தலாய் லாமா: அறிவியல், மதம், அரசியல்

This entry is part [part not set] of 30 in the series 20050909_Issue

மு. சுந்தரமூர்த்தி


கலீலியோ காலத்திலிருந்தே நிறுவனமாக்கப்பட்ட மதங்கள் அறிவியலுக்கு எதிராக ஏதாவது ஒரு வகையில் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. இவற்றோடு அரசியல் சேரும்போது இச்சிக்கல் இன்னும் அதிகமாகிறது. மதமும், மதம் சார்ந்த அரசியலும் கட்டுப்படுத்த முயன்றாலும், அறிவியலின் பயணத்தை முழுவதும் தடுத்து நிறுத்தப்பட முடிவதில்லை. இதற்கு அறிவுத் தேடலை தடுத்து நிறுத்த இயலாது என்பதோ, தேடலில் ஈடுபடுவோரின் மனத்திண்மையோ மட்டும் காரணங்கள் அல்ல. அறிவியலின் துணை விளைபொருட்களான தொழில்நுட்பம், மருத்துவம் போன்று மனித வாழ்வை மேம்படுத்தும் காரணிகளுக்கும் முக்கிய பங்குண்டு. சராசரி மனிதனுக்கு மதவாதியின் அறிவியல் பற்றிய அபத்தமான கருத்துக்களைப் பற்றியோ, அறிவிலாளனின் அறிவுத் தேடல் குறித்தோ கவலையில்லை. ஒரு புறம் நவீன உலகில் மனித வாழ்க்கையின் பொருளாதாயத் தேவைகளும், இன்னொரு புறம் கடவுள் பற்றியப் பொதுவான பயமும் இரண்டிலொன்றைப் புறக்கணிக்கவியலாது அறிவியலுக்கும், மதத்துக்குமான ஒரு சமரசத்தை ஏற்படுத்தி இரண்டையும் இணையாக நடத்திச் செல்கின்றன. இருப்பினும் இரண்டுக்குமிடையே ஏதாவது ஒரு வகையில் உரசல்கள் தொடர்வதையும் தடுக்கமுடிவதில்லை. இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களிலேயே அரசியல் ஏதாவதொன்றின் பக்கம் சாய்ந்து பிரச்சினையை மேலும் குழப்புகிறது. தற்போது நடந்துவரும் ‘பரிணாம வளர்ச்சி எதிர் படைப்புவாதம்’, ‘குருத்து செல் ஆராய்ச்சி எதிர் கருக்கலைப்புக்கு எதிர்ப்பு’ போன்ற சர்ச்சைகள் இத்தகையனவே. இவற்ற

ில் அரசியலும் பெரும்பங்கு வகிக்கிறது அல்லது இச்சர்ச்சைகள் அரசியலாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அறிவியலும் மதமும் இணக்கமாக செயல்படுவதாக தோற்றமளித்த ஒரு பிரச்சினை இன்று அரசியல் காரணமாக சர்ச்சைக்கிடமாகியுள்ளது.

அமெரிக்கத் தலைநகரம் வாஷிங்டன் டிசியில் நடைபெறவுள்ள நரம்பறிவியல் கழகத்தின் (Society for Neuroscience) வருடாந்திர மாநாட்டில் சிறப்பு விரிவுரை நிகழ்த்த திபெத்திய புத்தமதத் தலைவர் தலாய் லாமா அழைக்கப்பட்டிருக்கிறார். முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ள இந்த அறிவியல் அமைப்பின் வருடாந்திர மாநாடுகளில் 20,000 பேர் கலந்துகொள்கிறார்கள். அறிவியல் மாநாடுகளிலேயே மிகப் பெரிய மாநாடாகக் கருத்தப்படுவது. இந்த அமைப்பு நடத்தும் மாநாடுகளில் “அறிவியலும் சமூகமும்” என்ற அமர்வில் நரம்பறிவியல் தவிர்த்த பிறதுறைகளில் முன்னணியில் இருப்பவர்களின் விரிவுரைகளுக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த ஆண்டின் மாநாட்டில் தலாய் லாமாவின் சிறப்புரைக்கு அடுத்து இரண்டாவதாக உரைநிகழ்த்த அழைக்கப்பட்டிருக்கும் இன்னொருவர் ஃப்ராங் கெ ?ரி (Frank Gehry) என்ற கட்டிடக்கலை நிபுணர். ஆக, தலாய் லாமாவின் அழைப்புக்கு மட்டும் எதிர்ப்பு வரக் காரணம் என்ன ? ஒன்று அரசியல். இரண்டாவது மதம்.

இந்த அறிவியல் மாநாட்டில் தலாய் லாமாவிற்கு அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு குழு கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துள்ளது. இவர்களின் மைய வாதம் “தலாய் லாமா ஒரு மதத்தின் தலைவர். அவருக்கு அரசியல் நோக்கங்களும் உண்டு. இவருடைய மதநம்பிக்கைகள் அறிவியல் பூர்வமானதல்ல. அரசியல், மதம் ஆகியவற்றைக் கடந்து உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அறிவியலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்பின் மாநாட்டில் அறிவியல் பூர்வமாக நிறுவப்படாத மதநம்பிக்கைகளையும், அரசியல் நோக்கங்களையும் கொண்ட தலாய் லாமாவை பேச அழைப்பது முறையல்ல. இது அறிவியலுக்கும், பொதுமக்களின் அறிவியல் புரிதலுக்கும் உதவாது. மாறாக தலாய் லாமா முன்னிறுத்தும் ஒரு மதத்தின் நம்பிக்கைகளுக்கு அறிவியல் அங்கீகாரம் வழங்குவது போலாகும். ஆகவே இந்த அழைப்பை ரத்து செய்யவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதில் கையெழுத்திட்டுருப்பவர்களில் முக்காலே மூணுவீசம் சீனப் பெயர்களை கொண்டிருப்பதால் இவர்களுக்கும் அறிவியல் மேலுள்ள அக்கறையைக் காட்டிலும் அரசியலே பிராதான காரணமாக இருக்க வாய்ப்புள்ளது.

தலாய் லாமாவிற்கு ஆதரவாக இதே இணையதளத்தில் இன்னொரு குழு கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துள்ளது. இக்குழுவின் முக்கிய நோக்கமே எதிர்ப்பாளர்களை எதிர்ப்பது. இதில் கையெழுத்து இட்டிருப்பவர்களின் பெயர்களைப் பார்த்தால் வெவ்வேறு நாடுகளைச் சார்ந்தவர்களாகத் தெரிந்தாலும் பலருக்கு அறிவியல் பின்னணி இருப்பதாகத் தெரியவில்லை. ஆக இந்த இரண்டு குழுக்களும் தலாய் லாமா தலைமையிலான திபெத்தியர்களின் போராட்டத்தை எதிர்ப்பவர்கள் ஆதரிப்பவர்கள் என்ற நிலைகளிலிருந்து ஒரு அறிவியல் அமைப்பின் செயல்பாட்டை அணுகுவது வெளிப்படையாகத் தெரிகிறது.

சரி, முதலில் இந்த சர்ச்சைக்குப் பின்னணியில் உள்ள நரம்பறிவியல் கழகத்தின் அழைப்புக்குக் காரணம் என்ன ? தலாய் லாமாவிற்கும் அறிவியலுக்கும்–அதுவும் நரம்பறிவியலுக்கும்–என்ன சம்பந்தம் ?

முதலில் தலாய் லாமா பிற மதத் தலைவர்களைப் போன்று தீவிர அறிவியல் எதிர்ப்பாளர் அல்ல என்பது பரவலான கருத்து. 1989ம் ஆண்டு அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றபோது நிகழ்த்திய விரிவுரையில் “அறிவியலும், புத்தரின் போதனைகளும் அனைத்து பொருட்களுக்கும் உள்ள அடிப்படை ஒற்றுமையையே சொல்கின்றன” என்று கருத்துரைத்ததும், வேறொரு தருணத்தில் “நான் துறவி ஆகியிருக்காவிட்டால் பொறியியலாளனாக ஆகியிருப்பேன்” என்று சொன்னதும் அவருக்கு அறிவியலில் உள்ள ஆர்வத்தைக் காட்டுவதாக கூறுகிறார்கள் சிலர். தலாய் லாமாவுக்கு மட்டுமில்லை, திபெத்தியர்களுக்கும் பொதுவாக புத்தமதத்தில் உள்ள நம்பிக்கையைப் போலவே அறிவியலிலும் ஆர்வம் அதிகம் என்றும் கருதுகிறார்கள். இதற்கு ஆதாரமாக முன்வைக்கப்படுவது, திபெத்தியர்கள் உலகின் மக்கட்தொகையில் 0.1 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தாலும், மனித மரபணுவம் திட்டத்தில் (Human Genome Project) பணிபுரிகிறவர்களில் 10 சதவீதத்தினர் அவர்களே என்பது.

தலாய் லாமாவிற்கும், திபெத்திய புத்தபிக்குகளுக்கும் பிற அறிவியல் துறைகளைக் காட்டிலும், மூளை எப்படி இயங்குகிறது, குறிப்பாக தியானம் மூளையின் செயல்பாட்டை எப்படி பாதிக்கிறது போன்றவற்றில் ஆர்வம் அதிகம். நாள்தோறும் சில மணிநேரம் தியானத்தில் ஈடுபடும் இந்த பிக்குகளுக்கு குறிப்பிட்ட ஏதேனும் ஒருபொருள் மீது நீண்டநேரம் சிந்தனையைக் குவிக்க முடிகிறதெனவும், அவர்களால் அப்பொருளைப் பற்றிய சிக்கலான காட்சிகளையும் மிகவும் நுணுக்கமாக விவரிக்க முடிகிறதென்றும் சொல்லப்படுகிறது. அத்தகைய மனக்கட்டுப்பாடு, மூளையை, உடலை எப்படி பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதில் தலாய் லாமாவுக்கும் ஆழ்ந்த ஆர்வம் உண்டு. சில நரம்பறிவியலாளர்களுக்கும் கூட உண்டு. இத்தகைய ஆர்வமே தலாய் லாமா தலைமையிலான திபெத்திய புத்தபிக்குகளையும், நரம்பறிவியல் துறை ஆராய்ச்சியளர்கள், உளவியலாளர்கள் சிலரையும் அடிக்கடி ஒன்று சேர்த்து, மனதுக்கும் உடலுக்குமான தொடர்பைக் குறித்து விவாதிக்க வைக்கிறது. கடந்த 17 ஆண்டுகளில் 12 முறை இத்தகைய விவாதங்கள் நடந்திருக்கின்றன. இதை ஏற்பாடு செய்வது அறிவியலுக்கும் புத்தமதச் சிந்தனைகளுக்குமிடையே உரையாடலை ஊக்குவிக்கும் பொருட்டு அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ள மனம்-உயிர் நிறுவனம் (Mind & Life Institute, Louisville, CO). இத்தகைய வெளிப்படையான உரையாடலை தலாய் லாமாவே முன்னின்று நடத்துவதோடல்லாமல் முழு ஈடுபாட்டோடு அறிவியலாளர்களின் உரைகளை கேட்கவும்

, விவாதங்களில் பங்கு பெறவும் செய்கிறார்.

கடைசியாக இந்த கூட்டம் கடந்த டிசம்பரில் இந்தியாவில் தலாய் லாமாவின் தலைமயகமான தர்மசாலையில் நடந்தது. இதில் நரம்பறிவியல், உளவியல் துறைகளில் உள்ள சில முன்னணி ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொண்டு ‘நல்ல மனோநிலை எப்படி இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது ‘, ‘தியானம் எப்படி உணர்வுகளை மாற்றுகிறது, அன்றாடச் செயல்பாடுகள் எப்படி மரபணு வெளிப்படுத்தலை மாற்றுகிறது ‘ என்பது போன்றவற்றை விவாதித்திருக்கிறார்கள். வளர்ந்தவர்களின் (adults) மூளை வளர்ச்சி முழுமையடைந்தது என்ற கருதுகோள் தொன்னூறுகளின் இறுதியில் மாறி இப்போது வளர்ச்சிடையடைந்த மூளைகளிலும் புதிய நரம்பணுக்கள் (neurons) உருவாக்க முடியும் என்று நிறுவப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தியானத்தின் விளைவுகளை புரிந்துகொள்ளவும் முயற்சிகள் நடக்கின்றன. விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தின் (University of Wisconsin) முன்னணி உளவியலாளர் ரிச்சர்ட் டேவிட்சன் (Richard Davidson) இது குறித்து செய்த ஆய்வு பெரிதும் போற்றப்படும் அமெரிக்க அறிவியல் கழகச் சஞ்சிகையில் (Proceedings of American Academy of Sciences) வெளியானது. சராசரி மனிதர்களையும், பல ஆண்டுகளாக தியானம் பழகும் பிக்குகளையும் வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வு தியானம் மூளையில் சில நரம்பியல் செயல்பாடுகளை ஒருங்கமைக்கும் வல்லமை கொண்டவை என்று முன்மொழிகிறது. ஆனால் இத்துறை இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளதால் முழுமையான புரிதல் கிடைக்க இன்னும் பல ஆண்டு

கள் ஆகலாம்.

நரம்பறிவியல் கழகம் தலாய் லாமாவை விரிவுரை நிகழ்த்த விடுத்திருக்கும் அழைப்பு இப்படிப்பட்ட உரையாடலின் தொடர்ச்சியாகவேத் தெரிகிறது. ஆனால் அதற்கு இப்போது ஒரு சாராரிடமிருந்து பலத்த எதிர்ப்பு வந்துள்ளது. இதில் பலர் அரசியல் காரணங்களுக்காக எதிர்த்தாலும், தலாய் லாமாவுக்கு சில அறிவியலாளர்களிடம் இருக்கும் செல்வாக்கும் அவருக்கு இந்த வாய்ப்பைப் பெற்றுத் தந்திருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது. அரசியல் காரணங்களுக்கு அப்பால், அறிவியலையும் மதத்தையும் தனித்தனியே வைக்கவேண்டும் என்று கருதும் சிலரும் இதை விரும்பவில்லை. இதில் முதன்மையானவர் MITயின் மூளை ஆராய்ச்சி நிறுவனத்தின் (McGovern Institute of Brain Research, MIT) இயக்குனர் ராபர்ட் டெசிமோன் (Robert Decimone). “எதிர்மறை உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல் என்பது வருங்கால நரம்பறிவியல் ஆராய்ச்சிக்கு பொருத்தமாக இருந்தாலும், தலாய் லாமாவின் மத நம்பிக்கைகள் காரணமாக நரம்பறிவியல் கழகம் அவரிடமிருந்து முடிந்த அளவு எட்ட நிற்பதே நல்லது” என்று கூறியிருக்கிறார். ஆனால் தலாய் லாமாவின் பங்கேற்பை புகழ்பெற்ற Nature அறிவியல் இதழ் ஆதரித்து போனவாரம் தலையங்கம் தீட்டியிருக்கிறது. “தலாய் லாமா அறிவியலுக்கு எதிரானவர் அல்லர். இத்தகைய மாநாட்டில் விரிவுரையாற்ற தகுதியுடையவரே” என்பதற்கு ஆதாரமாக அறிவியல் குறித்த கேள்விக்கு அவர் அளித்த வெளிப்படையான பதில் சுட்டிக்காட்டப்படுகிறது.

கேள்வியாளர்: நரம்பறிவியலின் முடிவுகள் புத்தமதத் தத்துவத்தை மறுதலித்தால் என்ன செய்வீர்கள் ?

தலாய் லாமா: அப்போது அறிவியலுக்கு தக்கபடி எங்கள் தத்துவத்தை மாற்றிக்கொள்ள வேண்டியதுதான்.

msundaramoorthy@bellsouth.net

http://kumizh.blogspot.com

—-

இந்த கட்டுரைக்கு உதவியவை:

www.nature.com

apu.sfn.org/am2005/

www.petitiononline.com/sfn2005/

www.petitiononline.com/sfn2005a/

www.mindandlife.org/

பின்குறிப்பு:

இந்த வாரம் Nature இதழில் வெளிவந்த செய்தியின்படி நரம்பறிவியல் கழகத்தின் தலைவர் டாக்டர் கேரள் பார்ன்ஸ் (Dr. Carol Barnes) தலாய் லாமாவின் சொற்பொழிவு ஏற்கனவே திட்டமிட்டபடியே நடக்கும் என்று உறுதிபடுத்தியிருக்கிறார்.

Series Navigation

மு. சுந்தரமூர்த்தி

மு. சுந்தரமூர்த்தி