தினம் ஒரு கவிதை –சங்கமம்

This entry is part [part not set] of 20 in the series 20010805_Issue

கே ஆர் விஜய்


கவிதையை நேசிப்பவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டு இன்று இணையத்தில் அதிக தமிழ் உறுப்பினர்களைக் கொண்ட குழுவாக விளங்கும் ‘தினம் ஒரு கவிதை ‘ குழு உறுப்பினர்களின் ‘சங்கமம் ‘ பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் 29-07-2001 அன்று மாலைப் பொழுதில் இனிதே நடந்து முடிந்தது.

மாலை 3.00 மணி அளவில் மலேசியப் பாவலர் ஐ.உலகநாதன், திரு.லாவண்யா,திரு.தேனிரா.உதயக்குமார்,திரு. சி.பு.மணி,திரு.திருநாவுக்கரசு ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைக்க விஜய் அவர்களின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

பின்னர் தினம் ஒரு கவிதை–நேற்று,இன்று,நாளை என்ற தலைப்பில் தினம் ஒரு கவிதையின் அமைப்பாளர் திரு.லாவண்யா அவர்கள் உரையாற்றினார்.இதுவரை குழுவிற்காக செய்திருக்கும் பணிகளைப் பற்றியும் அவைகளுக்கு கிடைத்த வரவேற்பைப் பற்றியும் எடுத்துச் சொன்னார். தினம் ஒரு கவிதை,சிந்தனை,குறுந்தொகையின் புதுக்கவிதை வடிவம் இத்தோடு மட்டும் நில்லாது இந்தக் குழு அனைத்துத் துறைகளிலும்(சிறுகதை,கட்டுரை,…) கால் பதிக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொண்டார்.

அதற்குப் பின் ‘மனிதன் என்பவன் கவிஞனாகலாம் ‘ என்ற தலைப்பில் திரு.ஐ.உலகநாதன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கவிதை ஒளிந்து கிடக்கிறது என்றும்,சிலரே அதைப் புரிந்து கொண்டு தம்மை மேன்மேலும் பட்டை தீட்டிக் கொள்கின்றனர் என்றும் கூறினார்.கவிஞன் என்பவன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் நல்ல பல நூல்களைக் கற்க வேண்டும் என்றும் பயிற்சியே ஒருவனை சிறந்த கவிஞனாக மாற்றுகிறது என்றும் கூறினார்.ஆங்காங்கே பாரதியார்,பாரதிதாசன் போன்ற கவிஞர்களின் கவிதைகளை மேற்கோளாகக் காட்டிப் பேசியது குழு உறுப்பினர்களின் செவிக்கு விருந்தாக அமைந்தது.

அதன் பின் திரு.இரவி அவர்கள் ‘பாருக்குள்ளே ‘, ‘செந்தமிழ் நாடெனும் ‘, ‘தமிழுக்கும் ‘ போன்ற பாடல்களைப் பாடி அனைவரையும் இசை வெள்ளத்தில் மூழ்கச் செய்தார்.அதன் பின் குழு உறுப்பினர்கள் மேடைக்கு வந்து தங்களை குழுவினருக்கு அறிமுகம் செய்து கொண்டனர்.தினம் ஒரு கவிதையுடன் தங்கள் உறவு எப்படிப் பட்டது என்பதனையும் சிலர் கூறிச் சென்றனர்.

குழு உறுப்பினர் அறிமுகத்திற்குப் பின் ‘கவியரங்கம் ‘ நடைபெற்றது. அதில் கவிஞர்கள் மனித வாழ்வின் வெவ்வேறு பருவங்களைக் குறித்துக் கவி எழுதி தங்கள் திறனைக் காட்டினர். திரு.பாஸ்கர்–மழலை,திரு.ராகவன்–கல்வி,செல்வி.சுஜல்–காதல்,செல்வி.தரணி–குடும்பம்,திரு.மகேந்திரன்-முதுமை ஆகிய தலைப்புகளில் கவிதை வாசித்தனர்.

இறுதியாக ‘இன்றைய திரைப்படங்களின் மையம் அகமா ?புறமா ? ‘ என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடந்தேறியது.

நடுவர். திரு.ராகவன் இருக்க ‘அகமே ‘ என்று திரு.விஜய், செல்வி.சுஜல், திரு.சங்கர் பேச ‘புறமே ‘ என்று திரு.மகேந்திரன், செல்வி.தரணி, திரு.ஆனந்த்குமார் என்று பேசி தங்கள் கருத்துகளினால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.இறுதியில் நடுவர் இன்றைய திரைப்படங்களின் மையம் அகமும் அல்ல புறமும் அல்ல என்ற நல்லதொரு தீர்ப்பை வழங்கி தப்பித்துக் கொண்டார்.

செல்வி.இரம்யா அவர்கள் நன்றியுரை நவில,தினம் ஒரு கவிதை உறுப்பினர் சங்கமம் இனிதே நிறைவு பெற்றது. நிகழ்ச்சி முடிந்தவுடன் மீண்டும் எப்போது சந்திப்பது என்ற கேள்வியை அனைவரும் எழுப்பியதிலிருந்தே இது ஒரு நல்ல தொடக்கம் என்பதை உணர முடிந்தது.

***

Series Navigation

கே ஆர் விஜய்

கே ஆர் விஜய்