திரு.பித்தன் அவர்களுக்கு கடிதம்

This entry is part [part not set] of 47 in the series 20040325_Issue

விசுவாமித்திரா


மிக நீண்ட பதிலை அளித்துள்ளீர்கள். இதை எழுதச் செலவு செய்த நேரத்தில் சற்று சிந்திருத்திருந்தீர்களெனில், உங்களுக்கு சற்று தெளிவு கிடைத்திருக்கும், எனக்கும் இந்தப் பதில் எழுதும் நேரம் விரையமாகியிருக்காது. போகட்டும், உங்களது பிடிவாதமான ஒற்றைப் பரிமாணப் பார்வையில் அது இயலாதுதான். ஈ வெ ராவிடம் சீடர்களிடம் அதை எதிர்பார்ப்பது என் தவறுதான். இனி என் பதில்:

****—-

‘நான் அப்படி ஒரு வினாவையும் ஜெயமோகனிடம் எழுப்பியதாக நினைவில்லை. அறைகுறையாகப் படித்துவிட்டு என்னுடன் சண்டைக்கு வரும் கும்பலோடு நீங்களும் சேர்ந்து விட்டார்கள் போலிருக்கிறது. ‘கருத்துக்களை கருத்துக்களோடு மோதவிடுங்கள். இலக்கியத்தின் வேலையை இலக்கியவாதிகள் கையிலெடுத்துக்கொள்ள வேண்டாம் ‘ என்ற கருத்தை வழியுறுத்த சொன்ன உதாரணமே அது. அதை கூட புரிந்து கொள்ளாமல் நான் எதோ ஜெயமோகனுக்கு வினா எழுப்புவதாகக் கூறுகிறீர்கள். பரவாயில்லை. இப்போது பிரச்சனைக்கு வருவோம். ‘

****—

எனது பதில்:

திரு.ஜெயமோகனுக்கான உங்கள் கடிதத்தை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்து விட்டு யார் அரைகுறை என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். வினா என்பது வேண்டுமானால் தவறாக இருக்கலாம், விளக்கம் என்று வைத்துக் கொள்ளலாம். இருப்பினும், பிரச்சினை அதுவல்ல, நீங்கள் ஈ வெ ராவின் குண்டாயிசத்துக்கு செய்த வியாக்கியானம்தான். ஈ வெ ரா வின் வன்முறைப் பேச்சை நீங்கள் ஆதரித்திருக்காவிட்டால் என் பதிலே எழுந்திருக்காது.

****–

‘முதலில் நீங்கள் சொல்லியிருக்கும் ஒப்பீடு சரியில்லை. சமூக சீர்திருத்தவாதியை அரசியல் வாதியோடு ஒப்பிடுவது மடத்தனம். அரசியல் ஒரு சாக்கடை. இப்போதிருக்கும் அரசியல்வாதிகளுக்கு மானம், சூடு , சுரணை ஏதுமில்லை. முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதும், சர்க்கஸ் காரர்களே வியக்கும்படி ‘அந்தர் பல்டி ‘ அடிப்பதும் வெகு சாதாரணம். ‘

****—-

எனது பதில்:

உங்களைப் போலவே நானும் ஈ வெ ராவை ஒரு சமூக சீர்திருத்தவாதியாக எண்ண வேண்டும் என்றும், அப்படி நான் எண்ணுகிறேன் என்ற அனுமானத்தினாலும் மேற்கூறியவாறு எழுதியியுள்ளீர்கள். அது சர்வாதிகாரத்தனம். முதலில் நான் ஈ வெ ராவை ஒரு சமூக சீர்திருத்தவாதியாகவே கருதவில்லையே ? ஆகவே என்னைப் பொருத்தவரை அவரை யாருடன் வேண்டுமானலும் ஒப்பிடுவதற்கு நான் யாரிடமும் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி ஒப்பிடுவது தவறு என்று கருதுவதுதான் மடத்தனம். பல விஷயங்களில் இப்பொழுதுள்ள அரசியல்வியாதிகளுக்கு ஈ வெ ரா எந்த விதத்திலும் குறைந்தவரல்ல. நீங்கள் குறிப்பிட்ட அத்துணை குணாதிசயங்களும் இவருக்கும் பொருந்தும்தான். ஆகவே, அவரை ஒரு அரசியல்வியாதியோடோ, பேட்டை ரவுடியோடோ, ஒரு பித்தலாட்டக்காரனோடோ, ஹிட்லரோடோ, ஓசாமா பின் லாடனோடோ ஒப்பிடுவதில் எவ்விதத் தவறும் இல்லை என்று உறுதியாக நம்புகிறேன். நான் செய்தது எனது பார்வையில் முற்றிலும் சரியானதே. தன்னைப் போலவே பிறரும் எண்ண வேண்டும் என்ற எண்ணம்தான் மடத்தனமானது. தெளிந்த சிந்தனையின் அடிப்படையிலேயே அவ்வாறு செய்திருக்கிறேன்.

அரசியல்வியாதிகளுக்குச் சூடு, சுரணை, மானம் எதுவுமே இல்லை என்று கண்டு பிடித்திருக்கிறீர்கள். ஜனநாயகத்தில், மக்களின் தகுதிக்கு எற்ற தலைவர்களே கிடைப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டப் பிரதிநிதிகள் மக்களின் குணங்களைப் பிரதிபலிப்பவராகவே இருப்பார்கள். இது புரியாமல், பொத்தாம் பொதுவாகப் பேசுவது பாமரத்தனமான ஒரு கருத்து. உங்களைப் போன்றவர்கள் வன்முறையை நியாயப்படுத்தும் பொழுது, உங்களுக்கு ரவுடிகளே தலைவர்களாகக் கிடைப்பார்கள். நீங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் சமூக சீர்திருத்தவியாதி, தன் சொத்தைப் பாதுகாப்பதற்காக எண்பது வயதில் ஒரு இளம் பெண்ணை மணந்து கொண்டு, பின்னர் பெண் உரிமையும் பேசிய பொழுது, நீங்கள் குறிப்பிட்ட அதே வெட்கம், மானம், சூடு, சுரணை ஏதேனும் இருந்ததா ? கேட்டால் அது சொந்த பிரச்சினை என்பீர்கள், அப்படிப் பட்டவர்கள் பிறரை விமர்சிக்கும் பொழுது சொந்த பிரச்சினை பொதுப் பிரச்சினை ஆகி விடுகிறது. மேலும் உங்களைப் போன்றவர்கள் அரசியல்வியாதிகளை கண்டபடி திட்டி விட்டு, பின்னால் அவர்களில் ஒருவரையே தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவதையும் பலமுறைப் பார்த்து விட்டேன்.

****-

‘இரண்டாவது, பெரியாரின் கருத்துக்களை நான் கண்மூடி ஆதரிப்பதாக நீங்களாகக் கருதிக்கொள்வது. என் கடிதங்களை நீங்கள் ஒழுங்கான கண்ணோட்டத்தில் படிக்கவில்லை என்பதையே அது காட்டுகிறது.

எல்லோரையும் கோவிலுக்குள் விடு, எல்லோரையும் சமமாக நடத்து என்று சொல்லிய பெரியார் சமூக சீர்திருத்தவாதி இல்லையாம்! இன வாதமாம். ‘

****-

எனது பதில்:

இதை சொல்பவர்கள் எல்லோரும் சீர்திருத்தவாதி என்றால் ஈ வெராவை விட மிக அழுத்தமாக எண்ணற்றோர் இதை எதிர்த்துத் தீவீரமாகப் போராடியுள்ளனர், எனது பாட்டனார் உட்பட. அவர்கள் எல்லோரும் தங்களுக்கு சிலை வைத்துக் கொண்டு, சொத்து சேர்த்துக் கொண்டு இனத் துவேஷத்தைப் பரப்பிக் கொண்டு திரியவில்லை.

****—-

‘இந்த தெருவுக்குள்ளே வரப்படாது, என்னை தொடப்படாது, தொட்டா என் தீட்டு உனக்கு ஒட்டிக்கும்; கீழ் சாதி, மேல் சாதி ‘ என்பது போன்ற அடிமுட்டாள்தனமான கருத்துக்களை சொல்பவர்கள்தான் சீர்திருத்தவாதிகள் போலிருக்கிறது!! ‘

****—-

எனது பதில்:

யார் அப்படி சொன்னவர்களைச் சீர்திருத்தவாதிகள் என்று சொன்னது ? நான் சொன்னேனா ? எங்கு சொன்னேன் ? என்னைப் பொருத்தவரை அப்படி சொல்பவர்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாகரீகமான மனிதர்களாக இருக்க முடியாது. தீண்டாமையைக் கடைப்பிடிப்பவர் பிராமணராக இருந்தாலும் சரி, நாயக்கர் ஆக இருந்தாலும் சரி, முதலியாராக இருந்தாலும் சரி, முக்குலத்தோர் ஆக இருந்தாலும் சரி, தாழ்த்தப்பட்டவர்கள் ஆனாலும் சரி, இன்னும் நாகரீகம் அடையாத காட்டுமிராண்டிகளே. அதே போன்று ஒரு சிலர் செய்யும் தவறுக்காக அந்த இனத்தையே அழிக்க வேண்டும் என்று சொல்லுபவர்களும் காட்டுமிராண்டிகளே.நீங்கள் எந்த வகையைச் சேர்ந்தவர் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். தீண்டாமையும் தவறு,எதிர் தீண்டாமையும் தவறு.

****—-

‘பெரியார் சமூக சீர்திருத்தவாதியில்லை எனில் யாருமே சீர்திருத்தவாதியில்லை. அவர் கூறிய கருத்துக்களை பகுத்தறிவற்றது என்று சொல்லும் தகுதி, சங்கராச்சாரிகளின் கால்களிலேயே அடிமை பட்டுக்கிடக்கும் எவருக்கும் இல்லை. இந்த பகுத்தறிவுக் கருத்துக்களை சமுதாய சீர்திருத்தம் என்று சொல்வதைப் போல வயிற்றைக் குமட்டும் விஷயம் வேறெதுவும் இருக்கமுடியாது ‘ என்று நீங்கள் சொல்வது எதிர்பார்க்கக் கூடியதுதான். இத்தனைக் காலமாய் அதிகம் படிப்பறிவில்லாத, வெகுளியான மக்களை ஏமாற்றி, நீ கீழ் சாதி என்ற கீழ்த்தரமான கருத்தைப் பரப்பி, அவர்கள் உழுது கொடுக்கும் உணவையே வெட்கமில்லாமல் உண்டு, தொந்தி வளர்த்து திரியும் கூட்டத்திற்கு, ‘அனைவரும் சமம், நீயும் வந்து வேலை பார் ‘ என்று சொன்னால் குமட்டத்தான் செய்யும். இதில் ஒன்றும் அதிசயமில்லை. குமட்டட்டும். நல்லது தான் இத்தனைக் காலம் வயிற்றுக்குள் வளர்த்து வந்த விஷங்கள் வெளுயே வர உதவும்! அப்படியாவது மேலான மனிதர்கள் ஆக முயற்சிக்கட்டும். என்றாலும் அவர்கள் மண்டைக்குள்ளிருக்கும் விஷங்களும் இரங்கி மக்களை சமமாக ந்டத்தும் நாள்தான் பொன்னான நாள். அப்போதுதான் அவர்களும் முழுமையான மனிதர்களாக உயர்வு பெறமுடியும். ‘ பெரியாரின் சீர்திருத்தக் கருத்துக்கள் உங்களுக்கு பிடிக்காமலிருப்பது புரிகிறது. ஆனால் காரணம் விளங்கவில்லை!

****—-

எனது பதில்:

நீங்கள் அப்படி நினைத்தால் அது உங்கள் அறிவுப் பற்றாக்குறையையும், நீங்கள் ஒரு கிணற்றுத் தவளை என்பதையுமே காண்பிக்கிறது. முதலில், ஈ வெ ரா விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்று அவரது தலைக்குப் பின் ஒளி வட்டம் காட்டும் வேலையை நிறுத்துங்கள். ஒரு குறிப்பிட்ட இனத்தை அழி என்று ஒட்டு மொத்தமாக குறிப்பிட்ட ஒரு வன்முறைவாதியின், இன வெறியனின் பேச்சுக்கு விளக்கம் கொடுத்த பொழுதே உங்களின் கண்மூடித்தனமான வெறுப்புணர்வும், காழ்ப்பும் வெளி வந்து விட்டதே. நான் அதை ஒழுங்கான கண்ணோட்டத்தில் படித்ததின் காரணமாகவே அதை வன்மையாகக் கண்டித்தேன். ஈ வெ ரா ஒரு முழுமையான, அர்பணித்துக்கொண்ட சமூக சீர்திருத்தவாதி இல்லை. அவரது இயக்கமும் பிராச்சாரமும் தீய உள்நோக்கம் கொண்டவை. பிராமணர்களை எதிர்ப்பது, அவர்களை அழித்தொழிப்பது ஒன்ற ஒரே இனவெறி மட்டும்தான் அவரது கொள்கையாக இருந்துள்ளது. மற்றவையெல்லாம் அவரது இனவெறியை மறைக்க அவர் போட்டுக் கொண்ட முகமூடிகளே. அவரது எழுத்துக்களும், பேச்சுக்களும் கிருத்துவ பாதிரிகளின் ஒரு மறைமுக கைக்கூலியாகவேதான் அவரது இயக்கத்தின் செயல்பாடுகள் இருந்தன. சொத்து சேர்ப்பதும் அதைப் பாதுகாப்பதுமே அவரது முழு நேர தொழிலாக இருந்தது. பிராமணருக்கும் முதலியார் போன்ற பிற உயர்ஜாதியினருக்கும் வெள்ளையரிடையே விசுவாசம் காட்டுவதில் ஏற்பட்ட ஆதிக்கப் போட்டியில், பிற ஆதிக்க சக்தியினரை ஆதரிக்க ஆரம்பித்ததுதான் இவரது இயக்கம். ஈ வெ ராவும் அவரது இயக்கமும், பாரம்பரிய பழக்கங்கள், ஹிந்து அழிப்பு, பிராமண அழிப்பு என்பதையே கொள்கையாகக் கொண்டு செயல் பட்டனரே அன்றி உண்மையான தீண்டாமை ஒழிப்பு அவர்களது லட்சியமாக இருந்ததில்லை. அதனாலேயே அவரை ஒரு சமூக சீர்திருத்தவாதியாக என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது. அவரது பித்தலாட்டங்கள் பலவற்றை அவரை அறிந்தவர்கள் மூலம் நான் கேட்டறிந்திருக்கிறேன். மேலும் தாழ்த்தப்பட்டோரைத் தீண்டாமைக் கொடுமையிலிருந்து காக்க இவர் எடுத்த புரட்சிகரமான நடவடிக்கைகளும், அதன் பலனும்தான் என்ன ? பிராமணர்களுக்குப் பதிலாக பல்வேறு ஆதிக்க சாதிகளை அதே பீடத்தில் அமர்த்தியதுதான் இவரது ஒரே சாதனை. இதற்கு மேலும் காரணம் வேண்டுமா ?

நீங்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்யவதுதான் பகுத்தறிவு, சீர்திருத்தம் என நினைத்தால் அது உங்கள் விருப்பம்.

அவரது சமூக சீர்திருத்தவாதம் மேன்மையானாதாக இருந்திருந்தால் அவர் பிற ஆதிக்க ஜாதிகளின் ஜாதி வெறியை மாற்றுவதற்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளார் ? எத்துனை தாழ்த்தப் பட்ட கிராமங்களுக்குச் சென்று, அங்கிருக்கும் பிராமணரல்லாத பிற ஜாதியினரின் தீண்டாமையை அழிக்கப் பாடுபட்டு, அகற்றியிருக்கிறார் ? அப்படி அவர் ஒழித்திருந்தால் இன்று திண்ணியமும், மேல வளைவும் ஏன் நடக்கின்றன ? ஏன் பிற ஜாதியினரின் தீண்டாமை ஒழிக்க இவர் பாடுபடவில்லை ? ஏனெனில் பிராமணர்களை எதிர்த்து தன்னை ஒரு சமூக சீர்திருத்தவாதியாகக் காட்டிக் கொள்வது மிக எளிது, ஆனால் இதுவே பிற ஜாதியினரிடம் செல்லுபடியாகாது. ஏன் இவர் தேவர்களிடம் சென்று அவர்களிடையே நிலவும் ஜாதி வெறியை அறவே ஒழித்திருப்பதுதானே ? பிராமணர்களை அழித்தவுடன் அவர் வெற்றி வீரராக அறிவித்துக் கொண்டு, ஒரு மடாதிபதி போல் கோடிக்கணக்கான சொத்துக்களை வைத்துக் கொண்டு வாழ்ந்தாரேயன்றி, கிராமங்களில் பிற ஜாதியினரிடையே நிலவும் ஏற்றத் தாழ்வுகளை கண்டு கொள்ளாமல், அதை மாற்றுவதற்கு ஏது செய்யாமல் தன் சொத்தினைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தியவரை சமூக சீர்திருத்தவாதியாகக் கருதுவது கேலிக்கூத்தாக இருக்கிறது , அவரின் முயற்சிகள் மூலம் இன்று தீண்டாமை ஓரளவு ஒழிந்திருந்தாலாவது, குறைந்த பட்சம் அவரது கன்னட நாயக்கர் இனத்திலேயாவது அறவே நீக்கப் பாடுபட்டிருந்தாலாவது நான் அவரை அரைகுறை சீர்த்திருத்தவாதியாகவாவது ஒத்துக் கொண்டிருப்பேன். அதை விடுத்து, தனக்குத் தானே சிலை வைத்துக் கொள்வதும், இந்து மதத்தின் குறைகளை மட்டும் பெரிது படுத்தி இழிவு படுத்தியதும்தான் இவர் புரிந்த ஒரே சாதனை. பிராமணர்களை அழித்தது இவரது சாதனைதான், அவர்களை ஒழிப்பதுதான் சீர்திருத்தம் எனில், இவர் சீர்திருத்தவாதிதான், ஆனால் அவர்கள் விட்டுச் சென்ற எச்சங்களை அழிக்க இவர் எடுத்த முயற்சிதான் என்ன ? கேட்டால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அவர்கள் ஏற்படுத்தி வைத்துள்ள விஷ வித்துக்களை ஒரு ஐம்பது ஆண்டில் அழிக்க முடியுமா என்பீர்கள் ? முடியாதுதான், ஆனால் அதற்கான இவர் எடுத்த முயற்சிதான் என்ன ? பிராமணர்கள் ஏற்படுத்திய வெற்றிடங்களை இன்று பிற ஆதிக்க ஜாதியினர் நிரப்பி, அதில் ஒரு குரூர திருப்தி அடைந்து கொண்டிருக்கிறார்களே அதை வன்மையாகக் கண்டித்து சீர்த்திருத்த இவரோ, இவர்து சீடர்களோ முயலாமல் ஊரை ஏமாற்றிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அப்படி இவர் உண்மையாக தீண்டாமை ஒழிப்பில் ஈடுபட்டிருந்தால், இப்பொழுது தீண்டாமைக் கொடுமை பெரிதும் குறைந்தல்லவா இருக்க வேண்டும், ஆனால் உண்மையில் நடப்பது என்ன ? இன்றும் அந்த கொடுமையை யார் நிலை நிறுத்தி வருகிறார்கள் ? இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் பிராமணர்களை மட்டுமே அழித்துக் கொண்டு, மற்ற கொடுமைகளை ஆதரித்துக் கொண்டும், வளர்த்துக் கொண்டும் இருக்கப் போகிறீர்கள் ?

ஈ வே ராவை எதிர்ப்பதனாலேயே நான் ஒரு ஜாதி வெறியனாக இருக்க வேண்டும் என்பதோ, சங்கராச்சாரியாரின் கால்களில் அடிமையாக இருப்பவன் என்பதோ, வெகுளியான மக்களை ஏமாற்றித் திரிபபவனாக இருக்க வேண்டும் என்று எழுதுவது தரங்கெட்ட விஷமப் பிரச்சாரம், அது உங்களது வக்கிரக் கோணல் பார்வையையே காட்டுகிறது. நீங்கள் பூஜிக்கும் ஒருவரை சீர்திருத்தவாதியாக ஏற்றுக்கொள்ளாதவர்கள் எல்லோரும் அயோக்கியர்கள், முட்டள்கள், தீண்டாமையைப் பரப்புபவர்கள் என்னும் ஆபாசமான உங்கள் தர்க்கம்தான் இங்கு குமட்டலேற்படுத்துகிறது. உழைப்பவர்களை சிறுமைப் படுத்தி அவர்கள் உருவாக்கும் உணவையையே வெட்கமில்லாமல் உண்டு கொழுத்திருக்கும் இனம் முதலியாரிலும் உண்டு, வன்னியரிலும் உண்டு, கவுண்டர்களிலும் உண்டு, நாடார்களிலும் உண்டு, தேவர்களிலும் உண்டு, அவர்களையும் இதே போல் இகழ உங்களுக்குத் துணிவு உண்டா ?

ஈ வெ ராவை ஏற்றுக் கொள்ளமலேயே, முன்னேற்றக் கருத்துக்களும், உண்மையான சீர்திருத்தக் கருத்துக்களும், ஏற்ற தாழ்வு பாராட்டாத மனப்பான்மையும், சமத்துவ உணர்வுகளும், உடைய ஒரு இலட்சிய மனிதனாக வாழ முடியும். அவ்வாறுதான், நானும் என் குடும்பத்தாரும் வாழ்ந்து வருகிறோம். இதைக் காமாலைக் கண்கொண்டு பார்க்கும் உங்களைப் போன்றவர்களிடம் விளம்பரப் படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அது உங்களைப் போன்றவர்களுக்கு புரியவும் புரியாது. எனது மனசாட்சிக்கும் என்னை அறிந்தவர்களுக்கும் தெரியும், நான் யார், எவ்விதக் கொள்கைகளைப் பின்பற்றுகிறேன் என்பது. ஜாதியற்ற சமதர்ம சமுதாயத்தை அடைவதற்கு, ஈ வே ராவைப் போன்ற போலிகள் போல் அன்று தற்புகழ்ச்சியில்லாத, தன்னலம் கருதாத, எந்தவொரு இனத்தின் மீதும் காழ்ப்புணர்வு காட்டாத, எண்ணற்ற உண்மையான சமூக சீர்திருத்தவாதிகள், அமைதியாக இந்தியா முழுவதும் பணி புரிந்து வருகிறார்கள் என்பதை, பிறரைக் காறி உமிழ்வதற்கு முன்பு தயவு செய்து நினைவு கூறவும். அது போன்ற தன்னலமற்ற தியாகிகளின் தாழ் பணிந்து வணங்குகிறேன். அவர்களின் கால் தூசிக்குக்கூட இந்த ஈ வெ ரா வர மாட்டார்.

****—-

‘இனவாதக் கருத்துக்கள் என்று நீங்கள் ஒதுக்குவதற்கான முகாந்திரம் உள்ளது. ஆனால் அது மேம்போக்காக பார்ப்பதினால் வருவது. பெரியாரின் வழிமுறைகள் அடாவடியாகத் தெரியும். ஆனால் அதன் அடிப்படையில் நியாயம் உள்ளது. ‘பாம்பையும் பார்ப்பனையும் பார்த்தால் பார்ப்பனை முதலில் அடி ‘ என்று சொல்வது தவறானதுதான். அனால் இவை வெறும் வார்த்தைகள் தான். அவர் ஒன்றும் அவ்வாறு செய்துவிடவில்லை. ராஜாஜியுடன் அவர் நட்போடுதான் இருந்திருக்கிறார். ஒரே மேடையில் இருவரும் தோன்றியிருக்கிறார்கள். அப்போது பெரியார் ஒன்றும் தடி கொண்டு இராஜாஜியை அடித்துவிடவில்லை! பெரியாரின் மோதல்கள் ராஜாஜியின் ஜாதிவெறிக் கருத்துக்களோடுதான். ‘ வெறும் மனித நேயம்தான். அவ்வளவு மனித நேயம் கொண்ட ஒரு மனிதர் ஒரு இனத்தவரை பார்த்ததும் அடிக்க சொல்கிறார் என்றால் ஏன் ? என்று சம்பந்தப் பட்டவர்கள் சிந்திக்கவேண்டும். மனித நேயம் கொண்ட மனிதர்களாகவே அவர்கள் நடந்து கொள்ளவில்லை. நிலமை அவ்வளவு மோசமாக இருந்திருக்கிறது. ஒரு பெரியார் வந்து போன பின்னும் நிலமை இன்னும் அப்படியேதான் இருக்கிறது. இன்னும் மனு கருத்துக்களை உண்மை என்று, சாதி வெறி ஊட்டும் சங்கராச்சாரிகளும், அவர் காலில் விழும் கூட்டமும் இருந்து கொண்டுதானிருக்கிறது. மனிதர்களை மலந்திண்ண வைக்கும் கூட்டத்தைக் கண்டிக்க ஆளில்லை. நிலமை இப்படி இருக்கும் வரை பெரியாரின் கருத்துக்களுக்கு வலு இருந்துகொண்டுதான் இருக்கும். பெரியாரின் கருத்துக்களை நீங்கள் ஒழிக்க விரும்பினால் முதலில் உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். மனிதர்கள் யாவரும் சமம் என்று உணரவேண்டும். உணர்ந்து அதன்படி நடந்தால்பெரியாரின் கருத்துக்களுக்கு பின் வேலையேயிருக்காது. ] ‘

****-

எனது பதில்:

முரண்பாடுகளின் மொத்த உருவமாக அல்லவா இருக்கிறது உங்கள் பிதற்றல். முதலில் தவறு என்று மேம்போக்காக, போனால் போகிறது என்று அரை மனதாக கூறுகின்றீர்கள், பின்னர் அதே அயோக்கியத்தனத்தை நியாயப் படுத்த முயல்கிறீர்கள். அடாவடி செயல்களில் எப்படி நியாயம் இருக்கும். வன்முறையிலும், தீவிரவாதத்திலும் எப்படி மனித நேயம் வளரும் ? சுத்த அபத்தக் களஞ்சியமாக அல்லவா இருக்கிறது உங்கள் விளக்கம். கேப்பையில் நெய் வடிகிறது என்று சொன்னால் நம்புவனிடம் கொண்டு போய் உங்களது ஏமாற்றுப் பிராசரத்தை வைத்துக் கொள்ளுங்கள். வெறும் வார்த்தையாம். உங்கள் வீட்டை ஒருவன் கொளுத்தி விட்டு, அது சும்மா, வெறும் விளையாட்டு என்று சொன்னால் ஒத்துக் கொள்வீர்களா ? எது மனித நேயம் ? ஒரு இனத்தில் ஒரு சிலர் செய்யும் கீழ்த்தரமான செயல்களுக்காக ஒட்டு மொத்த இனத்தையுமே அடி என்று சொல்வதுதான் மனித நேயம் என்றால், ஹிட்லரும், ஸ்டாலினும், ஓசாமாவும் கூடத்தான் மனித நேயமுள்ளவர்கள். அப்படிப்பட்ட மனித நேயம் எனக்குத் தேவையில்லை. அதற்கு மனித நேயம் என்று பெயரிட்டு உங்கள் அறிவீனத்தைப் பறைசாற்றிக் கொள்ளாதீீர்கள். சரி பிராமணர்கள் வர்ணாசிரம தர்மத்தை பரப்பி, ஜாதி வேற்றுமைகளை, சமுதாயத்தின் எல்லா அடுக்குகளிலும் கட்டமைத்து, அராஜகம் செய்தார்கள். அவர்களிடம் மனித நேயம் இல்லாததினால், அவர்களை கொல்லச் சொன்னார். அவர்களை அழித்தவுடன் நிலைமை மாறி விட்டதா ? கீழ் வெண்மணியில் உயிரோடு கொளுத்தியவர்கள் எந்த ஜாதியினர் ? எண்ணற்ற ஊர்களில் இரட்டை கோப்பை முறையை அமுல் படுத்தி வருபவர்கள் எந்த ஜாதியினர் ? திண்ணியத்தில் மலத்தை திணித்தவர் எந்த ஜாதி ? பாப்பாரப்பட்டியில், தலித் பஞ்சாயத்துத் தலைவராக வரக்கூடாதென அராஜகம் புரிபவர்கள் எந்த ஜாதியினர் ? கமுதியில், வாழைக் குலை போல தலையைச் சீவியவர்கள் எந்த ஜாதியினர் ? அவர்களை எல்லாம் மாற்றிக் கொள்ள எத்துனைப் போராட்டத்தை நடத்தினீர்கள் ? திண்ணியத்தில் மலத்தை திணித்த அயோக்கியன் எந்த கட்சிக்காரன் என்று தெரியுமா ? அவன் மீது தமிழீனத்தலைவர் ஏதேனும் இன்று வரை நடவடிக்கை எடுத்துள்ளாரா ? இன்றைய நிலைமை என்ன ? பிராமணர்களில் எத்துனை பேர் முற்போக்கானக் கருத்துக்களுடன், இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா ? அவர்கள் முன்னோர்கள் செய்த தவற்றிற்கு இவர்களை நீங்கள் அடிக்க வேண்டுமா ? இன்றைக்கு தமிழ் நாட்டில் உள்ள எந்தவொரு காவல் நிலையத்திலாவது அவர்கள் மேல் ஒரு வன்கொடுமை வழக்காவது காட்ட முடியுமா ? திண்ணியத்தில் மலத்தை திணித்தவன் வன்னியனாக இருந்தாலும் ,நான் அவனைக் கண்டிக்க மாட்டேன், கண்டு கொள்ள மாட்டேன், தமிழ் நாட்டில் அருகி வரும் ஒரு இனத்தைதான் இகழ்வேன், தாக்குவேன், ஏனென்றால், வன்னியனை கண்டித்தால் அவர்கள் கூட்டமாக வந்து திருப்பித் தாக்குவான், பிராமணர்களுக்கு திண்ணிய நிகழ்வில் சம்பந்தமே இல்லாவிடினும் அவனை திட்டினால், பயந்து கொண்டு ஒளிந்து கொள்வான், நீங்களும், சமூக சீர்திருத்தவாதியாக உங்களைக் காட்டிக் கொள்ளலாம், சிலை வைத்துக் கொள்ளலாம், தந்தை என்றும் பெரியார் என்றும் பட்டம் பெற்று ஈனப் பிழைப்பு நடத்திக் கொள்ளலாம். அதுதான் சமூக சீர்திருத்தமா ? உங்கள் வீரமும், சமூகப் பார்வையும் புல்லரிக்க வைக்கிறது ஐயா. வெட்கமாக இல்லை. இதைத்தான் பாரதி ‘நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு ‘ என்று சொன்னான். செத்த பாம்பை அடிப்பதுதான் சமூக சீர்திருத்தமெனில், இன்றைய காலக்கட்டத்தின் யதார்த்த நிலையைக் கண்டு கொள்ளாமல், சமூகத் தீமைகளைப் பின்பற்றுபர்களை மாற்ற முயலாமல், ஒரு இனத்தை மட்டுமே, அவர்கள் அழிந்தொழிந்து போனபின்பும் அவர்களையே குறை கூறுவதுதான் சமூக சீர்திருத்தமெனில் அந்த சமூக சீர்திருத்தம் நாசமாகப் போகக் கடவது.

எனக்கும் ஒரு சில பிராமணர்களின் ஒரு சில செய்கைகள் குறித்து கடுமையான கருத்துக்கள் உள்ளன, ஆனால் அதற்காக அவர்களை அடித்துக் கொல்வதுதான் தீர்வென்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது. ஆனால் இன்றைக்கு தீண்டாமைப் பேய் பிராமணர்களை விடவும் பிற ஜாதியினரிடம்தான் அதிகம் பீடித்திருக்கிறது, அதை நான் ஒவ்வொரு நாளும் எனக்கருகே உள்ள கிராமங்களிலும், நான் பணி புரியும் இடத்திலும் கண்கூடாக கண்டு வருகிறேன். இந்த யதார்த்த நிலையை மறுதலித்து விட்டு, நிழல் யுத்தம் புரிவதில் எனக்குச் சம்மதமில்லை.

****—-

‘ஒழுங்காக படித்திருந்தால் முதலில் நீங்கள் கவனித்திருக்க வேண்டியது, ‘ ‘பார்ப்பனை முதலில் அடி ‘ என்று சொல்வது தவறானதுதான் ‘ என்று மிகத் தெளுவாக நான் எழுதியிருப்பதை. இன்னும் என்ன எதிர்பார்க்கிறீர்கள். இதைப் புரிந்து கொண்டிருந்தாலே என்னைப் பற்றிய உங்கள் சாடலில் அர்த்தமில்லை என்பது தெளுவாகியிருக்கும். தலைவர்களின் வார்த்தைகளால் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபடுவார்கள் என்று உணர்ந்திருப்பதால் தான் அவர் சொன்னது தவறு என்று தெளுவாக்கியிருக்கிறேன். அதே காரணாங்களுக்காகத் தான் இப்போது அத்வானிகளும் ஜோஷிகளும், கோவில் கட்டுகிறோம், ரத யாத்திரை செல்கிறோம் என்று கூறும்போது அது எந்தவித மதக் கலவரங்களுக்கு வித்திடுமோ என்றும் கவலை கொள்கிறேன். தவறு என்று சொன்னதோடு நான் நின்றுவிடவில்லை. ‘

****—-

எனது பதில்:

தவறு என்று சொல்லி விட்டு, மனித நேயமில்லாதவர்களை அப்படி அடிப்பது சரிதான் என்று அடுத்த வரியிலேயே, வன்முறைக்கு வக்காலத்து வாங்குபவர்களிடம் நான் மேலும் பேசி என்ன பயன் ? வன்முறைக்கு விளக்கவுரை கொடுத்து துதி பாடாமல் இருந்திருந்தால் நான் உங்களை சாடி இருக்கவே மாட்டேன். தீவிரவாதத்தின் மீதும், வன்முறை அறைகூவல்களின் மீதும் எனக்குள்ள கடும் வெறுப்பே, வன்முறைக்கு வக்காலத்து வாங்கும் உங்கள் போக்கைக் கடுமையாகக் கண்டிக்கத் தூண்டியது.

****—-

பெரியாரின் கருத்துக்களுக்கு பின் வேலையேயிருக்காது. ‘ என்று. மனிதர்கள் அனைவரும் சமம் என்று உணருங்கள். உணர்ந்து அதன்படி நடந்துகொள்ளுங்கள் என்பது கூட நியாயமான கோரிக்கையாக உங்களுக்குத் தெரியவில்லையா ?

****—-

எனது பதில்:

மனிதர்கள் அனைவரும் சமம் என்று நான் உணரவில்லை என்று உங்களுக்கு யார் சொன்னது ? என்னை பற்றி என்ன தெரியும் உஙகளுக்கு ? என்னைப் பற்றி எதுவும் தெரியாமலேயே, நான் ஈ வெ ராவைக் கடுமையாக எதிர்ப்பதனால் மட்டுமே, என் மீது சேற்றை வாரி இறைத்து, எனக்கு அறிவுரை கூற, வன்முறைக்கு வக்காலத்து வாங்கும் உங்களுக்கு என்ன தகுதி உள்ளது ? மனித நேயத்தை வெளிப்படுத்துவதிலும், வன்முறையை எதிர்ப்பதிலும், கீழ்மையை வெறுப்பதிலும், மனிதர்களை சமமாக நடத்துவதிலும், நான் யாருக்கும் குறைந்தவன் அல்ல. தயவு செய்து உங்கள் புத்திமதியை, இன வெறுப்பை உமிழும் ஈ வெ ரா வின் குண்டர்களிடம், ஜாதி வெறி பிடித்தலையும் ஆதிக்க ஜாதியினரிடமும் வைத்துக் கொள்ளவும். இந்த விஷயத்தில் நான் யாரிடமும் பாடம் கற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை, அதுவும் ஒரு இனவெறிக் கும்பலிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் நிச்சயமாக இல்லை.

****—

‘தி.க. குண்டர்களின் பூணுல் அறுக்கும் அராஜகத்தை நேரில் கண்டு வெதும்பிதான் எழுவதாக சொல்கிறீகளே, ஏன் உங்களுக்கு, மலந்திண்ண வைப்பதும், தெருவுக்குள் – கோவிலுக்குள் விட மறுப்பதும், ‘தொடாதே தீட்டு ஒட்டிக்கும் ‘ என்று சக மனிதரை தள்ளிவைப்பதுமான மிகக் கேவலத்திற்கும் கேவலமான செய்கைகள் கண்ணுக்குத் தெரியவில்லையா ? இது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாக மட்டுமல்லாமல், மிக முற்றிய ‘செலக்டிவ் அம்னீஷியா ‘ வாகவும் இருக்கிறதே. ‘என் பார்வை மேற்போக்கான வெற்றுப் பார்வை இல்லை ‘ என்று எழுதியிருக்கிறீகளே, இதைத்தானோ ?! ஏதோ நடு நிலையில் நின்று, தி.கவினரின் அராஜகத்தை (மட்டும்) கண்டு வெதும்பி, வெற்றுப் பார்வையில்லாமல் (!) எழுதுவதுபோல எழுதியிருக்கிறீர்கள். ‘பெரியார் ‘பார்ப்பனை முதலில் அடி ‘ என்று சொன்னது தவறானது தான். அனால் அதைவிடத் தவறானது, அதன் காரணம், சக மனிதர்களை கீழ்சாதி என்று பிரிப்பது ‘ என்று நீங்கள் (என்னைப் போல)எழுதியிருந்தால், நானும் உங்களருகிலிருந்து பாராட்டியிருப்பேன். அதைவிட்டுவிட்டு, பெரியாரையும், தி.கவினரையும் மட்டும் தவறு செய்தவர்கள் போலக் காட்டி, ஒரு பக்க பார்வை பார்த்து திட்டிவிட்டு நடுநிலையில் இருப்பதுபோல எழுதுவது உங்கள் பாசாங்கை வெளுப்படுத்துவதோடு, உங்களுக்கும் நடு நிலைக்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்பதைத் தெளுவாகக் காட்டுகிறது. ‘

****—-

எனது பதில்:

மலந்தின்ன வைப்பதையும், தீட்டு என்று ஒதுக்குவதையும் சரி என்று நான் எப்பொழுது, எங்கு சொன்னேன் ? ஒரு உதாரணம் கொடுக்க முடியுமா ? அவதூறு சொல்வதற்கும் ஒரு எல்லை உண்டு. தரம் தாழ்ந்து விட்டார்கள் பித்தன். நீங்கள் வன்முறையை நியாயப்படுத்துவீர்கள், அதை நான் தவறு என்று சுட்டிக் காட்டிய ஒரே காரணத்தினால் என் மீது அபாண்டமான பழிகளைக் கட்டவிழ்த்து விடுவீர்கள், இதுதான் உங்கள் நடுநிலைமை. யார் இங்கு பாசாங்கு செய்கிறார்கள் என்பதைச் சிந்திக்கத் தெரிந்தவர்கள் தெளிவாக அறிந்து கொள்வார்கள்.

உங்களுக்கு எந்த அளவிற்கு புரியும் என்பது தெரியவில்லை. இருந்தாலும் ஒரு உதாரணம் கூறுகிறேன். ஒரு உதாரணத்துக்கு, நீங்கள் கற்பழிப்பைப் பற்றி இது வரை திண்ணையில் ஏதும் கருத்து சொல்லவில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்படிக் கருத்துக் கூறவில்லை என்பதற்காக, ‘பித்தன் இது வரை பாலியல் கொடுமையை திண்ணையில் கண்டிக்கவேயில்லை, அதனால் அவர் அதை ஆதரிக்கிறார் என்றுதான் அர்த்தம், அவரும் ஒரு பாலியல் குற்றவாளியே, அவரும் பெண்களைக் வன்முறையாகக் கற்பழிப்பவரே ‘ என்று நான் எழுதினால் எவ்வளவு அபத்தமாக இருக்கும் ? எவ்வளவு கீழ்த்தரமாக இருக்கும் ? அதே போன்ற செய்கைதான் நீங்கள் என்மீது சுமற்றும் குற்றச்சாட்டும், நான் இது வரை திண்ணையில் தீண்டாமையை எதிர்த்து எழுத்தாதினால் மட்டுமே, அதை நான் அதை ஆதரிப்பவனாக ஆகி விட மாட்டேன். இந்த அடிப்படை கூட தெரியாமால், சிறு பிள்ளை போல் இகழ்வது தரங்கெட்ட ஒரு செயலே. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நான் மேலே குறிப்பிட்டது ஒரு உதாரணம் மட்டுமே, அதுவும் உங்கள் நேர்மையின்மையை, உங்கள் வாதத்தில் உள்ள அபத்தத்தைச் சுட்டிக் காட்டுவதற்காக மட்டுமே குறிப்பிடப்பட்டது. அதையே அடுத்த வாரம் திரித்துக் கூறும் முயற்சியில் மீண்டும் இறங்கி விட வேண்டாம்.

இப்பொழுது சொல்கிறேன், மனிதனை, மனிதன் தீண்டத்தகாகதவனாக நடந்துவது, அடிமையாக நடத்துவது, சாதி வேற்றுமை பாராட்டுவதும் கீழ்த்தரமான செய்கைகள்தான். அதை பிராமணர்கள் செய்தாலும், வன்னியர்கள் செய்தாலும், முக்குலத்தோர் செய்தாலும் காட்டுமிராண்டித் தனமானவையே. அருவருப்பான நடவடிக்கையே. உங்களைப் போன்று திண்ணியத்தில் ஒரு வன்னியன் மலத்தை திணித்திருந்தாலும் அவனை விட்டு விட்டு, அந்த விஷயத்தில் சம்பத்தப்படாத இன்னொரு இனத்தைக் கண்டிக்கும் பேடி அல்ல நான். பிராமணர்களுக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்று பாரபட்சமான முறையில் தரங்கெட்டுக் கண்டிப்பவனல்ல நான். தவறு யார் செய்தாலும் குற்றம் குற்றமே.

****—-

‘பூணுல் அறுப்பதையும், சக மனிதனை மலந்திண்ண வைப்பதையும் ஒப்பிட்டுப் பாருங்கள். எது அதிக காட்டுமிராண்டித்தனம், எது அதிக அராஜகம் என்று தெளுவாகத் தெரியும். (இரண்டுமே தவறானது என்பதுதான் என் நிலைப்பாடு. என்றாலும், பூணுல் அறுப்பது மட்டும் அராஜகம் போல நீங்கள் சொல்வதனால் இதைக் கூறுகிறேன்.). நிஜமாகவே நடு நிலையில் நிற்க நீங்கள் விரும்பினால் உங்களுக்கும் இதன் நியாயம் விளங்கும். இதைவிட எளிதாக எப்படி விளக்குவது என்று எனக்குத் தெரியவில்லை. ‘

****—-

எனது பதில்:

பூணுல் அறுப்பதை விட மலந்திண்ண வைப்பது அதிகக் காட்டுமிராண்டித்தனமே, சந்தேகமே இல்லை. இரண்டுமே தவறே. பூணுல் அறுப்பதைக் கண்டித்தது ஈ வெ ராவின் காட்டுமிராண்டித்தனத்தைச் சுட்டிக் காட்டவே. அதை கண்டிப்பதினாலேயே, திண்ணியத்தில் நடந்ததை நான் ஆதரிக்கிறேன் என்று நினைத்தால், உங்கள் மனநிலையைப் பற்றி சந்தேகம் வருகிறது. அப்படி என் மீது குற்றம் சாட்டுவது, கடைந்தெடுத்த அயோக்கியத்தனம், வஞ்சகத்தனம், தீய உள்நோக்கு உடைய, ஆதரமற்ற, கீழ்த்தரமான குற்றச்சாட்டு. இங்கு பூணூலை அறுத்தவனும், பிராமணன் அல்ல, மலத்தை திணித்தவனும் பிராமணன் அல்ல, அதனால் தேவையில்லாமல் காழ்ப்புணர்ச்சி எடுத்து தரம் தாழ்ந்து அவர்களை நான் இங்கு இழிவு படுத்த விரும்பவில்லை. அது போல் திண்ணியத்தில் மலத்தை திணித்தவன் ஒரு வன்னியனாக இருப்பதாலேயே, வன்னியர்கள் அனைவரையும் அடிக்க வேண்டும் என்று காட்டுமிராண்டித்தனமாகவும் நான் வாதாடவில்லை. ஆக நீங்கள் கூறிய இரு அயோக்கியத்தனத்தை செய்த பிராமணரல்லாத காட்டுமிராண்டிகளை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்.

****—-

‘சமீப காலமாக இப்படி ஒரு வாதம் வைக்கிறார்கள். ‘சாதியத்தை எதிர்ப்பவர்கள் ஏன் பார்ப்பனர்களை மட்டும் எதிர்க்கிறார்கள் ? திண்ணியத்தில் எத்தனை அந்தணர்கள் இருக்கிறார்கள் ? மற்ற சாதிக்காரர்களைக் கேட்காமல், அந்தணர்களை மட்டும் கேட்பது ஏன் ? ‘ என்பது. இது எப்படி இருக்கிறது எனில், ‘நீ ஏன் திருடினாய் ? ‘ என்று கேட்டால், ‘அடுத்த ஊர் காரன் திருடுகிறானே, அவனைக் கேட்காமல் என்னை ஏன் கேட்கிறீர்கள் ? ‘ என்று கேட்பது போல இருக்கிறது. ‘நாங்கள் திருந்திவிட்டோம். மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டுமென உணர்ந்துவிட்டோம் ‘ என்று கூறிவிட்டு எனவே, ‘இனி எங்களைக் கேட்கத் தேவையில்லை, சாதி வெறியோடு நடந்து கொள்ளும் மற்றவர்களைக் கேளுங்கள் ‘ என்று சொன்னாலும் ஒரு நியாயம் இருக்கிறது. அப்படி எப்போதும், தங்கள் தவறை ஒத்துக்கொண்டு யாரும் பேசிவிட மாட்டார்கள். என்றாலும் மற்றவர்களைத்தான் கேட்கவேண்டும், இவர்களைக் கேட்கக்கூடாது என்றால் எப்படி ?எல்ல திருடர்களையும் தான் கேட்கவேண்டும். அவனை இன்னும் கேட்கவில்லை என்பதாலேயே உன்னைக் கேட்கக் கூடாதென்று சொல்வது வினோதமான வாதம். மேலும், சாதிக்கருத்துக்களுக்கு உறைவிடமான மனுக் கருத்துக்கள், அந்தணர்களிடமிருந்து வந்தது. அது தான் ஆணிவேர். ஆணிவேரைக் களையாமல், கிளைகளை மட்டும் வெட்டுவதினால் சாதி என்ற விஷமரத்தை அழிக்கமுடியாது. சாதிக் கொண்டு சக மனிதனை மோசமாக நடத்துபவர்கள் எந்த சாதிக் காரர்களாக இருந்தாலும் தவறுதான். (க)தண்டிக்கப்படவேண்டியவர்கள்தான். அனைத்து மக்களையும் தட்டிக்கேட்க வேண்டும் என்று பொது ஆர்வலர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். ‘

****—-

எனது பதில்:

உங்கள் வாதத்தை மீண்டும் ஒரு முறை நீங்களே படித்துப் பாருங்கள், அப்பொழுது உங்கள் தர்கத்தில் உள்ள அபத்தம் தெளிவாகப் புரியும். நான் சொல்லுவது சுய அறிவுள்ள, சிந்திக்கும் திறன் உள்ளவர்களுக்கு. முதலில் திண்ணியத்தில் திருடியது யார் ? ஒரு வன்னியர் ? பின் அவரைத்தானே தண்டிக்க வேண்டும், அவரைத்தானே கண்டிக்க வேண்டும் ? அதை விட்டு, விட்டு, பிராமணர்களை கண்டிக்கும் நோக்கம் என்ன ? தவறு செய்யும் எல்லோரையுமே கேட்க வேண்டும்தான், அதில் எனக்கு கருத்து வேறுபாடே கிடையாது. திண்ணியத்திலும், பாப்பாரப்பட்டியிலும், கீரிப்பட்டியிலும், இனி எத்தனையோ பட்டி தொட்டிகளிலும், யார் தவறு செய்கிறார்களோ, அவர்களை மட்டும்தான் கண்டிக்கவும், தண்டிக்கவும் வேண்டும். அதை விடுத்து, இன்னொரு இனத்தாரைக் கண்டிப்பது எந்த விதத்தில் நியாயம் ? இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஆணி வேரை மட்டுமே பேசிக் கொண்டு இருக்கப் போகிறீர்கள் ? ஆணி வேரில் இருந்து இன்று பல புதிய வேர்கள் வளர்ந்து கிளை பரப்பி வருகின்றன. அந்தப் பரந்து விரிந்து ராட்சச மரத்தின், புதிய வேர்களையும், கிளைகளையும் என்று வெட்டப் போகிறீர்கள். நீங்களும் உங்கள் ராமசாமி நாயக்கரும், அவரது கும்பலும் என்றுமே அதை செய்யப் போவத்தில்லை. ஏனெனில், பிராமணர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்புவதில் பிற ஆதிக்க ஜாதியினரான உங்களிடத்தில் கடும் போட்டி, நில உடமை, பொருளாதாரக் காரணங்களுக்காக, தீண்டாமையை அமுல் படுத்துவதில், அதை உருவாக்கிய பிராமணர்களை விட, இன்று பிற ஜாதியினருக்குதான் கடும் தேவையும் விருப்பமும் உள்ளது. தாழ்த்தப்பட்டோரை அடக்கி ஆளும் அதே வேளையில், பிராமணர்களை பொது எதிரியாக முன்னிறுத்தி ஊரை ஏமாற்றி வருகிறீர்கள். ஆனால் பழியைப் பிராமணர்களிடம் போட்டுவிட்டு பாபத்தை நீங்கள் இன்று தொடர்ந்து செய்து வருகிறீர்கள். நீங்கள் உண்மையான சீர்திருத்தவாதியாக இருந்தால், இன்றைய நிலையில், யார் தீண்டாமையை பாவிக்கிறார்களோ அவர்களை துணிவாகவும்., நேர்மையுடனும் எதிர் கொள்ளும் தைரியம் இருந்திருக்கும். போலிகள்தான், நிஜத்தைத் தவிர்த்து விட்டு, நிழலை வெட்டப் புறப்படுவார்கள். ஆணிவேர் என்றோ தமிழ் நாட்டில் இருந்து வெளியேறி விட்டது. கிளைகளும், விழுதுகளும்தான், இன்று விஷக் கார்றைப் பரப்பி வருகின்றன, செத்த பாம்பை அடிப்பதை விட்டு, விட்டு, தீண்டாமையெனும் அந்த நச்சுக் காற்றை அகற்றி, சூழ்நிலையை சுத்தம் படுத்தும் பணியில் ஈடுபடுங்கள். கண்ணைத் திறந்து உங்கள் கிராமத்தில், உங்கள் சூழலில், இன்று யார் தீண்டாமையைப் பின்பற்றுகிறார்கள் எனப் பாருங்கள், அவர்களை, நகரத்துக்கு இடம் பெயர்ந்து விட்ட பிராமணர்கள் எந்த விதத்திலாவது தூண்டுகிறார்களா என்று உற்று நோக்குங்கள், அதன்பின் எழுதுங்கள்.

****—-

இப்போது நாட்டுப் பற்று என்ற பெயரில் பூச்சாண்டிக் காட்டி மதத்தைப் பரப்புவதெல்லாம் ஏதோ சாதாரணமாக நடை பெறுவதாக நினைத்து விடாதீர்கள். பெரும்பான்மையான மக்களை நாட்டுப் பற்று என்று எண்ணிக்கொண்டு மத துவேசத்தில் தள்ளியதில்தான் அவர்களின் வெற்றி இருக்கிறது. உண்மையான பிரச்சனைக்கு, ஜாதிப் பிரச்சனைக்கு, தீர்வு காண மக்கள் விழைந்து விட்டால் அதில் அதிகம் பாதிக்கப் படுவது, மேல்சாதிக்காரர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களாகத்தான் இருக்கும்.

****—

ஆமாம் நாட்டுப் பற்றுக்கு பதிலாக மொழி வெறியையும், இன வெறியையும், பார்ப்பன வெறியையும் தூண்டும் திக, திமுக கும்பல்கள் தான் நாட்டைக் காப்பாற்றப் போகின்றன.

****—

உங்கள் சிந்தனைக்காக மேலும் சில விஷயங்கள் கூறுகிறேன். இதுவரை இந்தியாவில் பிரதமாராக இருந்து ஆட்சி செய்தவர்கள் அனைவரும், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் (இடையில் சில நாட்கள் இருந்த பிரதமர்களை கணக்கிலெடுக்காமல்) மேல் சாதிக்காரர்களாகவே இருப்பதன் ரகசியமென்ன ? எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா ? (ஒரு அதிகாரமுமில்லாத பொம்மை பதவியான ஜனாதிபதி பதவி மட்டும் யாருக்கும் கிடைக்கலாம்). இது ஏதோ எதேச்சையாக நடந்துவிட்டதாக எண்ணுகிறீர்களா ? (coincidence will not happen so often, my friend!).

**–**—-

எனது பதில்:

பாமரத்தனமான பேச்சு. காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்.

இன வெறி பிடித்தவர்களின் பிதற்றல்களுக்கு இவ்வளவு நேரம் ஒதுக்கி, பதில் அளித்தமைக்காக வேதனைப் படுகிறேன். ஈ வெ ராவின் துதிபாடிகளிடம், நேர்மையையும், நியாயத்தையும் நான் எதிர்பார்க்கவில்லைதான். உண்மையைச் சொன்னதற்காக இனியும், என்மீது, தரங்கெட்ட வசவும், சகதியும் அள்ளி வீசப்படும்தான். புழுதி வாரி தூற்றுவதுதான் உங்கள் பணியென்றால் தொடர்ந்து செய்யுங்கள். ஒரு இனத்தை வெறுப்பதின் மூலம் உங்கள் அரிப்புக்கு ஆறுதல் கிடைக்கும் என்றால் தொடர்ந்து இகழுங்கள். வெறுப்புணர்விலும், காழ்ப்புணர்விலும், மூர்க்கமான வசைபாடலிலும்தான் உங்களுக்கு இன்பம் கிடைக்கிறது என்றால் தொடந்து செய்யுங்கள், அதற்கு நான் மறு மொழி கூறப்போவது இல்லை.

விசுவாமித்திரா

viswamitra12347@rediffmail.com

Series Navigation

விசுவாமித்திரா

விசுவாமித்திரா