அரவிந்தன் நீலகண்டன்
முனைவர்.ஈ.பாலகிருஷ்ணன் நக்ஸல்பாரி இயக்கத்தில் ஈடுபட்டு மீண்டவர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்தவர். இன்று வரலாற்றுப் பேராசிரியராக இருக்கும் இவரது முனைவர் பட்டம் கேரள கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு குறித்ததாகும். கட்சி நூலகங்கள் மற்றும் ஆவணங்களை பார்வையிட முடிந்த தொடர்புகளை உடையவர். கூடவே கடும் உழைப்பும் சிறந்த ஆராய்ச்சிப் பார்வையும் இவரது சிறப்புகள். பல்லாண்டு ஆராய்ச்சியின் விளைவாக உருவான நூலே ‘History of the Communist Movement in Kerala ‘. இந்நூலின் மூலம் பல அரிய தகவல்கள் வெளிவந்துள்ளன. கேரள கம்யூனிஸ இயக்கத்தின் பிதாமகர்களின் பல்வேறு பரிமாணங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இதுவரை நம்முன் வைக்கப்பட்டுள்ள இந்த இடதுசாரி தலைவர்களின் பிம்பங்கள், பாலகிருஷ்ணனின் ஆராய்ச்சியின் ஒளியில், வேறு உருவங்கள் எடுக்கின்றன. இயக்கத்தின் வரலாறு உண்மையில் சித்தாந்த நூலிழையில் கட்டப்பட்டுள்ள பொம்மைகளின் பொம்மலாட்டமாகவே உள்ளது. ஆட்டிப்படைக்கும் விரல்களோ தேச எல்லைக்கு வெளியே இருப்பவை என்பதும் நமக்கு தெரியவருகிறது. ஆனால் வருத்தம் தரும் விசயம் என்னவென்றால், இங்கு பொம்மைகளாக விளங்குபவர்கள் தாமாகவே பொம்மையாக இருக்க பூர்ண சம்மதத்துடன் இணங்கியதுதான். இந்த பொம்மலாட்டத்துக்கு சம்மதித்தவர்கள் சாதாரண அரசியல்வாதிகளல்ல மாறாக கூர்த்த மதியாளர்கள். எனில் ஏன் அந்நிய சக்தியொன்றின் கையில் பொம்மைகளாக சம்மதித்தனர் ? முத்து காமிக்ஸில் முன்பு ஒரு கதை வந்தது. வெளிக்கிரகங்களிலிருந்து ஒரு இனத்தவர் வந்து மனிதர்களை கவர்ந்து அவர்களுக்குள் புகுந்துவிடுவார்கள். இப்படி வெளிக்கிரகத்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டவர்கள் கைகளில் தவளையின் கால்களில் இருப்பது போல ஜவ்வு உருவாகிவிடும். இந்த ‘தவளை மனிதர்கள் ‘ இறுதியில் மின்அதிர்ச்சி மூலம் அவர்கள் உள்ளே புகுந்த வெளிக்கிரக ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர். ஆனால் ஒரு புரொபஸர் மட்டும் மாறவே மாட்டார், ஏனென்றால் மற்றவர்களெல்லாம் அவர்களை அறியாமல் வேற்று கிரகவாசிகளின் ஆக்கிரமிப்புக்கு ஆட்பட்டனர் என்றால் புரொபஸர் மட்டும் தமது சம்மதத்துடனே அந்த வேற்றுகிரகவாசிகளை ஏற்றுக்கொண்டவர். எனவே எந்த அளவு மின் அதிர்ச்சியும் அவரை வேற்றுகிரக வாசியிடமிருந்து காப்பாற்ற முடியாது. கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் அத்தகைய ‘தவளைமனித புரொபஸர் ‘களை காணலாம். இந்த தவளைமனிதர்கள்தாம் மானுட விடுதலையின் ஆதர்ச புருஷர்களாகவும், மானுட சமுதாயத்தின் பரிணாமத்தில் அடுத்த நிலையாக விளங்கும் பொன்னுலகுக்கு நம்மை அழைத்துச் செல்லப்போகிறவர்களாகவும், நம்மைச் சுற்றி நடக்கும் அநீதிகளைக் கண்டு நாம் அடையும் அறச்சீற்றம் அனைத்திற்கும் வடிகால்களாகவும் நம் முன் வைக்கப்படுகிறார்கள். எனவே இந்த தவளைமனிதர்களின் பிம்பங்களை உடைக்கும் இயக்க வரலாற்றை நாம் தெரிந்து கொள்வது அவசியம். இந்நூல் அந்த அவசியத்தேவையை சரியாகவே பூர்த்தி செய்கிறது.
உதாரணமாக, குழந்தைத்தனமான கபடற்ற உள்ளம், கூர்த்த மதி, எளிமையின் மறுவடிவு என்பதாக ஒரு பிம்பத்தை கொண்டவர் ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட். அன்னாரின் சில ராஜதந்திர சாகஸங்கள் இந்நூலில் காட்டப்படுகின்றன. இரண்டாம் கட்ட சட்ட ஒத்துழையாமை இயக்கத்தில் ஈ.எம்.எஸ் ஈடுபடுகிறார். 17 ஜனவரி 1932 இல் அவர் சத்தியாகிரகத்தில் ஈடுபடுகிறார். கைதுசெய்யப்பட்டு மூன்று வருட சிறைத்தண்டனை பெறுகிறார். உடனேயே அவரது சமுதாய அந்தஸ்து உயரிய குடும்பம் இத்யாதிகளை குறிப்பிட்டு அரசுக்கு அனுப்பப்படும் மனுவின் பெயரில் ஏ-கிளாஸ் அந்தஸ்தினையும் பெறுகிறார். (ஆதாரம்: மாத்ருபூமி செய்தித்தாள் 20-ஜனவரி-1932) [பக்-41]. இந்த நாட்களை தாம் கழித்த விதத்தை ‘ஹாஸ்டல் வாசம் போலிருந்ததாக ‘ ஈ.எம்.எஸ்ஸே குறிப்பிடுகிறார். (மலையாளத்தில் எழுதப்பட்ட சுயசரிதை – சிந்தா பிரசுரம் திருவனந்தபுரம் 1985 பக்.151) ஈ.எம்.எஸ்ஸின் ஹாஸ்டலனைய சிறைவாசத்தின் போது இவரது ‘தோழர்களான ‘ கோபாலனும், கிருஷ்ணபிள்ளையும் அடி மேல் அடி வாங்கிக்கொண்டிருந்தனர். (மாத்ருபூமி, 26 மார்ச் 1932)
பின்னர் சோவியத் தொண்டரடிபொடி தாசராகிவிட்டார் ஈ.எம்.எஸ். சோவியத்தின் எந்த மாபாதகத்தையும் சித்தாந்த ரீதியில் காப்பது என்கிற மகத்தான நிலைபாட்டினை எடுக்கிறார் கள்ளங்கபடமற்ற ஈ.எம்.எஸ் அவர்கள். மதுலிமயே எழுதுகிறார், ‘புகாரினை நிராகரிப்பது என்பது கட்டாயமாக்கப்பட்டது. சோஷலிஸ்ட்களும் கூட இந்த அகில கம்யூனிஸ கோரஸில் சேரவேண்டுமென நிர்ப்பந்திக்கப்பட்டது. சிலர் இந்த நிலைப்பாட்டில் மாறுபட்டனர். அவர்களைக் குறித்து வசையான நிராகரிப்புகள் எழுதப்பட்டன. (Socialist Communist Interaction in India, அஜந்தா பிரசுரம், நியூடெல்லி 1991 பக்.36) [பக்.88] ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட்டும் ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார், ‘கட்சி நிலைபாட்டினை ஏற்காமல் அதனை நிராகரித்தவர்களான மினோ மசானி மற்றும் ராம் மனோகர் லோகியா போன்றவர்கள் சோவியத்தின் எதிரிகள் எனவும் கம்யூனிஸ எதிரிகள் எனவும் தூற்றப்பட்டனர் ‘ (கம்யூனிஸ்ட் பார்ட்டி கேரளத்தில், பக்.82 சிந்தா பிரசுரம் 1984)
கம்யூனிஸ்ட் கட்சி ஆவணங்கள் தோழர் ஜோதிபாஸுவால் தொகுப்பட்டவை. அதன் நாலாவது பாகத்தில் 516 ஆவது பக்கத்தில் 4 அக்டோபர் 1942 தேதியிட்ட ‘பீபிள்ஸ்வார் ‘ பத்திரிகையில் கட்சிக்கு கிடைத்த நன்கொடைகள் குறித்த செய்தி ஒன்று: ‘ மூன்றாவதாக கேரள ப்ரொவின்ஷியல் கட்சி அமைப்பின் தோழர் நம்பூதிரிபாட் அவர்கள் ரூபாய் 30,000/- பெறுமான தமது முழு சொத்தையும் கட்சிக்கு அளித்தார். ‘ அதே நாலாவது பாகத்தில் 571 ஆவது பக்கத்தில் காணப்படும் செய்தி -பிப்ரவரி 23 1943 தேதியிடப்பட்ட கட்சி தீர்மானம் சொல்கிறது: ‘தோழர் ஈ.எம்.எஸ் அவர்கள் அளித்த கொடை ரூபாய் 50,000 மதிப்புடையது என்று. ஏன் இந்த முரண்பாடு என்று பாலகிருஷ்ணன் ஆராய்ச்சி செய்து சில தகவல்களை அளிக்கிறார். 1941 இல் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக கட்சி வெளிப்படையாக எதிர்ப்பு நிலை எடுத்திருந்தது. அப்போது (1940-41 காலகட்டங்களில்) ஈ.எம்.எஸ்ஸும் கிருஷ்ணபிள்ளையும் தலைமறைவாகியிருந்தனர். அவர்களை பிடிக்க உதவுபவர்களுக்கு ரூபாய் 100 அளிக்கப்படுமென அரசு அறிவித்திருந்தது. (மாத்ருபூமி 28 நவம்பர் 1940). இக்காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே கோபாலன் சிறையிலிருந்து தப்பினார். இது அவருக்கு கதாநாயக அந்தஸ்தையே ஏற்படுத்தியது. அரசு அவரது சொத்துக்களை எடுத்துக்கொள்ள முனைந்தது. இது அரசாங்கத்துக்கே பெரிய அவமானமாக இருந்தது. ஏனெனில் அவரது வீட்டில் சமையல் பாத்திரங்கள் மட்டுமே இருந்தன. பின்னர் ஒரு பழைய மரப்பெட்டியில் கோபாலனின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது, இந்த பழைய மரப்பெட்டியைக் கைப்பற்றிய அரசு கோபாலனின் சொத்துக்களை கைப்பற்றியதாக அறிவித்த போது மக்கள் சிரியாக சிரித்தனர். கோபாலனின் எளிமையும் நேர்மையும் மக்களின் மனதை கவர்ந்தன. கம்யூனிஸ இயக்கத்தின் பால் மக்களை ஈர்த்தன. ஆனால் அதே நடவடிக்கைகளை ஈ.எம்.எஸ் மீது அரசு எடுத்தப்போது நகைப்புக்குள்ளானது அரசு அல்ல. தமது சொத்துக்களின் மதிப்பு ரூபாய் 9000 எனக் காட்டி தமது மனைவியின் பெயரில் அவற்றை மாற்றியிருந்தார் நம்பூதிரிபாட். அரசு இந்த மாற்றம் செல்லாது என தீர்ப்பினை நீதிமன்றம் மூலம் பெற்றதோடு பின்னர் அதன் மதிப்பும் உண்மையில் ரூபாய் 50,000 எனக் காட்டியது (மாத்ருபூமி 12 ஜூன் 1942 மற்றும் 11 ஜூலை 1942) [பக்.160] இது அரசின் பொய் பிரச்சாரம் அல்ல என்பது பின்னர் ஈ.எம்.எஸ் கட்சிக்கு தம் சொத்தினை அளித்த ‘நன்கொடை ‘ மூலம் உறுதியாகிறது. வரலாற்றாசிரியர் முனைவர் எம்ஜிஎஸ் நாராயணன் ஒரு சுவாரசியமான சமாச்சாரத்தை சுட்டிக்காட்டுகிறார். தாம் கட்சிக்கு தம் சொத்தின் மூலம் அளித்த நன்கொடையால் ஒரு பத்திரிகையை நிறுவி அதன் ஆசிரியராக ஈ.எம்.எஸ்ஸே அமர்ந்து கொண்டார் என்பதே அது.
கம்யூனிஸ்ட் கட்சி ஒரே நாளில் பிரிட்டிஷ் ஆதரவாக மாறியதையும் அம்மாற்றம் ஏற்பட ஒரு சித்தாந்த ரீதியில் பிரிட்டிஷ் ஆதரவு நிலைபாட்டினை நியாயப்படுத்தும் ஒரு கட்டுரை மட்டுமே போதுமானதாக இருந்ததையும் பாலகிருஷ்ணன் வெளிப்படுத்துகிறார். அக்கட்டுரை ஹாரி போலிட் எனும் ஆங்கிலேய கம்யூனிஸ்ட் எழுதிய பீபிள்ஸ் வார்தியரி என்பதாகும். (கம்யூனிஸம் இன் இந்தியா ஆவணத்தொகுப்பு பக்.261-67) கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிகரமாக தன்னை காட்டிக்கொண்டாலும் கத்தோலிக்க சபையின் ஆதரவை பெறத்தயங்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் ஈ.எம்.எஸ் கொண்டு வந்த கல்விச்சட்டத்தை கத்தோலிக்கர்கள் எதிர்த்த போது அது ஈ.எம்.எஸ்ஸின் சொந்த திட்டமே ஒழிய கட்சியின் திட்டமல்ல எனக் கூறி ஈ.எம்.எஸ்ஸை கைகழுவவும் தயங்கவில்லை. இத்தகைய பல அரிய (பொது மக்கள் பார்வைக்கு மறைக்கப்பட்ட) செய்திகளுடன் கூர்த்த ஆராய்ச்சி பார்வையுடன் எவ்வாறெல்லாம் கம்யூனிஸ சித்தாந்தம் அந்த இயக்கதினை தேச பக்தி சிறிதும் இல்லாததோர் பாதையில் வழிநடத்தியது என்பதனை வெளிக்காட்டுகிறது இந்நூல். இன்றைய அரசின் பொம்மலாட்டத்தின் கணிசமான இழைகள் இந்த தவளை மனிதக்கூட்டத்தின் கைகளில் என்பதால் இந்நூலின் முக்கியத்துவம் இன்னமும் அதிகமாகிறது.
History of the Communist Movement in Kerala – Dr.E.Balakrishnan, Kurushethra Prakshan Pvt. Ltd. Ernakulam Rs 150/-
aravindan.neelakandan@gmail.com
- காட்சி மாற்றங்கள்
- கீதாஞ்சலி (44) எப்போதும் வருகிறானே! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- கடிதம்
- கடிதம்
- கவிஞர் புகாரியின் இருநூல்களின் இனிய வெளியீட்டு விழா
- தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம், சிறப்புப் பேரவை,சென்னை
- விமர்சனக் குரல்களின் உலகம் (நான்காவது ஆணி – மலையாளச் சிறுகதைத்தொகுதி அறிமுகம்)
- நிர்மூலமாக்கிய ஹரிக்கேனால் நியூ ஆர்லியன்ஸ் நகர மாந்தர் வெளியேற்றம் [2] (Mass Exodus in New Orleans City After Hurricane Katrina
- கவிதை
- உயிர் வாழ்தல் என்பது
- பெரியபுராணம் – 60 (திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )
- வித்யாசாகரின் ரசிகை
- பாறையின் இதழ்கள்
- அப்பா (உள்ளது உள்ளபடி)
- அலறியின் மூன்று கவிதைகள்
- ரோஜாப் பூக்கள்
- சிந்திக்க ஒரு நொடி – கற்பும் கற்பிதங்களும்
- வள்ளுவரை வசைப்பாடிய சிரிப்பு நடிகர் எஸ்.எஸ். சந்திரன்!
- தவளை-மனிதர்களின் இயக்க வரலாறு குறித்து ஒரு நூல்
- கஜினி திரைப்படம்- எழுத்தாளர்களுக்குச் சொல்வது….
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-12)
- நாலு வயது