தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

This entry is part [part not set] of 27 in the series 20030413_Issue


சித்திரை மாதம் முதல்தேதி, தமிழ்ப்புத்தாண்டாக தமிழ்நாட்டிலும் உலகெங்கும் வாழும் தமிழர்களாலும் கொண்டாடப்படுகிறது. ஏப்ரல் 14ஆம் தேதி வரும் இந்த தமிழ்ப்புத்தாண்டுக்கு இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கிறோம்.

இதே நாள் விஷு நாளாக புத்தாண்டாக ஏப்ரல் 14ஆம் தேதி கேரளாவிலும் மலையாளிகளாலும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பாரம்பரிய சடங்குகளை செய்து புதுவருடத்தை வரவேற்கிறார்கள். இதனை விஷுகணி என்று அழைக்கிறார்கள். பணத்தை சிறுவர்களுக்கும் வேலைக்காரர்களுக்கும் குடியிருப்பவர்களுக்கும் நண்பர்களுக்கும் அளிக்கிறார்கள். இதனை விஷுகைநீட்டம் என்று அழைக்கிறார்கள். சிறுவர்களும் பெரியவர்களும் பட்டாசு கொளுத்துகிறார்கள். சத்யா என்று அழைக்கப்படும் விருந்தை வீட்டிலுள்ளோர் அனைவரும் அமர்ந்து உண்கிறார்கள். சிறுவர்கள் சோழி என்று அழைக்கப்படும் வாழையிலையை இடுப்பில் உடுத்தியும் முகமூடி அணிந்தும் பக்கத்து வீடுகளுக்குச் சென்று நடனமாடி பணம் பெறுகிறார்கள். அருகாமையில் விஷுவேலா என்றழைக்கப்படும் கிராம சந்தைக்கும் சென்று நடனம் இசை ஆகியவற்றில் கலந்து கொண்டு கொண்டாடுகிறார்கள். குருவாயூர், சபரிமலை, பத்மனாபா சேத்ரம் ஆகியவற்றில் பெருமளவு பக்தர்கள் சென்று புதுவருட பூஜைகளில் கலந்து கொள்கிறார்கள்.

வங்காளத்திலும் வங்காளிகளாலும் ஏப்ரல் 14ஆம் தேதி நப பர்ஷா (வ எல்லாம் ப) ஆக புதுவருடமாக கொண்டாடப்படுகிறது. இதுவே பங்களாதேஷ் நாட்டில் பொய்லா பைஷாக் என்று தேசிய விடுமுறை நாளாக கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்காள மாநிலத்தில் இது நப பர்ஷா என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில், தங்கள் வீட்டை சுத்தம் செய்து, தங்கள் வீட்டின் முன் ரங்கோலியால் வரைந்து கோலமிட்டு அலங்கரிக்கிறார்கள். வீட்டின் நடுவில் ரங்கோலியால் கோலமிட்டு அதன் நடுவே மண்பாண்டம் வைத்து சிவப்பு வெள்ளை ஸ்வஸ்திகா வரைந்து வைக்கிறார்கள். இந்த மண்பாண்டத்தில் தண்ணீர் வைத்து இதனைச்சுற்றி மாவிலைளை வைத்து அலங்கரித்து வைக்கிறார்கள். காலையில் லட்சுமியை வணங்குகிறார்கள்.

அஸ்ஸாம் மாநிலத்தில் புதுவருஷம் ஏப்ரல் 14ஆம் தேதி அல்லது 13ஆம் தேதி ரங்கோலி பிஹு என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. ஆனால் விவசாயத்தின் மூன்று பருவங்களை கொண்டாடும் வகையில் மூன்று பிஹு நாள்களாக கொண்டாடப்படுகிறது. போஹாக் பிஹு, காடி பிஹு, மாக் பிஹு என்ற மூன்று. போஹாக் பிஹு நாளே ரங்கோலி பிஹு என்ற விதையிடும் நாளாக கொண்டாடப்படுகீறது. இந்த நாட்களில் கிராமங்களில் இருக்கும் சிறுமிகள் பாரம்பரிய உடை உடுத்தி, பிஹுகீத் என்றழைக்கப்படும் புதுவருட பாடல்களை இசையுடன் பாடுகிறார்கள். இத்தோடு கூட ஆடும் நடனம் முகோலி பிஹு என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் செய்யப்படும் புதிய உணவு பிதா என்று அழைக்கப்படுகிறது.

காஷ்மீர் மாநிலத்தில் புதுவருடம் நவ்ரே என்று கொண்டாடப்படுகிறது. இது சித்திரை மாதத்தின் முதல் நாளில் (சைத்ர நவ்ரத்ரே) கொண்டாடப்படுகிறது. விசார் நாக் என்றழைக்கப்படும் புனித நீரூற்றில் முழுகி இந்த புதிய நாளைக் கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் புதிய கணக்கும், புதிய பஞ்சாங்கமும் புதிய ஓலையும் எடுத்து எழுதி இதனை ‘க்ரீல் பச் ‘ என்றழைக்கிறார்கள். இவர்களும் கேரள மாநிலதினர் செய்யும் விஷுக்கண்ணி போலவே பெரிய தாம்பாளத்தில் கனிகளையும் சாதத்தையும், தங்க வெள்ளிக்காசுகளையும் வைத்து அலங்கரித்து வைக்கிறார்கள். இந்த தாளியை இன்னொரு தட்டு போட்டு மூடி அடுத்த நாள் வரைக்கும் வைக்கிறார்கள். அடுத்த நாள் காலையில் குடும்பத்தின் மூத்த பையனோ பெண்ணோ இந்த தட்டை எடுத்து திறக்கிறார்கள். அவனோ அவளோ இந்த தாளித்தட்டை எடுத்து குடும்பத்தின் மூத்த நபரிடம் காண்பித்து அதன் பின்னர் வீட்டில் உள்ள அனைவரும் பார்க்கிறார்கள். இந்த தட்டில் இருக்கும் பொருள்கள் இந்த குடும்பத்தின் உணவு, அறிவு, செல்வம் ஆகியற்றுக்கான வரும் வருடத்திற்கான பிரார்த்தனையை குறிக்கின்றன. (இது இன்று காஷ்மீர இந்துக்களால் மட்டுமே கொண்டாடப்படுகிறது)

ஏப்ரல் 2 ஆம் தேதி மஹாராஷ்டிர மக்களால் குடிபடுவா என்ற பெயரில் புதுவருடம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளும் சித்திரை மாதத்தின் முதல் நாளே. வசந்த ருதுவின் முதல்நாளே புதுவருடமாக மராட்டியர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் புதுவருடம் முழுமையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில், கசப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு அனைத்தும் உடைய ஒரு கலவை செய்யப்பட்டு உண்ணப்படுகிறது. வேப்பிலை இலைகள், புளி, வெல்லம், போன்ற பொருட்கள் கலந்து ஒரு கலவை செய்யப்படுகிறது. குடி என்றழைக்கப்படும் ஒரு கம்பமே இந்த நாளில் முக்கியமான பொருள். இந்த கம்பத்தின் உச்சியில் பித்தளை அல்லது வெள்ளியால் ஆன ஒரு பாத்திரம் வைக்கப்படுகிறது. இந்த கம்பம் பட்டினால் சுற்றப்பட்டு மஞ்சள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். மாவிலைகளும் தேங்காய்களும் வைக்கப்பட்டிருக்கும். இந்த கம்பம் ஜன்னல் வழியே வெளியே தொங்கிக்கொண்டிருக்கும். இது இயற்கையின் வளமையை குறிக்கிறது.

நேபாளத்தில், ஏப்ரல் 4ஆம் தேதி, நவ வர்ஷா என்ற பெயரில் புதுவருஷம் கொண்டாடப்படுகிறது. இது விக்ரம் சம்பத் என்றழைக்கப்படும் விக்ரம யுக கணக்குப்படி புதுவருஷம் கொண்டாடப்படுகிறது. இது நேபாளத்தில் அரசாங்க விடுமுறை. மாபெரும் மஹாபாரதப்போரை நினைவுகூறும் வகையிலும் அதன் வெற்றியை கொண்டாடும் வகையிலும் இந்த வருட ஆரம்பம் கொண்டாடப்படுகிறது. இரண்டு நாட்களுக்குப்பின்னர் பைரவனின் அவரது துணைவி பத்ராவும் பெரும் தேர்களில் ஊர்வலமாக கொண்டு பார்வையாளர்களால் இழுக்கப்பட்டு செலுத்தப்படுகிறது.

சிங்களர்கள் அவுருது என்ற பெயரில் ஏப்ரல் 14 ஆம் தேதியை புதுவருடமாக கொண்டாடுகிறார்கள்.

இந்தோனேஷியாவில் இருக்கும் பாலி தீவு இந்துகள் வாழும் தீவு. இந்த தீவில் புதுவருடம் ஏப்ரல் 14ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. இது ந்யேபி என்று அழைக்கப்படுகிறது. இது பாலி மொழியில் இருக்கும் சேபி என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இந்த வார்த்தையின் பொருள் மெளனம் என்பது. இந்த நாளில் கடந்த வருடம் நடந்த அனைத்தையும் நினைத்து பார்க்க தேவையான அமைதியை உள்பொருளாக கொண்டு அமைக்கப்பட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் ங்கேர் புக் என்றழைக்கப்படும் சடங்கு செய்யப்படுகிறது. இது வருடப்பிறப்புக்கு முந்தைய நாள் நடக்கும். இந்த நாளில் காதைப்பிளக்கும் ஒலிகளோடு, மூங்கில், குச்சிகள், முழக்கம் ஆகியவற்றோடு சத்தம் எழுப்பிக்கொண்டு இந்த நாளுக்காக செய்யப்பட்ட ஒரு பூத உருவமும் செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும். (இந்த வருடம் செய்யப்பட்ட பூதம், பாலித்தீவில் வெடிகுண்டு வைத்து வெடித்த தீவிரவாதியின் உருவம்). ஆனால் நியேபி நாளன்று எந்த இந்துவும் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை. பேசுவதில்லை. சத்தம் செய்வதில்லை. எதையும் எரிப்பதில்லை. எந்த காரியமும் செய்வதில்லை. 13ஆம் தேதி ஏப்ரல் அன்று வீடுகளில் சமயபுத்தகங்களை படித்துக்கொண்டு தியானம் செய்துகொண்டு இருப்பார்கள்.

கர்னாடகாவில் யுகாதி என்ற புதுவருடம் ஏப்ரல் 13 அல்லது 14ஆம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது.

வடகிழக்கில் இருக்கும் மணிப்பூர் மாநிலத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி சைரோபா என்ற பெயரில் புதுவருடம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மணிப்புரி மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து அலங்கரித்து இந்த தினத்துக்கென இருக்கும் சிறப்பான உணவுகளை தயாரித்து கடவுளுக்கு படைக்கிறார்கள். இந்த நாளின் முடிவில் அருகாமையில் இருக்கும் குன்றுகளில் ஏறுகிறார்கள். இது வாழ்க்கையில் ஏற்றத்தை புதுவருடம் தரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது. பங்கல் என்றழைக்கப்படும் மணிப்புரி முஸ்லீம்களும் இந்த புதுவருடத்தை கொண்டாடுகிறார்கள்.

இந்தியாவில் இருக்கும் சிந்திகளும் பாகிஸ்தானில் இருக்கும் சிந்து மாநிலத்து இந்துக்களும் ஏப்ரல் 14ஆம் தேதியை சேட்டி-சந்த் என்ற பெயரில் புதுவருடமாக கொண்டாடுகிறார்கள். இந்த நாளை இந்துக்களை காப்பாற்ற அவதரித்த இஷ்டதேவா உதேரோலால் என்னும் ஜூலேலாலின் ஞாபகார்த்தமாக கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் தண்ணீரை கும்பிடுகிறார்கள்.

சில வாரங்களுக்கு முன்னர் ஏப்ரல் 2ஆம் தேதி, ஆந்திராவிலும் தெலுங்கர்களாலும் யுகாதி என்ற புதுவருஷம் கொண்டாடப்பட்டது.

பஞ்சாபிலும் சில குஜராத் மாநில பகுதிகளிலும் பைசாகி என்ற பெயரில் ஏப்ரல் 14ஆம் தேதி, சித்திரை மாதம் முதல் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால் இது புதுவருடமாக அல்ல. இவர்களுக்கு புதுவருடம் தீபாவளி நாளே. ஆனால் பைசாகி நாளில் அனைவரும் கலந்து கொண்டு லட்சுமியை வணங்கி வளத்தை வேண்டுகிறார்கள்.

தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

***

Series Navigation