தமிழவன் கவிதைகள்-நான்கு -மணியாட்சி ஸ்டேஷன்

This entry is part [part not set] of 48 in the series 20040506_Issue

தமிழவன்


இரண்டாயிரத்து ஒன்றில்
ஒருநாள் ஒடிக்கொண்டிருக்கும் ரயிலில்நான்.

தூரத்தில் வெகுதூரம்
வரை ஏதும் தெரியவில்லை.

ரயிலின் கடகட ஒலிக்கு நடுவில்
வானத்திலிருந்து கவிந்தது மெளனம்
உள்ளில்.

காலம்.

மீண்டும்
மணி பழைய இரும்பால் அடிக்க
புறப்பட்டது ரயில் ஞாபகவெளியில்

எங்கும் யாரும் இல்லை.
நீளமானஅது வளைந்து நகர
முடிந்தமட்டும் உடல் நீட்டிப் பார்த்தேன்

மனிதநடை படாத கல்.
முரட்டுத் தரை.
பசுமையாய் கிடக்கிறது சிந்திய ரத்தம்.

நினைவில் யாரோ சுட்டார்
இரத்தவெள்ளத்தில்
துரை
அதிகாரமற்ற ஈனசுரம்.

தத்தக்கா பித்தக்காவென அவன்
விழுந்தது தாயின் மடியில்
குதிக்கும் ஒரு குழந்தையாய்.

இப்போது ரயில்களைப் பற்றி
யோசிக்கத் தொடங்கினேன்
சாவகாசமாய் அமர்ந்து.
சிரிக்கலானான் பூநூல் தடவும்
ஒரு பிராமண இளைஞன்.

—-
carlossa253@hotmail.com

Series Navigation

தமிழவன்

தமிழவன்