தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்

This entry is part [part not set] of 23 in the series 20020505_Issue

ஜெயமோகன்

தஞ்சை ஆபிரகாம் பண்டிதரிலிருந்துதான் தமிழிசை இயக்கம் தொடங்குகின்றது. வரலாற்றுக் காரணங்களால் தொடர்ச்சியழிந்து போக நேரிட்ட தமிழ் மரபிசை விஜயநகர ஆதிக்க காலகட்டத்தில் மறுகண்டுபிடிப்புக்கு ஆளான போது அன்றைய அரசியல் சூழல் காரணமாக தெலுங்கு இசையாக முன்வைக்கப்பட்டது. காலப்போக்கில் அதன் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் முற்றிலும் மறுக்கப்பட்டன. அது தெலுங்கு தேசத்திலிருந்து வந்தது என்றும் க்ஷேத்ரக்ஞர் முதலியோரில் இருந்து முளைவிட்டது என்றும் புதிய வரலாறுகள் உருவாக்கப்பட்டன. அவ்வரலாறு முற்றிலும் ஆதாரபூர்வமாக மறுக்கப்பட்ட பிறகும், இப்போதும், தொடர்ந்து கூறப்பட்டே வருகிறது.

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் பண் ஆராய்ச்சி மற்றும் இலக்கிய ஆராய்ச்சியின் வழியாக, தமிழிசையே இன்று தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிறபகுதிகளிலும் பல வடிவங்களில் வழங்கி வரும் இசை என்று நிரூபித்த முன்னோடி ஆய்வாளர். நெல்லை மாவட்டத்தில் குற்றாலம் அருகே சாம்பூர் வடகரை சம்புவனோடை என்ற ஊரில் 2.8.1859இல் மு. ஆபிரகாம் பண்டிதர் பிறந்தார். பெற்றோர் முத்துச்சாமி நாடார் மற்றும் அன்னம்மாள். திண்டுக்கல் நார்மல் ஆங்கிலப்பள்ளியில் ஆசிரியர் படிப்பு முடித்து அங்கேயே ஆசிரியராகவும் பணியாற்றினார். இறுதி வாழ்க்கையில் இவருக்கு திண்டுக்கல் அருகேயுள்ள சுருளிமலையில் வாழ்ந்த கருணானந்தர் என்ற சித்தரிடம் தொடர்பு ஏற்பட்டது. அவருடைய மாணாக்கராகி சித்த மருத்துவத்தைக் கற்றுத் தேர்ந்தார்.

1882இல் பண்டிதர் நஞ்சங்குளத்தைச் சேர்ந்த ஞானவடிவு பொன்னம்மையைத் திருமணம் செய்து கொண்டார். 1883இல் தஞ்சைவந்து சித்தமருத்துவ தொழிலைத் தொடங்கினார். இதில் அவர் பெரும் பொருளீட்டினார். இக்காலகட்டத்தில் புதுவகை பயிர்களை வேளாண்மை செய்வதிலும் காற்றாலைகள் நிறுவி நீர்ப்பாசனம் செய்வதிலும் பண்டிதருக்கு ஆர்வம் இருந்திருக்கிறது. 1911இல் மின்சாரத்தில் இயங்கும் அச்சுக்கூடம் ஒன்றை நிறுவினார். இவரது விவசாய ஆராய்ச்சிகளுக்காக பிரிட்டிஷ் அரசு ராவ்பகதூர் பட்டம் அளித்து கெளரவித்தது.

திண்டுக்கல் சடையாண்டி பட்டரிடம் ஆபிரகாம் பண்டிதர் இசைபயின்றார். பிறகு தஞ்சையில் ஒரு நாதஸ்வர வித்வானிடமும் இசை கற்றார். ஆர்மோனியம், ஆர்கன், வீணை, பிடில் முதலிய வாத்தியங்களை வாசிக்கவும் கற்றார். இக்கால கட்டத்தில்தான் தமிழகத்தில் தெலுங்கு மொழியை முக்கியமாக கொண்டு கர்நாடக சங்கீதம் என்ற பெயரில் பிரபலமாக இருக்கும் இசைமரபு உண்மையில் பழந்தமிழ் இசைமரபே என்ற எண்ணம் இவருக்கு ஏற்பட்டது.

இதன் விளைவாக 1910 முதல் 1914 வரையிலான காலகட்டத்தில் பண்டிதர் ஆறு இசை மாநாடுகளைத் தஞ்சையில் நடத்தினார். 1912இல் (மே 27ஆம் நாள்) தஞ்சையில் சங்கீத வித்யா மகாஜன சங்கத்தை நிறுவினார். ஐரோப்பிய இசை வல்லுநரான பேராசிரியர் தஞ்சை ஏ.ஜி. பிச்சைமுத்து அவர்களின் மாணாக்கராகி மேற்கத்திய இசையையும் கற்றுத் தேர்ந்தார். பல்வேறு பாடகர்களையும் இசை நிபுணர்களையும் மேற்கத்திய இசை வல்லுநர்களையும் மாநாடுகளுக்கு அழைத்து விரிவாக உரையாடினார். மாநாடுகளை முழுக்க தன் சொந்த செலவில் பண்டிதர் நடத்தினார் என்பது குறிப்பிடத் தக்கது.

1917இல் பதினைந்து ஆண்டுக்கால பெரும் உழைப்பின் விளைவாக பெரும் இசை நூலாகிய ‘கர்ணாமிர்த சாகரம் ‘ என்ற ஆக்கம் பிரசுரமாகியது. 1395 பக்கங்கள் உடையது இந்நூல். இன்றுவரை தமிழிசை ஆய்வுகளுக்கு இதுவே மூலநூலாக விளங்கி வருகிறது. பிறரால் திட்டமிட்டு புறக்கணிக்கவும் படுகிறது.

பரதரின் ‘நாட்டிய சாஸ்திரம் ‘, சாரங்க தேவரின் ‘சங்கீத ரத்னாகரம் ‘ முதலிய பிற மொழி இசை நூல்களையும் சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்கள், கல்லாடம், தண்டியலங்காரம் முதலிய பண்டைத்தமிழ் நூல்களையும் விரிவாக கற்ற பண்டிதர் தன் ஆய்வுகளில் இவற்றையெல்லாம் ஆழ்ந்து பரிசீலிக்கிறார்.

சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசைகுறித்த செய்திகள் இன்றைய கர்நாடக இசையில் மூல இலக்கணங்களாக இருப்பதை பண்டிதர் சுட்டிக் காட்டினார். இன்றைய ராகங்கள் தான் அன்று பண்களாக இருந்தன என்று சுவர ஆய்வு மூலம் நிரூபித்தார். இராகங்களை உண்டு பண்ணும் முறை, பாடும் முறை ஆகியவற்றை பழந்தமிழ் இசையிலக்கணத்தில் இருந்து ஆய்வு செய்து அறிந்து விளக்கி காட்டினார். அவையே இன்றும் இசையில் அடிப்படைகளாக உள்ளன.

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் தமிழிசையே வடக்கே இந்துஸ்தானி இசை என்ற பெயரில் விளங்குகிறது என்று நிரூபித்தார். 20-24.3.1916இல் பரோடாவில் நடைபெற்ற அகில இந்திய இசை மாநாட்டுக்குச் சென்று தன் முடிவுகளைப்பற்றி உரையாற்றினார். இவரது கண்டுபிடிப்புகளை இவரது இரு மகள்கள் வீணையில் இசைத்துக் காட்டி நிரூபித்தனர்.

31.8.1919இல் பண்டிதர் உயிரிழந்தார். இவர் முடிக்காமல் விட்டிருந்த பகுதிகளை முடித்து இவரது மகளான திருமதி. மரகதவல்லி துரைப்பாண்டியன் ‘கர்ணாமிர்த சாகரம் ‘ இரண்டாம் பகுதியை நிறைவு செய்தார். பண்டிதரின் குடும்பமே இசைக் குடும்பம். அவரது தந்தையாரும் இசைப் பயிற்சியும் ஆர்வமும் மிக்கவர். பண்டிதரின் மூத்தமகன் சுந்தர பாண்டியன் அவரது இசை நூல்களைப் பிழை திருத்தங்கள் செய்து வெளியிட்ட இசை ஆய்வாளர். மூன்றாம் மகன் ஆ. வரகுணபாண்டியன் ‘பாணர் கைவழி ‘ எனும் இசை நூலை வெளியிட்டவர்.

மறைக்கப்பட்ட தமிழ்க் கலாச்சார வரலாற்றின் மறுபிறப்புக்குக் காரணமான பெரியோர்களில் ஐயத்திற்கு இடமின்றி முதலிடம் பெறத்தக்கவர் ஆபிரகாம் பண்டிதரே. ஆயினும் பிற்காலத்தில் அனைத்து தரப்பினரும் அவரைப் புறக்கணித்தனர்; மறக்கத் தலைப்பட்டனர் என்பது கசப்பான வரலாற்று உண்மையாகும்.

சொல்புதிது இதழ்-9இல் வெளிவந்த கட்டுரை

Series Navigation