எஸ் ஷங்கரநாராயணன்
/10/
காலை எட்டு முதல் இரவு எட்டுவரை /பூரணி லன்ச் ஹோம்/ இயங்கியது. எட்டு என துவக்க நேரம் இருந்தாலும் கதவைத் திறக்கு முன் ஜனங்களின் எதிர்பார்ப்பு அதற்கு இருந்தது நல்ல விஷயம். சமுதாயத்தை ஒட்டுமொத்தமாகக் குறை என்று சொல்லிவிட ஏதுமில்லை… சற்று பொறுமையும் நிதானமான தாக்குப்பிடித்தலும் இருந்தால் எந்த சாதனையும் அபூர்வமானதல்லதான்… சமுதாயம் தலைவணங்கி வழி யொதுக்கித் தரவே செய்கிறது.
எட்டு மணிக்கே உள் நுழைகிற திரளான ஜனங்கள். வரிசையில் பொறுமைகாத்து நின்று உணவுத் தேவைகளைச் சொல்லி டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும் அவர்கள். அவர்களின் பசியை அல்லது ருசியைச் சமாளிக்க ஏழரை மணியளவிலேயே உட்பரபரப்பாகி விடுகிறது கடை. மின்யந்திர சட்னிஉரல் தலையைச் சுழற்றியடிக்க ஆரம்பிக்கிறது சாமி வந்தாற்போல. பழங்கால, இட்லியரைக்கும் கல்லுரலுக்கும், இந்தக்கால மின்னுரலுக்கும் என்ன தலைகீழ் வித்தியாசம்! கல்லுரலில் உரல் உட்கார்ந்திருக்கும்- அம்மி சுழலும். மின்னுரலில் அம்மி அமைதியாய் உம்மென்றிருக்க அடிப்பகுதி அல்லவா சுற்றி வருகிறது!
பெரும் அண்டாக்களில் பொங்கல் தயார்படும் மணம் எடுத்துவிடுகிறது வாசனையை. முந்திரிப்பருப்பு நெய்யில் வேகும் வாசனைக்கு உண்டோ இணை. பால் காயும் வாசனை ஒருபுறம். சூடாக டிகாக்ஷன் இறங்கும் மணம். அன்றன்றைக்கு மிக்சியில் புதிதாய் அரைத்தெடுக்கிற சாம்பார்ப்பொடியின் துாக்கலான கார உக்கிரம். ஒரு கல்யாண சமையல்க்கூட ஜோரில் ஆயத்தங்கள்.
ஒருத்தி உட்கார்ந்த ஜோரில் குழந்தையின் விளையாட்டுக் குதிரையில் போகிறாப்போல தேங்காய்ப்பூ குடைந்தெடுத்துக் கொண்டிருக்கிறாள். ஒரு பக்கம் நறுக்கிய காய்கறி மலை. விநாயக சதுர்த்திப் பிள்ளையார் வடிக்க களிமண் எடுத்து உருட்டிப் பிசைந்தாற் போல… சப்பாத்தி மாவு மண்டை. பெரிய சைஸ் சப்போட்டா! மைதா மாவின் திரட்சி- பரோட்டா தயாரிப்புக்கு. வரும் ஜனங்களோ மிகுதி. கையால் உருட்டி நீட்டி அவற்றைப் பக்குவப் படுத்த முடியாது- கை விட்டுப்போகும். புடவையை ஏற்றிக் கட்டிக் கொண்டு ரேணுகா சப்பாத்தி மாவை மிதித்துக் கொண்டிருக்கிறாள். மண்பானை செய்யப் போகிறதைப் போல்! தாம்பாளத்தில் குச்சிப்புடி நடனம் ஆடுகிறதைப் போல. இட்லிவேகும் பெரிய கொப்புரையின் ஆவியதிர்வுக்கு இட்லி வெந்த அடையாளம், மற்றும் வாசனை. அழும் குழந்தையை சமாதானப்படுத்தி குப்புறப் போடுவதைப் போல அப்பெரும் இட்லித்தட்டுகளை மாலதி கவிழ்த்துப் போடுகிறாள்.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வேடிக்கையான காட்சி. ஆனால் எல்லாருமே ஒருவரை யொருவர் பார்க்க நேரமில்லாதபடி யிருக்கிறது. அவரவர் வேலைப் பரபரப்பு. இந்த வேடிக்கை காணாது என்று பதார்த்தங்கள் சுத்தமாக அமையவேண்டி அவர்கள் வாயைக் கட்டிக்கொண்டு ஆபரேஷன் தியேட்டரில் போல இயங்குகிறார்கள். தலைமுடி உதிர்ந்து விடாமல் இருக்க அநேகர் தலையைத் துண்டால் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்… ஷிர்டி சாய்பாபா போல. பூரி வகையறாவோ, வடையோ ஆறிவிட்டால் அதன் மொறுமொறு தன்மை – ருசி குறைந்து விடும் என்கிறதால் அதற்காய் ஒரு சுற்று பூரி – பிறகு நிறுத்தி விட்டு வடை என ஒருத்தி வெந்த எண்ணெயில் போட்டெடுத்துக் கொண்டிருக்கிறாள். சற்று அவசரப்பார்வைக்கு விட்லாச்சாரியா படத்தின் பேய்க் கும்மாளம் எனக் கிடந்தது அந்தக் கூடம்…
அந்த லன்ச்ஹோம் சாம்பாருக்குப் பேர்போனது. பாமர ஜனங்கள் அதை சாம்பார்-இட்லிக்கடை என்றே சொல்வதைக் கேட்கலாம். சாம்பாரில் மிதக்கிற இட்லிகளை ஆவி பறக்க எவர்சில்வர் ஸ்பூனால் வெட்டி ஒரு பிடி பிடித்தால் வயிறு கும்மென்று பசியடங்கி கைகழுவுகையில் ஏப்பம் வரும். மற்ற கடைகளில் காலை அதிகம் விற்கிற டிபனாக பொங்கல்-வடை, இட்லி-வடைகறி, பூரி-மசாலா என்பார்கள். /பூரணி/யில் சாம்பார்-இட்லிதான் பிரபலம்.
தனிப் பக்கமாக இனிப்பு வகைகள் கண்ணாடிச் சிற்றறைக்குள். எல்லாமே அநேகமாக நாலைந்து நாளில் தீர்ந்து புதிதாய் மீண்டும் தயாரிக்கிறார்கள்.
இந்தப் பக்கம் பஸ்நிலையம் பத்து-ஐம்பது அடி துாரத்தில். அந்த ஊரின் தனிச் சிறப்பு- தொட்டுத் தொட்டு வணிக அளவிலான தெருக்கள் அடுத்தடுத்த தெருக்களில் அமைந்திருந்தன. ஒரு தெரு நெடுக காகிதக் கடைகள். திருமண வாழ்த்து அட்டைகள் முதல், ஸ்வீட்-காரம் பரிமாறும் காகிதத் தட்டுகள், பாலித்தின் உறைகள், காகித தேநீர்க் கப்புகள் என விற்கும் கடைகள் வரிசை. அடுத்த நீட்சியில் எல்லாமே ஃபேன்சி மற்றும் பரிசுப் பொருட்கள் விலை மலிவாகவும் மொத்த விற்பனைக்குமான கடைகள். கல்யாணத் தேவைகளை மனசில் நிறுத்தி அவை நிறைய அடுக்கப் பட்டிருந்தன. அச்சகத் தேவைகள், ஜிகினாக் காகித அலங்காரக் காகிதங்கள், வண்ணக் காகிதங்கள் விற்பனைக் கூடங்களின் வரிசையான தெரு ஒருபுறம்…. அடுத்து கண்ணாடிக் கடைகள், பாய்க் கடைகள், கடிகாரக் கடைகளின் வரிசை…. பாத்திரக் கடைகள்… கவரிங்-நகைக் கடைகள். உத்திரவாதமான கவரிங் என வேடிக்கையான விளம்பரங்கள்… நகையே பொன் அல்ல, கவரிங். இதில் உத்திரவாதமான போலி வேறயா!… நேரெதிர் வரிசையும் அமக்களமானதுதான்- அது பூக்கடைகள், பழ அங்காடிகள், காய்கனிக் கடைகள்… என நீண்ட வரிசை கண்டவை…
நடுவே வகிடெடுத்த ஊடாடு பாதையில் பஸ் போகத் திணறும். ஜனங்களை அனுசரித்து பஸ் கவனமாய்ப் போகும். பஸ் சத்தத்தை மதிக்காமல் ஜனங்கள் அவர்கள் பாட்டுக்குக் கடந்து போகிறார்கள்.
வகிடுக்கு இந்தப் பக்கம் காய்ந்து கிடக்கிறது. உலர்ந்த பகுதி அது. அந்தப் பக்கம் பழக்கடை, காய்கனிக்கடை. பூக்கடை என வரிசை அமைகிறதில் சாலை ஈர நசநசப்பாய்க் கிடந்தாலும் கலவையான கூட்டு வாசனை அது தனி எடுப்பு அல்லவா ?
அந்தப் பகுதியில் புத்துார் தனி வளர்ச்சி கண்ட ஊர்தான். அத்தோடு அந்தப் பகுதியின் புதிய எம்.பி. ஒருவர் – தனிக்கட்சி என்று துவங்கி போணியாகாதவர்… எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை அமையாத அளவில் அவரது ஓட்டுக்கு மகிமை வந்து, ஆளப்போகிற கட்சிக்கு ஆதரவு தந்து மந்திரியாகவே ஆகிவிட்டார். அவராலேயே நம்ப முடியாத விஷயமாய் இருந்தது அது. அவரால் ஊர் கிடுகிடுவென்று வளர்ச்சி கண்டது. அந்த எம்.பி. அடுத்த தேர்தலிலும் வெற்றி உறுதி என்கிற மிதப்பில் இருக்கிறார்.
– அங்கே தட்டுத் தடுமாறி வந்து சேர்ந்த பெண்கள்தான் ஒவ்வொருவரும். எல்லாரும் பருவம் தாண்டாத, முதுமை தீண்டாத வயதினராக இருகிறதைப் பார்க்க முடிகிறது. உள்ளூர்ப் பெண்கள் சிலரும் வேலைக்கு வந்துவிட்டு இரவானால் தம்வீடு திரும்பிப் போய்விடுகிறார்கள். எல்லாருக்கும் பின்னணியில் ஆழமான வடுக்கள் இருக்கவே செய்கின்றன. என்றாலும் அவரவர்கள் ஒருவருக்கு ஒருவர் துணை. ஒருவருக்கு ஒருவர் ஆறுதல். ஒருவரைப் பார்த்து ஒருவர் புன்னகை செய்து கொள்கிறார்கள். அவர்கள் நடுவே ஒரு சுமுகமான அமைதி பாவனை அற்புதமாய் இருக்கிறது.
அதைவிட அழகான விஷயம் அவர்களிடையே கிளைக்கிற புதிய உறவுகள். இயல்பாகவே சிலர் சிலரது அன்புப் பிடியில் நிழல்-கிடைக்க நெகிழ்கிறார்கள். மரகதம் மாமிக்கு வத்சலாவின் முகம் தன் செத்துப்போன பெண்ணை ஞாபகப் படுத்துவதாய் இருக்கிறது. வத்சலாவுக்கு இதே வயசுதான் இருக்கும், இப்போது அவள் இருந்தால். என்ன வித்தியாசம் வத்சலா மூக்கு குத்திக் கொண்டிருப்பாள். இவளைவிட சற்று உயர எடுப்பாய் இருப்பாள். ஆனால் சிரிப்பெல்லாம் அதே சிரிப்புதான்.
இந்த மாதிரி புதிய உறவுக் கிளைகள் சுடருக்கு மகிழ்ச்சி தருகின்றன. அவள் வயசில் அங்கே இன்னொரு பெண்… ராசாத்தி என்று பேர். எப்போதும் சிரித்த முகம். சுடரைப் பார்த்து ‘உன்னைப் பார்க்க என் பக்கத்து வீட்டுப் பெண் விஜயா போலவே இருக்கு ‘ என்கிறாள். சுடர் புன்னகைத்தாள். ‘அதுக்காக அவ உனக்குத் திருப்பித்தர வேண்டிய கடனையெல்லாம் நான் தர முடியாது ‘ என்றாள் சுடர்.
பெண்கள் கலகலக்கிறார்கள்…
***
காதலித்து, அவனுடன் ராசாத்தி வீட்டைவிட்டு ஓடிவந்தவள். ஓடி வந்துவிட்டாளே தவிர இருவருக்குமே வேலையில்லை. அவள் அவசரப் பட்டிருக்கக் கூடாது. அவன் அவசரப் பட்டான். அவள் ஒத்துழைத்திருக்கக் கூடாது. சற்று நெகிழ்ந்ததோர் கணத்தில் தன் உடம்பை அவனுக்கு விட்டுக் கொடுத்திருக்கக் கூடாது. அவள் எவ்வளவோ ஜாக்கிரதையாய்த்தான் இருந்தாள். அவன் பிடிவாதம் அதிகரித்தது. ‘என்மேல் நம்பிக்கை இல்லியா ? நம்பிக்கை இல்லியா ? ‘ என்கிறான் கண்சிவக்க. பிடிவாதமான குழந்தைபோல் தலைசிலுப்பிக் கேட்டபோது… திருப்பித் திருப்பிக் கேட்டபோது மனம் இளகி விட்டது. பழக்க நெருக்கமும் உரசல்களுமாய் மத்தபடி அவள் அவனுடன் வியர்வை மணக்க வளைய வந்தவள் தானே ? சட்டென விட்டுக் கொடுத்த கணம் உள்வயிறு திறந்து கொண்டது…
ரொம்பக் கலவரமாகி விட்டது. வீட்டுக்கே தெரியாது. அவளுக்கே இப்படியெல்லாம் ஆகிப்போகும் என்று தெரியாதபோது வீட்டுக்கு எப்படித் தெரியும் ?
ராசாத்தியே அறியாமல் அவளுள் குழந்தை. ஒரு கல்யாணமான தோழிதான் விபரம் கண்டு பிடித்தது. அவனிடம் சொன்னால் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறான். ‘இப்படியெல்லாம் ஆகும்னு எதிர்பார்க்கல ‘ என்கிறான். நல்லவன்தான். ஆசை! உடம்பாசை! திடாரென்று அவளைப் பார்த்து ‘ஓடிப் போயிறலாமா ‘ என்கிறான். திகைத்து விட்டாள்.
வேறு வழியும் தெரியவில்லை. கடைசியில் தலையாட்டினாள். ‘வீட்லேர்ந்து கொஞ்சம் பணம் கொஞ்சம் நகை எடுத்திட்டு வா இவளே… ‘ என்றான் குமார். ‘நானும் முடிஞ்சதைக் கொண்டு வரேன் ‘ என்றபடி முத்தமிட வந்தவனை முதன்முதலாக வெறுத்தாள். அந்த முத்தத்தை ஒதுக்கினாள்.
இந்த ஜாக்கிரதை உணர்வு முன்பே இருந்திருக்கலாம்.
சொன்னபடி அவன் பணம் எதுவும் எடுத்து வந்திருக்கவில்லை. அதுவே ஏமாற்றமாய் இருந்தது. பஸ்சில் அவனுடன் பயணம் திக் திக் என்றிருந்தது. பஸ் கிளம்பும்வரை உட்கார இருப்புக் கொள்ளவில்லை. ‘எங்க போறம்… ‘ என்றாள். ‘என் சிநேகிதன் ஒருத்தன் நெய்வேலியில் இருக்கான்… அவசரம்னா கண்டிப்பா உதவுவான். அங்க போயிறலாம். பிறகு மத்தது எப்பிடி ஆகுதுன்னு பாப்பம் ‘ என்கிறான். அவனே பயந்திருந்தான்.
திடாரென்று அவனைப் பார்க்கப் பாவமாய் இருந்தது. தவறு அவள்மேலும் தானே ? அவள் இடம் கொடுத்ததால்தானே ?… பஸ் இருட்டில் நெருக்கமாய் அவனுடன் உட்கார்ந்து கொண்டு உரசினாற்போல முத்தங் கொடுத்தாள். அவன் அவசரமாய்த் துடைத்துக் கொண்டான் வெறுப்புடன். இப்போது அவன் அவளை வெறுப்பாய் உணர்ந்திருந்தான்…
கணந்தோறும் அவர்கள் ஒருவரை ஒருவர் வெறுக்கிற மாதிரியும் விரும்புகிற மாதிரியும் இருந்தது இருவர் மனநிலையும்.
புத்துார் பஸ்நிலையத்தில் அவள் கண்விழித்தபோது அருகில் அவன் இல்லை. இடையே எங்கோ இறங்கிப் போயிருந்தான் போல. அவசரமாய் தன் பெட்டியைப் பார்த்தாள். நகைகள் இல்லை. பணம் இல்லை.
‘நான் அபார்ஷன் செய்து கொண்டேன் ‘ என்றாள் சிரித்தபடி ராசாத்தி. அதனுள்ளே மாளாத சோகம் இருந்தது. ஆயுள்பூராவும் அது மனசில் கறையாய் நிற்கும். அழியாது.
‘நீ காதலனால் கற்பழிக்கப் பட்டவள். நான் காமுகர்களால் சூறையாடப் பட்டிருக்கிறேன். நெஞ்சில் சிகெரேட் சூடு கூட பட்டிருக்கிறேன்… ‘ என்றாள் சுடர்.
‘ஐயோ ‘ என நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள் ராசாத்தி. ‘எப்படித் தாங்கிக் கொண்டாய்… நானாயிருந்தா செத்திருப்பேன்… ‘
என்னவோ வாயில் வந்து விட்டது. சுடர் ஆவேசமாய் அவளுக்கு பதில் சொன்னாள்.
‘சாவில் வாழ்க்கை அர்த்தம் பொருந்தியதாய்த் தெரியவேண்டியதே முறை… வாழ்வில் சாவு அர்த்தம் பொருந்தியதாய்த் தெரியக் கூடாது ‘ என்றாள் சுடர்.
—-
ஒரு துயரக் கண்காட்சி போல அவர்கள் அங்கே ஒன்று திரண்டிருந்தார்கள். சூழல் அவர்களை வேட்டைநாயாய்த் துரத்தி யிருந்தது. சில கடித்துக் குதறியும் இருந்தது. அதில் விபத்தாகி உயிரை மாய்த்துக் கொண்டவர் எத்தனை பேர் தெரியவில்லை. மிச்சம் இருந்தார்கள் இவர்கள். வீறுகொண்டு நிமிர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு வணக்கம்!
விழுவதில் தவறில்லை. அதற்கு வெட்கப்பட வேண்டியதும் இல்லை. ஆனால் வீழ்ந்தபின் துாசிதட்டித் தள்ளி எழுவதில் அல்லவா இருந்தது புதிய கீற்றின்-பட்டத்தின்-நுனி. சுடர் புன்னகைத்துக் கொள்கிறாள்… வீழ்வதற்கு நீ காரணம் அல்ல, உண்மைதான். ஆனால் எழாமல் இருப்பதற்கு நீதானே காரணம் ?!
சட்டென்று பெரிய வார்த்தை மனசில் வந்து விட்டது. ஆச்சரியம். தன்னம்பிக்கைப்பட்ட மனசில் வழியின் வகிடு தெரியவே செய்கிறது.
வீட்டிலேயே அவள் அதிகாலை எழுந்து பழகியவள். கோவில் செல்லும் ஜனங்கள் காலையில் இருந்தே பூவுக்காக அவளை நம்பி யிருந்தார்கள். பஜார்ப் பக்கம் கடை போட்டதில் சிற்சில தொந்தரவுகள் என ஆரம்பித்து, புருஷனும் சரியில்லை… என்றான நிலையில் அவள் பெரிய மூங்கில் தட்டில் ஈரத்துண்டுக்குள் பூ-ஆரங்களைச் சுற்றி மூடி எடுத்துக் கொண்டு வீதிவீதியாய் விற்கப் போய்வந்தாள். பூஜை-விசேஷ நாட்கள் என்றால் முன் இரவே ஓரளவு தயாராகி பூப்பந்துகளை எடுத்துக் கொண்டு கோவில் வாசல்களில் விற்பனை செய்தாள். மீதி யிருந்த பூக்களை வீதிகளில் கூவி விற்றுவிட்டு காலிக் கூடையுடன் வீடு திரும்பினாள்….
பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை என்கிறார்கள். என்றாலும் தெருவில் பூவைக் கூவித்தானே விற்க வேண்டியிருக்கிறது. வெறும் வாசனை பெண் கடந்து போகிறாப் போல இருக்கும். விற்பனைக்குப் பூ என்கிற கவனஈர்ப்பு செய்யுமா என்ன ?!
அவை யெல்லாம் பழைய கதை என்றாகி விட்டது. எத்தனையோ கருப்பு நிமிடங்கள் கடந்தாகி விட்டது. தாலியைக் கழற்றி ஆணியில் மாட்டியது உட்பட… ஆ, என்று பக்கத்து வீட்டு கோவிந்தம்மா அலறியது இன்னும் ஞாபகம் இருக்கிறது. அவள்தான் துப்பு கொண்டு வந்தது கணவனைப் பற்றி. மாசிலாமணி வேறொருத்தியுடன் குடித்தனமாகி விட்டான்…
கொஞ்சநாள்த் திகைப்புக்குப் பின் அவள் முடிவு செய்தாள். அவனை நான் மறக்க வேண்டும். அவன் மறந்து விட்டான். நானும் மறந்துவிட வேண்டும். முடியாது என்று சொல்வது அபத்தம். அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. என்னை நானே ஏமாற்றிக் கொள்வதற்கு புனிதம் பண்பாடு என்றெல்லாம் பெயர் கொடுத்தால் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ? எப்படி ?
தன் கழுத்தைப் பார்த்துக் கொண்டாள்.
அவளுக்குச் சிரிப்பு வந்தது. கட்டியவன் அவன். அவனே மறந்து விட்டான். பெற்றுக் கொண்டவள் நான். நான் நினைவாய்ச் சுமந்து திரிய வேண்டுமா ? கண்மூடித்தனமான நம்பிக்கை வைக்க கசாபியன்கா சிறுவனா நான் ?… அழிந்து போனான் கசாபியன்கா பாவம்…
கசாபியன்காவும் அவன் தந்தையும் படகில் போகிறார்கள். பெரும் புயலில் தோணி சிக்கிக் கொள்கிறது. இங்கேயே இரு நான் வரும்வரை என்றுவிட்டு அப்பா வெளியே போகிறார். புயலில் தோணியைக் கட்டுக்குள் செலுத்த அவரால் முடியவில்லை. அவர் இறந்து விடுகிறார். இந்த நெருக்கடி நேரம் அவர் குழந்தையை அருகில் வைத்துக் கொண்டிருக்க வேணாமா ? எவ்வளவு நல்ல பிள்ளை அவன்…
அப்பாவுக்கு வாக்கு தவறாத பிள்ளை. அப்பா வருவார், வருவார் எனக் காத்திருந்தான். படகு செலுத்த ஆளில்லாமலும் கடும் சூறைக் காற்றிலும் தத்தளித்துத் தடுமாறுகிறது. மகனுக்கு நம்பிக்கை தளரவில்லை. அப்பா எப்படியும் வந்து விடுவார்… படகு மூழ்க ஆரம்பித்து விட்டது. அவனும் சேர்ந்தே மூழ்கி இறந்து போனான் அப்பா இறந்த இடத்துக்கே இறுதியில் அவனும் போய்ச் சேர்ந்தானோ என்னமோ ?
குழந்தைகளுக்கு இதன் மூலம் – பாடப்புத்தகத்தில் இதைச் சேர்ப்பதின் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் என்றே தெரியவில்லை.
ஆங்கில மோகத்தில் ஆங்கிலவழிப் பள்ளியில் படிக்கிற குழந்தைகள் – Rain rain go away… Come again another day… Little Tommy wants to play – என்று பாடல் புகட்டப் படுகின்றன. குளிர்நாட்டு ஆங்கிலேயர்களின் பாடல் அது. மழை அவர்களுக்கு ரெண்டாம் பட்சம்தான். நமக்கு ? வெப்ப நாடான நமக்கு வானின்று அமையாது உலகு. நீர் இன்றி அமையாது… பெய்கிற மழையே பற்றாது இங்கே!
கல்வி முறையிலும் வாழ்க்கையிலும் எத்தனை அபத்தங்களைச் சுமந்து திரிகிறார்கள் ஜனங்கள்…
தான் தாலியைக் கழற்றிக் கொண்டதில் அவளுக்கு வெட்கம் கிடையாது. மறு யோசனை கிடையாது. கட்டியவன் அவன் அல்லவா ? மதிக்க வேண்டியது யார் நானா ?… அவன் அல்லவா ? அவனே அதை மதிக்காமல் புறக்கணித்தபின் அவள் அதைச் சுமந்து திரிவது… அவன் ஞாபகங்களைச் சுமையாய்த் துாக்கிக்கொண்டு அலைவது… அதைப் புனிதம் என ஜனமொத்தமும் நம்புவது வேடிக்கை. தவறு செய்பவர் ஆண்கள். தண்டிக்கப் படுகிறவர்கள் பெண்கள்… சீச்சீ!
அவள் தாலியைக் கழற்றி ஆணியில் மாட்டிய நாள் மிகப் பெரும் விடுதலையாய் உணர்ந்த நாள். நிம்மதியாய் உறக்கம் கண்ட நாள் அது. எத்தனை நாள் அவளது நிம்மதியான உறக்கத்தைப் பறித்துக் கொண்டிருந்தது அது…
சரி, கடந்தவை இனி திரும்பி வரா. சென்றது இனி மீளாது என நம்புவோம்.
பூரணி லன்ச்ஹோம் அபலைப் பறவைகளின் சரணாலயம். அதிகாலை மதியம் என இரு பிரிவுகளாக அங்கே பணியமைப்பு இருக்கிறது. சுடர் காலையில் வேலைக்கு வரவே பிரியம் கொண்டிருந்தாள். பழக்க அம்சமாகவே அவளுக்கு சீக்கிரம் விழிப்பு வந்து விடுகிறது. சட்டென்று இதுநாள்வரை அவளைப் பயமுறுத்தி வந்த வாழ்க்கையில் பிரச்னையே யில்லை என்கிறதாய் பிரமிப்பு தட்டிய இடம் அல்லவா இது. அதை நன்கு பராமரிப்பது தனது கடமை, தான் அதற்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாய் அவள் உணர்ந்தாள். அது வெறும் உணவகம் அல்ல. இல்லம். அவளது இல்லம்.
அதிகாலை எழுந்து அத்தனை நாற்காலிகளும் மேஜைமேல் கவிழ்த்திக் கிடக்கிற அந்த சாப்பாட்டு அறையை சுத்தமாய்ப் பெருக்கினாள் அவள். வாடிக்கையாளர்களே டோக்கன் பெற்று வேண்டிய உணவைப் பெற்றுக் கொண்டு சட்னியோ சாம்பாரோ தாமே ஊற்றிக் கொண்டு ஆடிபதினெட்டாம் பெருக்கில் புதுத்தண்ணீரில் தீபத்தை விட எடுத்து வருகிறதைப் போல ஆடாது அசங்காது மேஜைக்கு வருவார்கள் சாப்பிட. எப்படியும் துளிகள் சிந்தி தரையில் அழுக்கும் பிசுக்கும் பற்றிக் கொள்ளாமல் போகாது.
இரவு எட்டுமணிக்கு கடை மூடியபின் சோப் போட்டு அந்தத் தரை சுத்தமாய்க் கழுவி விடப்படும். என்றாலும் காலை ஒருமுறை நீளப் பெருக்கி விடுவாள் சுடர். உணவு வழங்கும் மேடைப் பக்கம் பெரிய படம் இருக்கிறது. ஸ்ரீ அரவிந்த அன்னையின் படம்… என்ன அருமையான கண்கள் அவை. அன்னை பற்றி அவளுக்கு எதுவும் தெரியாது. கேள்விப் பட்டது கூட இல்லை. இரவானாலும் பகலானாலும் மினுக் மினுக்கென விளக்கெரியும் படம். அதிகாலை முதல் விழிப்பில் அன்னையைப் பார்க்கவே மனசில் தனித் தெம்பாய் இருக்கும். உற்சாகமாய் இருக்கும். அந்தப் புன்னகை… அதில் தெரிகிற அரவணைப்பு, ஆறுதல். அது எத்தனை உணர்வுகளைப் பரிமாற வல்லதாய் இருக்கிறது. உணவு பரிமாறுகிற மேடைக்குப் பின்னாலிருந்து அன்பைப் பரிமாறிக் கொண்டிருந்தது அது.
உண்மையில் அந்த அதிகாலையில் பிறர் விழிக்குமுன் தான் தனியே அந்த அன்னையை தரிசிக்க விரும்பி யிருந்தாள் சுடர். எப்படியோ அப்படியோர் பிடிப்பு விழுந்திருந்தது அவளில். அந்த அதிகாலைத் தனிமை. இதமான குளிரான சூழல். நீண்ட பெரும் வளாகத்தின் அமைதி. அவளும் அன்னையும் மாத்திரம். எத்தனை அருமையாய் இருந்தது உலகம். அவள் மனம் குவிய கைகளைக் குவித்து அதையே தாமரையாக்கி அன்னையை வணங்கினாள். இன்றைய நாளைச் சிறப்பாக்குவாய் அன்னையே. அபார சுறுசுறுப்பு தந்தது அன்னையின் பார்வை. வெறும் படம். அதன் வெறும் பார்வை என்று எடுத்துக் கொள்ள முடியாத ஆளுமை அது.
எத்தனை தெம்பைத் தந்தது அது. விறுவிறுவென்று தரையைப் பெருக்கி சுத்தம் செய்து வாசலில் – ஆமாம் கடைவாசலில் தெளித்துப் பெரிய கோலமாய்ப் போட்டாள் அவள். நல்வரவு எனக் கோலத்தில் எழுதினாள். எத்தனை துாரத்தில் வேலை செய்து கொண்டிருந்தால் என்ன ? பின்னால் அன்னை வந்து அவளை வேடிக்கை பார்ப்பது போல, சக தோழியென புன்னகையைப் பரிமாறியது போல உணர முடிகிறது அவளால்…
சட்டென ஒளி நிமிர வெளிச்சம் பரவி ஊடுருவத் தொடங்குவதை அன்னையின் அருள்ப் பரவலாகவே அவளால் உணர முடிகிறது. ஒரு படம். ஒரு பார்வை… அதற்கு இப்படியோர் ஈர்ப்பா என அவளுக்கு பிரமிப்பாய் இருந்தது.
இதுவரை கடந்துவந்த காலங்களின் கருப்பு நிமிடங்களையே மனசின் கறைகளில் இர்ந்து துடைத்து வழித்து எறிந்து விட்டாப் போல மனசில் நிம்மதியாய் இருந்தது அவளுக்கு.
சுடர் எதிர்பாராத மகிழ்ச்சியான ஒரு விஷயம் நடந்ததே…
விடுதியில் சிற்றுண்டி அருந்த வந்த அந்த தம்பதியர்… அவள் உணவு பரிமாறிக் கொண்டிருக்கிறாள். டோக்கன் பெற்றுப் பெற்று தட்டுகளில் பூரியும், பொங்கலுமாய் விநியோகித்துக் கொண்டிருக்கிறாள். டோக்கன் தந்த அந்தப் பெண்மணி… அன்னையின் படத்தைப் பார்க்கிறாள். அவளையும் பார்க்கிறாள். என்ன தோன்றியதோ ? அவளைப் பார்த்து நெருக்க உணர்வான புன்னகை ஒன்றைச் சிந்தினாள்.
‘ ‘என்னோடு வந்து விடுகிறாயா ? ‘ ‘ என்றாள் அந்த மூதாட்டி அவளிடம்.
‘ ‘எந்த ஊர் உங்களுக்கு… ‘ ‘
‘ ‘பாண்டிச்சேரி… வீட்டில் நான், என் கணவர் இருவரே. உன் வரவு எங்களுக்கு சிறு உதவிகளைத் தரும். உற்சாகம் தரும் என்று படுகிறது ‘ ‘ என்றாள் பெரியம்மா.
‘ ‘சரி ‘ ‘ என மகிழ்ச்சியுடன் ஒத்துக் கொண்டாள் சுடர். அவளுக்கு அந்த மாமியைப் பிடித்திருந்தது.
—-
/தொ ட ரு ம்/
- முரன்புதிரான சவுதி அரேபியாவும் முரன்புதிரற்ற ஹிந்துஸ்தானும்
- இந்தியாவில் இந்து-முஸ்லிம் ஒற்றுமை
- தாமதமான காரணம்
- வட அமெரிக்காவில் மனிதரைக் கொல்லும் அசுர வலுக்கொண்ட இடிப்புயல் சூறைக்காற்றுகள் (North America ‘s Killer Thunderstorm Tornadoes)
- பேரீச்சம்பழ மிட்டாய்
- கேரட் அல்வா
- கடலைப்பருப்பு அல்வா
- தாய்மையின் குரல் – வாசிப்பனுபவம் (எட்டுத் திசையெங்கும் தேடி-பாவண்ணன். தினமணிக்கட்டுரைகளின் தொகுப்பு)
- ஒரு முழுப் பூசணிக்காயும், சில சோற்றுப் பருக்கைகளும்
- நமது இலக்கிய மரபு – பாிபாடலில் திருமால் –
- கடிதங்கள் மார்ச் 25 2004
- திரு.பித்தன் அவர்களுக்கு கடிதம்
- வேதனையின் நிழல்…
- ஓடாமல் இருப்பதே ஆச்சரியம்
- காதல் பொதுவானது
- தரிசானாலும் தாயெனக்கு!
- தொடர்ந்து வரும் நட்பு..
- கேட்க முடியா ஓசை
- ஞாயிற்றுக்கிழமை மின்விசிறி
- இட்லிப் பானையும் ரொட்டித் துண்டும்
- அனிதா கவிதைகள்
- புத்தர் ஏவிய தூதுப் புறாக்கள்
- மானுடம்
- தனக்கான நிகழ் காலங்கள்
- மதுபானக் கம்பெனியால் நடத்தப்படும் கலைநிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம்!
- கதை 01 – அலீ தந்த ஒளி
- கொரியர் (ஓ. ஹென்றி யின் ‘By Courier’ கதையின் மொழிபெயர்ப்பு)
- வடு
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐம்பத்தொன்று
- திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 17
- புழுத் துளைகள் (குறுநாவல்) – பகுதி 1
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 12
- சிந்தனை வட்டம், நியூ ஜெர்ஸி வழங்கும் தமிழ்க் கலைப்பட விழா
- இருபது/இருபது
- வாரபலன் – மார்ச் 25,2004- கட்சிக்கு ஆள்சேர்ப்பு, மலையாளக்கவிதை, சினிமா, தேசியமயம்
- காவிப் பயங்கரமும் காஞ்சி சங்கராச்சாரியும்
- வாழ முற்ப்படுதல்.
- முரண்புதிரான சவுதி அரேபியா – பகுதி 2
- பெண்கள் விடுதலை அடைய ஆண்மை அழிய வேண்டும்
- மெக்ஸிக்க மணித்துளிகள்
- சூடான் ஒரு சிறு வரலாற்றுக் குறிப்பு
- நண்பன்
- நான்
- ஜென் கதை ஒன்று
- இயன்றது
- தொடரட்டும் பயணம்…!!!
- அன்புடன் இதயம் – 12 – நெருப்பு