தனிநபர்-புரட்சி-முன்னெடுப்பு, சில அபிப்பிராயங்கள்!

This entry is part [part not set] of 45 in the series 20060120_Issue

ப.வி.ஸ்ரீரங்கன்


தனிநபர்களான ஒவ்வொரு மனிதரும் தமது விருப்புறுதியின்மீதான அதீதக் கற்பனைகளை,மதிப்பீடுகளை,சமூகப்பார்வைகளை வர்க்கஞ்சார்ந்த வர்க்க உணர்வாகப் பொருத்திவிட்டு ‘பொய்யான ‘உணர்வுத்தளத்தை நிறுவுவது திமிர்தனமான வெற்றுச் செயலாகும்.வர்க்கச் சமூகத்தில் வர்க்க அரசியலை முன்னெடுப்பதற்கான எந்தவொரு அமைப்பாண்மையுடைய புரட்சிகரக் கட்சியையும் இன்றைய நிதிமூலதனமும்,விஞ்ஞானமும் விட்டுவைக்கவில்லை.வர்க்கமென்றாலே என்னவென்றறிய முடியாதவொரு இரண்டுங்கெட்டான் சமுதாயமாக மனித சமூக வாழ்வு கட்டப்படுகிறது.இதுவரையான எல்லா மதிப்பீடுகளும் வரலாற்று இயங்கியல் போக்கில் வடிவத்தை உடைத்துவிட்டு உள்ளடக்கத்தையே முன் தள்ளுகிறது.இதன் பக்கவாட்டுக்கு எந்தச் சமூக இயக்கமும் கடக்க முடியாது.இது சமூக விஞ்ஞானத்தின் விதி.குறைவிருத்திச் சமுதாயங்கள்கூடத் தமது முரண்பாடுகளால் சமூக வளர்ச்சியை எட்டாது,திடார்த்தனமான அந்நிய உந்துதலால் சமூகத்தின் வளர்ச்சியை பொய்யாக உந்தித் தள்ளுகிறது.எந்தவித வளாச்சியுமற்றவொரு நாடு இத்தகைய அத்துமீறிய தகர்வால் சமூகக் கட்டமைப்பின்மீதான அனைத்து அதிகாரங்களையும் திடார்வரவான அந்நிய உந்துதலிடம் கையளித்துவிட்டு,சொந்த மக்களின் தேவைகளை நுகர்வுக்கான சந்தையில் பெற்றுவிடமுடியுமெனக் கனவுகாண்கிறது.உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தியுறவுகளுக்குமான ‘உறவின்மீதான ‘பழைய புரிதல்கள் இன்று செல்லாக்காசாக மாற்றப்பட்டுள்ளது.இழப்பதற்கரிய சொத்தாக மாற்றப்பட்டுள்ள இந்த உறவு குறித்தொரு கட்டத்தில் மக்களின் வாழ்வே அதன் தகர்வால் நாசமாகிவிடுமெனும் கருத்தியல் மனதை தினமும் உற்பத்தி செய்து புது வகை மனிதக் கூட்டைத் தகவமைக்கும், வர்த்தக சமுதாயமாக மனித நாகரீகம் விரிகிறது.

இந்தச் சூழலில்-காலவர்த்தமானத்தில் மனித சமூகத்தின் மீதான அதீத நம்பிக்கைகளும்,அந்தச் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தினர்மீதும் அளப்பெரிய பொறுப்பும் சுமத்தி,இந்த நம்பிக்கைமீதான மிகையான எதிர்பார்ப்புகள் எங்ஙனம் மனித சமூகத்தின் எதிர்கால வாழ்வுக்கு உடந்தையாக இருக்குமென்பதை நாம் வெறுமனவே நம்பிக்கைகளாக்கிச் செயற்படமுடியாது.இன்றைய மக்கள் சமுதாயமானது இருவேறு நோக்குகளை முன் தள்ளிச் சென்று கொண்டிருக்கிறது.அது கடந்த கால மூலதனத்தைப் பெருக்குவது,காப்பதென்பதைத்தாண்டி,இன்று விஞ்ஞானத்தையும்,காற்றையும் மூலதனத்தினது இடத்துக்கு பெயர்த்தெடுத்து மூலதனத்தை வெறும் சூட்சுமமான இயக்கமாக்கியுள்ளது.இந்த அறுதியற்ற சுழற்சிப்போக்கை சமூகத்தின் அதிர்வில் பொருத்துகின்ற இன்றைய விஞ்ஞானத் திருவிளையாடல் மேன் மேலும் மனித சமூகத்தின் உழைப்பை வெறும் அர்த்தமற்றவொன்றாக்கிவிட்டு-உழைப்பை இன்னும் கீழான நிலைக்குள் தள்ளிவிட்டு சமூகத்தின் இருப்பைத் தகர்த்து-உழைப்பவர்களை வெறும் உயிர் வாழும் மனிதக் கூட்டமாக்கிறது.இதற்கான விஞ்ஞானத்தின் அதீத மனித மூளை உழைப்புத் தனது சக பிரிவை வெறும் அர்த்தமற்ற,செயலூக்கமற்ற பிரிவாக்கி அதைச் சந்தைப் படுத்தும் ஒரு உப தொழிலாக்கி ‘உழைபுச் சந்தையை ‘திறந்துள்ளது.

இங்கே தடுத்தாட்கொள்ளப்பட்ட மனித உடலுழைப்பு,விஞ்ஞானத்தின் முன் செல்லாக்காசாக மாற்றப்படுகிறது.இந்தவொரு சூழலின் தர்க்க நியாயப்படானது சமூகத்திலுள்ள அதி முக்கியமான உழைப்பின் செயற்றிறனை மனிதமற்ற ஜந்திரத்துக்குள் உயர்திறன் வாய்க்கும் படைப்பாற்றலாகக் காணுகிறது.இது நமது கடந்தகால அனைத்து நம்பிக்கைகளையும்,போராட்ட நெறி முறைகளையும் தூக்கித் தலைகீழாக்கி மாற்றியுள்ளது.சமூகத்தின் பொது உணர்வுத்தளமானது விஞ்ஞான சாகசத்தின் மிகையான நம்பிக்கைகளாக மாற்றப்பட்டு,வாழ்வின் எல்லாவகைப் பிரச்சனைகளையும் ‘அபிவிருத்தி-அறிவு ‘ முன்னேற்றத்தின் முன்னால் தீர்த்துவிடமுடியுமெனுங் கோட்பாட்டுரூவாக்கம் நிகழும் தரணமான இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் தனிநபர் சார்ந்த மிகையான மதிப்பீடுகள் வலுவிழக்கின்றன!மனித இருப்பின்மீதான எதிர் தாக்குதலாகவிரியும் மனிதர்களின் மூளை,அந்த மூளையைத் தாங்கும் உடலை விவேகமற்ற வெறும் மாமிசப் பண்டமாகக் காண்கிறது.இது தன்னிருப்பின்மீதான உச்சமான எந்தக் கனவுகளையும் சிதைத்து,ஆத்மீக உறவுகளனைத்தையும் வெறும் சடங்குத்தனமான நகர்வுகளாக்கி விடுவதில் முனைப்பாக இருக்கிறது.

அர்த்தமற்ற தனிநபர் வாதங்களால் சக மனிதரை அழித்துவிட முனையும் கருத்தாடல்கள் எதிர் புரட்சிகரமாக மாற்றமுற்று,எதிரியிடம் கைகாட்டும் செயலூக்கமாக விரிவடைகிறது. இந்தக் கற்பனாவாதக் கனவுகளை புரட்சியின் மதிப்பீடுகளால் வர்ணமுலாம் ப+சும் அட்டகாசமான குறுங் கருத்தாடல்களாக மாற்றும் வெகுளித்தனமான இன்றைய சமூக விமர்சனம்,சமூகவிஞ்ஞானக் கட்டமைப்பை ஏலவே தகர்த்து அப்படியொரு விஞ்ஞானமே கற்கை நெறியாக இருப்பதற்குத் தகுதியற்றதாக்கி விட்டுள்ளது.இதை வலுவாக்கித் தொழில் சார் விஞ்ஞானத்தின் விருப்புகள்மீது குவிக்கப்படும் கவனம்,காற்றுவழித் தொடரும் தொடர்பாடல்களை எதிர்காலத்தின் உழைப்புக்கான மூல ஊற்றாக்கியுள்ளது.இதைக் கணிப்பிலெடுக்காது சமூகத்தைப் பற்றியும்,அதன் தகர்வுகளின் எச்சமாகவிரியும் அவ நம்பிக்கைகளையும் புரிவதில், சிக்கல்கள் எழுவதையொருவர் புரியாதிருப்பாரானால் அவரின் செயல் வீணாகிறது.அப்படியானவொரு சூழைலை எதிர்பார்த்திருக்கும் நிதி மூலதனமானது இத்தகைய தனிமனித வீராப்புக்களை வெகுவாக ஊக்கப்படுத்தி ‘அணிதிரட்சியையும்,கட்சிகட்டுதலையும் ‘சிதைக்கிறது.சமூகத்தின் இயலாமையானது அந்தச் சமூகத்தின் உழைப்பின்மீதான ஒடுக்குமுறையின் அதீத வன்முறையில் முகிழ்கிறது.

இன்றுவரையான நமது புரிதல்களுக்கு நேரெதிராகக் காரியமாற்றும் விஞ்ஞானத்தின் ‘நுட்பவியல்கள் ‘ பாரம்பரியமான உழைப்பின் மீதான சக்தி வாய்ந்த உறுதிப்பாட்டை உடைத்தெறிந்துள்ளது.உயிராதாரமிக்க உழைப்பைக் கேவலாமாக்கிவிட்டு,அதன் மையமான முரண்பாடுகளைத் தணிப்பதற்கான சாகசங்களில் நிதி மூலதனமானது விஞ்ஞானத்தைக் காவிக்கொண்டு உலகெங்கும் திரிகிறது.இந்த நிமிஷம்வரையான உலகின் விருப்பம்-ஆர்வம் உலக வளங்களை விஞ்ஞானத்தின் மூலமாகவே கட்டுப்படுத்திக் கொள்வதில் கவனத்தைக் குவித்துள்ளது.இத்தகைய சமூக உறவுகளில் எதேச்சையாக எதுவும் நடப்பதற்கில்லை.எல்லாமே ஒழுங்கமைந்த முறைமைகளால் திட்டமிடப்பட்டு உறிதிப்படுத்திய இந்தவுலகத்தில்,தனி நபர்களின் உதிரித்தனமான புரட்சிகரத் தன்னார்வக் கருத்தாடல்கள்-செயற்பாடுகளின் செயலூக்கமானது எதுவரை ?இத்தகைய ஒரு சூழலையே விரும்பிச் செயற்படுத்தும் இந்த ஆதிக்க உலகம்,இந்த உலகத்தின் ஒவ்வொரு திசையிலும் புரட்சிகரமான கருத்துக்களையும்,அதைப் போராட்டத்தில் உள்வாங்கியும்,போராடும் மக்களுக்கள் கலந்து புரட்சிகரக் கட்சியின் தோற்றத்தை முளையிலேயே கிள்ளியெறிந்து வருகிறது.

எதையும் செய்ய இலாயக்கற்ற தொழிற் சங்கங்கள்,போலிக் கம்யுனிசக் கட்சிகள் பெரும் மூலதனத்தை முதலீடுசெய்து தொழிற்கழகங்களை-நிறுவனங்களைத் தாமே வழி நடத்துகின்றனர்.இத்தகைய தொழிற் சங்கம் வெறும் பொருளாதார வாதத்துக்குள் கடந்த 70 ஆண்டுகளாக மூழ்கிக்கிடக்கிறது.இத்தகைய கட்சிகளின்,தொழிற்சங்கங்களின் வர்ணமுலாம் ப+சப்பட்ட புரட்சிகரச் சவடால்கள் வெறும் கழிப்பறைக் காகிதங்களாகக் கிடக்கின்றன.இவர்களது அடி தொட்டு அலசப்படும் போராட்டச் செல் நெறியும்,யுத்த தந்திரங்களும் இந்தக் கொடூரமான உலகத்தை வெற்றி கொள்ளத் தக்க எந்தத் தகுதியுமற்றுக் கிடக்கும்போது,ஒவ்வொரு தனிநபர்களும் அதீதமான உணர்வெழுச்சிக்குள் சிக்குண்டு மிகையான கனவுகளை விதைப்பதில் காலத்தைக் கடத்துவது வெற்றிக்கான பாதையாகாது.

அறிவின்மீதான நம்பிக்கையானது எந்த அத்திவாரத்தில் கட்டப்பட்டதோ அந்த நம்பிக்கையானது இன்று நமக்குக் கை கொடுப்பதாகவில்லை.அந்த அறிவு மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைப்பதில் தன் சூரத்தனத்தைக் காட்டுகிறது.நுகர்வுச் சந்தையின் இயலாமையை ‘வட்டியாக ‘அறவிட்டுக்கொள்ளும் மூலதனமானது முழுமொத்த பணச் சுற்றோட்டத்தையும் ஸ்த்தம்பிக்க வைக்;கிறது.இப்போது ஊக வணிகத்துறையானது இதன் பளுவைக் குறைப்பதற்கானவொரு முயற்சியில் தோல்வி கண்டு மக்களின் கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் யுத்தத்துக்கு இரையாக்கிவரும் சூழலுக்குள் மாட்டுண்டுகிடக்கும் நாம்,எம்மை மிகைப்படுத்திக்கொண்டு புரட்சி பேசுகிறோம்.இத்தகைய நிலையில்கூட நம்மால் ஓரணியில் திரண்டு அமைப்பொன்றை உருப்படியாகத் தோற்றமுடியவில்லை.கடந்தகால அநுபவங்களைச் சுகித்து,அதை வீரியமான விய+கமாக்க முடியாத நாம் தனித்தியங்கி எந்தவொரு செயற்கரிய திட்டத்தையும் வகுக்கப்போவதில்லை.எனினும் திடமாகப் பேசுகிறோம்!

மக்கள்தாம் வரலாற்றைப் படைக்கிறார்கள்.ஆனால் அந்த மக்களைக் காவுகொண்ட நவீன விஞ்ஞானமானது தனது சர்வ வியாபகத்தையும் மக்களின் உரிமைகளைப் பறிப்பதில்-ஒடுக்குவதில் வலுவாகச் செயற்படுகிறது.இந்தவுலகத்துக்குள் கிடக்கும்-சுத்தும் அணுவினுடைய இருப்பின்மீது கால்பதிக்காத மனிதவுணர்வினது இருப்புத்தாம் என்ன ?விஞ்ஞானமா,அல்லது உபரி மூலதனமும் உற்பத்திச் சக்திகளுமா இன்று தனியுடமையின் பிரதான உடமையாகத் தோற்றுமுற்றுள்ளது. ?-இங்கே யாருதாம் எதிரி ? எங்கிருந்தோ ஆட்டுவிக்கும் சூத்திரதாரியைப் பற்றியும்,அந்தச் சூத்திரதாரியை உலகத்தின் முதல் தர எதிரியாகக் கண்டு,அதை எதிர்ப்பதற்கான வெகுஜனப் போரை முன் நடத்தும் அமைப்புகளே,அந்தச் சூத்திரதாரியால் ஒழுங்குபடுத்தப்பட்ட பினாமிகளாக இருப்பதற்கும், புரட்சி பேசி எல்லாவற்றையும் மறுப்பதற்கும்(புரட்சியையொடுக்குவதற்கு) உள்ளே நிலவுகின்ற இயங்கியற் தொடர்ச்சிதாம் என்ன ?நம்மீதான மிதமான மதிப்புகள் தனிநபர் சாகசங்களாகும்.இவை எந்தச் சந்தர்ப்பத்திலும் வர்க்கவுணர்வுள்ள மக்களை அரவணைத்துச் சென்றதில்லை.மாறாக அவர்களையின்னும் அந்நியப்படுத்தி,புரட்சிக்கு எதிரான வர்க்கமாக மாற்றும் எதிர்ப் புரட்சிகர நடவடிக்கையாக மாறுகிறது.இதுகூட இந்தவுலகத்தின் மூலதனப் பொறிக்குச் சாதகமாகவேயிருக்கிறது.

நவீனக் கருத்தாடல்கள் யாவும் மனிதவுரிமை,மனிதத் தன்மை,தனிநபர் சுயநிர்ணயம்,சுயதெரிவு என்ற தளத்தில் விவாதிக்கப்படுகிறது.இந்தக் கருத்தாடல்களை வழிப்படுத்தும் மூலதன இயக்கமானது தனக்குகந்த வகையில் மனித மாதிரிகளைத் தெரிவு செய்வதில் இவற்றைச் சாதகமாக்கியபின் ‘பெரும் காதையாடல்களெனும் ‘மேற்குலக அகண்ட கருத்தாடற் பன்மைத்துவம் மனிதர்களின் விருப்பத்தின்மீதான தெரிவானதைத் தனித்துவமென்கிறது.ஆனால் இத்தகைய விருப்புறுதிகளைத் தெரிவு செய்து,அதையே தனிநபரின் விருப்பாகத் தகவமைத்து வரும் இந்த அமைப்பின் கருத்தியல் பலமானது எங்கிருந்து தனித்துவத்தை முன்னெடுப்பதென்பதை எவரும் ஒருமித்த குரலில் தெளிவுப் படுத்துவதாகவில்லை.கருத்தியில் பன்மைத்துவமானது சிந்தனையின் சுதந்திரத்தைக் கோரிக்கொண்டாலும்,அந்தச் சுதந்திரத்துக்கான எல்லைகளையும்,வரைமுறைகளையும் ‘அடிமட்டத்தின் ‘ நலன்கள் வரையறுத்துப் புதிய தலைமுறையை உருவாக்கிவரும் ஆதிக்கமானது,எங்கே சிந்தனைச் சுதந்திரத்தை விட்டுவைத்திருக்கிறது.ஒவ்வொரு தனிநபரும் தனது தனித்துவமென்பதின் உள்ளடக்கம் இந்தவகைக் கருத்தியல் தளத்தை மேவிக் கொண்டு,அதன் நகலாகத்தாம் இருக்கிறது.இத்தகைய நகல்களைப் பெரும் கருத்தாடலென்று பின்னியெடுக்கும் சிந்தனை மட்டம் தமக்குள் முற்றுமுழுதானவொரு காலச் சிதைவை வற்புறுத்துகிறது!

அவலத்தின் மீதான கண்ணோட்டம் மனிதமாதிரிகளை மறுத்துவிட்டு, சமூகத்தை வழி நடத்தும் புரட்சியின் முன் நிபந்தனைகளை வெறும் மொழிவுகளாக்கி வீம்பாக வெளிப்படுத்துகிறது,இன்றைய தனி நபர் முனைப்பு.இது சகல முனைகளிலும் தனது நியாயப்பாடுகளைச் சட்டதிட்டங்களை உள்வாங்கவேண்டுமென்றும்- ஒரே ‘வற்புறுத்தி ஏற்கவைக்க ‘ முனைவது மிகவும் வருந்தத் தக்கது.வர்க்க உணர்வானது வெறும் கருத்தாடல்களால் நிர்மாணிக்க முடியாதது.அது தனது சமூக வாழ் நிலையால் தீர்மானிக்கப்பட்டு, உற்பத்திச் சக்திகளின் உறவோடு அது உணர்வுப+ர்வமாக உள்வாங்கப்படுகிறது.இத்தகைய உறவினால் தீர்மானிக்கப்படும் வர்க்கவுணர்வானது குறைவிருத்திச் சமூகத்தில் ஒரு மொன்னைத் தனமான இரண்டுங்கெட்டான் உணர்வாக நிலை கொள்கிறது.வளர்ச்சியுற்ற தொழில் வளமுடைய நாடுகளில் வர்க்கவுணர்வானது காட்டமாக மழுங்கடிக்கப்பட்டு ‘காயடிக்கப்பட்ட ‘மனிதக் கூட்டாகத் தொழிலாள வர்க்கம் வாழ்வைக் கொண்டு செல்கிறது.இத்தகைய நிலைமையில் புரட்சிக்கட்சியின் அவசியமானது என்றுமில்லாதவாறு மிக மிக அவசியமாக இருக்கும்போது-அத்தகைய கட்சியின் முகிழ்ப்பை மிக அவதானமாகக் கவனித்துவரும் உடமையாளர்கள் அப்படியொரு அமைப்பைச் சிதறடிப்பதற்காகப் பற்பல புரட்சிகரமான அமைப்புகளைப் பற்பல நலனை முன்னெடுத்து ஒடுக்கப்படுபவர் சார்பாகப் போராடத் தூண்டுகிறது.இத்தகையவொரு இருண்ட சூழலில் தனி நபர்களாகச் செயற்படும் வர்க்க உணர்வுமிக்கவர்கள் தமது ஊசாலாட்டத்தில் சோர்ந்து போவதும்,மேற்கொண்டு நகர்வதற்கான அமைப்பாண்மையற்றுத் தமக்குள்ளேயே ஒடுங்கிப் போவதும் வரலாறு ப+ராகவும் தொடர்கிறது.அன்றைய காலத்திலிருந்த செயற்பாட்டாளர்கள்,புரட்சியின் முன்னோடிகளின் சமூகச் சூழ்நிலை முற்றிலும் வேறானது.அந்தக் காலத்திலிருந்து நாம் எமது செயற்திட்டத்தை அல்லது ஊக்கத்தை நெம்பு கோலக்குவது பொருத்தமானதான தர்க்கமாக இருக்க முடியாது.

சமூக உணர்வானது ஒவ்வொரு மனிதரிடமும் தத்தமது சமூக வாழ்நிலைக்கேற்ற வடிவங்களில் உள்வாங்கப்பட்டு அது சமுதாய ஆவேசமாகவோ அன்றி சமரசமாகவோ மாறுகிறது.இந்த இயக்கப்பாட்டில் ஒருவர்ர் இறுதிவரைத் தன்னைத் தனது வர்க்கஞ் சார்ந்த மதிப்பீடுகளால் உருவாக்குவது அவரது தற்கால வாழ்நிலையைப் பொறுத்தே!சமீப காலமாகச் செயற்பாட்டாளர்களாக இருந்தவர்கள் அடியோடு சிதைந்து தமது வர்க்கவுணர்வையே தலைகீழாக்கிவிட்டு வாழ்வது, நாம் அன்றாடம் பார்த்து வரும் ஒரு நிகழ்வு.இது பல புரட்சிகர அமைப்புகளுக்குள் நிகழ்ந்து வருகிறது.இவர்களை நாம் ஓடுகாலியென்று கூவிக்கொண்டோமேயொழிய அதன் தர்க்கமான இயக்கப்பாட்டைக் கணிப்பதில் தவறிழைத்து வந்திருக்கிறோம்.இத்தகைய தவறுகள் பலரைப் போடுவதற்கும் உடந்தையாக இருக்கிறது.தனது சுய முரண்பாடுகளால் தோற்றமுறாத சமூகக் கட்டமைப்பு, மனிதர்களின் உணர்வைத் தீர்மானிப்பதிலிருந்து விலத்திக் கொண்டு ஜந்திரீகத்தனமானவொரு பாச்சலை தனது கட்டமைப்புக்குள் தோற்றுகிறது. இதனால் பற்பல சிக்கல்களின் மொத்தவடிவமாக மனிதர்களின் அகம் தயார்ப்படுத்தப்படுகிறது.அங்கே சதா ஊசாலாட்டமும்,வர்க்க இழப்பும் நிகழ்ந்து கொண்டே புதிய வகைமாதிரியொன்றிக்கான தேர்வை மேற்கொள்ளகிறது மனது.இது ஆபத்தானவொரு மனித மாதிரியைத் தோற்றுவித்து அவலத்தை அரவணைக்காது போகினும் அதை அநுமதிப்பதில் போய்முடிகிறது.

இத்தகைய வாழ் சூழலைத் தக்கப்படி ஏற்படுத்துகிற ஆதிக்க சக்திகள் மக்களின் முரண்பாடுகளை வெறும் சட்டவாதத்துக்குள் முடக்கி அவற்றைச் சரி செய்வதற்கான புதிய வரையறுப்புகளை ‘பொருளாதார அபிவிருத்தி ‘என்ற மாயாமானால் தீர்த்துவிட முடியுமெனப் பரப்புரை செய்து மக்களின் மனங்களை குளிர் நிலைக்கு மாற்றுகிறது.வளர்ச்சியடைந்த இலன்டன் போன்ற நகரங்களில் சமூக ஏற்றத் தாழ்வானது வெறும் சாதாரணமானவொரு நிகழ்வாக ஏற்றுக் கொள்ளும்படி ஆக்கப்பட்டுள்ளது.அங்கே சமூகப் பதட்டமென்பது குளிர் நிலைக்கு மாற்றப்பட்டதன் விழைவு,எந்த மானியக் குறைப்பையும், மக்கள் பெரிதாகப் போராடிக் காக்கும் வலுவை இழந்து இரண்டுங் கெட்டான் வாழ்வில் மூழ்கிப் போகிறார்கள்.இவர்ளைப் பற்றிய கணிப்பீடு என்ன ?போராட முடியாத ஜடமாகப்பட்ட சூழலை நோவதா அல்லது ஒவ்வொரு தனி நபர்களையும் நோவதா ? இங்கிருக்கும் அமைப்பாண்மையுடைய தொழிலாளர் அமைப்புகளின் நிலையோ தம்மைப் பெரு முதலீட்டாளர்களாக்கியவர்களுக்கு விசுவாசமாக வால் ஆட்டுவதில் மக்களைப் புறந்தள்ளுகிறது.

இப்படி உலக வளர்ச்சி நகரும்போது, ஆதிக்க சக்திகளோ இன்றைய சூழலைப் பயன்படுத்தி, புரட்சிகரமான அமைப்பைக் காட்டிக் கொடுக்கும் ஒட்டுண்ணிகளைப் புரட்சிகர வாதிகளாக்கி ஒடுக்கப்படும் மக்களைக் காவு கொள்கிறது.இங்கே யாரு உண்மையாகப் பேசுகிறார்கள் என்பதே புரியாதிருக்கும்போது-எவரோடிணைந்து காரியமாற்றுவது,தோழமையைப் பெறுவது ?உண்மையான புரட்சிகரக் கட்சியின் வழிகாட்டலற்ற தனித்தவொரு எந்த மனிதரும் தனது செயலுக்குத் தன்னையறியாமலே ஒரு எல்லையை வைத்திருப்பார்.அந்த எல்லை உணரப்படும்போது இதுகால வரையான அனைத்துப் பரிமாணங்களும் அவரிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறது.இத்தகைய சூழலில் அவநம்பிக்கையும்,இயலாமையும் சமூகத்தின் பொது எண்ணவோட்டமாக நிலைகொண்டு மக்களைக் காவுகொள்கிறது.சதா போராட்டத்துக்குள் வாழும் மனிதர்கள் எதிரியைப் புரிந்திருப்பினும்-அவர்களது போராட்டம் எதிரியிடம் சலுகைகளைப் பெற்றுத் தமது வாழ்வைச் செப்பனிடுவதாகப் போராட்டம் முடங்கிக் கிடக்கிறது.இதுவே இன்றைய ஆதிக்க சக்திகளின் விருப்பமும்கூட.

ப.வி.ஸ்ரீரங்கன்

17.01.2006

srirangan@t-online.de

Series Navigation

ப.வி.ஸ்ரீரங்கன்

ப.வி.ஸ்ரீரங்கன்