ஞாபக மழை

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

ஸ்ரீமங்கை


காலங்கள் கரைந்து
சகதியாய்க் கிடந்த
ஏதோவொரு வெளியில்
மிதந்து வந்த நீலப் பேருந்தில்
என்னை நான் ஏற்றிக் கொண்டேன்.
ஞாபகமழைச் சாரலினூடே.

உணர்வுகள் இணைந்து
சுழித்துச் சுழித்தோட
கவனமின்றி சக்கரம்
பதித்துச் செல்லும் இப்பேருந்தின்
பல சன்னல்களில்
கண்ணாடிகள்
நொறுக்கப் பட்டுவிட்டன.

சில, சாலைகளின்
அதிர்வுகளூக்கு சற்றும்
சம்பந்தமில்லாமல் ஆடிக்
கொண்டிருக்கின்றன

எத்தனை முறை
மூடினாலும் திறந்துகொள்வது
அவற்றுக்குச் சாத்தியமாயிருக்கிறது.

பல இருக்கைகள் மாறியமர்ந்தபின்
எனது இப்போதைய இருக்கையினருகே
சன்னலை சரியாக மூடிவிட்டேன்.
மழைத்துளிகள் என் தோள்களை
இனி நனைக்காவண்ணம்.

முன்வரிசையில் திடாரெனத்
திறந்துகொண்ட சன்னலில்
தெறித்த மழைத்துளி
தூவானமாய் என் மூக்குக்கண்ணாடியில்
புகையடித்து
கன்னங்களில் சிலீரிடுகிறது.

முழுதாய் நனைக்கும்
பெருமழையைவிட
இத்தூவானம்
மிகமோசம்..

தொடங்கிய இடத்திலோ
வெகுதொலைவிலோ
வட்டத்தின் அடுத்த இரு புள்ளிகளைப்போல
அருகிய வெகு தூரத்தில்
இறக்கிவிட்டுக்கொண்டேன்
என்னை.

ஓட்டுனரும் போய்ச்சேர,
ஒடும் பேருந்தும் போய்ச்சேர,
ஏறி இருப்பவனும் போய்ச்சேர….
யார்போய்ச்சேருவதற்கென,
யாரை யார் ஓட்டுகிறார்கள் ?

மீண்டும் ஒரு ஞாபக மாரிக்காலத்தில்
என் பயணம் தொடரும்

காத்திருப்பேன்
ஞாபகச் சாரலில் நனைந்து கனத்து,
சன்னல்களின் கண்ணாடிகள்
நொறுங்கிய நீலப் பேருந்துக்காய்
அன்றும்….
—-
kasturisudhakar@yahoo.com

Series Navigation

ஸ்ரீ மங்கை

ஸ்ரீ மங்கை