தாஜ் கவிதைகள் .. 1

This entry is part [part not set] of 39 in the series 20060630_Issue

தாஜ்


(இலக்கிய இதழில் வெளியான எனது முதல் இரண்டு கவிதைகள்.
மீட்சி /இதழ் 27/ஆசிரியர்: பிரம்மராஜன்/அக்டேபர் & டிசம்பர் ..1987 )

ஆசை.
——-
புத்தனை அறிய வந்த வயதில் இருந்து
மனக் கிடங்குப் பூராவும்
பெரிய பெரிய ஆசைகள்.
இன்றைக்கோ
ஆசைகளை பரீசீலிக்கும் ஆசை.

சாதகமாகிப் போன சொற்பங்களைத் தவிர
முகம் தெரியாமல் மழுங்கி இருந்தன சில
மக்கி குப்பையாய் குவிந்து கிடந்தன பல
உயிர் இருக்கும் ஓரிரண்டு கூட
இப்பவோ நாளைக்கோ முன்னவைகளை போல

நிதர்சனம் பிடிக்காமல்
வெளியேறினேன்
உயரத்தில்
சின்னச் சின்ன பறவைகள்
சின்னச் சின்ன இறக்கைகளால்
ஏகத்திற்கு உலாவிக் கொண்டிருந்து.
*
கணக்கு
——-
நிழல் தேடிஒதுங்கின
பண மரத்தின்
நிழல் தரும் சுகம் = x
அந்நியமான அரபு ராஜ்ஜியம் +
சுதந்திரமின்மை + நினைவில்
விரியும் குடும்பம் + என்
பிஞ்சுக் குழந்தைகள் + இரவில்
உணரும் மனைவியின் உஷ்ணம்
+ குறியின் தொல்லை = y
இன்னும்……
அது இல்லை + இது இல்லை = y
y x y = y2 (y squre )
x – y2 (y squre) = எதிகால நிம்மதி.

மனக் கணக்கு
ஒவ்வொன்றாய் பெருகிக் கூடும்.
ஒன்றோடு ஒன்று மோதி
பத்து நூறாகும்.
மூளையோ எல்லாவற்றையும்
கூட்டிப் பெருக்கிக்
கழித்து விடும்.
*

– தாஜ்

www.tamilpukkal.blogspot.com
satajdeen@gmail.com

Series Navigation

தாஜ்

தாஜ்