தமிழ் சேவைக்கு இயல் விருது.

This entry is part [part not set] of 31 in the series 20090528_Issue

தமிழ் இலக்கியத் தோட்டம்


தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா வழமைபோல ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தின் சீலி மண்டபத்தில் மே மாதம் 24ம் தேதி நடைபெற்றது. இம்முறை வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்பட்டது. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருபவர் அம்பை. அவருடைய நூல்கள்: அந்தி மாலை , சிறகுகள் முறியும் , வீட்டின் மூலையில் ஒரு சமையலறை , காட்டில் ஒரு மான் , வற்றும் ஏரியின் மீன்கள் , ஆங்கில மொழிபெயர்ப்பில் A Purple Sea , In a Forest, a Deer ஆகியவையாகும்.

தன்னுடைய ஏற்புரையில் அம்பை, ‘ என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் உள்ள ”உண்மகளை”ப் பற்றியது அல்ல இலக்கியம். உண்மை என்று நாம் உணர்வதற்கும் நமக்கும் இடையே உள்ள உறவு பற்றியது இலக்கியம். இந்த “உண்மை”யின் தன்மை மாறியபடி இருக்கிறது நம் வாழ்வில் என்பதுதான் உண்மை. வாழ்க்கையின் போக்குக்கு ஏற்ப இதை நாம் பல்வேறு கட்டங்களில் பல வகைகளில் உணருகிறோம். அதை நாம் எப்படி மொழியாக்குகிறோம் என்பதுதான் இலக்கியம். நம் உணர்வுகளின் வெளிப்படை சில சமயங்களிலும், அவற்றின் மறைப்பு சில சமயங்களிலும், உணர்வுகளை இலக்கியமாக்குகிறது. இந்த வெளிப்படை-மறைப்பு இவற்றின் கண்ணாமூச்சிதான் இலக்கியம்’ என்று கூறுகிறார்.

இயல் விருதை தொடர்ந்து வேறு விருதுகளும் வழங்கப்பட்டன:
புனைவு இலக்கியப் பிரிவில் ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’ நாவலுக்காக தமிழவனுக்கும், அபுனைவு இலக்கியப் பிரிவில்
‘இலங்கையில் தமிழர்’ நூலுக்காக முனைவர் முருகர் குணசிங்கத்துக்கும், கவிதைப் பிரிவில் ‘உலகின் அழகிய முதல் பெண்’ கவிதை தொகுப்புக்காக லீனா மணிமேகலைக்கும், தமிழ் தகவல் தொழில்நுட்ப சாதனைக்கான சுந்தர ராமசாமி நினைவுப் பரிசு சுரதா யாழ்வாணனுக்கும், மாணவர் புலமைப் பரிசில் அஞ்ஜெலா பிரிட்டோவுக்கும் வழங்கப்பட்டன.

இந்த விழாவுக்கு பல நாடுகளில் இருந்து எழுத்தாளர்களும், கல்வியாளர்களும், ஆர்வலர்களும் வருகை தந்து சிறப்பித்தார்கள்.

Series Navigation

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்