தழும்புகள்

This entry is part [part not set] of 42 in the series 20031030_Issue

இளந்திரையன்


பிரளயம் நடந்து முடிந்தது போன்ற பேரமைதியில் வீடு மூழ்கிப் போயிருந்தது. எங்கும் நிசப்தம் கப்பிக் கவிந்திருந்தது. முகம் வெளிறிப் போயிருந்த அவர் சோர்வாக உணர்ந்தார். இரண்டு நாட்களாக அந்த அறையில் அடைந்து கிடப்பது கூட வேதனையான அனுபவமாக இருந்தது. ‘ஒரு தேநீர் இருந்தால் …… ‘ மனதில் எழுந்த ஆசை அப்படியே அமிழ்ந்து கரைந்து போய்விடுகின்றது . யாரைக் கேட்க முடியும் ? ….. வீட்டில் இருந்த எல்லோரும் தனித் தனித் தீவுகளாக ஒதுங்கிப் போய் அடைந்து கொண்டிருந்தார்கள். அநாவசியமாக யாரும் யார் கண்ணிலும் படாமல் தவிர்த்துக் கொண்டிருந்தார்கள்.

அவர் மனைவியா இப்படி ……. அவரால் இன்னும் அதை ஜீரணித்துக் கொள்ள முடியாத ஒரு அவஸ்தை ….. அப்பாவி ….. பொறுமைசாலி …… என்றெல்லாம் அவர் எண்ணியிருந்த அவர் மனைவியா ….. இப்படி ….. அதை எப்படி விளங்கிக் கொள்வதென்றே தெரியாத தவிப்பு அவர் மனதை நெருடிக் கொண்டிருந்தது.

இருபத்தைந்து வருடத் தாம்பத்யத்தில் ஒரு வார்த்தை உரத்துப் பேசி அறியாத அவளா ….. இப்படியெல்லாம் ……. இவ்வளவு கோபமா அவள் மனதில் ……. இதுவரை கட்டிக்காத்து வந்த குடும்பத் தலைவன் ……. கண்டிப்பான தந்தை ….. கெளரவமான மனிதன் …. என்ற எல்லா வேடங்களும் கலைந்து போக கையாலாகாத மனிதனாக அவரை அந்த அறைக்குள்ளேயே அடைத்துப் போட்டது எது ? கேள்விக்கான விடை தெரியாத ஒரு கண்ணாமூச்சி ஆட்டத்தில் அவர் களைத்துப் போயிருந்தார்.

தந்தையை இழந்த அவரை, அவர் அன்னைதான் உயிருக்குயிராய் கஸ்ரப்பட்டு காப்பாற்றி வந்திருந்தாள். தன் கஸ்ரங்கள் துன்பங்கள் எதனையும் வெளிக்காட்டாது அவரைப் படிக்க வைத்து வளர்க்க அவள் பட்ட பாடு …. அவரால் என்றும் மறக்க முடியாதவை. தன் அன்னையில் அவருக்கேற்பட்ட அன்பு, இரக்கம் ….. அவரை அவள் வார்த்தைக்கு மறு வார்த்தை பேசாத அவள் எண்ணத்தை மறுக்காத …. அம்மா பிள்ளையாக அவரை வளர்த்து விட்டிருந்தது .

கஸ்ரப்பட்டு படித்து ஒரு ஆசிரியராக வேலையும் கிடைத்த போது இது வரை மறந்து போயிருந்த உறவுகள் எல்லாம் உறவு சொல்லி உரிமை கொண்டாடி மாப்பிள்ளை கேட்பது வரை வந்து விட்டிருந்தன. இந்த திடார் உறவுகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு கஸ்ரப்பட்ட குடும்பமொன்றிலிருந்தே அவருக்கு ஒரு பெண்ணையும் தெரிவு செய்திருந்தாள் அவர் அன்னை .

அன்னையின் வார்த்தைக்கு மறுப்பில்லாமல் அந்தப் பெண்ணே அவர் மனைவியாக அவர் வாழ்க்கை மெல்ல மெல்ல நகரத் தொடங்கியது . அந்த மகிழ்வில் இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னர் தான் அவர் அன்னையின் போக்கில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை உணர்ந்து கொள்ளத் தலைப்பட்டார்.

அதற்குள் மருமகளைக் கண்டாலே ஆகாது என்ற நிலை வந்திருந்தது. அவளது குடும்ப நிலையைச் சொல்லிக் குத்திக் காட்டுவதும் சீதனமாக எதையும் கொண்டு வர இயலாத இயலாமையை குதர்க்கமாகப் பேசி அவளை அழ வைப்பதுமாக அவர் அன்னையின் போக்கு மாறி விட்டதற்குமான காரணமறியாது அவர் அவதிப்பட்டார்.

ஆறுதல் தேடி அவரிடம் வந்த மனைவியை என்ன வார்த்தை சொல்லி ஆற்றுவது என்று தெரியாது அவர் பட்ட சங்கடம் இன்றும் அவரை வாட்டிக் கொண்டிருக்கின்றது. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போல் நடந்த சம்பவம் அவர் மனதில் ஏற்படுத்திய வடு இன்றும் மாறாத காயமாகத்தான் இருந்து கொண்டிருக்கின்றது. மாமிக்கும் மருமகளுக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட வார்த்தை பரிமாற்றம் எல்லை மீறி மருமகளின் முழங்காலுக்கு மேல் நெருப்பால் சுடுவது வரை போய் விட்டிருந்தது.

அவர் வீட்டிற்குத் திரும்பிய போது அவரிடம் ஆறுதல் தேடி அவள் கதறிய கதறலும் குமுறிய குமுறலும் எந்த ஆறுதலும் இல்லாமலேயே அடங்கிப் போய் விட்டது. அன்னையிடம் என்னவென்று கேட்பது என்று தெரியாமலேயே அவர் பேசாமல் இருந்து விட்டார். அதன் பின்னர் அவர் மனைவி அவரிடம் எந்த ஆறுதலும் தேடி வருவதேயில்லை. ஆனாலும் மனைவி என்ற தன் கடமையிலிருந்து விலகியதேயில்லை.

அதன் பின் அவரால் ஒரு அன்னியோன்யமான நெருக்கத்தை அவளுடன் பேண முடியாமல் போய் விட்டது என்னமோ உண்மை தான். ஒரு சில அபூர்வமான காதல் உணர்வு மேலோங்கிய தருணங்களில் அவளை நெருங்கிய போதும் அந்த தழும்பைப் பார்த்ததும் அவர் உணர்வுகள் எல்லாம் வடிந்து நீர்த்துப் போக ஒடுங்கிப் படுக்கத் தான் முடிந்தது.

அன்றிலிருந்து இன்று வரை முன்னர் இருந்த அந்நியோன்யம் வாய்க்கத்தான் இல்லை. கால ஓட்டத்தில் பிள்ளைகள் வளர்ந்ததும் …. அன்னை இறக்கும் வரை அவள் வார்த்தையே வேத வாக்காகக் கொண்டு வாழ்ந்ததும் ……. பின்னர் கனடாவிற்கு இடம் பெயர்ந்ததும் எல்லாம் பழைய கனவாகிப் போய் விட்டிருந்த இந்த வேளையில் மீண்டும் இந்த நிலை.

கனடாவிற்கு இடம் மாறியது மனைவியின் மன இறுக்கத்தைக் கொஞ்சம் குறைத்திருந்ததாகத் தான் அவர் எண்ணியிருந்தார். கனடாவின் அவசர வாழ்க்கையும் வேறு கவன ஈர்ப்புகளும் இறுக்கத்தைத் தளர்த்தி பழைய அந்நியோன்யத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கும் இவ்வேளையில் மீண்டுமொரு குழப்பம்.

வளர்ந்து விட்ட மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து ஆசையாகப் பொறுக்கி எடுத்த மாப்பிள்ளை வீட்டார் அளவுக்கதிகமாய் எதிர்பார்த்திருந்த சீதனத்தைக் கொடுக்க முடியாத நிலையில் திருமணம் குழம்பிப் போயிருந்த இந்த வேளையில் இதுவும் சேர்ந்து விட்டிருந்தது.

திருமணம் குழம்பிப் போன இந்த இடைக்காலத்தில் அவரது மகளும் மாப்பிள்ளையும் ஒருவரை ஒருவர் விரும்பத் தொடங்கியதும் …… மணந்தால் இருவரும் மணப்பது என்று முரண்டு பிடித்து நின்றது தான் இவ்வளவுக்கும் காரணம்.

அவர்கள் எதிர்பார்க்கும் சீதனம் கொடுக்க முடியாத நிலையில் அந்த வீட்டில் தன் மகளை கொடுப்பதற்கு அவர் விரும்பாத போதும் தன் மகளின் ஆசையையும் அணைத்து விட அவர் தயாராக இல்லை. இந்த ஆசைக்கும் பாசத்துக்கும் அவஸ்தைக்கும் இடையிலான போரட்டத்தில் அவர் திண்டாடிக்கொண்டிருக்கும் போதுதான் எதிர்பாராத திசையில் இருந்து அந்தப் பூகம்பம் வெடித்துத் தீச்சுவாலை கக்கிக் கனன்று கொண்டிருக்கின்றது.

‘நான் பட்ட துன்பம் என் பிள்ளையும் படவேண்டுமா ? இந்தக் கலியாணத்துக்கு நான் ஒரு நாளும் சம்மதிக்கமாட்டன் ‘ என்று வெடித்து விம்மியவள் இத்தனை காலமும் பிள்ளைகள் அறியாது காப்பாற்றி வந்த அவள் காலிலிருந்த தழும்பையும் அவர் மனதிலிருந்த தழும்பையும் வெளிக்காட்டி அத்தனையையும் போட்டுடைத்துவிட்டிருந்தாள்.

ஒரு குற்றவாளியைப் போல பிள்ளைகள் பார்த்த பார்வையை தாளமுடியாமல் தலையைக் குனிந்து கொண்டது இப்பொழுதும் இரணமாக வேதனை தந்து கொண்டிருந்தது.

யோசிக்க யோசிக்கத் தலைவலி பல்கிப் பெருகி ……. ஒரு தேநீர் கிடைத்தால் நன்றாக இருக்கும் …….. யாரிடம் கேட்பது …. ?

===================

Ssathya06@aol.com

Series Navigation

இளந்திரையன்

இளந்திரையன்