தமிழ் எழுத்தில் உச்சரிப்புக் குறியீடு பற்றிய அலசல்

This entry is part [part not set] of 43 in the series 20080417_Issue

கார்கில் ஜெய்


தமிழில் புது எழுத்துக் குறியீடுகள், உச்சரிப்பில் எந்த அளவு முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை. ‘எம்.சி.ஆர்’, ‘ஜிவாசி’ என்றெல்லாம் பேசக்கூடிய மக்களிடையே மாற்றமிருக்காது என்றாலும், குறியீடுகளை உபயோகிப்பதால் இன்னும் நன்றாக ஒரு மொழியை பேசமுடியும் என்பது உண்மைதானே?. நான் சந்தம், வசந்தம், வாசகம், வசனம், வாசல் ஆகிய ஐந்து சொற்களிலும் ச-னா வுக்கு ‘ sa’ , த-னாவுக்கு ‘dha’ என்ற உச்சரிப்பிலேயே பேசுவேன். என் அம்மாவோ சந்dhaம், vaஸntham, vaachagam, vachanam, vaasal என ஒவ்வொன்றுக்கும் தனி உச்சரிப்புடன் மிக அழகாக பேசுவார். கேட்க நிச்சயமாக நன்றாகத்தான் இருக்கும். என்னால் அழுத்தம் திருத்தமாக உச்சரிக்க முடியாததற்குக் காரணம், ‘ச’, ‘த’ வின் மாறி உச்சரிப்புக்களை என்னால் குறியீடின்றி புரிந்துகொள்ள முடியாமல் போனதுதான். எப்படியோ இதை ஜோதிர்லதா கிரிஜா எழுதப்போய் இதனை தமிழ் – சம்ஸ்கிருத சண்டையாக்க ஒருவர் முயற்சி செய்துள்ளாரே தவிர, தமிழ் படிப்பதால் தன லாபம் இல்லை என்பதால் வெகுசிலரே குறியீடுகளை கவனித்து சிரத்தையாக உச்சரிக்க வாய்ப்பிருப்பதாக தோன்றுகிறது.

உச்சரிப்பு பற்றி யோசிக்கும் போது ஒரு சம்பவம் மனதில் தோன்றுகிறது. நான் இந்தியாவுக்கு வந்திராத ஆனால் ஞானம், தமிழ், பழம் முதலிய வார்த்தைகளை மிக நன்றாக உச்சரிக்கும் சப்பானைச் சேர்ந்த ஒரு சப்பை மூக்குக்காரரை சந்த்தித்திருக்கிறேன். (அவர் தனது மூக்குதான் சப்பானியர்களிலேயே மிகக்கூர்மையானது என்று சொன்னார். அளந்து பார்த்ததில் என் மூக்கைவிட நீளமாகத்தான் இருந்தது). அவர் ழகரத்தை சரியாக உச்சரித்ததில் பெரிய அதிசயம் என்னவென்றால் சப்பானிய மொழியில் ‘ழ’கரம் மட்டும் அல்ல, ‘ல’கரம், ‘ள’கரம் கூட கிடையாது என்பதுதான். சப்பானியர்கள் ‘இத்தாலியன் லிரா’ என்பதை ‘இடாரியன் ரிரா’ என்பார்கள். ‘ஃபுட்பால்’ என்பதை ‘ஃபுட்பாரு’ என்பார்கள். சங்கத்தமிழ் வளர்த்த மதுரையில் உள்ள கல்லூரி மாணவர்களை ‘பழம்’ என்று சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம். சிலர்(எல்லாரும் அல்ல) பழத்துக்கு ‘பலம்’ என்பர். பழனி, சேலம் இங்கெல்லாம் ‘பள’மாக கனியும். வட சென்னை வரும்போது ‘வாயப்பயம்’ என அழுகும். தப்பித்தவறி மிதிப்பவர்கள் மகாநதி படத்தில் ஜெயிலுக்குள் சொன்னது போல் வய்க்கி உய்ந்து விடுவார்கள். சில பச்சை தமிழரை விட இந்த சப்பானியர் மேல் என்ற நிலையில், இருக்கும் தமிழ் எழுத்துக்களை ஒழுங்காய்ச் சொன்னால் போதாதா? புது எழுத்துக்கள் வேறா? என்றும் தோன்றுகிறது.

அதுசரி, சப்பானியர் என்று சொல்லவேண்டுமா ஜப்பானியர் என்று சொல்ல வேண்டுமா? பச்சைத் தமிழர்கள் சப்பானியர் என்றுதான் சொல்ல வேண்டும். அமெரிக்காவில் அமைதியாக இருந்த ஆன்ட்ரூஸ்பாதிரியார் இந்தியா வந்து ‘குருடர்களைப் பார்க்கவைப்பேன்; சப்பானியர்களை நடக்கவைப்பேன்’ என்று சவால் விட்டு தெருவெல்லாம் ‘பாஸ்டர் ஆன்ட்ரூஸ்’ என்று போட்டு போஸ்டர் ஒட்டி இருக்கிறார். சிலர் சரியாக கவனிக்காதது போல் ‘போஸ்டர் ஆன்ட்ரூஸ்… போஸ்டர் ஆன்ட்ரூஸ்’ என்றே படிக்கிறார்கள். அதுசரி, பாதிரியார் எதற்கு சப்பானியர்களை நடக்கவைக்க வேண்டும்? சப்பானியர்கள் நன்றாகத்தானே நடப்பார்கள்? ஒலிம்பிக்ஸில் கூட கலந்து கொள்கிறார்களே? என்று குழப்பமாக இருக்கிறது. ஒரு வேளை பாதிரியார் ‘நடை பந்தயம்’ பற்றி சொல்லியிருப்பாரோ?. அல்லது ஓட்டப்பந்தயத்தில் அவர்களை கடைசி இடத்துக்கு தள்ளும் வகையில் நடக்கவைப்பேன் என மிரட்டி இருக்கலாம். எந்த அர்த்தத்தில் சவால் விட்டார் என்று இன்னும் எனக்கு புரியவில்லை. பாஸ்டர் ஆன்ட்ரூஸ் என்பதை ‘பாதிரியார் ஆந்திரேயர்’ என மாற்றி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்; சம்ஸ்கிருதத்தில் ‘பாத்ரேய ஆந்த்ரஸ்ய’ என்று அவரை கூப்பிடலாம் என்பது என் பின்குறிப்பு.

சம்ஸ்கிருதம் மிக நல்ல மொழி என்றும் , ரிஷபம், மேஷம் என்றால் மாடு, ஆடு என்பதை விட இனிமையாக இருப்பதாக வேதாத்ரி மகரிஷி கூறுவார். ஒரு குடுமி வைத்த பெரியவர் ‘பஸ்ல ஏறவிடாம குறுக்க மகிஷம் மாதிரி கும்பலா நின்னா எப்படி? ‘ என்று சொல்ல லயோலா கல்லூரி மாணவர்கள் கோபித்துக்கொள்ளாமல் எருமை போல் பொறுமையுடன், சாந்தமாக வழிவிட்டனர்.

நீர்நிலை, தண்ணீர், சுனை, அருவி, ஓடை, ஊற்று, ஆறு, தடாகம், கயம், ஊருணி, குளம், நதி, இன்னும் எத்தனை எத்தனையோ அற்புதமான சொற்கள் சொல்லிக்கொண்டே போகலாம். தமிழ் தவிர வேறெந்த மொழியிலும் நீரின் நிலைகளை சொல்ல இத்தனை சொற்கள் உண்டா எனத் தெரியவில்லை. தமிழுக்கு நீரிழிவு நிச்சயமாக இல்லை. Irrigation systemஎன்பதை தமிழ்ப்படுத்த ‘நீர்ப் பாசனம்’ என்றாகிறது. Sprinkler system- க்கு ‘சொட்டு நீர்ப் பாசனம்’ என தமிழ் ஒங்குகிறது. ஆனால் small irrigation system என்பதற்கு மிகச்சரியான மொழிபெயர்ப்பான ‘சிறுநீர்ப் பாசனம்’ என்பது சங்கடப் படுத்துகிறது. இதே போல் சம்ஸ்கிருதமும், ஆங்கிலமும், பிற மொழிகளும் தடுமாறும் நிலைகள் இருக்கக்கூடும். ‘எத்தனையாவது’ என்பதற்கு ஆங்கிலத்தில் ஒரு சொல்லோ, ஒரு முழு வாக்கியமோ கூட இல்லை.

சில சொற்கள் தனித்தமிழை விட இயல்பாக தோன்றுகின்றன. அனுபவம் என்பது சம்ஸ்கிருத சொல். அதே பொருளில் துய்த்தல் எனும் தமிழ் சொல்லுண்டு. இருந்தாலும் அவ்வளவு எளிதாக எந்த தமிழ் சொல்லை மாற்றாய் இயல்பாக உபயோகிக்க(மன்னிக்கவும்.. பயன்படுத்த ) முடியும் என என் அனுபவத்தில் தெரியவில்லை. நிச்சயமாக வேறு தூய்மையான தமிழ் சொல் இருக்கும். எனக்கு ஞாபகத்துக்கு வரவில்லை. (இதில் நியாபகம் என்று எழுதுவதுதான் வலக்கமென்றும், ‘ஞாபகம்’ தவறு என மதுரையச் சேர்ந்த நண்பன் அடித்து சொல்கிறான். நிரூபிப்பதற்காக ‘நியாபகம் வருதே.. நியாபகம் வருதே.. நியாபகம் வருதே.. ‘ என்று நான் எது சரி என்பதை மறக்கும் வரையில் பாடினான். எது சரி என்று எனக்கு இப்போது ஞாபகம் இல்லை. பேசாமல் ஞாபகம் என்ற வார்த்தையே மறந்துபோய், ‘நினைவு’ என்று எழுதித் தொலைத்து விட்டு, இந்த பிரச்னையை பற்றிய நியாபகமே இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்). மங்கை, பெண், மடந்தை என்பதெல்லாவற்றையும் விட கன்னி என்ற சம்ஸ்கிருத மொழி சொல்லே முத்தமிழிலும் இலகுவாக பெரும்பாலும் பயன்படுத்தப் படுகிறது. அரிவை , தெரிவை பற்றி அறிவாளிக்கும் தெரிவதில்லை.

தமிழை இன்னும் நன்றாக உச்சரிக்கலாமே என்று ஜோதிர்லதா கிரிஜா கூறியதற்கு ஏதோ அவர் இந்தி மற்றும் சம்ஸ்கிருத திணிப்பை செய்தது போல் எதிர்ப்பு தோன்றியுள்ளது.

கர்நாடகத்தை சேர்ந்தவர் ‘மலை’ என்பதை ‘மல’?? + ‘ய்’ = ‘மலய்’ என்று அறிவியல் பூர்வமாக மாற்றி, தமிழ் காட்டுமிராண்டிகளின் மொழி என்று சொன்னால், ‘அவர் அந்த சூழ்நிலையில், அந்த அர்த்தத்தில் சொன்னார்’ என்று ஒத்து ஊதி ஏற்றுக்கொண்டவர்கள் தாம் பச்சைத் தமிழர்கள். இப்போது ஜோதிர்லதா கிரிஜா மிகவும் தன்னடக்கத்துடன், முதல் பத்தியில் மன்னிப்பு கேட்காத குறையாக பணிவைத்தெரிவித்து, பிற மொழிகளில் உபயோகத்தில் உள்ள ஒரு யோசனையை சொன்னதற்கு வீராவேசம் வருகிறது.

துல்லியமான உச்சரிப்பு தேவையில்லையா? ஒருமுறை என் நண்பன் நேர்முகத் தேர்வில், ஒரு அமெரிக்கரிடம் தன் முன் அனுபவத்தை விவரித்துக் கொண்டிருக்கும்போது ‘ டூ யூ வான்ட் ரெஸ்யூம்’ என அவன் கேட்க அவர் ‘யெஸ் கோ அஹெட்’ என்றார். நண்பன் பயோடேட்டாவை கொடுத்துவிட்டு அமைதியாக இருக்க அவர் குழம்பிப் போனார். பிறகு நான் அவனுக்கு ‘ரெஸ்யூம்’ என்றால் ‘தொடர்க’ என்று மட்டும்தான் பொருள் என்றும் , ‘ரெஸ்யூமே’ என்றால்தான் ‘பயோடேட்டா’ என்னும் ஃப்ரெஞ்சு மொழிப் பொருள் கொள்ள முடியும் என்றும் விளக்கினேன்.

எந்தக் கல்லூரிக்கு வேண்டுமானால் செல்லுங்கள். அங்கு இருக்கும் மாணாக்கரிடம் இந்த ஐந்து வார்த்தைகளை உச்சரிக்க சொல்லுங்கள். 1.resume(with meaning of biodata), 2.moire 3.jujutsu 4.Magsaysay 5.cuba . 90% பேர் இரண்டு கூட சரியாகச்சொல்ல மாட்டார்கள்.

மற்ற மொழிகளில் ஜோதிர்லதா கிரிஜா சொன்னது மாதிரி ‘உச்சரிப்பை மாற்றுகிறார்களா?’ என்ற ‘பதில் சொல்ல முடியாத’ கேள்விக்கு ‘ஆம்’ என்பதே பதில். பல மொழிகளில் எழுத்துக்களை குறைத்துக் கொண்டே செல்கிறார்கள் என்ற எதிர்வாதமும் அறியாமையினால் ஏற்படுவதே. ஜோதிர்லதா கிரிஜாவும் எழுத்துக்களை அதிகரிக்க சொல்லவில்லை, உச்சரிப்புக்கான நிமித்தங்களை சேர்க்கத்தான் சொன்னார் என்பதே உண்மை. இதற்காக, ஃப்ரெஞ்சு உட்பட பிறமொழி பதங்களையும் உச்சரிக்க ஆங்கிலத்தில் உருவாக்கப் பட்டவைதான் IPA (International Phonetic Alphabet ) மற்றும் NPA (NATO Phonetic Alphabet ) உச்சரிப்பு முறைகள் .

கூபா, ஃப்ரான்க்ஃபுர்ட்டு என்பதுதான் சரி, க்யூபா, ஃப்ரான்க்ஃபர்ட் என்பது தவறு என்றுணராத ஆங்கிலேயரும் பல வருடங்களாய், ஆங்கிலத்தில் உச்சரிப்புக்காக அமேசான் அல்ல ஏமஸான் தான் சரி என்றும், résumé , moiré என்றும் உச்சரிப்பு மாற்றங்களை சம்பாக்னி (champagne) குடித்துக் கொண்டே முயற்சி செய்கிறார்கள். இதில் பயிற்சி பெற்றவர்களால் நிச்சயமாக தமிழ்ப் பெயரை நன்றாக உச்சரிக்க முடியும். பெரும்பாலும் ‘பத்ரி’ என்ற பெயரை வெள்ளைக்கரர்கள் ‘பேட்றி’ என்றுதான் உச்சரிப்பர். இதற்கு காரணம் ‘bad’+ri க்கான உச்சரிப்பு பேட் என்பதுதான். அதேபோல் தங்கம் (thangam) என்ற தமிழ்ப்பெயரை வெள்ளைக்காரர் கூப்பிட வேண்டுமென்றால் இதே போன்ற bad உச்சரிப்புடன் ”தேன்கேம்” என்பார். இந்த குறைய நீக்க IPA உறுப்பினர்கள் முயற்சி செய்து புது எழுத்துருக்களை உருவாக்கியுள்ளனர். ஆங்கில எழுத்து a வின் வாலை வெட்டினால் வருவது ə. இதை ‘adjust’ ல் வரும் ‘அ’ சப்தத்துக்கு adjust பண்ணி வரையறுத்துள்ளனர். (capable -ன் உச்சரிப்பு ‘capəble’ – கொள்ளக் கூடுகிறதா?) . இப்போது a வில் வெட்டிய வாலை எடுத்து ‘n’ க்கு மாட்டிவிட்டால் ŋ கிடைக்கிறது. இது ‘ங்’ என விளக்கப் பட்டுள்ளது. ஆகவே பெயரை ‘thəŋgəm’ என எழுதினால் பயிற்சி பெற்ற வெள்ளைக்காரர் ‘Ms. தங்கம்’ என சிங்கக் குரலில் கூப்பிடுவார்.

இப்போது ஐந்து உச்சரிப்புக்கும் விளக்கம் :


-ரெஸ்யூமே (biodata),


-மாய்ரே (பகுத்தறிய முடியாத நேர்க்கோடுகள் உண்டாக்கும் வளைவுத் தோற்றங்கள் )


– ஜுஜ்யூ(ய்)ட்சு, ( ஒகினாவாவைச் சேர்ந்த கூட்டுத் தற்காப்புக்கலை )


மாக்சே(ய்)சாய், ( பிலிப்பைன்ஸ் நாட்டு கௌரவம் மிக்க விருது)

cuːba
– கூபா ( இதை நீட்டி சொல்லக்கூடாது. Cool- க்கும் cushion க்கும் இடையில் ‘zoo’ or ‘foot’ அளவுக்கு சொல்ல வேண்டும்.) )

இதைப்போன்ற ஒரு நல்ல முறையைத்தான் கட்டுரை ஆசிரியை தமிழுக்கும் யோசனையாகச் சொன்னார். இது கடினம் என யாரும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இமெயில் அனுப்ப பேந்தப் பேந்த முழித்தவர்கள் இப்போது ஸ்பேம் மெயில் அனுப்பிக் கலக்கவில்லையா? அதுபோல் இதுவும் பழகிவிடும். மற்றவர்கள் பிற மொழிக்காக மாற்றம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். நாம்தான் இன்னும் விழிக்கவில்லை.

ஜோதிர்லதா கிரிஜா எழுதிய பல அறிவுரை மற்றும் நீதிக்கதைகளை, பால்யத்திலேயே நான் கோகுலம் மற்றும் சில புத்தகங்களில் படித்துள்ளேன். நாட்டுப் பற்று, சினேக உணர்வு, சமத்துவம், மத நல்லிணக்கம், நன்னம்பிக்கை , விட்டுக்கொடுத்தல் என ஒவ்வொரு கதையிலும் ஒரு போதனை செய்வார். அம்பிகை, கண்ணன் போல கருப்புத்தான் அழகு என்று குழந்தைக்குச் சொல்லி பசுமரத்தில் ஆணி அடிப்பார். எந்த மொழியையோ, எந்த மதத்தையோ எப்போதுமே அவர் தூற்றியதில்லை. எதிர்மறை எண்ணங்களை உருவாக்காமல் சிறந்த எதிர்கால குடிமகன்களை உருவாக்குவதே அவர் எழுத்துக்களின் ஆணிவேராக இருந்தது. இப்போது யோசித்துப் பார்த்தால், படிக்கும் ஒவ்வொரு குழந்தையையும் தன் வயிற்றில் பிறந்ததாகவே எண்ணி, சிறந்த குடிமகளாக/மகனாக வளர வேண்டும் அன்போடும், அக்கறையோடும் எழுதியிருக்கிறார் என்றே தோன்றுகிறது. அந்த அக்கறையினால்தான் எதிர்மறையான பொருளில் மாற்றி பிரசுரித்ததற்காக ஒரு வார இதழில் எழுதுவதையே நிறுத்தினார். இவரா தமிழ் பற்றி எதிர்மறையாக எழுதுவார்?

ஒரு மொழியை ‘செத்துப்போனது’ என்று ஒருவர் திமிராகக் கூறியிருக்கிறார். திமிர்ப் பேச்சுக்கு, தமிழில் இருந்தே ஒரு பதில்: ‘நீரில் எழுத்தொக்க யாக்கை’. நீர்க்கோல வாழ்வில் இருந்துகொண்டு நாம் மற்றவற்றை ‘நிரந்தரமில்லை ‘என்று சொல்லுதலைத்தான் தமிழ்மறையில் ஆணவம் என்றனர். கம்பர் சோழனிடம் ‘நீ நிலையானவன் அன்று, ஆனால் காவிரி நிரந்தரமானது. அதனால் சோழநாடு என்பதற்குப் பதிலாக பொன்னி நாடு என்றே எழுதுவேன்’ என்றார். ‘சமஸ்க்ருதம் செத்த மொழி’ என்று சொன்னவர் வாழ்வாங்கு வாழ்ந்து, அவரின் கொள்ளுப்பேரக் குழந்தைகளின் திருமணத்திலும் கூட சமஸ்க்ருதத்தைக் கேட்டு அம்மொழிக்கு உயிருண்டு என்று உணரட்டும் என தமிழ்க் கடவுளும் என் குலதெய்வமுமான முருகனை ப்ரார்த்திக்கிறேன். ஆறு இறந்தாலும் ஊற்றால் பிறர் உயிர்காக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா(று)
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்
— ஒளவையார்

இதுபோன்று மற்ற மொழிகளை நாகரீகமற்று இழித்தல் மூலம் பகைமையைதான் உருவாக்க முடியும்.

‘என்னுடைய கேள்விகளுக்கு பதில் இருக்காது’ – என்னும் அவரின் கூற்றும் ஆணவமே. ‘என் கேள்விகளுக்கு எனக்கு பதில் கூறவும்’ என சற்று நிதானமாக கேட்கலாம். ஒருவருக்கு பதில் தெரியாது என்பதால் பதிலே இருக்காது என்று அவரே முடிவு செய்துவிட முடியுமா? பதில் சொல்லிவிட்டேனே என்ன செய்துவிடுவார்? கண்ணியமாக பதிலை ஏற்றுக் கொள்ளமாட்டார். அவ்வளவுதான்.

IPA உச்சரிப்பு முறையினால் தமிழ் மொழியை கற்பது, மற்றும் சொல்லிக் கொடுப்பது எளிதாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை(குறைந்த பட்சம் உலகத் தமிழ்க் குழந்தைகளுக்காவது). இருந்தாலும் பச்சைத் தமிழர்கள் என்னை துரோகி என்பார்களே என்பதையும் கருத்தில் எடுத்துக் கொள்கிறேன்:

ஆக எல்லாவற்றய்யும் கூட்டி, கழித்துப் பார்த்தால், தமிழய் சீர் திருத்தம் செய்யத் தேவய் இல்லய், இருப்பதய் இருப்பது போல விடுதலே நன்மய் என என் கயமய் மன்னிக்கவும்.. என் கடமய் உணர்வு தெரிவிக்கிறது.


-கார்கில் ஜெய்

jaykumar.r@gmail.com

Series Navigation

கார்கில் ஜெய்

கார்கில் ஜெய்