தமிழர்கள் நாங்கள்! கவிதை சித்திரம

This entry is part [part not set] of 31 in the series 20080807_Issue

தாஜ



(சில வருடங்களுக்கு முன் (1997) நான் மலேசியா போய் இருந்த போது….. பொழுது போகாத ஓர் பகலில் எழுதிய கவிதை சித்திரம் இது. இன்றைக்கு பழைய எழுத்துகளைப் கலைந்தபோது, சிக்கிய இந்தப் பக்கத்தை படிக்கையில்….. சுமார் பதினோரு வருடங்களுக்குப் பிறகும் தமிழனின், தமிழகத்தின் வெளிப்படையான யதார்த்தம் மாறாமல் இருக்க…… மனசு சுருக்கென்றது.)

கடாரம் வென்று
கங்கைக் கொண்டு
இமயத்து உச்சியில்
கொடிப் போட்ட இனம்
எங்கள் இனமென்றக்
கதையெல்லாம்…
இன்றைக்குப் பழங்கதை!

மூவேந்தர் கரம் பட்டு
ரசித்துக் கழித்துக் காத்த
சிங்காரக் கலையாம்
இயல் இசை நாடகக்
கலை மட்டும்….
பச்சை மாறாமல்
ஆலாய் விழுது விட்டு
திரைப்படச் சுருளாய்
எங்கள் கழுத்தில்
மாலையாகி
முன்னேற்றத்தை கண்டு
முன்னெடுக்கவும்
காலம் காலமாய்
வெளிச்சம் போட்டும் காட்டுகிறது!

பாருங்களேன்…
கௌதமியை விட்டு
மீனாவிடம் போய்
நக்மா வழியாக
ரம்பா… தபு… யென மாறி
அவ்வை சண்முகி மாமியிடம்
நின்று இளைப்பாறி
இன்று ஐஸ்வரியா ராய் என
முன்னேறி விட்டேன் நான்.

என் அக்கா கமலை கைகழுவி
உள்ளத்தை அள்ளித்தா
கார்த்திக் என்றாள்.
மின்சாரக் கனவில்
அர்விந்சாமியை
தயக்கமற
ஏற்றுக் கொண்டாள்!

என் தங்கை பிரசாந்திடமிருந்து
காதல் கோட்டை அஜித்திடம்
ஒரு நாளென்றால்…
மறு நாள் காதல் தேசம்
அப்பாஸிடம் தாவுகிறாள்.

தம்பியோ…
மாணிக் பாட்ஷா ரஜினிதான்!
மாறவே மாட்டான்.
அவன் ஒருதரம் சொன்னா
நூறுதரம் சொன்ன மாதிரி யென்றாலும்…
சத்தியராஜ் பிரபு விஜயகாந்தென்று
ஒரு சுற்று சுற்றி வருபவன்தான்.

அண்ணன் இசைப் பிரியன்
இளைய ராஜாவிடமிருந்து
திருடா திருடா ரஹ்மானிடம்
தாண்டி குதித்தக் குதியில்
ரஹ்மானின் இசை ராஜியம்
வாத்தியங்கள் அற்று அதிர்ந்திருக்கும்.
இப்பொழுது அவன்
வில்லாதி வில்லன்
வித்தியா சங்கர் பக்கம்!

இன்னொரு அண்ணன்
கவிதைக் கிறுக்கு!
கண்ணதாசனுக்குப் பிறகு
வாலியா வைரமுத்தாவென
முடிவெடுக்க முடியாமல்
லியோனி பட்டிமன்றத்தில்
சளைக்காது தேடுகிறான்.

பெரியப்பா மகனோ….
உலக இயக்குனரைத்
தேடி அலைந்தவன்!
அதிஷ்டவதனி…
மாயூரம் ஸ்ரீ
டி.ராஜேந்திரன் எனக் கிடந்து
சின்னத் தம்பி
பி.வாசு பக்கம் போனான்.
காதலன் மீது காதலாகி
தி கிரேட் இந்தியன்….
கும்பகோணத்து சங்கர்
புகழ்ப் பாடுகிறான்.

காதல் மன்னன்
ஜெமினியை விட்டு
பூம்புகார் கோவலன்
எஸ்.எஸ்.ஆரிடம் நகர்ந்து
திருவிளையாடல்
சிவாஜியைப் பார்த்ததும்
சாமியாடி மயக்கம் போட்டு
சிவனேயென
அங்கேயே ஓய்ந்தாராம் அம்மா.

அப்பா அசாத்தியமானவர்!
மனோகரா வசனம்
இன்றைக்கும் மனப்பாடம்.
கலைஞருக்கு என்றைக்கும்
ஜே…. போட்டாலும்
அன்றைக்கெல்லாம்
இரவு இரண்டாம் ஆட்டம்
ஜெயலலிதா… படம்தானாம்.

நீதிக்கு தண்டனையென
கலைஞரை விட்டு
இதயக் கனி
எம்.ஜி.ஆரிடம் போன
என் மாமா சொல்லும்….
குஷ்புக்கு கோவில் எழுப்பிய போது
பிரியப் பட்டு உங்க அப்பா
பணம் காசை அள்ளிக்
கொடுத்தாருடா என்று.

நாம் எல்லோரும்
அடைந்து மகிழும்
பரிணாம வளர்ச்சி….
கண் கண்ட
கலைப் பொக்கிஷத்தின் கடாட்ஷம்!
நமது நாளைய முன்னேற்றம்….?
விடிந்தால்தான் தெரியும்!!!
———————————-
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation

தாஜ

தாஜ