நாக.இளங்கோவன்
என்னயென்ன குளிர்கிறதே குளிக்க வேண்டுமா ?…
என்றஎன்னை நோக்கி என்னரசி சொன்னதுதான்,
‘சாக்கு சொல்லாதே! மூக்குறிஞ்சி நிக்கிறதாய்
போக்கு காட்டாதே! போய்க் குளிப்பாயே! ‘;
உரசிச் சொல்லரசி சுரமா எனக்கு ?…
உரசச் சொல்லும் சரசெனக்குப் புரியாதா ?;
பள்ளி பறக்கும் பிள்ளைகளைப் பார்த்தீரா ?
தள்ளி செல்வீரே! தாண்டி செல்வீரே!
கையைக் காலை ஆட்டிக் காட்டி
தையலைக் காலை, நையச் செய்யாதீரே!
விடியலுக்கு வழிதெரிய விளக்கேற்றி வைத்துவிட்டு
வடிசலுக்கும் வழிவகைகள் முடிக்கையிலே,
பிடித்த ணைக்கப் பித்தானான் கணவன்என்று
பிடிகொடாப் போனாலும் புன்னகைதான் பூவிதழில்!
பூவிதழின் ஓரத்துப் புன்னகையின் நாட்டியத்தைப்
பூரித்துப் பார்த்துவிட்டு போர்வைக்குள் யான்போனேன்!.
போமுன் சொன்னேன்! போய்வருவாய் கண்ணேநீ!…
நோய்வருமே நெடுநேரம் தூங்கிடின்! எழுக!,
போய்வருவோம் பள்ளிநீர் போய்வருவீர் வேலைக்கு!
தாய்மதியையும் தான்பார்த்து சடுதியில் சொல்லிவிட்டு
சேய்களெல்லாம் பள்ளிக்குச் சென்றவுடன், சேதியென்ன
இன்றின்னம் தூங்குகிறீர் ? சிறுவிடுப்பா முழுவிடுப்பா ?
என்றன்னம் கேட்டதுமே ‘உரசிப்பார் ‘ சிறு சுரமே!
என்றதுமே உரசியதில் பாதி சுரம்போக,
வென்றதுவே என்னுள்ளம் என்னில்லம்!; பெண்ணுள்ளம்
பத்திட்டு, படுக்கையிட்டு பாங்காய் போர்த்திட்டு
மத்திட்டு மையாக் கஞ்சி கடைஞ்சிட்டு
பெத்திட்ட பிள்ளைக்குப் புகட்டுபோல் புகட்டினாள்
பெத்திடா பிள்ளைக்கவன் அன்னையைப் போலே!
எத்தனைதான் உறங்கிடினும் வியர்க்கக் காணோம்!
அத்தனைக்கும் மாத்திரைகள் உண்டேன் அன்றோ!
மேலங்கே குளிர்கிறதே! மேலொன்றைப் போர்த்திட்டார்!
காலங்கே குதிக்கிறதே! காலையும் அமுக்கிட்டார்!
அய்யோ தலைவலி! அங்கே கால்வலி!
மெய்யோ முழங்கால்! மூட்டும் இருக்கா ?
முதுகின் நடுவில் முனகல் வருதே!
எதுஎன் சொல்வேன் மூச்சின் வேகம் ?
காய்கதிர்ச் செல்வ கருணை இலையோ
காய்ச்சல் காலம் நாளும் நீளுமோ ?
ஓய்ச்சல் வேண்டி வைத்தியம் நாடிப்
போய்ச் சேர்ந்தேன் பன்னாள் வைத்தியர்!
இளங்கோ இளங்கோ இந்தாப் பிடிங்கள்!
இவைதான் மருந்து! மொத்தம் மூன்று!
அடைபாய்டு இருந்தால் வெள்ளையில் போகும்!
மலேரியா வானால் சிவப்பில் போகும்!
எதுவா னாலும் மஞ்சளில் மறையும்!
மறையா நின்றால் மறுநாள் வருக!
இலையேல் உமக்கு இனிய மறுநாள்!
நன்றி அய்யா! நன்றி நன்றி!
ஒன்று ஒன்றாய் தின்பதைக் காட்டிலும்
இன்றே எனக்கு எல்லா மருந்தும்,
ஒன்றாய்க் கொடுத்த நீவீர் வாழி!
நன்றாய் இருந்தால் நாளை வேலை!
இன்றேல் நாளை மறுநாள் வருவேன்!
என்ன நோவிது ? என்ன நோவிது ?
இன்னமும் போகலை இரண்டு நாளாகியும்! ?
புறப்படு போகலாம் வைத்தியர் மனைக்கு
முறைப்படி அதுதான் அவர்செயச் சொன்னது!
மூன்றிலும் போகாக் காய்ச்சல் கொண்டார்!
மூன்றினும் மேலே இடெங்கென் றொண்டு!
பிடித்துத் தாரும் குவளைக் குருதி!
படித்துச் சொல்வேன் அதுவே அதுவா ?
அரைநாழி ஆய்ந்தார் அதுவே! அதுவாம்!
அதுதான் புதிய ‘இடெங்கு ‘க் காய்ச்சல்!
இளங்கோ நீங்கள் இடெங்கு கொண்டார்!
இதோ அணுக்கள் எண்ணிக்கை பாரீர்!
இருக்க வேண்டியவை இருநூ றாயிரம்!
இருப்பவை வெறுமே இருப தாயிரம்!
ஏற்றியில் ஏறிஇடப் புறம் திரும்புக
இருக்கும் அறையில் ஏறிப் படுக்க!;
எல்லா வசதியும் உண்டங்கே! ஆகும்
அய்ந்து நாள்களுக்கு மேலே! அறிக!
கோசு கொடுப்போம் ஊசி போடுவோம்!
குருதி வாங்கி பிளேட்லெட் பிரித்து
கொஞ்சம் கொஞ்சமாய் உள்ளே ஏற்றி
அஞ்சு நாளில் ஆளைச் சரிசெய்வோம்!
அதுதான் இடெங்கு மருத்துவ மிங்கு!
அறிந்தேன் அய்யா வாழி நீவீர்!
இடெங்கு என்றால் என்ன அய்யா ?
சரியாய்க் கேட்டார் சொல்வேன் கேளீர்!
அறிவீர் அறிந்து சொல்வீர் பிறர்க்கும்!
ஊரில் நாட்டில் கொசுக்கள் மிதக்கும்!
மிதக்கும் கொசுக்கள் பரப்புதல் பலவே!
கழிவில் வளர்வது இரவில் கடிக்கும்!
இரவில் கடிப்பது மலேரியா கொடுக்கும்!
இப்படி இப்படி எத்தனையோ உண்டு!
அப்படி உள்ளதில் சிறுமாறு பாடு!
இந்தக் கொசுக்கள் நன்னீர்க் கொசுக்கள்!
இரவில் தீண்டா பகலில் மட்டும்!
பகலில் கடிக்கும் கொசுக்களை எல்லாம்
இகழ்தல் வேண்டாம் இடெங்கு வருமே!
சென்னையீரே சென்னையீரே பிறந்ததெல்லாம் தில்லியாம்!
பூத்திருப்பது சென்னைமுதல் பெரும்புதூர் வரையாம்!
பிள்ளைகள்தான் இடெங்குக் கொசுக்களுக்கு பிடித்தவையாம்!
பிடித்துவையும் அவர்களையே! பொல்லாதவை பகற்கொசுக்கள்!
பட்டதை நானும் சொல்லி விட்டேன்!
பகற்பொழு தினிலும் கொசுவோட் டுங்கள்!
பத்துநா பட்டது எல்லாம் போதுமய்யா!
பத்துநா பாத்துப் பாத்துப் போர்த்தியவள்
பித்தன் இன்று எழுதக் கண்டு
மஞ்சநீர் கலக்கி மண்டையிலும் தெளித்தாளே!
- வலைதந்த வரம்
- கவிஞர் ம திலகபாமா நூல் வெளியீட்டு விழா
- பிறவழிப் பாதைகள் (தேவநேயப்பாவணர், பாரதியார் விருது)
- அம்மா வந்தாள்: மரபும் மனப்போராட்டமும்
- ‘கண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம் ‘ – ஒரு கடிதம்
- கத்தரிக்காய்ப் பச்சடி
- அரைத்துவிட்ட முட்டைகுழம்பு
- வெண்டைக்காய் அவியல்.
- மாபெரும் பூகம்பங்கள் பழங்காலச் சமுதாயங்களை அழித்திருக்கலாம்
- எபோலா வைரஸ் நோய் வெகுவேகமாக காபோன் நாட்டிலிருந்து பரவி வருகிறது
- அண்டார்டிகாவில் உருகும் பனிப்பாறைகள் கடல் மட்டத்தை உயர்த்துகின்றன என நிபுணர்கள் கூறுகிறார்கள்
- தட்பவெப்பத்தில் திடார் மாறுதல்கள் நடப்பதற்கும் அதனால் பேரழிவுக்கும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன
- கால்களை வாங்கியவன்
- டெங்கே காய்ச்சல்
- இதம்
- என் மண் மீதில்…
- இந்த வாரம் இப்படி – டிசம்பர் 17, 2001
- இந்திய பாராளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.
- சீனாவை நம்பி இருக்கும் பர்மா
- எங்கிருந்தோ வந்தவர்களும் இங்கிருக்கும் ஏமாற்றுக் காரர்களும்
- மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கவனத்துக்கு உதகை பற்றி
- ஒளவை – 9,10
- மேசை என்றால் மேசை (Ein Tisch ist ein Tisch)
- கழிமுகம்