திருவண்டம் – 1

This entry is part [part not set] of 28 in the series 20050526_Issue

ஜாவா குமார்


‘ சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான அற்புதக்களிறை வாழ்த்தி வணங்கி.. ‘

திருவண்டம் – 1

‘யோகரே விழித்தெழும் ‘ என்று கிசுகிசுப்பாய்க் கேட்ட தமிழ்க்குரல் தாத்தாவின் குரல் போலிருந்தது. யோகநாதன் திகைத்தெழுந்தார். எதிரில் நிற்பது யார் தாத்தாவா ? இல்லை. எதிரில் நின்ற முதியவர், தாத்தாவை விட உயரமாய், திடகாத்திரமாய் இருந்தார். அவர் பின் மற்றொருவர் நிற்பதும் தெரிந்தது.

யாரிவர்கள்! கடுமையான காவலை மீறி இந்த ஆய்வகத்துக்குள் எப்படி வந்தார்கள்! அதுவும் வேட்டி, மேல்துண்டுடன் அமெரிக்காவில்! இதென்ன கனவா!

‘தாங்கள் யார் ஐயா ? எப்படி உள்ளே வந்தீர்கள் ? தமிழில் பேசுகிறீர்கள் ? ‘

முன்னால் நின்ற முதியவர் நகைத்தார்.

‘யோகரே, எம்மை நும் பாட்டனார் முருகானந்தருக்கு அணுக்கர் என்றே கொள்வீர். எம் தமிழ் விளங்குவது மகிழ்ச்சி. நும் காலச்சூழலுக்கேற்ப நெகிழ்த்தியே உரைப்போம். நீர் காண்பது கனவல்ல. நனவில் வருவதற்கும் எங்களுக்கு எந்தத் தடையுமில்லை. ‘

யோகநாதனின் திகைப்பு அதிகரித்தது. என்றோ யாழ்மண்ணில் இறந்துபோன தாத்தாவை இவர்களுக்கு எப்படித் தெரியும்! நனவென்று சொன்னாலும் தம்மிச்சையின்றி நடப்பவை கனவாகவே தோன்றியது.

‘யோகரே அஞ்சற்க. நாங்கள் வந்தவழியே போய்விடுவோம். நும்மைத் தேடி வந்ததின் காரணம் நீர் செய்துவரும் ஆய்வினைக் குறித்து சற்று கதைப்பதற்கே. ‘

யார் இவர்கள், என் ஆய்வைப் பற்றி இந்தத் தமிழ்க்கிழவர்களுக்கு என்ன வந்தது!

‘என்ன யோகரே, நனவின் சூக்குமத்தை எம்மட்டில் புரிந்து கொண்டார் ? ‘

நனவின் சூக்குமமா! என் தேடலும், ஆய்வும் இவர்களுக்கு எப்படித் தெரியும். டாக்டர் யோகநாதன், நியூரோபிஸியாலஜி நிபுணர், உறைந்து நின்றார்.

‘ஐயா, என் ஆய்வு தாங்கள் சொல்லும் நனவு அதாவது பிரக்ஞை சம்பந்தப்பட்டதுதான். இந்தப் பிரக்ஞை என்பது மூளையின் ஒரு செயல்பாடா, அப்படி என்றால் அதன் தொடர்புடைய மூளையின் பகுதிகள் என்னென்ன, அவை இயங்குவது எப்படி என்று இந்த ஆய்வகத்தில் தீவிரமாய் ஆய்ந்து வருகிறோம். இந்த ஆய்வில், கடந்த சில ஆண்டுகளில் நிறைய முன்னேற்றங்கள் இருந்தாலும் முழுமையாய்த் தெரிந்து கொள்ள இன்னுமொரு நூறாண்டு போகும் என்று நினைக்கிறேன். உங்களுக்கு இதற்கு மேல் என்ன விவரம் வேண்டும் ? ‘

‘மேலே சொல்லும் யோகரே! ‘ என்றார் முன்னால் நின்ற முதியவர்.

‘தங்களுக்கு எதில் தொடங்குவது, எதைச் சொல்வது என்று யோசிக்கிறேன். மேலும் சில சொற்களுக்குத் தமிழில் எனக்குப் பெயர் தெரியாது. ‘

‘தெரிந்தவரை சொல்லும். தெரியாததைத் தெரிந்த மொழியிலேயே சொல்வீர். ‘

வழக்கமான வகுப்பறை உற்சாகம் தொற்றிக் கொள்ளத் தொடர்ந்தார் யோகா.

‘இந்தப் பிரக்ஞை என்பதை முதலில் வரையறுக்க வேண்டும். ஆன்மா, சீவன், அறிவு, உள்ளம், ஆங்கிலத்தில் கான்ஷியஸ்நெஸ் பல பெயர்களிலும் வழங்கப்படும் இது பொதுவில் மூளை நிகழ்த்தும், வலி மற்றும் இன்பம் உணர்த்தலோ, அல்லது ஐம்பொறி களை இயக்கும் மோட்டார் உணர்வோ மட்டுமல்ல. எளிமையாய்ச் சொன்னால் தன்னுணர்வு. நான், என்னுடையது என்று எது சொல்வதோ அது. அதுவே ஒருவனை அறிவியலாளனாய், கவிஞனாய், ஓவியனாய், இசைக்கலைஞனாய், மேலும் தேடத்தேட எப்படி ஆக விரும்புகிறானோ அப்படிச் செலுத்துவது என்று சொல்லலாம். ‘

‘இது மனித உடலுக்குள் வெறும் அகநிகழ்வா அல்லது ஏதாவது புறத்தூண்டுதலால் செலுத்தப்படுவதா என்பது வெகுகாலமாய் சர்ச்சைக்குள்ளான விஷயம். அறிவியலாரும், ஆன்மீகவாதிகளும் இதுவரை ஒத்துப்போகாத துறை.’

‘நும் முடிவென்ன ? ‘ முதியவரின் வினா இடைமறித்தது.

‘ஐயா, என் முடிவென்றும், முடிந்த முடிவென்றும் இன்னும் ஏதுமில்லை. சொல்லப் போனால் அறிவியலார் இதில் நுழைந்ததே சென்ற நூற்றாண்டில்தான். அதற்கு முந்தைய நியூட்டனின் சித்தாந்தங்கள் கோலோச்சிய காலத்தில் இதற்கு இடமே இருக்கவில்லை. பிரபஞ்சத்தைக் குறித்த ஐன்ஸ்டானின் புதிய அணுகுமுறையும், க்வாண்டம் இயற்பியல் என்ற அதிநுண்துகள் இயக்கம் குறித்த ஆய்வுகளும் இறுதியில் இதில் கவனத்தைத் திருப்ப வைத்தன. ‘

‘சரி, என் ஆய்வைப் பற்றிக் கேட்டார்கள். முதலில் மூளை என்ற விந்தையான பகுதியில் ஆரம்பிக்கிறேன். சுமார் மூன்று பவுண்ட் எடைகொண்ட மனித மூளைக்குள் கிட்டத்தட்ட நூறு பில்லியன் நியூரான் என்ற சிக்கலான செல்கள் பின்னி இருக்கின்றன. நூறு பில்லியன் என்றால் இங்கே அமெரிக்கக் கணக்குப்படி ஒன்றுக்குப்பின் பதினோரு பூச்சியங்கள். ‘

‘ஒரு நிகர்வம் ‘ என்றார் முதியவர்.

****

‘Cogito ergo sum! ‘

– Rene Descartes (Meditationes de Prima Philosophia)

உளது! இலதென்றலின், எனது உடல் என்றலின்,

ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின், கண்படில்

உண்டிவினை இன்மையின், உணர்த்த உணர்தலின்,

மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா.

– மெய்கண்டதேவர் (சிவஞானபோதம் – மூன்றாம் நூற்பா)

(தொடரும்)

sarabeswar@yahoo.com

Series Navigation

ஜாவா குமார்

ஜாவா குமார்