தமிழ்த் தேசியம் முதலான கேள்விகளை எழுப்பிய நண்பர் திராவிடனுக்குப் பதில்

This entry is part [part not set] of 18 in the series 20011007_Issue

மஞ்சுளா நவநீதன்


(நண்பர் திராவிடன் சில வாரங்களுக்கு முன்பு திண்ணையின் விருந்தினர் பக்கத்தில் எழுப்பின சில கேள்விகள் என் கவனத்திற்கு வந்தன. அவற்றிற்கான என் பதில்கள் இவை. இதைத் தொடர்ந்து உங்கள் கருத்துகளையும் எழுதலாம். வசை மொழிகளும் , திட்டுகளும் கருத்துகளுக்கு மாற்று அல்ல என்பதை மட்டும் சற்று கவனத்தில் கொண்டால் நல்லது.)

1. இசுரேலின் சியோனிசத்தை ஆதாித்து அம்பலப்பட்டுப்போன அமொிக்கா குறித்து நண்பர் மஞ்சுளா நவநீதன் எழுதியுள்ளது சாிதான். நண்பரே…சாதியத்தை இனவெறியோடு ஒப்பிட வேண்டும் என்பது குறித்த தங்களது கருத்து என்ன ?

என் கருத்தும் சாதீயத்தை இனவாதத்துடன் ஒப்பிட வேண்டும் என்பது தான்.

2. தமிழ்நாட்டில் அரசாங்க ாீதியாகவும் நடைமுறை ாீதியாகவும் பார்ப்பனர் இனத்துக்கும் தமிழ் இனத்துக்கும்(ஆாியர் இனத்துக்கும் திராவிடர் இனத்துக்கும்) வெவ்வேறான அளவுகோல்கள் 2 ஆயிரம்காலமாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது… லேப் டாப் காலத்தில் கூட காஞ்சிபுரம் சங்கரமட நிர்வாகத்தின் கீழான கல்வி நிறுவனங்களில் பார்ப்பனர்- பார்ப்பனரால்லாத மாணவர்களுக்குத் தனித்தனி விடுதிகளை அமைத்துள்ளதும் ‘இன வேறுபாடு- இன வெறித்தனம் தானே ‘….

ஆமாம். பிராமணர்களுக்கும் மற்றவர்களுக்கும் வெவ்வெறு அளவு கோல்கள் வைத்திருப்பது இனவெறி தான். ஆனால் இந்த பரந்த பாகுபாடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு சாதிக்கும் ஒரு படி நிலை கற்பிக்கப் பட்டிருக்கிறது. தன் படி நிலையைப் பெரிதும் போற்றி, தனக்குக் கீழே இருப்பதாய் பிராமணீயம் கற்பித்த பொய்யை அப்படியே விழுங்கிப் பிரதிபலிக்கிற மற்ற மேல் சாதியினரின் இனவாதம், சாதீயம் பற்றி ஏன் உங்களைப் போன்றவர்கள் மெளனம் சாதிக்கிறீர்கள் ? இரட்டை கிளாஸினை எதிர்த்து எந்த ஊரில் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தியிருக்கிறது ? இந்த விடுதிகள் தவிர்த்து வேறு எந்த சாதியினர் நடத்தும் விடுதியிலும் இது போன்ற நடைமுறை இல்லை என்று நிச்சயமாய் உங்களால் சொல்ல முடியுமா ? இந்த விடுதி அரசாங்க உதவி பெறுகிறதா அல்லது பிராமணர்கள் அமைத்த ட்ரஸ்டினால் நடைபெறுகிறதா ? விடுதிகளில் இப்படிப் பட்ட பிரிவினைகளுக்குப் பல உதாரணங்கள் உண்டு. நகரத்தார்கள் , விஸ்வகர்மாக்கள் போன்ற பல சாதியினர் பல இடங்களில் விடுதிகள் நடத்துவதுண்டு அங்கு மற்ற சாதியினருக்கு அனுமதி இல்லை. உதாரணமாக, திராவிடர் கழகம் பிராமணர்களை அங்கத்தினராய் அனுமதிப்பதில்லை என்பதும் ஓர் இனவாதமா ?

3. 97 விழுக்காட்டு திராவிடர் இனத்தவர்கள் தங்களது கல்வி, வேலை வாய்ப்பில் 69 விழுக்காடு கூட பெறுவதை 3 விழுக்காட்டு பார்ப்பனர்கள் அரசியல் அதிகாரத்தின் பெயரால் ஒடுக்கி வருவது இனவெறித்தனம் தானே… இந்திய அரசுப் பணிகளில் பார்ப்பனரல்லாத திராவிடர் இனத்தவர் மற்றும் இதர இனத்தவர்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு வெறும் 27 விழுக்காட்டை கூட அனுமதிக்காத ‘பார்ப்பனர் போராட்டம் ‘ இனவெறித்தனம் தானே…

இந்தப் போராட்டத்தில் பிராமணர்கள் மட்டும் தான் இருக்கிறார்களா ?

மற்ற மேல்சாதிக் காரர்கள் இல்லையா ?

4. இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களின்(இந்திய கூட்டரசின் அரசியல் சாசனமே ஒத்துக்கொண்ட வாிதான்) கலாசார-மொழி உள்ளிட்ட அனைத்து தேசிய அம்சங்களையும் பறித்து – ஒடுக்கி அவற்றை மயானத்தில் புதைத்துவிட்டு ‘இந்திய தேசியம் ‘ என்ற புதிய தேசிய கோட்பாட்டை தூக்கிப் பிடிக்கும் ‘இந்திய கூட்டரசு ‘ என்பது இனவாத அரசுதானே… வரலாறு ஏற்றுக்கொண்ட முன் தோன்றிய மூத்த திராவிடர் மரபினத்தின் மூலவர்களான தமிழ்த் தேசிய இனத்தின் மீதான இந்திய பார்ப்பன இனவாத அரசின் ஒடுக்குமுறை இனவெறி தானே…. இசுரேலியத்தின் சியோனிசக் கோட்பாட்டை ஆதாித்து நிற்கும் அமொிக்காவை சாடும் நண்பர்களே….. தமிழ்த் தேசிய இனம், ஆந்திரத் தேசிய இனம், கன்னட தேசிய இனம், காசுமீரத் தேசிய இனம் மற்றுமுள்ள இந்திய துணைக்கண்டத்தின் தேசிய இனங்கள் அனைத்தையும் தீவிரவாதிகளாகச் சித்தாிக்கும் ‘இந்தியா ‘ என்ற கூட்டரசு நாடு ஒரு இனவாதக் கோட்பாடு நாடுதானே..

இனவாதத்தை அறிவியல் எப்போதோ தூக்கியெறிந்து விட்டது. தேசீய இனங்களின் பகுப்பையும் மானுடவியல் ஒப்புக் கொள்வதில்லை. உதாரணமாக அமெரிக்க தேசிய இனம் என்று ஒன்று உண்டா ? நிச்சயமாக இல்லை. கனடாவில் இரண்டு மொழிகள் புழங்குகின்றன. கனடிய தேசிய இனம் என்று ஒன்று உண்டா ? அமெரிக்காவின் வரலாறு 300 ஆண்டுகளுக்குச் சற்று மேல் தான் என்பதால் நாம் ஒரு தேசம் எப்படி உருவாகிறது என்பதை அறிந்து கொள்ள சிறந்த உதாரணமாய் இருக்கும். பலவேறு மொழி பேசுவோர் , பலவேறு பழக்க வழக்கங்கள் கொண்டவர்கள் இணைந்து ஒரு தேசத்தை உருவாக்கியுள்ளனர். இந்திய தேசப் பற்று இனவாதம், தமிழ் தேசப் பற்று இனவாதமில்லை என்ற வாதம் அடிப்படையில் கோளாறான வாதம்.

கூட்டரசு எப்படி இனவாத அரசாக முடியும் ? ஜனநாயக முனைப்புகள் தீவிரம் பெறப் பெற , எல்லா விதமான மக்களும் தமக்குரிய இடம் பெறுவதற்கான வழிவகைகள் கூட்டாட்சியில் தான் இருக்குமே தவிர தனியாட்சி என்ற ஜனநாயக விரோத பாசிஸக் கருத்தில் உருவாகிற தேசங்களில் இல்லை என்பது கடந்த 100 வருடங்களில் மீண்டும் மீண்டும் பலவாறாய் வரலாற்றில் தெரிகிறது.

மதம் தேசியத்தின் அடிப்படை என்ற விஷமத் தனமான பிரசாரத்தினால் பிளவுண்ட பாகிஸ்தான் எங்கே போய் நிற்கிறது ? சிறுபான்மை மக்கள் சுத்தமாக இல்லாத படி அனைவரும் அச்சுறுத்தப் பட்டிஉ நிற்கின்றனர். உருது மொழியை கிழக்கு வங்க மக்களின் மீது திணித்து அதனால் பிளவுண்டு கிடக்கிறது.இஸ்லாமியப் படைகள் இஸ்லாமிய மக்களை கொலைவெறித்தனமாய்க் கொன்று குவித்தன. 50 ஆண்டுகளில் பெரும்பாலான ஆண்டுகளில் ராணுவ ஆட்சி தான் அங்கே. யூகோஸ்லேவியா மூன்று நாடுகளாய்ப் பிளவுண்டதன் பின்பு என்ன நடந்தது ? செர்பியாவும் கோசோவோவும் அடித்துக் கொண்டன.

தமிழ் நாட்டின் மக்கள் பெரியாரின் சமத்துவக் கொள்கையை ஏற்றுக் கொண்ட போதே அவருடைய கருத்துகளுக்குச் செவி சாய்த்துக் கேட்கத் தயாராய் இருந்த போதும் கூட , தனித் தமிழ்நாடு கொள்கைக்கு ஆதரவை அளித்ததே இல்லை. அதில்லாமல், பார்ப்பன எதிர்ப்பை வேலை முன்னுரிமையைப் பெறும் உபாயமாய்ப் பயன் படுத்திக் கொண்ட போதிலும், கலாசார ரீதியாக பிராமணத்துவதுடன் தன் உறவைத் துண்டித்துக் கொள்ளவில்லை. சுயமரியாதைத் திருமணங்கள் மேடையில் உரக்க பெரியாருக்கு அஞ்சலி செலுத்தின போதும்,– அந்த அளவிற்கு இவை முக்கியமான நிகழ்வுகள் என்று தான் நான் கருதுகிறேன் — திருமணத்திற்கு முதல் நாளும், அடுத்த நாளும் சடங்குகளை பெரும்பாலும் விட்டொழிக்கவும் இல்லை. இந்து மதம் ஒழிய வேண்டும் என்றும், இந்து என்று சொல்லாதே இழிவைத் தேடிக் கொள்ளாதே என்றும் உரத்துப் பேசின திராவிடர் கழகம், இந்து என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு எங்கள் கதவுகள் திறந்திருக்காது என்றோ, இந்துப் பெயர்கள் கொண்டவர்களை நாங்கள் எங்கள் உறுப்பினராய் ஆக்கைக் கொள்ள மாட்டோம் என்று எப்பொழுதாவது தெரிவித்தது உண்டா ? எத்தனை தி முக – அ தி மு க – திராவிடர் கழகத் தலைவர்களும் தொண்டர்களும் இந்து மதத்தினை விட்டொழித்து விட்டு இஸ்லாமிற்கு மாறினார்கள் ? கிறுஸ்தவர்களாய் ஆனார்கள் ? நான் தான் மதமற்றவன், நாத்திகன் என்று இவர்களுக்கு நொண்டிச்சாக்கு இருக்கும் பட்சத்தில், மத நம்பிக்கை இருக்கிற தம் அம்மா, மனைவி, மக்களை இந்த அசிங்கமான ‘இந்து ‘ என்ற இழிவான பதத்திலிருந்தும் , மதத்திலிருந்தும் மீட்டு ஏன் முஸ்லீம்களாய் ஆக்க வில்ல ? இது என்ன போலித்தனம் ? எனக்குத் தெரிந்து திராவிட இயக்கத்தினரில், முரசொலி அடியார் என்ற ஒருவர்தான் இஸ்லாத்தைத் தழுவினார். அவர் பெரியார் பாதையில் சென்றதனால் இஸ்லாத்தைத் தழுவினாரா அல்லது இஸ்லாமிய மார்க்கத்தைப் பயின்றபின்பு அதன் நெறிகளால் கவரப் பட்டு மாறினாரா என்று எனக்குத் தெரியாது ? தெரிந்தவர்கள் சொல்லலாம்.

பெரியாரின் இயக்கத்தை விமர்சிக்கிற முதல் ஆள் நானல்ல. கடைசி ஆளாகவும் நான் இருக்கப் போவதில்லை. ஜீவானந்தம் சுயமரியாதை இயக்கத்தில் இருந்ததன் பின்பு தான் கம்யூனிஸ்ட் ஆனார். அண்ணா திராவிடர் இயக்கத்திலிருந்து பிரிந்ததும் கூட ஒரு வகையில் விமர்சனம் தான். திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியும் இன்றைய நிலையில் பா ஜ கவுடன் கூட்டுச் சேர்வதும் கூட , ஒரு வகையில் சந்தர்ப்ப வாதம் என்றால் இன்னொரு வகையில் மாறிவரும் அரசியல் யதார்த்தத்திற்கான அங்கீகாரம் என்று கொள்ள வேண்டும்.

பெரியார் இறந்து கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆகி விட்டன. கிட்டத்தட்ட ஒரு தலைமுறைக் காலம் இது. இந்த இடைவெளியில் ஒரு தெலுங்கரும், ஒரு கன்னடியரும் பிரதமர் ஆகியுள்ளனர். மத்திய அரசின் முக்கிய இடங்களில் வேறு வேறு மானிலங்களின் குரல்கள் ஒலிக்கின்றன. ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தவர் குடியரசுத் தலைவர் ஆகியிருக்க்கிறார். இந்தியாவின் பணக்காரர்கள் வரிசையில் ஒரு முஸ்லிம் தொழில் வல்லுனரின் பெயர் முன்னணியில் நிற்கிறது. ஆனால் ஜனநாயக நாட்டில் முடிவு பெற்ற விஷயம் என்று ஒன்றும் இல்லை. இந்தமாதிரி கிடைக்கிற பலன்களை விரிவு படுத்திக் கொண்டே செல்லத் தான் வேண்டும்.

தமிழ்த் தேசிய இனம் என்று ஒன்றும் இல்லை. மதுரையில் செளராஷ்டிரர்களும், நாகர்கோவிலில் மலையாளப் பாதிப்புப் பெற்ற தமிழர்களும்,கிருஷ்ணகிரி பகுதியில் கன்னடியர்களும், சென்னையில் தெலுங்கர்களும், ஆர்க்காட்டிலும், கீழக்கரையில் முஸ்லீம்கள், கன்யாகுமரியில் கிறுஸ்தவர்கள் என்று பலவாறாய்ப் பல நிறங்களையும், பலக் கலாசாரக் குணங்களையும் கொண்ட சமூகக் குழு நம்முடையது என்பதில் நாம் பெருமை அடைய வேண்டும். ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கு – இணைந்து தம்மைத் தாமே நிர்வகித்துக் கொள்ள உருவாக்கப் பட்ட அமைப்பு தான் தேசமே தவிர இதன் மீது பெரிதும் உணர்வு பூர்வமாய் விஷத்தைக் கொட்டிப் பரப்பி மக்களைப் பிரிப்பது ஓர் அர்த்தமற்ற செயல். எது தமிழ்ப் பண்பாடு ? அல்லது தேசிய குணம் ? திருப்பூரில் ஜட்டி தொழிற்சாலைகள் மூடப் படுமா ? கோவணம் தானே நம் தமிழ்ப் பண்பாடு ? வேட்டி கட்டுவது தான் தமிழர் தேசீய உடை ஆக்கப்படுமா ? தட்டுச் சுற்றா ? பஞ்சகச்சமா ?( இப்படியெல்லாம் ஆகாது என்று சொல்லாதீர்கள் .தமிழ் வாத்தியார்கள் நடத்தும் பள்ளிகள் , கல்லூரிகள் சிலவற்றில் ஜீன்ஸ், சல்வார் கமீஸ் அணியத் தடை உண்டு என்பது எனக்குத் தெரியும். அப்படிப் பட்ட குறுகிய மனத்தவரின் தத்துவம் தானே இந்த தமிழ்த் தேசியப் பிரிவினை.) பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்தது போல, ஆற்காட்டில் முஸ்லீம்களுக்குத் தனி நாடு தருவார்களா இவர்கள் ? மதுரையில் செளராஷ்டிர நாடு ? இப்படியெல்லாம் சிந்திக்காமல் பொத்தாம் பொதுவாய் தமிழ்த் தேசிய இனம் என்று மக்களைத் தூண்டி விடுவது நாணயமற்ற செயல்.

தேசபக்தி என்பது ஒரு கசடான சொல்லாக்கம். அது இந்துத்துவம் கற்பிக்கிற இந்திய தேசப் பற்றாயினும், தமிழ்த் தேசியம் கற்பிக்கும் தமிழ் வெறியாயினும்.. இப்படி தேசப் பற்றைக் கற்பித்துத் தான் எதிர்க் குரல்களை நெறிப்பது பாசிசத்தின் குணாம்சம்.தேச பக்தி என்பது குறைபாடான ஒரு தத்துவமே தவிர தேசத் துரோகம் என்பது நிச்சயம் உண்டு. அது தன் அண்டை வீட்டானை அவன் பேசும் மொழி, நிறம், சாதி போன்றவற்றினால் முத்திரையிட்டு ஒதுக்குவதும், அந்த ஒதுக்கலுக்கு நியாயம் கற்பிப்பதும் தான்.

இன்று குழுக்களாக இணைந்து மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலையில் பிராமணர்கள் இல்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் தம் மதிப்பீடுகளை விட்டு விட்டார்கள் என்றோ அதன் மேன்மை பற்றிய பிரமைகள் இல்லாமல் இருக்கிறார்கள் என்றோ சொல்ல முடியாது. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் நம் கிராம சமூகத்தில் நிகழ்ந்த மிக முக்கியமான மாறுதல், இனி வர்ணாசிரமதர்மம் என்பது சமூகத்தின் செல்நெறியாய் இருக்காது என்பதை பிராமணர்கள் உணர்ந்தது தான் என்று சொல்ல வேண்டும். அவர்களில் பலர் சட்டம் கற்றது தற்செயலான காரியம் இல்லை. இந்தச் சமூக விளையாட்டின் விதிகள் மாறிப் போயின என்பதை முதலில் உணர்ந்து கொண்டவர்கள் அவர்கள் தாம். அவர்கள் கிராமத்தை விட்டு வெளியேறியதற்குக் காரணமும் அது தான். இன்று தமிழ் நாட்டின் கிராமங்களில் பிராமணர்கள் இல்லையென்றே சொல்லி விடலாம். அப்படி இருந்தாலும் அவர்கள் கிராமத்தை இயக்கும் நிலையில் இல்லை. இன்று கிராம சமூகத்தினை இயக்கும் சக்திகள் பிராமணரல்லாத மற்ற மேல்சாதிகள் தாம் என்பதற்கு தமிழ்நாட்டில் புழங்கும் ஜாதிக் கட்சிகளே சாட்சி. இனி சமூக நீதிக்கான போராட்டம் இந்தப் புதிய பிராமணர்களை எதிர்த்துத் தான் என்பது தான் உண்மை. இந்தப் போராட்டத்தில் திராவிடர் இயக்கம் துணைக்கு வராது. பிராமண எதிர்ப்பு என்ற சட்டகத்திற்கு வெளியே பார்க்கிற சமூகப் பார்வையும், உண்மை உணர்வும் அவர்களுக்கு இல்லை. பிராமணர்களை விலக்கி வைத்து விட்டு மேல்சாதி மேலாண்மை பெறுவதற்கான ஓர் உபாயமாய் தனி நாடு கோரிக்கையை இவர்கள் கருதுகிறார்கள் போலிருக்கிறது.

****************

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்