆரம்பிக்கவில்லை. அதிலும் ஏதேனும் பெண்ணடிமைத்தனத்தை காலனிய அடிவருடிகள் கண்டாலும் காண்பார்கள். எனக்கென்னவோ தமிழ்நாட்டு ஆண்கள் அளவுக்கு தமிழ்நாட்டுப் பெண்கள் முட்டாள்கள் இல்லை என்றுதான் தோன்றுகிறது. தமிழ்நாட்டுப் பெண்கள், மேல்நாட்டுப் பெண்களைக் காப்பி அடித்து, இறுக்கமான பேண்ட் சட்டை போட்டு அல்லது ஸ்கர்ட் போட்டு கஷ்டப்படவில்லை. வசதியாக காற்றோட்டமாக இருக்கிறது என்று பருத்தி சல்வார் கமீஸ் போடுகிறார்கள்.)

நம் பெயர்கள் மாற்றப்படுகின்றன. மாடசாமி, வைரமுத்து, கருப்பண்ணன், வெள்ளைச்சாமி, பச்சைமலை ஆகிய பெயர்கள் கரைந்து வினோத், சுனில், ராகேஷ் ஆகிய பெயர்களும் இன்ன பிறபெயர்களும் தமிழ்ப்பெயர்களாக ஆகிவருகின்றன.

நம் வணக்கம் குட்மார்னிங்-ஆக மாறிவிட்டது. இன்றைக்கு எந்த ஒரு தொலைக்காட்சியிலும் முழுத் தமிழில் ஒருவர் பேசுவது என்பதும், சரியான உச்சரிப்பில் பேசுவது என்பதும் அருகி வருகிறது. செய்தி வாசிக்கும் ஆண் கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பதும், பெண் சேலை கட்டிக் கொண்டிருப்பதும் பற்றிய கலாசாரக் குறியீட்டை நான் முன் பத்தியில் குறித்திருக்கிறேன்.

காட்டின் மீதும், மரங்களின் மீதும், விலங்குகளின் மீதும், செடி கொடிகளின் மீதும் மதிப்பையும், மரியாதையையும் வணக்கத்தையும் கொண்டிருந்த கலாச்சாரத்தை கண்மூடிப் பழக்கம் என அழித்துவிட்டோம். அதன் விளைவு, நாம் காடுகளையும் காட்டின் உருவகங்களாக இருந்த உயிருடைய தெய்வங்களான காட்டேரி, அய்யனார் ஆகியோரை மூடப்பழக்கமாக்கி காடுகளை அழிக்க ஆரம்பித்துவிட்டோம். இதனால், அனைத்தையும் தாண்டிநின்று ஆதரிக்கும் கடவுள் மீதோ, இயற்கை மீதோ, சக மனிதர்கள் மீதோ மரியாதையும் அற்ற, மதிப்பும் அற்ற, ஒரு தெருப்பொறுக்கி வன்முறைக்கும்பல் இன்று பெருகிக்கிடக்கிறது. (கடவுள் இல்லையென்றாலும் அதனை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் நமது பரிணாமத்தின் ஒரு பகுதி என்று தீவிரமாக நம்புபவன் நான்).

மாறுவது இயற்கைதான். மாறாமல் இருக்கும் ஒரு சமூகம் அழியும். ஆனால், எங்கோ, ஏதோ ஒரு சூழ்நிலைக்காக உருவாக்கப்பட்ட சிந்தனைகளைக் கேள்விகேட்காமல் இன்னொரு சமூகத்தில் திணித்து, அந்தச் சிந்தனைகளை அறிவியக்கம் என வளர்த்து, அந்த சமூகத்தின் பாரம்பரியத்தில் தோற்றுவிக்கப்பட்ட கருத்தாக்கங்களைக் கேள்வி கேட்காமல் அழித்து இன்று ஒரு கலாச்சார படுகொலை நடந்துகொண்டிருக்கிறது. அந்தப் படுகொலைக்கு இப்போதைய வடிவம் அம்மா பெயரை இனிஷியலில் போடுவது என்று வந்திருக்கிறது.

நான் கேள்வி கேட்கிறேன். அவ்வளவுதான்.

***

karuppanchinna@yahoo.com

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்