துப்பாக்கியால் சுட்டுவீழ்த்தப்பட்ட மய்யித்துகளுக்கான ஜனாஸா குறிப்பு

This entry is part [part not set] of 37 in the series 20100912_Issue

ஹெச்.ஜி.ரசூல்


அத்தஹியாத் இருப்பில் நீட்டி
ஆட்டாத விரல்
ஆட்டிய விரல்
எல்லா விரல்களையும் கடந்து
ஒருபடிஉயர்ந்து நின்றது
மய்யித்தை குளிப்பாட்டிய போது
மலவாயின் உள்நுழைந்து
நஜீஸோடு வெளிவந்த
வெள்ளைத்துணி சுற்றிய
இடதுகை ஆட்காட்டிவிரல்
—————————————————————————————————-
அத்தஹியாத் – தொழுகையின் இறுதி இருப்பு நிலை
மய்யித்து -இறந்த உடல்
குளிப்பாட்டல் – இறந்த உடலை சுத்தப்படுத்தும் சடங்கு.
நஜீஸ் – மலக் கழிவு
ஜனாஸா – கபன் பொதியப்பட்ட மய்யித்து.
——————————————————————————————————-
குறிப்பு 1
தர்கா,சூபிமரபுக்கு எதிராகவும்,அத்தஹியாத் இருப்பில் விரலை அசைத்தல் அசையாது வைத்திருத்தல்,தக்பீரை நெஞ்சில்கட்டுதல்,வயிற்றின்மீதுகட்டுதல் உள்ளிட்ட தொழுகை முத்திரைகள் சார்ந்தும் இஸ்லாத்தில் உருவான குழுவினர் வகாபியர்கள். இவர்களில் ஒரு பிரிவினர் தவ்கீது ஜமாஅத்தினர். மரபுவழியைப் பின்பற்றுபவர்கள் சுன்னத்துல் ஜமாத்தினர்.
தமிழகம் முழுவதிலும் இப்பிரிவினர்களுக்கிடையே சர்ச்சைகளும் சண்டைகளும் உண்டு.இதன் காரணமாக எல்லா ஜமாஅத்துகளும் இரண்டிரண்டாகவும் உடைந்துள்ளன.

குறிப்பு 2
2010 செப்டம்பர் 5ம் தேதி புனிதரமலான் மாதத்தில் திருவாரூர் மாவட்டம் திருவிடைச் சேரியில் இவ்வாறான தொழுகை சம்பந்தப்பட்ட பிரச்சினையில்வகாபிய தவ்கீது ஜமாஅத்திற்கு ஆதரவுநல்க வந்த குழுவினரில் ஹஜ்முகமது என்பவர் உணர்ச்சிநிலையில் துப்பாக்கியால் சுட்டதில் கிராம ஜமாத்தைச் சேர்ந்த தலைவர் முகமது இஸ்மாயில் உட்பட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.ஐந்துபேர்
குண்டுபாய்ந்து படுகாயமடைந்துள்ளனர்.

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்