தண்ணீர் யாருக்குச் சொந்தம் ?

This entry is part [part not set] of 35 in the series 20021124_Issue

மாட் பார்லோ / டோனி க்ளார்க்


(இவர்கள் எழுதிய புத்தகம் : ‘நீலத் தங்கம்: உலகத் தண்ணீரை திருடும் கம்பெனிகளைத் தடுப்பது எப்படி ? ‘ )

’20ம் நூற்றாண்டில் எண்ணெய் இருந்த இடத்தை, 21ம் நூற்றாண்டில் தண்ணீர் பிடித்துக் கொள்ளும். இதுவே தேசங்களின் செல்வத்தை நிர்ணயிக்கும். ‘ ஃபார்ச்சூன் இதழ்.

நிலையான வளர்ச்சிக்கான உலக உச்சி மாநாடு முடிவுக்கு வருகிற இந்த நேரம் உலகின் குடிநீர் ஆதாரங்களின் எதிர்காலம் பற்றிய யுத்தமும் தொடங்கிவிட்டது. இந்த உச்சி மாநாட்டிலேயே இதன் அடிப்படைகள் வரையப் பட்டுள்ளன. தென் ஆப்பிரிக்காவின் மிக ஆடம்பரமான பகுதியில் , தென் ஆப்பிரிக்காவின் புதிய பொருளாதர மையப் பகுதியில், சாண்டனில் , இந்த மாநாடு நடைபெறும். உலக வங்கியும், உலக வர்த்தக நிறுவனமும் இணைந்து தண்ணீரைத் தனியார் மயமாக்கத் திட்டத்தின் முதல் பகுதியை அரங்கேற்றுவர்.

இதே நேரம் தென் ஆப்பிரிக்கா மற்றும் வேறு பகுதிகளிலிருந்து சமூகப் பணியாளர்கள் தண்ணீரைப் பாதுகாப்பதற்காக அலெக்சாண்ட்ராவில் கூடுவார்கள். இந்த நகர் மிக ஏழ்மைப்பட்ட மக்கள் உள்ள இடம். கக்கூஸ், மின்சாரம், தண்ணீர் எல்லாமே தனியார் மயமாக்கப் பட்ட இடம் இது. பணம் கட்டவில்லையென்றால் வசதிகள் வெட்டப்படும். அலெக்ஸாண்ட்ராவிற்கும், சாண்டனுக்கும் இடையில் மகா அழுக்கான ஓர் ஆறு ஓடுகிறது, இந்த ஆற்றின் கரைகளில் காலரா எச்சரிக்கைப் பலகைகள் உள்ளன. ரியோ+10 ( ரியோ சுற்றுப்புறச்சூழல் மாநாடு முடிந்து பத்துவருடங்களுக்குப் பின்) மாநாடுக்கு இதைவிட பொருத்தமான இடம் கிடையாது. தண்ணீர் பற்றி நடக்கும் விவாதத்தின் , எப்படிப் பட்ட பிளவு என்று காண்பிக்கும் உதாரணம் இது. இதில்லாமல் தெ ஆப்பிரிக்காவில் தான் தண்ணீரைக் காப்பாற்றும் இயக்கம் முதன்முதலில் தோன்றியது.

இது உயிர் வாழ்க்கைக்கான போராட்டம். தூய தண்ணீர் தட்டுப் பாடு எங்கும். மாசுப் படர்வு எங்கும். தண்ணீருக்கான போராட்டம் வேறு வேறு வடிவங்களில் வேறு வேறு இடங்களில் நடைபெறுகின்றன. தண்ணீர் பற்றிய அணுகுமுறை மாறாவிடில் இந்தப் போராட்டம் தீவிரமடையுமே தவிர குறையாது. தண்ணீர்ப் பஞ்சமும் ஏற்பட வழியுண்டு.

தண்ணீர்ப் பிரசினை பற்றி கடந்த பத்தாண்டுகளாய்ப் பேசப்பட்டு வருகிறது. நீரியலாளர்கள், பொறியியல் வல்லுனர்கள், விஞ்ஞானிகள், வெப்பதட்ப நிலை ஆய்வாளர்கள் எலோருமே தண்ணீர்ப் பிரசினையை ஆய்ந்து வந்திருக்கிறார்கள். தண்ணீரால் விளையும் நோய்களால் பலரும் மடிவதும் வழக்கமாய் இருந்திருக்கிறது. ஆனால் இது வெறும் ஏழ்மை, சுகாதார வசதிக் குறைவு, அநீதி என்பதன் பின் விளைவாய் மட்டுமே பார்க்கப் பட்டது.

ஆனால் இப்போது பலரும் அபாய அறிவிப்புச் செய்யும் அளவு நிலை மோசமாகி விட்டது. மனித உரிமை அமைப்புகளும், சுற்றுச்சூழல் அமைப்புகளும், ஆய்வாளர்களும், அதிகார பூர்வமான உலக அமைப்புகளின் பிரதிநிதிகளும் கூட எச்சரிக்கை செய்கிறார்கள். குடி தண்ணீர், உலக தண்ணீர் இருப்பின் ஒரு சதவீதத்திற்கும் குறைவே. ஒவ்வொரு வருடமும் 85 மில்லியன் பேர் ஜனத்தொகையில் கூடுதலாகிறார்கள். தண்ணீர் உபயோகம் இருபது வருடத்துக்கு ஒரு முறை இருமடங்காகிறது. தொழில் முறை விவசாயம், வெள்ள நீர்ப்பாசனம், பெரும் அணைகள், விஷக் கழிவுப் பொருட்கள் குவிப்பு,ப ஈர நிலங்களும் காடுகளும் அழிப்பு, சுற்றுப்புறச் சூழல் மாசு படர்தல் எல்லம் சேர்ந்து தண்ணீரைக் கெடுத்துள்ளன. நிலத்தடி நீரும் வெகு வெகமாய் மாசுபட்டு வருகிறது அல்லது மறைந்து வருகிறது.

தண்ணீர் இருப்பு மறைந்து வரும் இடங்களில் முக்கியமானவை : மத்திய கிழக்கு, வடக்கு சீனா, மெக்சிகோ, கலிஃபோர்னியா, ஆப்பிரிக்காவில் 24 தேசங்கள். 31 நாடுகளில் உள்ள ஒரு பில்லியன் மக்களுக்கு சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை. மாசு பட்ட தண்ணீரைக் குடித்து எட்டு செகண்டுகளுக்கு ஒரு குழந்தை மரணமுறுகிறது.

வாஷிங்டன் கருத்து

ஆனால் இப்போது உலகம் பூராவும் வாஷிங்டன் கருத்து ஒருமித்த கருத்தாய் ஆகியுள்ளது. அந்தக் கருத்து : உலகமெல்லாம் பொருந்தக் கூடியது தாராளவாத பொருளாதாரமே. தேசங்கள் தம்முடைய இயற்கைச் செல்வங்களை கம்பெனிகளுக்குத் தாரை வார்த்துக் கொண்டுள்ளன. மனித குலத்திற்குப் பொதுவானதென்று கருதப்பட்ட எல்லாமே விற்பனைக்குத் தயாராய் உள்ளன. அர்சாங்கங்கள் மக்களுக்கு சமூகத்திற்குச் சொந்தமான அடிப்படை வசதிகளைச் செய்து தரும் பொறுப்பிலிருந்து கழண்டு கொள்ளத் தயாராய் நிற்கின்றன.

தண்ணீர்ப் பிரசினைக்குத் தீர்வு என்று ஒரு முகமாய் இவை சொல்வது : தண்ணீரையும் சரக்காக்குங்கள். தண்ணீரின் விலையும் தேவை/வினியோகம் பொறுத்து சந்தைப் பொருளாதாரம் தீர்மானிக்கட்டும். அவர்களைப் பொறுத்தவரையில் முடிந்தது விவாதம்.உலக வங்கியும், ஐக்கிய நாடுகள் சபையும் , தண்ணீர் அடிப்படை உரிமை அல்ல, அடிப்படை தேவை என்று வாதிடுகின்றன. உரிமைக்கும் தேவைக்கும் உள்ள வித்தியாசம் மிக முக்கியமானது. தேவை என்பது உங்கள் வாங்கும் சக்தியைக் கொண்டு நிர்ணயிக்கப் படுகிறது. எனவே விற்பனைக்கானது. உரிமை என்பது அடிப்படையாய் நீங்கள் பெற்றே ஆக வேண்டிய விஷயம். விற்க முடியாதது.

இதனால் ஒருசில பன்னாட்டுக் கம்பெனிகள் அரசாங்கங்களிடமிருந்து தண்ணீர் நிர்வாகத்தை மேற்கொண்டு கொள்ளை லாபமடிக்கத் தொடங்கியுள்ளன. மிக வெளிப்படையாகவே இவை தண்ணீர்த் தட்டுப்பாடு தமக்கு மிகப் பெரும் வாய்ப்பு என்று கூவுகின்றன.

இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. ‘நீலத் தங்கம் ‘ என்று தண்ணீரை அழைக்கின்றன இவை. எண்ணெய் கம்பெனிகளின் லாபத்தில் 40 சதவீதத்தை இப்போது தண்ணீர்க் கம்பெனிகள் அடைந்துள்ளன. மருந்துக் கம்பெனிகளை விட இவற்றின் லாபம் அதிகம். ஆனால் இவை சொந்தம் கொண்டாடுவது தண்ணீரின் மொத்த இருப்பில் 5 % க்குத் தான். அப்படியானால் எதிர்காலத்தில் எப்படிப்பட்ட லாப நோக்கை இவை முன் கொண்டுள்ளன என்று கணக்கிடுவது சுலபம். 1999-ல் தண்ணீர்க் கம்பெனிகள் தண்ணீர் நிலைகளை அபகரிக்க அமெரிக்காவில் மட்டும் செலவு செய்த தொகை 15 பில்லியன் டாலர்கள். இவை எல்லாமே பங்குச் சந்தையில் விற்கப் படுகின்றன.

தண்ணீரைச் சொந்தமாக்கும் கம்பெனிகள்

இப்போது உலக அளவில் தண்ணீரை விற்பனை செய்வதில் பத்து கம்பெனிகள் முன்னிற்கின்றன. பிரான்சின் விவென்டி கம்பெனியும், சூயஸ் கம்பெனியும் இவற்றில் முதன்மையானவை. 150 நாடுகளில் 2000 கோடி வாடிக்கையாளர்களுக்கு இந்தக் கம்பெனிகள் தண்ணீரை வினியோகம் செய்கின்றன. பூகேஸ் சார், ஆர் டபிள்யு ஈ-தேம்ஸ் தண்ணீர், பெக்டெல் யுனைடெட் யுடிலிடாஸ் போன்ற கம்பெனிகள் உலகின் மூலை முடுக்கெல்லாம் செல்ல முயல்கின்றன. அமெரிக்காவில் விவெண்டி கம்பெனி , யு எஸ் ஃபில்டர் என்ற கம்பெனியின் மூலமாக செயல்படுகிறது. சூயஸ் கம்பெனி யுனைடெட் வாட்டர் வழியாய்ச் செயல் படுகிறது.

இவற்றிற்கு உலக வங்கியும் ஐ எம் எஃபும் துணை போகின்றன. கடன் நிவாரணம் கேட்டு வரும் மூன்றாவது உலக நாடுகளிடம் உலக வங்கி தண்ணீரைப் பொதுவாக்கும் போக்கை விட்டுவிட்டு, இந்தக் கம்பெனிகளிடம் தண்ணீர் வினியோக ஒப்பந்தம் செய்தால் தான் கடன் நிவாரனம் கிடைக்கும் என்று வற்புறுத்துகிறது. இந்தக் கம்பெனிகள் மூன்றாவது உலக நாடுகளில் பண்ணும் அயோக்கியத் தனங்களும் பட்டியலிடப் பட்டுள்ளன. பெரும் லாபங்கள். தண்ணீருக்கு அதிக விலை. பணம் தராத வாடிக்கையாளர்களுக்கு தண்ணீர் மறுப்பது, ஊழல், லஞ்சம், தண்ணீரின் தரம் சரிவு என்றெல்லாம் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

லாப வேட்டை பல வடிவங்களில் எழுகிறது. புட்டியில்அடைக்கப் பட்ட தண்ணீர் வினியோகம் பெரும் தொழிலாய் உருவாகியுள்ளது. எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், வருடத்துக்கு 20 சதவீத வளர்ச்சியை இது எட்டியுள்ளது. உலகம் பூராவும் கடந்த வருடம் 90 பில்லியன் லிட்டர்கள் தண்ணீர் விற்கப்பட்டுள்ளது. இதனால் பிளாஸ்டிக் கழிவு அமோகமாய் குவிந்துள்ளது. லாபம் 22 பில்லியனை எட்டியுள்ளது. புதிது புதிதாய் தண்ணீர் மூலங்களைத் தேடி பெப்சி, கோகா கோலா, நெஸ்லே கம்பெனிகள் அலைகின்றன. கிராமப்புறங்களில் உள்ள நீர்நிலைகளையும், , காட்டுப் பகுதிகளையும் வாங்கி அவற்றை உலரச் செய்துவிட்டு வேறு இடம் தேடிப் போவது இவற்றின் வழக்கமாய் இருக்கிறது. இதனால் பல சச்சரவுகள் மூண்டுள்ளன. ஒரு கம்பெனி சொன்னது: ‘தண்ணீருக்கு இனி ரேஷன் போட வேண்டியது தான். இந்த மக்கள் கொடுக்க மறுத்தால் ஈர நிலங்களை வன்முறை கொண்டு கைக்கொள்ள வேண்டும். ‘

கம்பெனிகள் இப்போது பெரும் குழாய்களை இடுவதிலும், பெரும் பீப்பாய்களை அமைப்பதிலும் ஈடுபட்டுள்ளன. தண்ணீரை ஒர்ர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குக் கொண்டு செல்வதற்கு இவை பயன்படும். உலக வங்கி குறிப்பிட்டது : இப்போது எண்ணெய் எப்படி ஏற்றுமதி செய்யப்படுகிரதோ அது போல் சீக்கிரம் தண்ணீரும் ஏற்றுமதி செய்யப்படும். ‘ சுற்றுப்புறச்சூழல் நாசமாவது பற்றி கவலி இல்லை. சில திட்டங்கள் பெரும் திட்டங்கள் : உதாரணமாக கனடாவின் வடக்கில் ஒரு நதியின் போக்கு எதிர்த்திசைக்கு மாற்றப்படும். சீனாவின் பெரும் அணை விளைவித்த அழிவை விட இதன் அழிவு அதிகமாய் இருக்கும்.

உலக வர்த்தகம்

இதே நேரத்தில் உலக அரசாங்கங்கள் தம்முடைய நீர் நிலைகளுக்கான உரிமையை ‘வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ‘ , இந்த ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாய் வரவிருக்கும் ‘அமெரிக்க சுதந்திர வர்த்தகப் பகுதி ‘, உலக வர்த்தக அமைப்பு போன்றவற்றின் கீழ் , விட்டுக் கொடுக்கலாயின. இந்த உலகமயமாதலின் ஆதரவு அமைப்புகள் இந்த அமைப்பைச் சார்ந்த தேசங்களின் நீர்நிலைகளின் உரிமையை பன்னாட்டு கம்பெனிகளுக்கு தாரை வார்க்கப் பயன்படுகின்றன. ஏற்கனவே பன்னாட்டுக் கம்பெனிகள் நீர்நிலைகளின் மீது உரிமை கோரி அர்சாங்கங்கள் மீது வழக்குத் தொடர ஆரம்பித்துவிட்டன. நீர்நிலையை வர்த்தகப் பொருளாக்கி லாபம் ஈட்டுவது தான் இவற்றின் குறிக்கோள்.

உலக வர்த்தக அமைப்பிலும், வட அமெரிக்க சுதந்திர வர்த்தக அமைப்பிலும், தண்ணீர் சரக்கு என்று குறிப்பிடப் பட்டுள்ளது. வட அமெரிக்க சுதந்திர அமைப்பில் தண்ணீர் ‘முதலீடு ‘ என்று அழைக்கப் படுகிறது. உலக வர்த்தக அமைப்பு விவாதங்களில் இதை ‘சேவை ‘ (Service) என்று அழைக்க முனைப்புக் காட்டுகிறார்கள். ‘தேசியமயமாக்குவது ‘ பற்றிய ஷரத்தில் , அரசாங்கங்கள் நகர நீர்ச் சேவையை தனியார் மயமாக்கினால், உலக நிறுவனங்களிடமிருந்தும் போட்டி விண்ணப்பங்களுக்கு இடமளிக்க வேண்டும். உள்ளூர் கம்பெனி தண்ணீரை ஏற்றறுமதி செய்ய உரிமை பெற்றால், உலக நிறுவனங்களும் தண்ணீர்த் தொழிற்சாலைகளை நிறுவ அனுமதியளித்தாக வேண்டும்.

வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் ‘சரிவிகிதப் பகிஎவு ‘ என்று ஒரு ஷரத்து உள்ளது. அதாவது, எண்ணெயும், இயற்கை வாயுவும் அது கிடைக்கும் நாட்டுக்கு மட்டும் சொந்தமல்ல. மற்ற நாடுகளுக்கும் பங்கு கொடுத்தாக வேண்டும். உதாரணமாக், கனடா, இந்த ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவிற்கு தன் எரிவாயு உற்பத்தியில் 57 சதவீதத்தை ஏற்றுமதி செய்கிறது. க்யோடோ ஒப்பந்தப் படி கனடா, சூழலில் விஷவாயுக்களைக் குறைப்பதற்காகக் கூட, எரிவாயு ஏற்றுமதியைக் குறைக்க முடியாது, இதே ஷரத்தின் கீழ் கனடா அமெரிக்காவிற்கு தண்ணீர் விற்பனை செய்தால், – புஷ் ஏற்கனவே தண்ணீர் வட அமெரிக்க எரிசக்தித் திட்டத்தின் கீழ் தண்ணீரும் வருகிறது எனக் கூறியிருக்கிறார் – அந்த விற்பனையை கனடா தன் இஷ்டத்திற்கு நிறுத்திவிட முடியாது. வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் பகுதி 11 -ன் படி ‘முதலீட்டாளர்களுக்கான ‘ பாதுகாப்பு என்று சொல்லி கம்பெனிகள் கனடாவின் மீது வழக்குத் தொடர முடியும். ஏற்கனவே கலிஃபோர்னியா கம்பெனி ஒன்று கனடா மீது 10.5 பில்லியன் டாலர் கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளது. காரணம் (கனடாவின் ஒரு மானிலமான) பிரிட்டிஷ் கொலம்பியா பெருமளவில் தண்ணீர் ஏற்றுமதியைத் தடை செய்துள்ளது.

உலக வர்த்தக நிறுவனம், தண்ணீர் ஏற்றுமதியை ‘சரக்கு ‘ என்று குறிப்பிட்டுள்ளதால் , ஏற்றிமதியை அரசாங்கங்கள் தடை செய்ய முடியாது. சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காக தண்ணீர் ஏற்றுமதியைத் தடை செய்தால் கூட ‘பாதுகாப்பு நடவடிக்கை ‘ (Protectionism) என்று வழக்குத் தொடரமுடியும். 2001-ல் கதாரில் நடந்த உலக வர்த்தக நிறுவனத்தின் மாநாட்டில் ‘சுற்றுச் சூழலைக் காரணம் ‘காட்டி வர்த்தக தடை செய்வதைத் தவறு என்று நிறுவும் ஷரத்து சேர்க்கப் பட்டுள்ளது.

தனியார் மயமாதல் தவறு

இந்தச் சூழ்நிலை அச்சுறுத்துவதாய் இருப்பினும், முழுக்க நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை, உலக தண்ணீர் நிலைகளைக் காப்பாற்றும் வழிகள் பல உள்ளன. கெட்டுப் போன நீர்நிலைகளைத் தூர் வாருவது, வெள்ள நீர்ப் பாசனத்திற்குப் பதிலாக சொட்டு நீர்ப்பாசனம், கட்டுமானங்களையும், கரைகளையும் பாதுகாப்பது, தண்ணீர் சேமிப்பு, தண்ணீர் உற்பத்தியையும், நீர்ப்பிடிமானப் பகுதிகளையும் பாதுகாப்பது என்று பல வழிகள் உள்ளன. பணக்கார நாடுகள் வளரும் நாடுகளின் தண்ணீர் பிரசினையைத் திர்க்க செய்ய வேண்டியது: கடன் நிவாரணம், பணமதிப்புச் சூதாட்டத்தை நிறுத்துவது, வெளியுதவிகளை பயனுள்ள விதத்தில் செய்வது.

ஆனால் இவை நடக்கப் போவதில்லை. தண்ணீரை உலகப் பொதுச் சொத்தாகக் கருதி கம்பெனிகளோ, அல்லது வேறு அமைப்புகளோ அவற்றை மாசு படுத்துவதைத் தடுக்க வேண்டும். தண்ணீர் சரக்கு என்று சொல்லப் பட்டால், அது அரிதாகிப் போவது தடுக்க முடியாதது. தண்ணீரை ஏகபோகமாய் உரிமை கொண்டாடும் கம்பெனிகள் உருவாகி அவற்றின் லாப நோக்கிற்காக செயல்படும் முறை உருவாகும். தண்ணீர் யாருக்குக் கிடைக்க வேண்டுமோ அவர்களுக்குக் கிடைக்காது.

அரசாங்கங்களின் மீது தவறு உள்ளது. தண்ணீர் நிலைகளைப் பாதுகாக்கவும், மாசுபடலிலிருந்து பாதுகாக்கவும் போதுமான நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ளவில்லை. ஆனால் இதற்குட் தீர்வு பன்னாட்டுக் கம்பெனிகளுகு தண்ணீரைத் தாரை வார்ப்பதல்ல. மாறாக அரசாங்கங்கள் முன்வந்து நீர் நிர்வாகத்தைச் சரிவரச் செய்வது தான். வெளிநாட்டுக் கம்பெனிகள் நீர்நிலைகளை அபகரிக்க முயலாமல், தண்ணீர் நிர்வாகத்திற்கு உதவவேண்டும்.

தண்ணீர் விற்பனைச் சரக்காக ஆவது எப்படிப் பார்த்தாலும் தவறு தான்- ஒழுக்கக் கண்ணோட்டத்திலும், சூழல் பாதுகாப்புக் கண்ணோட்டத்திலும், சமூக நலன் கண்ணோட்டத்திலும் இது தவறு தான். தண்ணீரை யார் பெறுவது என்பது வியாபார ரீதியாய் நிர்ணயிக்கப் படுமே தவிர , சமூக நீதியை முன்னிறுத்தியல்ல. தனியார் மயமாதல் தண்ணீர் வழியாக லாபம் சம்பாதிக்கவும், தண்ணீரை கிடைக்காத ஒரு பண்டமாகவும் ஆக்க முயலுமே தவிர, தண்ணீர்ப் பாதுகாப்பு நோக்கியோ, அனைவருக்கும் தண்ணீர் என்றோ செயல்படாது. தண்ணீர் விற்பனையை பெருக்குவதற்காக வியாபார உத்திகளிலும், தண்ணீர் பதுக்குதலிலும், உப்புத்தண்ணீரை மாற்றும் ரசாயனத் தொழில் நுட்பத்திலும் கவனம் செலுத்துமே தவிர, தண்ணீரைப் பரவலாய்க் கொண்டு செல்ல ஏழைமக்களுக்குக் கிடைக்கச் செய்ய முயலாது.

உப்பு அகற்றி நீரைப் பயன்படுத்துவது என்பது மிக மோசமான தேர்வு. காரணம் எரிவாயு மிக அதிகமாய்ச் செலவாகும், சூழல் மாசுபடும், மிகுந்த உப்பு மீண்டும் கடலில் இடப்படுவதால் மீன்வளமும் பாதிக்கப் படும்.

ஒரு புதிய தண்ணீர் தர்மம்

தண்ணீர் பொதுச் சொத்து என்று அங்கீகரிக்கப் படவேண்டும். உலகம் உயிர்வாழ்வதற்கு வேண்டிய முக்கியமாம ஓர் அங்கம் தூய நீர். மக்கள் தத்தம் ஊரில், அருகாமையில் உள்ள நீர்நிலைகளைப் போற்றிப் பாதுகாக்க முன்வரவேண்டும். தண்ணீர் மனிதர்களின் அடிப்படை உரிமையாய் எல்லா அரசாங்கங்களும் அங்கீகரிக்க வேண்டும். இதை லாபநோக்கில் யாரும் அபகரிக்காத முறையில் சட்டங்கள் இயற்றப் படவேண்டும். அரசாங்கங்கள் தம் கீழ் உள்ள நீர் நிலைகளைப் பாதுகாக்க முன்வரவேண்டும். உலக அளவில் இந்தப் பாதுகாப்பு அங்கீகரிக்கப்படவேண்டும். கம்பெனிகளின் அபகரிப்புத் தடுக்கப்படவேண்டும்.

ஆனால் அரசாங்கங்களோ, அவற்றின் அதிகார வர்க்கமோ இதைச் செயல்படுத்தாது என்பது தெளிவு. நம் சிவில் சமூகம் முன்வந்து இந்தப் பிரசினையை எடுத்துச் செல்லவேண்டும். இதைவிட முக்கியமான பிரசினை நம் முன் இல்லை. தண்ணீர் யாருக்குச் சொந்தம் என்ற அரசியல் கேள்வி தான் நன் முதல் நுழைவாயில். உலக நீர்நிலைகளை அபகரிக்கும் கம்பெனிகளுக்கு எதிராக அணி திரளவேண்டும்.

உலகின் சூழலியல் இயக்கங்கள், வறுமை ஒழிப்பு இயக்கங்கள், மனித உரிமை இயக்கங்கள், பொது நிறுவன ஊழியர்கள், விவசாயிகள், ஆதிவாசிகள் மற்றும் பல பொது நல இயக்கங்கள் இணைந்து , தண்ணீர் உலகப் பொதுச் சொத்து என்று பிரகடனம் செய்ய நிர்ப்பந்திக்க வேண்டும்.பிரேசில் போர்டோ அலெக்ரேயில் கடந்த ஜனவரியில் உலக சமூக சம்மேளனத்தில் இதைக் கையாளும் விதம் பற்றி விவாதித்தோம். செப்டம்பரில் தென் ஆப்பிரிக்காவிலும், மார்ச்சில் க்யோடோ, ஜப்பானிலும் இதே பிரசினை பற்றிப் பேசுவோம். தண்ணீர் தனியார் மயமாதலை எதிர்ப்போம். இரண்டு ஆண்டுகள் முன்பு ஹாக்-கில் இரண்டாவது தண்ணீர் சம்மேளனத்தில் மேற்கொண்ட முடிவுகளுக்கு மாற்றாக பொலிவியாவில் தண்ணீர் தனியார் மயமாவதைத் தடுக்கும் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து போராடுவோம். இந்தியாவில் பெரும் அணைக்கட்டை எதிர்த்திப் போரிடுவோம். மிச்சிகனில் பெரியர் என்ற தண்ணீர்க் கம்பெனி பொதுத் தண்ணீரைக் கொள்ளையிடுவதைப் பற்றிப் பேசுவோம்.

தண்ணீரின் எதிர்காலப் பயனை நிர்ணயிக்க கீழ்க்கண்ட செயல்கள் தேவை : உலக நீர்ப்பரப்புகளை பதுகாக்கவும் பகிர்ந்து கொள்ளவும் ஒரு ஒப்பந்தம் உலக அளவில் ஏற்பட வேண்டும். தண்ணீர் ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூக அரசியல் அடிப்படையான உரிமையாக வேண்டும். தேசிய அளவில் தண்ணீர்ப் பாதுகாப்புச் சட்டங்கள் இயற்றப்படவேண்டும். உலக வர்த்தக அமைப்பின் கொடுங்கோன்மையிலிருந்து தண்ணீருக்கு விலக்கு அளிக்கப்படவேண்டும். உலக வங்கி – உலக பண நிறுவனம் ((I M F)) இவற்றின் கீழ் தண்ணீரைத் தனியார் மயமாக்கும் முயற்சிகளை வற்புறுத்துவது உடனடியாய் நிற்க வேண்டும். தண்ணீர் மையங்கள் பாதுகாப்பு மற்றும் சம உரிமை என்ற முறையில் பாதுகாக்க உலக தண்ணீர் மாநாடு நிகழ்த்தப் படவேண்டும். இது மிகக் கடினமான முயற்சி தான். ஆனால் இது தவிர தண்ணீரைப் பாதுகாக்க வேறு வழி இல்லை.

****************

Series Navigation

மாட் பார்லோ / டோனி க்ளார்க்

மாட் பார்லோ / டோனி க்ளார்க்