தந்தை மகற்கு ஆற்றும் நன்றி

This entry is part [part not set] of 31 in the series 20070524_Issue

வாஸந்தி


2001 மாநில அவைத் தேர்தல் முடிவு வந்த தருணம். யாரும் எதிர்பாராத வகையில் அதிமுக தலைவி ஜெயலலிதா பெரும்பான்மை வாக்குடன் வெற்றி பெற்றார். ‘ 96 -ல் பெரும்பான்மை வாக்குடன் வந்து ஆட்சி நடத்தி ஓரளவுக்கு எதிர்ப்பு அலைக்குக் காரணம் அளிக்காத நல்லாட்சி என்ற பெயருடன் தேர்தலைத் தெம்புடன் சந்தித்த திமுக அடைந்த தோல்வி நிச்சயம் கட்சித் தலைவர் கருணாநிதி எதிர்பார்க்காதது. அவரை நான் பேட்டி காணச் சென்ற போது லேசாகச் சிரித்தபடி சொன்னார். “உணர்ச்சி வசப்பட்ட காலமெல்லாம் போச்சு. இதைவிட பெரிய ஏமாற்றங்களை சந்தித்திருக்கிறேன்.” அவர் சொல்லாமல் விட்டது, ‘ஒவ்வொரு ஏமாற்றமும் எனது அடுத்த வியூகத்துக்கான அடிக்கல். எனது அரசியல் வாழ்வின் பயணம் முழுவதுமே அப்படிப்பட்ட அடிக்கல்களைக் கொண்டது.’

அது ஒரு அசாதாரண அரசியல் பயணம். தமிழ் எந்தன் மூச்சு என்று உணர்ச்சி வசப்பட்டக் கட்சித் தொண்டனிலிருந்து பிதாமகராக இன்று உயர்ந்திருப்பது வரை. கட்சித் தொண்டனாக இருக்கும்போது உணர்ச்சி வசப்படலாம். தலைவனுக்கு அது அழகல்ல. அவரது மூளையின் இடப்பக்கம் எதிரியைப் பதம் பார்க்க சதா வியூகம் வகுத்தபடி இருப்பதாக ஒரு பத்திரிக்கையாளர் ஒரு ஆங்கில தினசரியில் முன்பு எழுதியிருந்தார். எதிரியை வீழ்த்தவேண்டியது கட்சியின் கட்டாயம். தலைவனின் தொடர்ந்த செல்வாக்கிற்கான தேவை. இல்லாவிட்டால் அவரது ‘உடன்பிறப்புகளின் ‘ நம்பிக்கையை இழக்கவேண்டிய அபாயம் ஏற்படும்.அடுத்த மூன்று ஆண்டுகளில் அண்ணன் வகுத்த சாணக்கிய வியூகங்கள் தந்த பலனில் கட்சியின் தலையெழுத்து அடியோடு மாறியது கண்டு நாடே அதிசயித்தது. மிகத் துல்லியமாக அவர் அமைத்த ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அனைத்து பாராளுமன்ற – தமிழகத்தின் 40-[39+1புதுச்சேரி] சீட்டுகளையும் அள்ளிக்கொண்டபோது எம் ஜி ஆரின் முன்னாள் தீவிர ஆதரவாளர் ஆர். எம் .வீரப்பன் என்னிடம் ‘தமிழ் நாட்டில் தலைவர் என்று இன்று சுட்டிக் காட்டப்படக் கூடியவர் கருணாநிதி ஒருத்தர்தான்’ என்றார்.

அது சாதாரணத் தேர்தல் வெற்றி அல்ல என்று அரசியலில் பழம் தின்று கொட்டை உமிழ்ந்த அந்த முதியவருக்குத் தெரியும். அதை சாதுர்யமாக உபயோகித்துக்கொண்டால் கூட்டணி உறுப்பினர்களும் கட்சியும் நிரந்தரமாக நன்றிக்கடன் ஆற்றும். ஆனால் காலம் நிற்காது என்பதால் எண்பதைக்கடந்துவிட்ட மூப்பில் அவரது அதி அவசரப் பணி – கட்சியை பலப்படுத்துவது . அதைவிட முக்கியம், அதிகபட்ச அதிகாரத்தைத் தமது குடும்பத்தில் குவித்து வைப்பது . அவருக்குப் பின் அவரது தனயன் நடக்கும் பாதை ராஜ பாட்டையாக இருக்க வேண்டும். சவால்கள் வியூக ஆற்றலைக் கூர்மைப் படுத்திற்றென்றால் உள்ளங்கையில் சிக்கிய அதிகாரம் மூப்பின் தலைவாசலில் புதிய சாத்தியங்களைக் காட்டிற்று. ஆதரவுக்குத் தொங்கிக் கொண்டிருந்த மத்திய காங்கிரெஸ் அரசுடன் அமர்த்தலாக பேரம் செய்து அசத்தலான அமைச்சகங்கங்களைக் கைப்பற்றமுடிந்தது. ஆங்கிலம் சரளமகப் பேசத் தெரிந்த முரசொலி மாறன் மத்திய அரசில்- எந்த ஆட்சியாக இருந்தாலும் -தமக்குக் கைத்தாங்கலாகப் பணியாற்றியதுபோல தமக்குப்பின் மகன் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் மத்தியில் இன்னொரு மாறன் அதே போல உதவ வேண்டிய அவசியம் உண்டு. அரசியலில் சற்றும் முன் அனுபவமில்லாமல் போனால்தான் என்ன? தேர்தலில் ஜெயிக்கவைத்து, எண் 40 கொடுத்த தெம்பில் மிக உபயோகமான தகவல் தொடர்புத் துறையை கேட்டு வாங்கி மத்திய அமைச்சரவையில் அமர்த்தமுடிந்தது. கூட்டணிக்கட்சிகளின் கோரிக்கைகளையும் ஏற்று சமாதானப் படுத்தமுடிந்தது. அடுத்த இலக்கு மாநில அவையைப் பிடிக்க வேண்டிய கட்டாயம். வலுவான கூட்டணி இருந்தும் அடுத்து வந்த மாநில அவைத் தேர்தலில் வெற்றி கிட்டாதோ என்ற பயத்தில் சகட்டு மேனிக்கு சலுகைகளை வழங்கி வாக்காளார்களை ஆசைக்காட்டி அழைத்த போது அரசியலில் அனுபவம் மிக்க பழுத்த தலைவர் பயங்கரமாகச் சறுக்கினார். சலுகைகள் காரணமாகவும் கூட்டணியின் காரணமாகவுமே தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கமுடிந்தது.
ஆனால் எதிர்பார்த்த பெரும்பான்மை கட்சிக்குக் கிடைக்கவில்லை என்பது ஏமாற்றம். ஆனாலும் கூட்டணிக் கட்சியருக்கு, அதில் முக்கியமான காங்ரெஸ் உறுப்பினர்களுக்கு ஆட்சியில் பங்கு கொடுத்தால் ஆபத்து. மத்திய அரசில் ஏற்படுத்திக்கொண்டுவிட்ட செல்வாக்கினால் யாரையும் ஆட்சியில் பங்கு பெற விடாமல் திமுகவே பெரும்பான்மை பலம் பெற்றது போல ஆட்சிக்கு வரமுடிந்தது. கஜானாவில் பண இறுப்பைப் பற்றி கவலைப்படாமல் சலுகைகளை வாரி வழங்க முடிந்தது. தமிழகச் சரித்திரத்தின் வள்ளல்கள் வரிசையில் கருணாநிதியும் இடம்பெற்றார். நகரமெங்கும் வானைத் தொடும் பானர்கள். முதல்வரின் புகழ் பாடும் கவிதை வரிகளோடு. யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தின் நிர்வாக இயந்திரம் செம்மையாக இயங்குவதால் சிறுபான்மை வாக்குகள் பெற்று வந்த கட்சியென்ற நினைவு பாமரர்களின் நினைவை விட்டு அகன்றது. முதல்வரின் குடும்பம் மொத்தமுமே மாநிலத்தின் முதன்மை குடும்பமாயிற்று. சினிமா ஸ்டார்களின் படங்கள் சஞ்சிகைகளை அலங்கரித்ததைப்போல திரை மறைவில் இருந்த மகளும் அடாவடித்தனத்துக்குப் பேர் போன மகன் அழகிரியும் , அடுத்த முதல்வர் என்று அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்படாத மகன் ஸ்டாலினும் அலங்கரித்தார்கள். சன் டிவி திரையில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தோன்றாத நாளில்லை. மதுரையில் அழகிரியின் சாஸனத்திற்கப்பாற்பட்ட ஆட்சி கேள்வி கேட்பாரில்லாமல் நடந்தது. சித்திரை திருவிழாவின் போது அழகிரியையே கள்ளழகராக விசுவாசிகள் ஆராதித்தார்கள். வாரிசு அரசியல் என்று சொல்வதற்கு திமுக ‘சங்கர மடம் இல்லை’ என்று காட்டமாக விமர்சகர்களிடம் சொல்லும் கருணாநிதிக்கு இவையெல்லாம் கூச்சம் அளிக்காதது ஏன்? இந்த அதிகாரக் குவிப்பு ஆதார வேர்களையே தாக்கும் என்பது மாநில அவை வாழ்வில் பொன்விழாக்காணும் தலைவருக்குத் தெரியாமல் போனது எப்படி? இந்த வயதிலும், இத்தனை அனுபவத்திற்குப் பிறகும் பத்திரிக்கை விமர்சனங்களை ஏற்கும் பக்குவம் தமக்கு இல்லாத நிலையில் அது பயங்கர உருவத்தில் இளையவர்களால் பின்பற்றப் படும் என்று உணராதது ஏன்?
தினகரன் பத்திரிக்கை மற்றும் சன் டி.வி அலுவலகங்களை மதுரையில் அழகிரியின் ஆட்கள் துவம்சம் செய்து மூன்று உயிர்கள் பலியானது இந்த பலவீனங்களின் உச்ச கட்ட விளைவு. க்ரேக்க நாடக சோகம். தலைவர் பின்னோக்கி நோக்க வேண்டிய நேரம் இது. தமிழ் மக்களின் பிதாமகர் என்ற ஸ்தானத்தில் தாம் இருப்பதை மறக்கக் கூடாது. அங்கு அவரை அமர்த்தியிருப்பதும் அம்மக்களே என்பதையும் மறக்கக் கூடாது.


vaasanthi.sundaram@gmail.com

Series Navigation

வாஸந்தி

வாஸந்தி