தமிழ் சமூகப் பண்பாட்டு ஆய்வுப்பரப்பில் மூன்று அரங்குகள்

This entry is part [part not set] of 39 in the series 20110410_Issue

ஹெச்.ஜி.ரசூல்



தமிழ் சமூகப் பண்பாட்டு ஆய்வுப்பரப்பில் நிகழ்வுற்ற மூன்று அரங்குகளில் கடந்த மார்ச் 2011 ல் பங்கேற்றது குறித்து இங்கே தவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.

1) தஞ்சாவூர் தமிழ்பல்கலைக் கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை ஒப்பிலக்கியம் என்ற பொருளில் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றை இருநாள் நிகழ்வாக மார்ச் 10 , 11 ஆகிய தேதிகளில் நடத்தியது.

முதல்நாள் துவக்கவிழாவில் தமிழ்ப் பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் தலைமையுரை நிகழ்த்த தமிழ்நாடு அரசுச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. வாழ்த்துரை வழங்கினார். சென்னைப் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் முனைவர் அ.அ.மணவாளன் ஒப்பிலக்கியத்தோற்றமும் வளர்ச்சியும் இன்றைய நிலையும் என்ற பொருளில் மையக்கருத்துரையை வழங்கினார்.

புதுவை காஞ்சி முனிவர் பட்ட மேற்படிப்பு மயத்தின் முனைவர் க.பஞ்சாங்கம் அமர்வுக்கு தலைமையேற்றார். சென்னை பல்கலைக்கழக ஆங்கிலத்துறை முனைவர் அழகரசன் ஆஸ்த்ரேலிய பழங்குடிகளின் அபார்ஜின கவிதைகளின் மொழியாக்கமும் கற்பித்தல் முறைகளும் என்ற பொருளில் பேசினார்.இதில் தரப்படுத்தப்பட்ட தமிழிலும், நகர்புற சேரி வட்டார வழக்கிலும் மொழிபெயர்த்த ஒரே கவிதையின் இருவேறு இயங்குதளங்களை சுட்டிக் காட்டினார்.

திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகபேராசிரியர் இராஜரெத்தினம் தமிழ்தெலுங்கு நாவல்களில் ஒரு பண்பாட்டு முரண் என்ற தலைப்பில் ஆய்வுரையை வாசித்தார்.குடந்தை அரசு ஆடவர் கல்லூரி பேராசிரியர்முனைவர் குணசேகரன் நிலம் கடந்து ஒலிக்கும் ஒற்றைகுரல்-தென்னிந்திய கவிதைகளை முன்வைத்து என்பதான பொருளிலும் பேசினார்.

இரண்டாம் அமர்வில் முனைவர் பஞ்சாங்கம் பாரதியும் அரவிந்தரும்,திருவையாறு கல்லூரி மேனாள் முதல்வர் பேரா.சண்முக செல்வகணபதி தமிழ் வடமொழி இலக்கியக் கோட்பாடுகள் முனைவர் தே.வெற்றிச் செல்வன் தழிழ் கன்னட புனைகதை ஒப்பாய்வு பொருளிலும் ஆய்வுக்கட்டுரைகளைவாசித்தனர்

இரண்டாம்நாள் அமர்வுக்கு முனைவர் ப.மருதநாயகம் தலைமை ஏற்றார்.காளிதாசரின் படைப்புகளில் சங்க இலக்கியத்தின் செல்வாக்கு என்ற தலைப்பில் ஆய்வுரையை நிகழ்த்தினார்.

தொடர்ந்து ஹெச்.ஜி.ரசூல் பலஸ்தீன – ஈழ கவிதைவெளி என்ற தலைப்பில் ஆய்வுரையை நிகழ்த்தினார்.கோவை பாரதியார் பல்கலைக்கழக முனைவர் மு.ஜீவா தமிழ் அழகியலும் தாஸ்தோஸ்கியும் முனைவர் சுஜாதா தமிழ்மலையாள புத்தெழுச்சி இயக்கங்கள் என்ற பொருளிலும் பேசினர்.

இறுதி அமர்வுக்கு வளர்தமிழ் புலத்தலைவர் முனைவர் ச.இராதாகிருட்டினன் தலைமையேற்றார். முனைவர் நசீமுதீன் தமிழ் மலையாள நாவல்களை ஒப்பிட்டும்,முனைவர் சாவித்திரி தமிழ் தெலுங்கு புதினங்களை ஒப்பிட்டும் முனைவர் சா.உதயசூரியன் தமிழ் ஜப்பானிய ஐக்கூ மரபும் மாற்றமும் பொருளிலும் முனைவர் பா.ஆனந்தகுமார் காயத்திரி ஸ்பிவகின் ஒரு அறிவுத்துறையின் மரணம் நூலின் மீதான குறிப்புகள் பொருளிலும் உரையாற்றினர்.

மொழிபெயர்ப்பின் வழி இலக்கியமும் பண்பாட்டியலும் பிற அறிவுத்துறைகளும் ஒன்றுக்குள் ஒன்று ஊடாடுகின்றன. பாலின அடித்தள ஆய்வு,ஐரோப்பிய அறிவுக்கு மாற்றான கிழக்கத்திய அறிவின் உருவாக்கம்,ஒருபடித்தான தகவமைவுக்கு மாற்றாக கூட்டுத்தனமிக்க பன்மிய அடையாள இருப்பு, கோளியல் பார்வைக்கு மாற்றான கிரகங்களியல் நோக்கு என்பதான சமகால ஆய்வு நெறிகளை உரையாடுவதாகவும் இந்த அமர்வுகள் அமைந்தன.

அயல்நாட்டு தமிழ்துறை தலைவர் ஆ. கார்த்திகேயன்,முனைவர் சா.உதயசூரியன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

2) நாகர்கோவில் தெ.தி.இந்துக் கல்லூரி தழிழ்த்துறை ஆய்வுமையமும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் இணைந்து பல்கலைக் கழக மானியக்குழு நிதி நல்கையுடன் இருநாள் தேசியக் கருத்தரங்கை 2011 மார்ச் 15, 16 தேதிகளில் நடத்தியது.

இக்கருத்தரங்கின் மைய நோக்கு பொருளாக சமகால எழுத்துக்களும் விளிம்புநிலைவாழ்வும் அமைந்திருந்தது.

முனைவர் சிறீகுமார் வரவேற்புரையை நிகழ்த்தினார்.கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டச் செயலாளர் வாழ்த்துரையை வழங்க முதல்நாள் அமர்வுக்கு ஆய்வறிஞர் அ. மார்க்ஸ்மைய நோக்கு கருத்துரையை வழங்கினார்.

மூனைவர் டி.தர்மராஜன் இனவரைவியலும் புனைவும்,முனைவர் அப்துல்ரசாக் சமகால எழுத்துக்களில் புகலிடவாழ்க்கை முனைவர் விக்டர் குடிதொழில் மக்களின் இனவரைவியலை எழுதுதல் வண்ணார்களை முன்வைத்து ஆகிய பொருட்களில் ஆய்வுரைகளை நிகழ்த்தினர்.

இரண்டாம்நாள் அமர்வில் மாநிலச் செயலாளர் சி. சொக்கலிங்கம் தலைமையேற்றர்.பேரா. பேசில் தலித் இனவரைவியலை எழுதுதல் அருந்ததியரை முன்வைத்து,பேரா. நட.சிவகுமார் தலித் கவிதைகளில் எதிர்கலாச்சாரக் கூறுகள்,ஹெச்.ஜிரசூல், பழங்குடிகளின் இனவரைவியலை எழுதுதல்,அருட்திரு சதீஸ்குமார்ஜாய் மானுடவியல் பார்வையில் சுண்ணாம்பு பரதவர் பொருள்களில் ஆய்வுரைகளை நிகழ்த்தினர். இறுதி அமர்வுக்கு பேரா.எஸ்.பரிமளா தலைமையேற்க கவி ஆர்.பிரேம்குமார் மக்கள் – உழைக்கும் மக்கள் – விளிம்புநிலைமக்கள் பொருளில் ஆய்வுரைநிகழ்த்தினார். நாவலாசிரியர் பொன்னீலன் நிறைவுரை ஆற்றினார். முனைவர் சிறீகுமார், எச். ஹாமீம் முஸ்தபா குழுவினர் இக் கருத்தரங்க ஏற்பாட்டாளர்களாக செயல்பட்டனர்.

3) மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் சமயதத்துவ மனிதநேய புலத்தின் சார்பில் இருநாள் தேசிய கருத்தரங்கம் 2011 மார்ச் 29.30 தேதிகளில் நடை பெற்றது.இதன் மையப் பொருள் மதச் சமூகங்களின் உருவாக்கமும் அடையாளங்களின் அசைவியக்கமும்.(construction of religious communities and the dynamics of identity)

இக்கருத்தரங்க துவக்கவிழாவில் முனைவர் ந. முத்துமோகன் வரவேற்புரை. பதிவாளர் டாக்டர் வி.அழகப்பன் துவக்கவுரை நிகழ்த்தினார். பாட்டியாலா பஞ்சாப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் டாக்டர் தரம்சிங் கருத்தாய்வு மைய உரையை நிகழ்த்தினார்.

முதல் அமர்வுக்கு டாக்டர் எஸ்.ஆண்டியப்பன் தலைமை ஏற்றார். திருவனந்தபுரம் மாநில மொழியியல் புல பேராசிரியர் டாக்டர் பி.கே.போக்கர் அம்பேத்கர் முன்வைத்த அடையாளமும் பன்மைத்துவமும்,

முனைவர் முரளி பின்நவீனத்துவமும் அடையாளப் பிரச்சினைகளும் ஆகிய தலைப்புகளில் தங்களது ஆங்கிலக் கட்டுரைகளையும் பிறகு அது தொடர்பான விவாதங்களையும்நிகழ்த்தினர்

இரண்டாம் அமர்வில் முனைவர் லூர்துநாதன் இந்திய கிறிஸ்துவத்தில் அடையாளமும் வித்தியாசங்களும்,டாக்டர் வேலம்மாள்சமூக அமைதிக்கு காந்தீய அணுகுமுறை தலைப்புகளில் உரையாற்றினர்.

ஹெச்.ஜி.ரசூல் பின்காலனிய இஸ்லாம் – மேற்கும் கிழக்கும் தலைப்பில் தனது ஆய்வுரையை நிகழ்த்தினார்.

இரண்டாம் நாள் நிகழ்வில் டெல்லி பல்கலைகழக பேரா. டாக்டர் கே.பிரேமானந்தன்(பிரேம்) தேசம் – மத அடையாளத்தோடும் அடையாளமற்றும்,டாக்டர் ஜெயன் தமிழ்நாட்டில் சீக்கிய கைதிகள் (1915 – 19124)

கல்கத்தா விஷ்வபாரதி பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் எம்.பி.டெரன் ஸ் சாமுவேல் சமூக உருவாகத்தில் சடங்கியலின் பங்கு , டாக்டர் ஐ.முத்தையா மதச் சமூகங்களை அடையாளங்களை விவாதப்படுத்துதல் – நாட்டுப்புறவியல் அணுகுமுறை.ஆகிய தலைப்புகளிலும் உரையாற்றினர்.

இம்மூன்று அரங்குகளும் சம காலத்தின் முக்கியத்துவமிக்க பண்பாடுப் போக்குகளை கோட்பாடுகளின் துணை கொண்டும், களப்பணிதரவுகளின் துணை கொண்டும் வெவ்வேறு நிலைபாடுகளில் நின்று விவாதிதிருக்கின்றன.

உலக அளவில் இலக்கியத்தின்வழி பண்பாட்டியல் உரையாடல்கள், தமிழகத்தின் அடித்தள , விளிம்புநிலை மக்கள் சமூகங்கள் பற்றிய புரிதல்கள், இந்திய அளவில் மதச் சமூகங்களின் உருவாக்கமும் அடையாளச் சிக்கல்களும் சார்ந்த விவாதங்களாக இவை அமையப் பெற்றுள்ளன

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்