தலைப்பாரம்…..

This entry is part [part not set] of 30 in the series 20020302_Issue

கலாப்ரியா


பழையகஞ்சி
தூர ஊத்தும் நீத்துப்பாகம்
தாராளமாய்க்கொடுத்து
வகைக்கொன்றாய்
குறத்தியிடம் வாங்கி
வகையாய்ப்பழக்கி வைத்திருக்கும்
ஈருருவிகளில் ஒன்றை
தேர்ந்தெடுத்து
தண்ணீர்கண்டு மாதங்களான
தலை கோதிக்கொண்டிருப்பாள்
ஈருறுவிக்கிழவி–
ஓலை வேய்ந்து சுக்குநாறிப்புல்
பரப்பிய பக்கத்துக்கூரை,
வழிந்து வானேகும் புகை…

வாசல்வழி வரும் வசவு,
இந்தத் தென்னம்பாளைக்குப் போய்
இன்னா வரத்து வாராளே
நாறச்சிறுக்கி
என்றபடி அதையே பிய்த்து வைத்து
நெருப்பு வளர்க்கிறபோது
ஏ ஆச்சீ ஏ அக்கா ஏ மதினீ
ஓம்பேத்தி, மருமக
ஆளாகியிருக்கா

தலைக்கு தண்ணீ விடப்போறோம்
சாயந்தரம் வந்துருங்க
வயல்லேர்ந்து வரல்லியா
அண்ணாச்சி இன்னும்
என்று வழவு வழவாய்
தாக்கல் சொல்லியபடி
‘நாற ‘ மூதேவியே நேரில் வந்தாள்.

அப்படியாழ்ள்ளா
இன்னா இந்த உலக்கைய
எடுத்துக்க
அன்னா அந்தத் தொழுவத்தில கிடக்கு
தொரட்டி
ரெண்டு கொழுந்து வேப்பிலை
பறிச்சுக்கோ
சோகத்தை மட்டும்
இறக்கிட்டு வந்துருதேன்
பரபரப்பாள் இவள்
பாளைத்தகராறு சாம்பலாகும்
பழையஒறவும் ஒட்டும் மறுபடி கனியும்.

அடுத்தடுத்த நாட்களில்
ஆக்கிப்போடவந்தவர்களை
தன் வீட்டுக்கும் அழைத்து
காப்பித்தண்ணியோ கலரோ
வாங்கியார மகனைக்கூப்பிடுவாள்
ஒதுங்கியொதுங்கிப்போகும்
பத்தாம் வகுப்புப்பரமசிவத்தைக்காட்டி
சாதிசனம் சொல்லும்
ஏ ஆச்சீ சமைஞ்சது
இவனா அவளா

யாரு மொறைமாப்பிளையா
இவன் அப்பவே
அரநாக்கயறோட மணியடிச்சுட்டு
அலையும்போதே
மாமியாக்காரிய கட்டப்போறேன்னு
சொன்ன படுக்காளீல்லா,
இத்தனை அலப்பரையிலும்
ஈருருவியபடியே கிழவி சொல்ல
குலவையையும் மீறி
கேட்கும் சிரிப்பொலி

நன்னீராட்டு நாள் குறித்தபின்
வந்தசனம் கரைந்துவிட
பந்தோபஸ்தாய் மந்தைக்கு
அழைத்துச்செல்லும் தாயிடம்
முன்னிரவில் தெருவிளக்கில்
பீடி சுற்றிக்கொண்டிருப்பவள்
தருவாள்
இந்தா இந்தக்கத்திரிக்கோல
கொண்டு போ
கோளை நாளும் அதுவுமா
ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிராம,
என்று யோசனையாய்.
**** *******

‘வாங்கினமே ஞாவகமாக்
கொடுத்தமா உண்டுமான்னு
இல்லாம
சடங்கு சந்தடியில
காங்கலேங்கியே
விரல வச்சா இலய வெட்டுவேன்
ஒரு பாடு பீடி சுத்தனும்
ஒண்ணைய மாதிரி தோப்பும் துரவுமாவா
கொட்டிக்கிடக்கு
ரெண்டு பாளைய எடுத்ததுக்கு
அந்த அவயம் போட்டியே — இதக்
கேட்டா மொகனை வருது
கேடு கெட்ட அறுதலிக்கி

ஆமாண்டி
ரெண்டை ஒண்ணாப்பெத்துட்டு
சொட்டு மருந்து போடறப்போ
கூடவே தூக்கிட்டு வந்தேன் பாரு
இதுவும் வேணும் இன்னமும் வேணும்

ரெட்டைபிள்ளை பெத்தவன்னுதானடி
குடிகார மாப்பிள்ளை
குறுக்கில மிதிச்சப்ப
உழுக்குத்தடவ ஓடியாந்தே
இடுப்புச்சேல நிக்காம
என் புருசன் தூங்குதான்னும் பாக்காம

அட இருங்கடா
குடிமகன் வீட்டுக்கொல்லய
கிளறப்புறப்பட்ட கூமுட்டைகளா

தலப்பாரம் தோளுக்கு
தோள் வலிச்சா
தலைக்கி மறுபடின்னு
மாத்திட்டுப்போகாம
சலுப்பைக்கூத்து
ஆடுதியளே…
ஒங்க ஆத்தாமாருங்கள
கொள்ளை வாரீட்டுப் போனப்ப
ஏம்மாருல
ஒண்ணாச்சப்பிட்டுக்கிடந்த
முருவங்க
ஒறவும் தெரியாது
ஒருஎழவும் தெரியாது
பொத்திக்கிட்டு போங்கடா..
ஈருருவிக்கிழவி கத்தவும்
இன்றைக்கு ஓயும் சண்டை.

Series Navigation

கலாப்ரியா

கலாப்ரியா