தமிழ் உரைநடையின் தொடக்கப் புள்ளி வள்ளலார்

This entry is part [part not set] of 45 in the series 20081023_Issue

முனைவர் மு. பழனியப்பன்


செய்யுள், உரைநடை என்ற இரு வடிவகங்கள் தமிழ்மொழிக்கு வளம் சேர்த்து வருகின்றன. செய்யுள் என்பது தமிழ் தனக்கே, தானே தன்மொழிப் படைப்பாளர்களால் உருவாக்கிக் கொண்ட வடிவம். அது இறுகிப்போய் குறளாகி, ஆசிரியமாகி, விருத்தமாகி-நீர்த்துப் போய் வசனகவிதையாகி, புதுக்கவிதையாகி எனப் பல்வேறு வடிவங்களை அடைந்து வளர்ந்து வருகின்றது.

உரைநடை வடிவம் தமிழுக்கு வந்த வடிவம். ஆனால் எளிமையான மக்களையும் சென்றடையும் வல்லமை அதற்கு உண்டு. செய்தித்தாள்கள் முதல் நூல்கள் வரை தற்காலத்தில் பெரும்பாலும் உரைநடையில் சொல்லும் முறைமை வந்துவிட்டது. உரைநடையின் திறந்த மறைபொருளற்ற அகராதி தேடிப் பொருள் கண்டறியத் தேவையில்லாத நேர்வடிவம் மக்களிடம் அது எளிதில் சென்று அடைய வசதியாகிவிட்டது.

தமிழுக்கு உரைநடை வந்தபோது செய்யுள் நடையில் எழுதியவர்கள் உரைநடையின் வடிவ எளிமை கண்டு அதிலும் படைப்புக்களை படைக்கத் துவங்கினர். இரு வடிவங்களின் சந்திப்புக் காலமான இக்காலம் குறிக்கத் தக்க காலமாகும். இக்காலப் புலவர்கள் செய்யுள் செய்வதிலும் தேர்ந்தவர்களாக இருந்தனர். உரைநடை வடிவிலும் திறம் பெற்றவர்களான விளங்கினர். இதற்கு அடுத்தகாலத்தில் கவிஞர்கள் என்ற தனிப்பிரிவும், உரைநடையாளர்கள் என்ற தனிப்பிரிவும் ஏற்பட்டுவிட்டது. உரைநடையாளருக்குக் கவிதை பிடிபடாது. கவிஞர்க‌ளுக்கு உரைநடை ஒத்துவராது என்ற நிலை வந்துவிட்டது. கண்ணதாசன் போன்ற சிலருக்கு விதி விலக்கு உண்டு.

வீரமாமுனிவர், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, வடலூர் வள்ளல் இராமலிங்க அடிகள், பாரதியார் போன்றவர்கள் செய்யுள் படைப்புகளாலும், உரைநடை படைப்புகளாலும் உயர்ந்து நின்றவர்கள் ஆவர். தமிழின் இரு வடிவ நிலைகளிலும் வல்ல இவர்களால் இரண்டு வடிவங்களும் செழுமை பெற்றன.

குறிப்பாக பதினெட்டாம் நூற்றாண்டில் நடைபெற்ற செய்யுள், உரைநடை சந்திப்புக் காலக்கட்டம் தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிக்கத் தக்க காலகட்டமாகும். இக்காலக் கட்டத்தில் உரைநடை செய்ய முனைந்த அறிஞ‌ர்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டி இருக்கிறது. இக்கட்டுரை வள்ளலாரின் உரைநடை ஆற்றல் என்னும் விரிந்த பரப்பினில் சில சொல்ல விழைகின்றது.

வள்ளலார் எழுதிய உரைநடை ஆக்கங்கள் இரண்டு ஆகும். ஒன்று மனுமுறை கண்ட வாசகம். மற்றொன்று ஜீவகாருண்ய ஒழுக்கம்.

இவற்றுள் முன்னது பெரிய புராண ஈடுபாட்டால் அதனை ஒட்டி வள்ளல் பெருமானால் எழுதப் பெற்றது. முழுக்க முழுக்க புதிய உரைநடைப் படைப்பு என்ற நோக்கில் வள்ளல் பெருமானின் ஜீவகாருண்ய ஒழுக்கம் பெருமை பெறுவதாகின்றது. இவ்வுரைநடைப் படைப்புகளைப் படைக்கின்ற வள்ளலார் இதனை ஒட்டிப் பல நூல்களுக்கு உரைகளும் வரைந்துள்ளனர். அவ்வாறு அவர் வரைந்த உரைகள் இவரின் தனித்த உரைநடைக்கு வழி தருவன ஆயிற்று. எனவே வள்ளலார் கவிஞர், உரைநடையாளர், உரையாளர் போன்ற பல படைப்புத்திறன்களை உடையவராகின்றார்.

ஆயிரத்து எண்ணூற்று அறுபத்தேழாம் ஆண்டின் வைகாசி மாதம் பதினொன்றாம் நாளன்று நிகழ்ந்த தருமச்சாலைத் தொடக்க விழாவில் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற உரைநடை நூல் அரங்கேற்றம் செய்யப் பெற்றுள்ளது. ஓரளவு எழுதி முடிக்கப் பெற்ற பகுதிகள் மட்டுமே மக்கள் முன்னிலையில் வாசிக்கப் பெற்றன. முழுவதும் அப்போது எழுதி முடிக்கப் படவில்லை. வாசிக்கப்படவும் இல்லை. இக்காலக் கட்டமே தமிழ்ச் செய்யுள் வடிவமும், உரைநடை வடிவமும் சந்தித்த காலமாகும்.ஜீவ காருண்ய உரைநடைப் பகுதி மு்ன்று பிரிவுகளை உடையதாகும். மூன்றாவது பிரிவு முற்றுப்பெறாமல் உள்ளது. முதல் பகுதியின் சில பகுதிகளைத் திருப்பிச் சொல்லுவதாகவும் மூன்றாம் பகுதி தற்போது கிடைக்கிறது. வள்ளலார் இதனை ஏழுபிரிவாக எழுத எண்ணியிருந்திருக்கிறார். அதற்கான காலம் அமையப் பெறாமல் இவ்வுரைநடைப்பகுதி முற்றுப் பெற்று நின்றுவிட்டது.

இருப்பினும் இம்முற்றுப்பெறா பகுதிகளைப் படிக்கும் பொழுது அது முற்றுப் பெறவில்லை என்ற எண்ணம் தோன்றுவதில்லை. ஏனெனில் ஜீவகாருண்யம் குறித்துத் தான் உலகிற்கு அறிவிக்க வேண்டிய செய்திகள் அனைத்தையும் தானே தடை, விடைகளை ஏற்படுத்திக் கொண்டு வள்ளல் பெருமான் இதற்குள் முழுமையாக உணர்த்தி விட்டதாகவே எண்ணமுடிகின்றது. இப்பகுதியைப் படிப்போர் ஐயம், திரிபின்றி, முரண்பாடு இன்றி ஜீவகாருண்யம் குறித்து அறிந்து கொள்ள இயலும்.

மேலும் பத்தி என வரையறுக்கப் பெறும் ஒரு பொருள் பற்றியதான பகுதிக்கும் அடுத்த பகுதிக்கும் வள்ளலாரின் உரைநடையில் நல்ல ஒருங்கிணைப்பு காணப்படுகிறது. ஒரு பத்தியுடன், ஒரு பத்தி தொடர்ந்து செல்வதாக உள்ளது. இது உரைநடைக்கு உரிய உத்தி வடிவமாகும். பொருள் தொடர்நிலையாகும்.

எளிமையான எடுத்துக்காட்டுகள், உவமைகள், தத்துவங்கள் நிகழ்வுகள் ஆங்காங்கே இவ்வுரைநடைப் பகுதியில் காணப்படுகின்றன. வடமொழிச் சொல்லாட்சிகளுக்கும் இதனுள் இடம் தரப் பெற்றுள்ளது.

இதனால் வள்ளலாரின் கொள்கையை அறிந்து கொள்ள விரும்புகிற ஆரம்பநிலை சார்ந்த சன்மார்க்க கொள்கையாளர்கள் கற்க வேண்டிய முதல் நூல் அடிப்படை நூல் என்ற நிலையில் இந்நு}லைக் காட்டமுடிகின்றது. திருவருட்பாக்களைக் கற்று அறிந்து கொள்ளவேண்டிய செய்திகளைக் குறுகிய அளவில் இவ்வுரைநடை தனக்குள் புதைந்து வைத்துள்ளது.

இவ்வகையில் சுவையான உரைநடைப் பகுதியாக ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற உரைநடைப் பகுதி அமைந்திருக்கிறது என்றால் அது மிகையான கூற்று அல்ல.ஜீவ காருண்ய ஒழுக்கம் என்ற இந்த உரைநடைப் பகுதி மக்கள் அபர, பர ஞானம் பெற்று உயரிய வாழ்க்கை வாழ்வதற்கான முறைமைகளை எடுத்துரைக்கின்றது.

உலகத்தில் மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத் தக்க ஆன்ம லாபத்தை காலமுள்ளபோதே அறிந்து அடைய வேண்டும் என்பது இவ்வுரைநடையின் தொடக்க வரிகளாகும். உலகம் எனத் தொடங்கியுள்ள இம்முறைமை உலக உயிர்களுக்கான பெருநெறி குறித்துச் சிந்திப்பதாக உள்ளது. மேலும் இதனுள் காட்டப் பெற்ற ஆன்ம லாபம் என்ற தொடர் அடுத்த பத்தியைத் தொடரச் செய்வதாக உள்ளது.

அந்த ஆன்ம லாபம் எது என்று அறிய வேண்டில்‍ என்று தடையோடு அடுத்த பகுதி ஆரம்பமாகி அதன்பின் இவ்வினாவிற்கான விடை தொடர்கிறது. இவ்வாறு தடை விடையாக அமைந்துக் கற்பவரை, கேட்பவரை ஈர்க்கும் பொருள் சேர்க்கை உடையதாக இவ்வுரைநடைப் பகுதி அமைந்து சிறக்கின்றது.

அருள் என்பது கடவுள் இயற்கை விளக்கம் அல்லது தயவு. ஜீவகாருண்யம் என்பது ஆன்மாக்களின் இயற்கை விளக்கம் அல்லது ஆன்மாக்களின் தயவு. இதனால் ஒருமைக் கரணமாகிய சிறிய விளக்கத்தைக் கொண்டு பெரிய விளக்கத்தைப் பெறுதலும் சிறிய தயவைக் கொண்டு பெரிய தயவைப் பெறுதலும் போலவென்றாய வேண்டும்(திருவருட்பா உரைநடைப் பகுதி ப. 138) என்ற இந்தப் பகுதி ஜீவ காருண்யத்தின் அடிப்படை குறித்து அறிவிக்கின்றது. அதுவே இறைவனைச் சென்று சேரவைக்கும் பாதை என்பதையும் இது எடுத்துரைப்பதாக உள்ளது.

அதுபோல் வாடகை வீடு உவமை, செம்மண் உவமை, தாவரங்களை உண்பது உயிர் கொலையாகுமா முதலான பல சுவையான பகுதிகள் இவ்வுரைநடைப் பகுதியில் உண்டு.
செம்மண் சந்தோஷித்தது, துக்கித்தது என்று சொல்லப் படாது அதுபோல் மனம் சந்தோஷித்தது, துக்கித்தது என்று சொல்லப்படாது. செம்மண்ணினால் தேக வாழ்க்கைக்கு வீடு கட்டிக் கொள்வது போல மனம் முதலான கரணேந்திரியங்களால் ஜீவவாழ்க்கைக்குக் கடவுளால் கட்டிக் கொடுக்கப்பட்ட தேகம் சிறிய வீடாகும். இன்ப துன்பங்களை வீட்டிலிருப்பவன் அனுபவிப்பானல்லது வீடு அனுபவிக்க மாட்டாது ( மேலுது ப.101) என்ற செய்தி சுவையான தேவையான செய்தியாகும். இந்த அளவிற்குக் கருத்து அழகும், சொல் சேர்க்கையும் கொண்டது வள்ளலாரின் உரைநடையாகும்.

தமிழில் வள்ளல் பெருமானின் திருவருட்பா தந்த பெருமை, இலக்கிய வரலாற்று ஆசிரியர்களால் புகழ்ந்து உரைக்கப் படுவது போல தமிழ் உரைநடையைத் தொடங்கி வைத்தவர் வள்ளலார் என்ற நிலையில் அவரைக் காட்டுவதும் இன்றியமையாததாகும். வள்ளலார் கொள்கைகளை அறிய விரும்புவோர்க்கு எளிய சாதனாமாக ஜீவகாருண்ய ஒழுக்கம் அமைகிறது என்பதும் இங்குக் கருதத்தக்கது.

முனைவர் மு. பழனியப்பன்
விரிவுரையாளர்
மா. மன்னர்கல்லூரி (த)
புதுக்கோட்டை
muppalam2006@gmail.com

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்