தற்காப்புக்காக

This entry is part [part not set] of 28 in the series 20030504_Issue

ஃபெர்னான்டோ ஸோரன்டினோ (ஆங்கிலம்வழி தமிழில்:எம். எஸ். (எம். சிவசுப்ரமணியன்))


ஒரு சனிக்கிழமை காலை, சுமார் பத்து மணி இருக்கும். எனது மூத்த பையன் – விஷமக் குரங்கு – அடுத்த வீட்டுக்காரரின் வாசல் கதவில் ஒரு சிறு இரும்புக் கம்பியால் பூவேலை மாதிரி எதையோ கீறிவிட்டான். இதனால் பெரிய விபரீதம் ஒன்றும் வந்துவிடப் போவதில்லை. ஒரு சிறிய கீறல்தான். சற்றுக் கூர்ந்து கவனித்துப் பார்த்தால்தான் கண்ணுக்குத் தெரியும்.

எனக்குச் சொல்ல வெட்கமாகத்தான் இருக்கிறது : முதலில் இதை வெளியில் தெரிவிக்காமல் இருந்துவிடலாமே என்றுதான் நினைத் தேன். (யாருக்குத்தான் இப்படிப்பட்ட பலவீன நேரங்கள் வராது ?) ஆனால் அது சரியல்ல என்று தோன்றியது. அடுத்த வீட்டுக்காரரிடம் சென்று பையன் செய்த தவறுக்காக மன்னிப்புக் கேட்கவேண் டும்; தேவைப்பட்டால் அதற்குரிய நஷ்டத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தேன். நஷ்ட ஈடு மிகச் சொற்பமாகத் தான் இருக்கும் என்ற எண்ணமும் என் நேர்மை உணர்வுக்கு சற்று ஊக்கம் அளித்திருக்க வேண்டும்.

கதவை மெதுவாக ஒருமுறை தட்டினேன். அடுத்த வீட்டார் பற்றி அதிகம் தெரியாது. புதிதாக வந்திருக்கின்றனர், மூன்று பேர் இருக்கிறார்கள், எல்லோருக்கும் தலை மயிர் சற்று மஞ்சள் நிறம். பேச்சில் வெளிநாட்டாரின் ஒலி தொனித்தது. சற்று கூர்ந்து கவனித்தால் ஜெர்மன் அல்லது ஆஸ்ட்ரியன் அல்லது ஸ்விஸ் என்று தோன்றும்.

என் பையனின் விஷமத்தை அவர்கள் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. சந்தோஷமாக சிரித்தார்கள். என்ன கீறல் அது ? பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தால்கூடத் தெரியாதே என்றார்கள். என் மன்னிப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளவே இல்லை. இதென்ன பெரிய விஷயம் என்றார்கள். சிறு பையன்கள் அப்படித்தான் இருப்பார்கள். நஷ்ட ஈடா ? என்ன இது ? அந்தப் பேச்சே எடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.

மகிழ்ச்சியுடன் கைகுலுக்கி, மனதார வாய்விட்டுச் சிரித்து எனக்கு விடைகொடுத்தார்கள்.

வீட்டுக்குத் திரும்பியதும் என் மனைவி – சாவித்துவாரம் வழி எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தவள் – கவலையுடன் கேட்டாள். “நிறையச் செலவு பிடிக்குமோ ?”

அவளை அமைதிப்படுத்தினேன். ஒரு பைசா வாங்கமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள் என்றேன்.

“அப்பப்பா, நல்ல வேளை” என்று சொல்லிக்கொண்டே மணி பர்ஸை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

சற்று கழிந்தபோது, கதவிடுக்கைத் தொட்டு தரையில் ஒரு கவர் கிடப்பதைக் கண்டேன். அதன் உள்ளே ஒரு சிறிய கார்டு. நீலக் கையெழுத்தில் அழகிய சதுர எழுத்துக்கள்.

“ஸோரன்டினோ தம்பதியருக்கு எங்கள் உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்.

எங்கள் வாசல் கதவில் ஒரு சிறிய கலைக் கீற்றை – நிச்சயமாக அது விஷமமே அல்ல – குழந்தை ஜான் மானுவல் ஸோரன் டினோ தீட்டியதற்காக உங்களுக்கு ஏதாவது சிறிய மன வருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்காக தங்கள் மன்னிப்பைக் கோருவதுடன், குழந்தை ஜான் மானுவலுக்கு எங்கள் நல் வாழ்த்துகளையும் நல்லாசிகளையும் தெரிவிக்கக் கோருகிறோம்.

வில்ஹெம் ஹோபர்

ப்ரூனெல்ட் ஹோபர்

வில்ஹெம் கஸ்டவ் ஹோபர்”

“கடவுளே” என்று அழைக்கத்தான் தோன்றியது. “எவ்வளவு நல்ல மனிதர்கள். கோபப்படாதது மட்டுமல்ல, நம்மிடம் அல்லவா மன்னிப்புக் கோருகிறார்கள்” என்றேன் என் மனைவியிடம். இந்த அன்புக்குப் பிரதியாக ஏதாவது செய்ய வேண்டாமா ? ஜானுக்காக வாங்கி வைத்திருந்த குழந்தைகள் வண்ணப் புத்தகம் ஒன்றிருந்தது. அதை அவனிடம் கொடுத்து எதிர்வீட்டுப் பையன் கஸ்டவ் ஹோபரி டம் கொடுத்துவிட்டு வரும்படி அனுப்பினேன்.

அன்று எனக்கு நல்ல நாளாயிருந்திருக்க வேண்டும். என் மகன் எந்த அசட்டு நிபந்தனையுமின்றி நான் சொன்னபடியே செய்துவிட்டு, ஹோபர்கள் மற்றும் அவர்கள் புத்திரனின் நன்றியையும் சுமந்து கொண்டு வந்தான்.

மத்தியானம். மணி பன்னிரெண்டு இருக்கும். சனிக்கிழமைகளில் நான் எதையாவது படிக்கலாம் என்று தொடங்குவேன். புத்தகத்தை விரித்து, இரண்டு வரிகள் படிப்பதற்குள் வாசல் மணி அடித்தது. இந்த மாதிரி நேரங்களில் நான் மட்டும்தான் வீட்டில் இருப்பேன். எழுந்திருக்காமல் வழியில்லை. எரிச்சலுடன் கதவைத் திறந்தேன். ஒரு இளைஞன் நிற்கிறான். சிறிய மீசை. சோல்ஜர் மாதிரி டிரஸ். கையில் ரோஜாக் கொத்து. கூரியர் தபால் கொண்டு வந்திருக்கிறான்.

ரசீதில் கையெழுத்திட்டுக் கொடுத்துவிட்டு, நான் கொடுத்த டிப்ஸுக்காக அவன் காட்டிய மிலிட்டரி சல்யூட்டை ஏற்றுக் கொண்டு, என்ன வந்திருக்கிறது என்று பார்த்தால் இரண்டு டஜன் ரோஜாப் பூக்கள். உடன் காவி நிறத்தில் ஒரு கார்டு.

“கஸ்டவ் ஹோபருக்காக ஒரு அற்புதமான வண்ணப் புத்த கத்தை அளித்து – எத்தனை அற்புதக் கதைகள்! – அவனைக் கெளரவித்ததற்காக ஸோரண்டினோ தம்பதியருக்கும் செல்வன் ஜான் மானுவலுக்கும் எங்கள் மனங்கனிந்த நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

வில்ஹெம் ஹோபர்

ப்ரூனெல்ட் ஹோபர்”

அப்போதுதான் என் மனைவி கடைத்தெருவிலிருந்து சாமான்கள் அடங்கிய பைகளையும் கவலையையும் சுமந்தபடி வந்துசேர்ந்தாள். “ஆஹா, எத்தனை அழகான பூக்கள். இதை வாங்கவேண்டுமென்று உங்களுக்கு எப்படித் தோன்றியது ? உங்களுக்குத்தான் இதைப்பற்றி ஒன்றுமே தெரியாதே” என்றாள். அடுத்த வீட்டு ஹோபர்களின் அன்பளிப்பு என்பதைச் சொல்லவேண்டியதாயிற்று.

ரோஜாப் பூக்களை ஜாடியில் வைத்தவாறே, “பதிலுக்கு அவர் களுக்கு ஏதாவது நாமும் செய்யவேண்டும். டிபன் சாப்பிட அழைப் போமா ?”

அந்த சனிக்கிழமை எனக்கு வேறு வேலைகள் இருந்தன. “இன் றைக்கா ?” என்று முனகினேன்.

“இன்றைக்குச் செய்ய வேண்டியதை நாளைக்கு என்று ஒத்திப் போடவே கூடாது” என்றாள் அவள்.

ஆறு மணிக்கு பளபளக்கும் தட்டுகளும் வெளிளை விரிப்பும் சாப்பாட்டு மேஜையை அலங்கரித்தன. சற்று முன்புதான் அவள் கட்டளைப்படி கபில்டோ அவன்யூ பேக்கரியிலிருந்து ஸாண்ட் விச்களும் தின்பண்டங்களும் பிஸ்கட்டுகளும் வாங்கி வந்திருந்தேன். அவை அழகாக பாக் செய்யப்பட்டு சிவப்பு – வெளிளை ரிப்பனால் கட்டப் பட்டிருந்தன. பார்த்தாலே நாக்கில் நீர் ஊறும். வரும்போது இரும்புக் கடை ஒன்றைக் கடந்து வருகையில், அந்தப் பண்டங்களின் விலையையும் ஒரு பெரிய டின் பெயின்டின் விலையையும் என் மனம் கணக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டது. சீ, அற்பத்தனம். இருந்தாலும் மனசு கொஞ்சம் கஷ்டப்படத்தான் செய்தது.

ஹோபர் தம்பதிகளும் வெறுங்கையுடன் வரவில்லை. ஒரு ராட்சச கேக்கை – ஒரு சிறிய பட்டாளத்துக்கு ஒரு வேளைக்குப் போதும் -கிரீமும் நகாசு வேலையுமாக – சுமந்துகொண்டு வந்திருந்தனர். அந்தப் பரிசின் அளவைப் பார்த்து என் மனைவி அசந்துபோய்விட்டாள். நானும்தான். ஆனால் நான் ஏதோ சற்று அசெளகரியமாக உணர்ந்தேன். ஹோபர் தம்பதியர் விடாமல் பேசிக்கொண்டிருந்தனர். மன்னிப்புக் கோரலும் சிரிப்பும் புகழ்ச்சியும் பெருக்கெடுத்து ஓடின. என் மனம் அதில் அவ்வளவாக ஈடுபடவில்லை. ஜான் மானுவலும் கஸ்டவ் ஹோபரும் விளையாடப் போய்விட்டனர். ஓடுவதும் கத்துவதும் கூச்சலும் குழப்பமுமாக எனக்குள் கவலையை எழுப்பிக்கொண்டிருந்தனர்.

எட்டு மணிக்கு அவர்கள் கிளம்பிவிட்டால் நல்லது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அடுக்களையில் என் மனைவி கிசுகிசுத் தாள். “எவ்வளவு நல்ல மனிதர்கள். அந்தக் கேக்கைத்தான் பாருங்க ளேன். அவர்களை சாப்பிட்டுவிட்டுப் போகச்சொல்ல வேண்டும்.”

“சாப்பிடவா ? பசிக்காதபோது எப்படி சாப்பிட முடியும் ? இப்போ இங்கே சாப்பிட என்ன இருக்கிறது ?”

“இல்லாவிட்டால் என்ன ? ஹோட்டலில் இருந்து வாங்கிக் கொள்ள லாம். பசி இல்லாவிட்டால் நாம் சாப்பிடவேண்டாம். அவர்கள் சாப்பிடும்போது கூடவே இருந்து பேசிக்கொண்டிருக்கலாமே.”

உணவுதான் முக்கியம் என்றில்லாவிட்டாலும், மீண்டும் பத்து மணிக்கு ஹோட்டலில் இருந்து கமகமக்கும் பெரிய பாக்கெட்டுகளை கழுதை போல் சுமந்தேன். அப்போதும் ஹோபர் தம்பதியர் தாங்கள் வெறும் கையோடு வருபவர்கள் அல்ல என்பதைக் காட்டிக் கொண்டனர். முப்பது பாட்டில் இத்தாலியன் ஒயினும், பித்தளைத் தகடால் நகாசு வேலை செய்யப்பட்டிருந்த ஐந்து பெட்டியில் பிரெஞ்ச் காக்னெக்குமாக வந்தனர்

இரவு இரண்டு மணிக்கு, பண்டங்களை எடுத்து வந்த அலைச்ச லாலும், வயிறுமுட்டத் தின்றதாலும், ஒயின் காக்னெக் மயக்கத்தாலும், நட்பின் உணர்ச்சிப் பெருக்காலும் படுத்தவுடனேயே தூங்கிவிட்டேன். தூங்கியது நல்லதாயிற்று. காலை ஆறு மணிக்கு, சாதாரண உடையில் கறுப்புக் கண்ணாடி அணிந்தபடி ஹோபர் தம்பதியர் வாசல் மணியை அடிக்கிறார்கள். மாங்விச் கிராமத்திலுள்ள அவர்களின் பழைய குடும்ப வீட்டுக்கு நாங்கள் அவர்களுடன் காரில் வரவேண்டுமாம்.

அந்த ஊர் பியூனஸ் அய்ரஸுக்குப் பக்கத்தில்தான் இருக்கிறது என்று சொன்னால் நம்பவே முடியாது. காரில் செல்லும்போது நான் நண்பர்கள் பற்றி, என் பத்திரிகை பற்றி, என் ஓய்வைப் பற்றி நினைத்துக்கொண்டேன். கண்களைத் திறந்தால் எரிகிறது. மூடினால் தூக்கம் வருகிறது. ஹோபர் தம்பதிகள் ஆச்சரியப்படும் விதத்தில் புத்துணர்ச்சியுடன் சந்தோஷமாகப் பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் வந்தனர். அவர்களது கிராமத்து வீட்டில் – அது மிக அழகான வீடு – எங்களை ராஜகுடும்பத்தினர் மாதிரி நடத்தினர். நாங்கள் வெயிலில் காய்ந்தோம். குளத்தில் நீந்தினோம். அற்புதமான விருந்து உண்டோம். ஒரு மரத்தடியில் படுத்து அமைதியான நித்திரையில் ஆழ்ந்திருக்கையில் எறும்புகள் கடிக்கவே திடுக்கிட்டு விழித்தேன். அப்போதுதான் எனக்கு நினைவு வந்தது, விருந்துக்கு வெறுங்கையுடன் வந்திருக்கிறேனே என்று.

“சும்மா அசட்டுத்தனமாக முளித்துக்கொண்டு நிற்காதீர்கள். அந்தக் குழந்தைக்கு ஏதாவது வாங்கிக் கொடுங்கள்” என்றாள் என் மனைவி, ரகசியமாக.

வாக்கிங் போவதற்காக கஸ்டாவையும் டவுனுக்கு அழைத்துச் சென்றேன். ஒரு பொம்மைக் கடை ஜன்னலின் முன் அவனை நிறுத்தி, “உனக்கு என்ன வேண்டும் சொல், வாங்கித் தருகிறேன்” என்றேன்.

“ஒரு குதிரை” என்றான் அவன்.

ஒரு சிறிய பொம்மைக் குதிரை கேட்கிறான் என்று நினைத்தேன். தப்பு.

அந்தக் துடிப்பான குதிரையில் நானும் அவனுடன் தொத்திக்கொண்டு கிராமத்து வீட்டுக்கு வந்தோம். அவன் இடுப்பைச் சுற்றிப் பிடித்திருந்தேன். நான் உட்கார ஒரு சிறு குஷன் கூட இல்லை.

இவ்விதமாக ஞாயிற்றுக் கிழமை கழிந்தது.

மறுநாள் நான் வேலையிலிருந்து வீடு திரும்பும்போது ஹோபர் என் மகனுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டப் பழக்கிக்கொண்டிருந் தார். “எப்படி ?” என்றார் என்னைப் பார்த்து. “அவனுக்கு நான் கொடுத்த பரிசு. உங்களுக்குப் பிடித்திருக்கிறதா ?”

“மோட்டார் சைக்கிள் ஓட்டும் பிராயமா அவனுக்கு ?” என்றேன்.

“அப்படியானால் அதை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்.”

அதை அவர் சொல்லியிருக்க வேண்டாம். தனக்குக் கிடைத்த பரிசு கைவிட்டுப் போய்விடுமோ என்ற பயத்தில் அவன் போட்ட அலறல் காதைத் துளைத்தது.

“பாவம் சின்னப் பையன்தானே” என்றார் ஹோபர், இரக்கத்துடன். “சிறுவர்கள் எல்லோருமே அப்படித்தான். வாடா பையா, உனக்கு இன்னொரு சாமான் வைத்திருக்கிறேன் பார்” என்று அவனைக் கூட்டிச் சென்றார்.

மோட்டார் சைக்கிளில் ஏறலாம் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு அதை ஓட்டத் தெரியாதே. அது ஓடுவதுபோல் வாயால் சப்தமெழுப்பிக்கொண்டு நின்றேன்.

“அப்படியே நில், அசையாதே” என்ற குரலைக் கேட்டுத் திடுக் கிட்டுத் திரும்பினேன். ஜான் மானுவல் கையில் ஒரு ரைபிளை வைத்துக்கொண்டு நிற்கிறான்.

“கண்ணைக் குறி வைக்காதே” என்று எச்சரித்தார் ஹோபர்.

மோட்டார் சைக்கிளை பிரேக் போடுவதுபோல் வாயினால் சப்தமெழுப்பியதும் ஜான் ரைபிளைத் தாழ்த்தினான். இருவரும் சந்தோஷமாக மாடிக்கு எங்கள் அறைக்குச் சென்றோம்.

“பரிசுகளை வாங்கினால் மட்டும் போதாதே” என்றாள் என் மனைவி. “பதிலுக்குக் கொடுக்கவும் தெரியவேண்டும். என்ன செய்யப் போகிறீர்கள் பார்க்கலாம்.”

அவள் சொல்வது எனக்குப் புரிந்தது. செவ்வாய்க்கிழமை வெளிநாட்டுக் கார் ஒன்றையும் இயந்திரத் துப்பாக்கி ஒன்றையும் வாங்கினேன். “எதற்கு இத்தனை சிரமம்” என்றார் ஹோபர். கஸ்டவ் முதல் குறியிலேயே தெருவிளக்கு ஒன்றை உடைத்தான்.

புதன்கிழமை மூன்று பரிசுகள் எங்களுக்காகக் காத்துக்கொண்டி ருந்தன. ஒரு பெரிய டூரிஸ்ட் பஸ் எனக்கு. அதில் ஏர்கண்டிஷன், குளியல் அறை – வென்னீர் குளியலுக்கும் ஆவி குளியலுக்கும் தனித்தனியாக -சமையலறை, டான்ஸ் ஆடுவதற்கான இடம் எல்லாம் இருந்தன. ஜான் மானுவலுக்கு ஒரு சிறிய ஏவுகணை செலுத்தும் இயந்திரம் – ஆசியாவில் எங்கோ செய்தது. என் மனைவிக்கு பின்னல் வேலைப்பாடுகள் கொண்ட ஒரு நைட் கவுன்.

“ஓ, இதை அணிந்துகொண்டு எங்கே செல்லமுடியும் ?” என்று முனகினாள் என் மனைவி. “பஸ்ஸில் செல்லத்தான் இது லாயக்கு. அவர் மனைவிக்கு நீங்கள் என்ன கொடுத்தீர்கள் ? ஒன்றுமேயில்லை. அதனால்தான் எனக்கு பிச்சை போடுவதுபோல் இந்த ஓட்டை கவுன்.”

ஒரு பயங்கர வெடியோசை என் காதைச் செவிடாக்கியது. தன் இயந்திரத் துப்பாக்கியைப் பரிசோதிப்பதற்காக ஜான் மானுவல் தெரு திருப்பத்திலிருந்த ஒரு வீட்டை நோக்கிச் சுட்டிருக்கிறான். நல்ல வேளை, அந்த வீட்டில் அப்போது ஆட்கள் இல்லை.

என் மனைவிக்கு இன்னும் மனத்தாங்கல் தீரவில்லை. “உங்களுக் கென்ன, உல்லாசமான பஸ். பிரேஸில் வரை ஜாலியாகப் போகலாம். உங்கள் பிள்ளைக்குத் துப்பாக்கி. மாட்டோகிராஸோ காட்டு மிராண்டிகளிடமிருந்துகூட தன்னைப் பாதுகாத்துக் கொள்ளலாம். ஆனால் எனக்கு ? நான் வெறும் வேலைக்காரிதானே. அதனால்தான் பிச்சைக்கார கவுன். இந்த ஹோபர்களுக்கு பரந்த மனசே இல்லை” என்றாள்.

நான் என் பஸ்ஸில் ஏறி அதைக் கிளம்பினேன். ஆற்றின் ஒதுக்குப் புறக் கரையில் அதை நிறுத்தினேன். பெரிய விசாலமான இருக்கைகள். ஜன்னல் துணிகளூடே வரும் குளிர்ந்த ஒளுயில் திளைத்தபடி நான் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினேன். என்ன செய்யவேண்டுமென்று எனக்குப் புரிந்து விட்டது.

அரசு தலைமைச் செயலகத்துக்குச் சென்று பெரஸைப் பார்த்தேன். எல்லா அர்ஜென்டைன்காரர்களுக்குமே அரசாங்கத்தில் ஒரு நண்பர் இருப்பார். என் நண்பரின் பெயர் பெரஸ். என்னதான் தாராளமாகச் செயல்பட வசதியிருந்தாலும் பெரஸின் செல்வாக்கும் உதவியும் எனக்குத் தேவையாயிருந்தது.

நான் நினைத்தது நடந்தது.

நான் வசிப்பது லாஸ் கானிடாஸ் மாவட்டம். லியாண்ட்ரோ டேரே ஸ்டேஷனிலிருந்து என் வீடுவரை ஒரு ரயில்வே லைன் போடச் செய்தேன். அதற்கு ஏகப்பட்ட இன்ஜினியர்கள், நிபுணர்கள், வேலையாட்கள் தேவைப்பட்டனர். தற்கால உலகின் நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஓலவேஸ் தெருவுக்கும் மாட்டியன்ஸோ தெருவுக்கும் இடையே லிபர்டார் அவெனியூ விலிருந்த நாலைந்து வீடுகளை இடிக்கவேண்டியிருந்தது. இவ்வளவு பிரமாண்டமான வேலையை எவ்வித அச்சமுமின்றி நிறைவேற்றி விட்டனர். இடிக்கப்பட்ட வீட்டுக்காரர்களுக்குக் கணிசமான தொகை நிவாரணமாக அளிக்கப்பட்டது என்பதைச் சொல்லவேண்டிய தில்லை. மந்திரி சபையில் அவருக்கு இருந்த செல்வாக்கு காரணமாக முடியாது என்ற சொல் பெரஸின் அகராதியில் இல்லை.

இந்தத் தடவை நான் ஹோபரை ஆச்சரியத்தில் மூழ்கடிக்க விரும்பினேன். வியாழக்கிழமை காலை எட்டுமணிக்கு அவர் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஓர் அழகிய சிவப்பு மஞ்சள் நிற ரயில் எஞ்சின் ஆறு பெட்டிகளுடன் அவர் வாசலில் நிற்கிறது. எஞ்சின் கதவில் “வருக, வருக, மிஸ்டர் ஹோபர் – உங்கள் சொந்த ரயில் வண்டிக்கு” என்ற போர்டு தொங்குகிறது.

“ஓ, ரயில் வண்டி” என்று மகிழ்ச்சியில் கத்தினார் அவர். “என் வாழ்க்கைக் கனவு நிஜமாகிவிட்டது. சின்னப் பையனாக இருக்கும் போதே ஒரு ரயில்வண்டி ஓட்டவேண்டுமென்று எவ்வளவு ஆசைப்பட்டிருக்கிறேன்.” மகிழ்ச்சிப் பெருக்கில் எனக்கு நன்றிகூடத் தெரிவிக்காமல் எஞ்சினில் ஏறி அமர்ந்தார். ரயிலை எப்படி ஓட்டவேண்டும் என்ற ஒரு சிறு கையேடு அதில் இருந்தது.

“கொஞ்சம் பொறுங்கள். ரொம்ப அவசரப்படாதீர்கள். உங்கள் பையன் கஸ்டவ்க்கு என்ன கொடுத்திருக்கிறேன் பாருங்கள்.”

அது ஒரு பெரிய சக்திவாய்ந்த மிலிட்டரி டாங்க். கிளம்பும்போதே தெருவின் இரு பக்கத்திலும் உள்ளவற்றை நீண்ட இரும்புக் கரங்களால் இடித்துக்கொண்டே போகும்.

“சூப்பர்” என்று கத்தினான் கஸ்டவ்.

“உங்கள் மனைவியையும் மறந்துவிடவில்லை” என்றேன். அண்மை யில்தான் பிரான்ஸிலிருந்து வரவழைக்கப்பட்ட அழகிய மிருதுவான மிங்க் கோட் அது.

பரிசுகள் கிடைத்த ஆர்வத்தில் அவற்றை அப்போதே சோதித்துப் பார்த்துவிட ஆத்திரப்பட்டனர்.

ஆனால் ஒவ்வொரு பரிசிலும் ஒரு பொறி இருப்பது அவர்களுக்குத் தெரியாது.

மிங்க் கோட்டின் உள்ளே ஆவியாகப் போகும் ஒரு ரசாயனம் பூசப்பட்டிருந்தது. காங்கோவிலுள்ள காட்டுவாசி மந்திரவாதி ஒருவன் எனக்கு அதைத் தந்திருந்தான். மேடம் ப்ருனெல்ட் அந்தக் கோட்டை அணிந்ததும், முதலில் உடம்பெல்லாம் ஒருவித அரிப்பெடுத்தது. அப்புறம் அவள் ஒரு வெண்ணிறப் புகையாக மாறி வானில் கரைந்து மறைந்துவிட்டாள்.

சிறுவன் கஸ்டவ் டாங்கில் ஏறி வெற்றித் தூண் ஒன்றைக் குறி வைத்துச் சுட்டு வீழ்த்தினான். அப்போது டாங்கின் உள்ளே இருந்த பகுதி ஒரு ரகசிய விசையின் அழுத்தத்தின் காரணமாக சிறுவனையும் கிளப்பிக்கொண்டு விண்வெளியில் பாய்ந்து, சனிக் கிரகத்தின் பத்து சந்திரன்களில் ஒன்றில் அவனைப் பத்திரமாக இறக்கியது.

ஹோபர் ரயிலைக் கிளப்பினார். அது அடக்கமுடியாத அதிவேகத் தில், அணுசக்திப் பாலம் வழியாக அட்லான்டிக், ஆப்ரிக்காவின் வடமேற்குப் பகுதி, சிசிலி ஆகியவற்றைத் தாண்டி, அப்போதுதான் குமுறத்தொடங்கியிருந்த எட்னா எரிமலையின் மேல் துவாரத்தில் போய் நின்றது.

வெளிளிக்கிழமை வந்தது. ஹோபர்களிடமிருந்து எந்த பரிசும் வந்திருக்கவில்லை. மாலையில் இரவு உணவு தயாரிக்கும்போது, என் மனைவி “எல்லாம் அப்படி அப்படித்தான். பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பிரியமாக இருங்கள், பணத்தைச் செலவிட்டு ரயில் என்ன, மிங் கோட் என்ன, டாங்க் என்ன என்று வாங்கிக் கொடுங்கள். உங்களுக்குப் பதிலுக்கு என்ன தந்தார்களாம் ? நன்றி என்று ஒரு வரிகூட கிடையாது” என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

***

ஆங்கிலம்வழி தமிழில் : எம். எஸ்.

Translated from Spanish into English by Thomas C.Meehan

***

ஃபெர்னான்டோ ஸோரன்டினோ (Fernando Sorrentino) தென் அமெரிக்காவில் உள்ள பியூனஸ் அய்ரஸில் பிறந்தவர். ஸ்பானிஷ் எழுத்தாளர்.ஆறு சிறுகதைத் தொகுதிகள், ஒரு நீண்ட கதை, ஒரு குறுநாவல் அவரது படைப்புக்கள். இவரது கதைகள் ஆங்கிலம், போர்த்துக்கீஸ், இத்தாலி, ஜெர்மன், பிரெஞ்ச், பின்னிஷ், ஹங்கேரியன், போலிஷ், வியட்நாமீஸ் போன்றவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இப்போது தமிழிலும் வந்திருக்கிறது.

எம். எஸ். (எம். சிவசுப்ரமணியன்) ஆங்கிலம் மற்றும் மலையாளச் சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். காலச்சுவடு பதிப்பகத்தில் பணிபுரிகிறார். ‘அமைதியான ஒரு மாலைப் பொழுதில்’, ‘யாருக்குத் தெரியும்’ என்ற இரு தொகுப்புகளை யுனைட்டட் ரைட்டர்ஸ் பதிப்பகம் அண்மையில் வெளியிட்டுள்ளது.

***

Series Navigation

ஃபெர்னான்டோ ஸோரன்டினோ (ஆங்கிலம்வழி தமிழில்:எம். எஸ். (எம். சிவசுப்ரமணியன்))

ஃபெர்னான்டோ ஸோரன்டினோ (ஆங்கிலம்வழி தமிழில்:எம். எஸ். (எம். சிவசுப்ரமணியன்))