தாணிமரத்துச் சாத்தான்…..!

This entry is part [part not set] of 37 in the series 20100912_Issue

கலாசுரன்


அந்த வீட்டிற்கு கிழக்காலே
அந்த இரண்டு மரங்களும்
கால்வலிக்க நின்றுகொண்டிருந்தன..!

அங்கு யாரும் பொதுவாக
செல்வதில்லை
அந்த அரசமரத்தடியிலான
கோயில் பூசாரியை தவிர

பக்கத்தில் நிற்கும்
தாணி மரத்திலும்
ஒரு விளக்கு
எரிந்துகொண்டிருப்பதுண்டு

அரசமரத்துக் கடவுளும்
தாணி மரத்துச் சாத்தானும்
எங்களுக்கு விந்தையானதாக
இருந்தது

அந்த மரங்களில்
ஏதேனும் ஒன்றைப் பார்த்து கூட
சூண்டுதலோ
உமிழ்தலோ கூடாதென்றே
நம்பியிருந்தோம்

அப்படி ஏதேனும் நிகழ்ந்தால்
ஓன்று சாமிக்குற்றம்
அல்லது சாத்தான் குற்றம்
இரண்டும் பிரச்சினை தான்…

அங்கு எச்சம் போடும்
காக்கா, குருவி, நாய் என
ஒன்றிற்கும் இந்த குற்றங்கள்
பலிப்பதாக பார்த்ததில்லை….!

கடவுளுக்கும் சாத்தானுகுமான தூரம்
ஏழு அடி ஆறு அங்குலம் தான்
என்று நாங்கள் தெரிந்து வைத்திருந்தோம் …

அடிக்கடி பெரியவர்கள்
அந்த மரங்களைப் பார்த்து
கன்னத்தில் போட்டுக்கொள்வார்கள்

பூசாரி
பக்தி பூசிய
விபூதியோ, பூக்களோ
வழிபாட்டிலான
அர்ச்சனை பொருட்களோ
கொண்டு வருவார்

காணிக்கை போட்டு
வாங்கிக்கொள்வார்கள்….
சுவையானவை
நாங்களும் எடுத்துக்கொள்வோம்

என்றும்போல்
அன்று மாலையிலும்
அர்ச்சனை பொருட்கள் சாப்பிட்டோம்…

அங்கு
விளையாடிக்கொண்டிருந்த
சிறுவன் ஒருவன் கவலையோடு சொன்னான்
அந்த அரசமரத்து சாமி
மிகவும் ஏழையாக இருக்கிறார் என்று …

ஏன்…? என்றவனிடம்
சாமிக்கு உடுக்க
ஒரு சிவப்பு துணிதான் இருக்கிறது
அதும் மிகவும் சிறியது…..!

பூசாரயின் காதுகளிலும்
ஒலித்தது … சிறுவனின் கவலை….!

அடுத்த திருவிழாவிலேயே
அரசமரத்து சாமிக்குக் கிடைத்தது
கிளைகளும் வேர்களும் மட்டும்
வெளியே திரியும்படியான
ஒரு சிவப்பு சட்டை ….!!

சிறுவன் ஆனந்தத்தில்
விழாமுடித்துத் திரும்புகையில்
கண்ட காட்சி
அவனை மீண்டும் கவலைப்படுத்தியது ..

அங்கு
தாணிமரத்துச் சாத்தான்
அம்மணமாக
நின்றுகொண்டிருந்தான்…!
————————————————————-
கலாசுரன்

Series Navigation

கலாசுரன்

கலாசுரன்