தைவான் நாடோடிக் கதைகள் – 5. புராண நாயகன்

This entry is part [part not set] of 33 in the series 20071220_Issue

தமிழில் மதுமிதா


பெரும்பான்மையான தாய்யா இனப் பழங்குடி மக்கள், மத்திய தைவானில் வூஷீ என்னும் அழகிய இடத்துக்கு அருகில் வாழ்ந்துவந்தனர். இப்பழங்குடியினர் அமைதியான, கவலையற்ற, நட்பான வாழ்க்கையைக் கொண்டிருந்தனர். விவசாயம், வேட்டையாடுதல், மீன்பிடித்தலைத் தொழிலாகக் கொண்டனர். ஏறத்தாழ நூறுவருடங்களுக்கு முன்பு பழங்குடியினர் ஜப்பானியர்களுக்குக் கீழ்ப்பட்டு முப்பது வருடங்கள் கடின வாழ்வைத் தொடர்ந்தனர்.

ஒருநாள் மா ஹீ போ ஷீ-வின் மிகப் பெரிய திருமணவிழா நிகழ்ச்சி.
தலைவன் மா நா டாவூ, மணமகனின் வீட்டுக்குத் தன் மகன் சின்ன மா நா டாவூ -உடன் உதவி செய்வதற்காகச் சென்றான்.

திடீரென ஒருவன் வந்தான், “அய்யோ! ஜப்பானிய போலீஸ் வருகிறான்.”
தோல் காலணி அணிந்த, மென்மையான இஸ்திரி செய்யப்பட்ட சீருடையணிந்த ஒரு காவலதிகாரி உள்ளே வந்தான்.

கோபமாக, “ஹேய்! மா நா டாவூ, என்ன செய்கிறாய்?”

இந்த விழாவை நிறுத்திவிடுவானோ போலீஸ் என மா நா டாவூ பயந்தான். அதனால், “திருமண விழா இருக்கிறது. தயவு செய்து உள்ளே வாருங்கள். பானம் அருந்திவிட்டுச் செல்லலாம்.” என்றான்.

போலீஸோ மா நா டாவூ-வைத் தள்ளிவிட்டான். உடனே மகன் சின்ன மா நா டாவூ போலீஸின் சீருடையைப் பிடித்து, கையில் ஒயின் கிளாசைக் கொடுத்தான். “வாருங்கள், வாருங்கள், ஒயின் அருந்துங்கள்.”

சின்ன மா நா டாவூ-வின் கையில் விலங்கின் இரத்தக்கறை இருந்தது. அவன் சீருடையை இழுத்தபோது அது கறைபட்டுவிட்டது.

போலீஸ் கோபத்துடன், “எப்படி எனது உடையைப் பாழாக்குவாய்!” என்று சின்ன மா-வின் முகத்தில் அறைந்துவிட்டான்.

சின்னா மா இதை அவமானமாகக் கருதியதால் போலீஸிடம் சண்டையிட்டான்.
சின்ன மா உயரமான, பலவந்தனான பெரிய மனிதன். சண்டையில் சின்ன மா போலீஸை நன்றாக அடித்துவிட்டான்.

போலீஸ் அதிகாரியோ பயமுறுத்தினான். “நாகரீகமற்றவர்களே! நான் கமாண்டரிடம் (உயர் அதிகாரியிடம்) சொல்லி துருப்புகளை அனுப்பச் சொல்லி நீங்கள் எனக்கு செய்ததற்கு தண்டனை வாங்கித் தரப்போகிறேன்.”

சொல்லிவிட்டுக் கோபமாக வெளியேறினான்.

அன்று மாலை பல இளைஞர்கள் மா நா டாவூ-வைச் சந்தித்து இந்த நிகழ்வு குறித்து விவாதித்தனர். அவர்களுக்குத் தெரியும். கண்டிப்பாக ஜப்பானியர்கள் பழி தீர்ப்பார்கள்.

சின்ன மா, “அவர்கள் வரட்டும். வந்தால், நான் அவர்களிடம் சண்டையிட்டு கொன்று விடுவேன்,” என்றான்.

மா நா டாவூ மூலையிலிருந்த ஒரு இளைஞனிடம், “ஆசிரியர் ஹ¤ஆ காங். உங்களிடம் ஏதும் ஆலோசனையிருக்கிறதா?”

ஆசிரியர் ஹ¤ஆ காங் ஒருவர்தான் கல்விகற்ற பழங்குடி.

ஹ¤ஆ காங் சொன்னார்,” நமது ஆயுதங்கள் துப்பாக்கி, குண்டுகளை வைத்து ஜப்பானியர்களை வெல்லமுடியாது.”

அனைவரும் அமைதியாயினர்.

நீண்ட மௌனத்திற்குப் பிறகு மாநா டாவூ, “போதுமான அளவில் சகிப்புத்தன்மையுட னிருந்தோம். 30 வருடங்கள் ஜப்பானியர்களின் கீழ் கஷ்டப்பட்டாகி விட்டது. போதும். இதுதான் சமயம் அவர்களை எதிர்த்து நின்று சண்டையிட…”

பள்ளியின் நாட்டிய விழாவில், தாக்க வேண்டுமெனப் பழங்குடியினர் முடிவு செய்தனர். ரகசியமாகப் பிற இனத்தவரையும் தாக்குதலுக்குத் தயாராக இருக்கச் செய்தனர்.

அந்த விழா நாளில் அனைவரும் பள்ளியில் குழுமியிருந்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் எழுந்து நின்று ஜப்பானிய தேசிய கீதம் பாடினர்.

ஒரு பழங்குடி ஓடி, சட்டென்று மேடையில் ஏறி, ஒரு ஜப்பானிய ஜெனரலின் தலையைக் கொய்துவிட்டான். நூற்றுக்கணக்கான பழங்குடிகள் விரைந்து வந்து சண்டையிட்டு ஜப்பானியரைக் கொல்ல ஆரம்பித்தனர்.

அதே சமயம் மா நா டாவூ ஒரு குழுவாய் மக்களை அழைத்துக் கொண்டு காவல்நிலையத்திற்கு விரைந்தான். போலிஸார் இதை எதிர்பார்க்கவில்லை. தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு முன் போலிஸார் அனைவரும் கொல்லப்பட்டனர்.

பழங்குடி மக்கள் வூ ஷ¥-வில் ஜப்பானியர்களைக் கொலைசெய்தும், உயிரோடிருந்தவர்களைக் கைப்பற்றியும், ஆயுதங்கள், இராணுவத் தளவாடங்களைப் பறிமுதல் செய்தனர்.

மக்களின் எழுச்சியைக் கண்ட ஜப்பானிய கமாண்டர் அவரே தலமை ஏற்று, மேலும் ஜப்பானிய இராணுவ வீரர்களை வூ ஷ¥-வுக்குள் அழைத்துச் சென்றார்.

பழங்குடியினரால் ஜப்பானிய ராணுவத்தை எதிர்த்து தங்களைத் தற்காத்துக்கொள்ள இயலாது, பின்வாங்கிச் சென்று மா ஹீ போ ஷீ குகைக்குள் மறைந்து கொண்டனர்.

ஜப்பானியர்களுக்கு அந்த இடம் பரிச்சயமில்லை. அவர்களால் பழங்குடிகளைக் கண்டுபிடிக்க இயலவில்லை.

பல இரவும், பகலுமாய் தொடர்ந்தது போர்.

ஜப்பானியர்கள் பழங்குடியினரை சுதந்திரமாக வாழவைப்பதாகச் சொல்லி நடித்தும் பார்த்தனர்.

ஆனால் பழங்குடியினர் ஜப்பானியரை நம்பவில்லை. மறைவிடம் விட்டு வெளிவரவும் இல்லை.

கமாண்டர் அவர்கள் சரணடைய மாட்டார்கள் எனக் கருதி விஷவாயுவை செலுத்தினால் மறைவிடத்திலிருந்து வெளிவருவர் எனக் கருதினார்.

விஷவாயுவை சுவாசித்ததால் பலர் இறந்தனர்.

விஷவாயுவின் பலமான தாக்குதலினால் மா நா டா வூ வலியுடன், “ஜப்பானியர் இங்கே விரைவில் வந்துவிடுவர். நமது தாயா இனம் அவர்கள் கையில் மாட்டிக் கொண்டு சாவதைவிட தற்கொலை செய்து கொல்லலாம் என நினைக்கிறேன்” என்றான்.

சொல்லியபடி கைத்துப்பாக்கி எடுத்து தன்னைச் சுட்டுக் கொண்டான் மா நா டா வூ. மற்றவர்களும் தலைவன் சொற்படி தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த வூ ஷ¥ நிகழ்வு 50 நாட்கள் நீடித்தது. 900 பழங்குடிகள் இறந்தனர்.
இந்நிகழ்வு பல தைவானியர்கள் ஜப்பானியர்களை எதிர்த்து நிற்கத் தூண்டிய நிகழ்வாக அமைந்தது.

>>>
madhuramitha@gmail.com

Series Navigation

மதுமிதா

மதுமிதா