தவமாய் தவமிருந்து – ஒரு பின்னோட்டம்

This entry is part [part not set] of 28 in the series 20051230_Issue

டி.ஜி.கே


தவமாய் தவமிருந்து பற்றிய என் விமர்சனம் தமிழ் முரசு பத்திரிக்கையில் வந்திருப்பதாக என் நண்பர் சொன்னார்.

வாங்கிப் பார்த்தேன்.

இணையமும் , அச்சு இதழ்களும் கைகோர்க்கும் காலம் விரைவாகிறது எனப் புரிந்தது.

—-

அடுத்த நாள் மதியம் ஒரு தொலைபேசி வந்தது. திரு.சேரன் பேசினார்,

எதற்காக நான் அப்படி எழுதினேன் என்றும், ஏதாவது சொல்ல வேண்டியிருந்தால் அலுவலகத்தில் வந்து சொல்லியிருக்க வேண்டியது தானே என்று சொன்னார்.

அவருக்கு பதிலாய் சொன்னேன், அவர் மனது புண்பட்டு இருப்பின் நான் வேண்டுமானால் வருத்தம் தெரிவித்து எழுதுவதாக.

என் விமர்சனம் எந்த ஒரு தனிப்பட்ட உள்நோக்கம் இன்றி ஒரு படைப்பை மட்டுமே கண்டு எழுதப்பட்டது. அது தாண்டி உங்கள் மனம் புண்பட்டு இருக்குமாயின், எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்து திரு.சீமான் பேசினார். அந்தப் படத்தில் நல்லதுகள் மேலும் கொஞ்சம் நான் எழுதியிருக்க வேண்டியதன் அவசியம் பற்றிச் சொன்னார்.

அவரது வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து இதோ மீண்டும் நல்விஷயங்கள் பற்றி…,

ஏற்கனவே நான் சொன்னது மாதிரி, ராஜ்கிரன், இளவரசு, மூத்தமருமகள் அற்புத நடிப்பாற்றலுக்கும் அந்த கதாபாத்திரங்கள் வடிவமைப்புக்கும் ஒரு சபாஷ்.

என் மனதை விட்டு நிகழாத ஒரு காட்சி, தனது முதல் பையனுக்காக வட்டிக்கு பணம் கேட்டு அவர்கள் வந்து தந்து போகும் போது, ராஜ்கிரண் சொல்கிறாரே.. ‘… அய்யாகிட்ட சொல்லுங்க.. எனது அடுத்த பையனுக்கும் வந்து காசு கேட்பேன்… அவர் கொடுக்கனும்…. ‘ என்பதாக. அற்புதமான காட்சி. கிராமம் மட்டுமின்றி நகர்புறங்களிலும் பணத்தேவைகளுக்காக வட்டிக்கு வாங்குபவரிடம் பேசும் இந்த முறை…. ம்ஹீம்…. அருமை….

அந்த பனமரம் படர்ந்த செங்காடும் , பதனி ஓலைக்குவளையும்.. தாமரைகுளமும் நமக்கு நம் மண்ணை நினைக்கச் செய்த காட்சிகள்.

நமது நிகழ்கால சந்தோஷங்களுக்கு தாய்தந்தையரின் கடந்தகால துயரங்கள் முக்கிய காரணம் என்பது சொல்லும் படம்.

அழுக்கு வேட்டியும், தடித்த ஃபிரேம் கண்ணாடியுமாக ராஜ்கிரண் சராசரி தகப்பனை அழகான உதட்டோரச் சிரிப்புடன் கண்முன் கொண்டுவரச் செய்த சேரனுக்கு நிச்சயம் பாராடு உண்டு.

இளவரசுவின் நடிப்பு, என்றாவது ஒரு நாள் அவருக்கு முழுக்கதாபாத்திரம் கிடைக்க வேண்டும் என வேண்டச் சொன்னது.

தீபாவளி முந்தைய நாள் காட்சி. என் வாழ்விலும் அப்படி ஒரு சம்பவம் உண்டு. அதை ஞாபகப்படுத்திய காட்சி அருமையான ஒன்று.

அண்ணியாக வரும் அந்த நபர் அசத்தியிருக்கிறார். இரவுக்காட்சிக்கு அழைத்துப் போக இயலாத புருஷனைப் பார்த்து ஒரு நொடி நொடிப்பாரே… அந்த யதார்த்த நடிப்பும், சட்டையைப் பிடித்து ஒரு முறைப்பு விடுவாரே அது என….

புருஷனின் தம்பி வீட்டைச் சுற்றிப் பார்க்கையில் அவர்களின் உயர்வு கண்டு, இயலாமையாய் ஒரு முகபாவனை தரும் நேர்த்தி…

காலம் உருண்டாலும் தன் குணம் மாறாமல், ஏங்க உங்க தம்பி தான் நல்லா இருக்காகள்ள எனும் இழுப்புடன் கோரிக்கையைத் தன் கணவனிடம் வைப்பது.

இந்தப்படத்தைப் பொறுத்தவரை ராஜ்கிரண் அவர்களுக்கு நடிப்புக்கான நல் விருது நிச்சயம் உண்டு.

ராஜ்கிரணைத் தேடிப் போய் கைகொடுக்கணும் எனும் உணர்வு ஏற்படுத்துமளவு ஈடுபாட்டுடன் அப்பாவாகவே மாறியுள்ளார்.

கருத்தம்மா படத்தில் விட்டுப் போனதை சரண்யா இந்தப் படத்தில் அடைய வேண்டும். அந்த பாசமிகு தாயின் வாஞ்சையான கண்கள் நமது மனது விட்டு அகலாது. சரண்யா ஒரு அற்புத ஆற்றலுல்ல நடிகை. ஆனால், அத்திப் பூத்தாற் போல் தான் நல் படங்கள் அவருக்கு வருகிறது. இந்த முரண் ஏனோ… ? அவர் சொல்வது போலின்றி நடிப்பிற்கு நேரம் ஒதுக்க வேண்டும் அவர்… அது அவசியம் தமிழ்த் திரையுலகிற்கு.

—-

உச்சத்தில் இருக்கும் நிலையில் ரசிகர் கடிதம் போல் எழுதுவதை மட்டுமே நாம் விமர்சனம் என எடுத்தால் பயணம் நின்று விடும்.

கிராமத்து பாதையில் நெருஞ்சிமுள் குத்தும். அது காலை காயப்படுத்தாது… ஆனால் எச்சரிக்கையுடன் நமது அடுத்த அடி வைக்க அலாரம் அடிக்கும். கவனமுடன் பயணம் தொடர்ந்தால் பாதையில் வரப்போகும் கத்தாளை, சீமக்கருவேல முட்களில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்.

என் விமர்சனம் நெருஞ்சிமுள் தான்.

உங்கள் பயணத்திற்கு நல்லது மட்டுமே செய்யும்.

பாதம் தூக்கி தைத்த நெருஞ்சியைத் தூக்கிப் போட்டுப் பயணம் தொடருங்கள்.

மாபெரும் சபைகள் மாலையுடன் உங்களுக்காகக் காத்திருக்கும்…. வாழ்த்துக்களுடன்

டிஜிகே.

tgkgovindarajan@gmail.com

Series Navigation

டி ஜி கே

டி ஜி கே