தாலாட்டு

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

பசுபதி


தாரணி நம்மூர்; பாரிலோர் கேளிரெனத்
தாரகம் ஆர்த்தகவி தந்தான் உனக்கிதயம்;
வேரைப் புரிந்துபின் மேலே வளர்ந்துவிடு;
பாரதப் பெண்ணரசி! தாலேலோ!
. . பைந்தமிழ்ச் செல்வமே! தாலேலோ! (1)

கண்ணகியும் மாதவியும் கைகோத்து வந்தனர்;
வண்ணச் சிலம்பிரண்டு போட்டு மகிழ்ந்தனர்.
பண்டைக் கலையில் படைப்பாய் புதுமைகளை!
கண்ணசைத்துக் காலசைத்துள் ளங்கவர்
. . கள்ளியே! வள்ளியே! தாலேலோ! (2)

நம்பனைப் பண்ணிசையால் நாடிடக் காரைக்கால்
அம்மை தமிழ்மரபை, ஆண்டாள் இசையறிவை,
சம்பந்தர் தாளத்தைத் தாமுவந்து தந்தனரே.
சம்பகப் பூப்பந்தே! தாலேலோ!
. . தவழ்மழலைத் தென்னிசையே! தாலேலோ! (3)

எண்ணும் எழுத்துமே கண்ணெனக் கொள்ளென்று
தண்டமிழ்ப் பாட்டியார் தந்தார் உனக்கறிவு;
விண்ணோர் வியந்திட மண்ணினை மாற்றிடு!
கண்மணி! கண்வளர்! தாலேலோ!
. . கட்டிக் கரும்பே!நீ தாலேலோ! (4)

முன்னம் இருமுனிவர் மூலர் அருணகிரி
‘அன்பே சிவ ‘மென்(று) ‘அவிரோதம் ஞான ‘மென்றும்
சொன்னப் பதக்கங்கள் சூடக் கொடுத்தனர்;
என்னுயிரே ! ஆரமுதே! தாலேலோ!
. . இன்பச் சுரங்கமே! தாலேலோ! (5)

காய்தல் உவப்பின்றிக் கண்டதும் கேட்டதும்
சாய்வின்றித் தந்தநம் சாமிநா தய்யனும்
ஆய்வு பொறுமையிரு கண்ணீந்தான் அன்புடனே;
வாய்மை வழிவகுப்பாய்! தாலேலோ!
. . மயிலே! மரகதமே! தாலேலோ! (6)

தேச விடுதலை செந்தமிழ் என்றுபல
மாசில் கனாக்களால் வானம் அளாவிய
மீசைக் கவியுனக்கு மீதியைத் தந்தான்;அவ்
வாசைகள்மெய் ஆகுக! தாலேலோ!
. . அவனிக் குடிமகளே! தாலேலோ! (7)

~*~o0O0o~*~
pas@comm.utoronto.ca

Series Navigation

பசுபதி

பசுபதி