ஞாநிக்கு மீண்டும்

This entry is part [part not set] of 30 in the series 20020302_Issue

மஞ்சுளா நவநீதன்


1. நான் நந்தன் வழி படிக்கவில்லை. ஆனால், அவர்கள் சரவண பவன் அதிபரின் பலதார மணத்தைப் போற்றினார்களா ? சரவண பவன் பலகாரச்சுவையை போற்றுவது அவரது பலதார மணத்தை அங்கீகரிப்பது ஆகுமா ? பலதார மணம் தவறு என்று கண்டிக்கும் ஞாநி கருணாநிதியிடமும் பணி புரிந்தவர் தான்.

2. பெரியார் கன்னடரானாலும், தெலுங்கரானாலும் எனக்கு எப்படி அது தேவையில்லாத விஷயமோ, அது போல ஞாநி பிராம்மணரானாலும், பிள்ளைமாரானாலும் எனக்குத் தேவையில்லாத விஷயம். ஆனால் பெரியாருக்கு அப்படியல்ல என்பதுதான் என் வாதம். சூத்திர வேடம் போடும் பிராம்மணனைக் கண்டு ஜாக்கிரதையாக இரு என்று பெரியார் சொன்னால் என்ன அர்த்தம் ? பெரியாரையும் பெரியார் சீடர்களையும் பொறுத்த மட்டில், பிறப்பால் பிராம்மணர் சூத்திரர்களுக்கு என்ன ஆதரவாகப் பேசினாலும், பிறப்பால் பிராம்மணர் என்றுமே பிராம்மணர் என்ற பொருளில்தானே ? அதைத்தானே ‘ நந்தன் வழி ‘ ஆசிரியர் வழி மொழிகிறார் ? ஞாநி தனக்கு நந்தன் வழி ஆசிரியரைவிட பெரியாரைப் பற்றி பேச நிறைய உரிமை இருக்கிறது என்று சொல்லும்போது என்ன பொருளில் சொல்கிறார் என்பதே என் கேள்வி. ஞாநி தனக்கு குரு சீடன் மனப்பான்மை இல்லை என்று சொல்கிறார். அப்படி இருக்கும்போது, ஏன் பெரியாருக்கு பாத்யதை கொண்டாடுகிறார் ?

3. ஞாநி எந்த மதப்பெயரும் அல்ல என்று சொல்கிறார். நல்லது. உங்களுக்குத் தெரிந்த கத்தோலிக்கக் கிரிஸ்தவரையோ, முஸ்லீமையோ இந்தப் பெயர் வைத்துக்கொள்ளக் கேட்டுப்பாருங்களேன். அதனை எந்த மதப்பெயர் என்று சொல்கிறார்கள் என்று கேட்டுச் சொல்லுங்கள். ரஸ்ஸலும், இங்கர்சாலும் பெயர் மாற்றம் செய்து கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் நாத்திகர்களே தவிர கிறுஸ்தவ மதத்தை விட்டு விட்டு வேறு மதத்திற்குச் சென்று உய்வு அடையுங்கள் என்று பிரசாரம் செய்ததில்லை. ஆனால் பெரியார் இந்துமதத்தைத் துறக்க வேண்டும் , மற்ற மதங்களில் சேருங்கள் என்று திட்டவட்டமாய்க் கூறி இருக்கிறார். பரமசிவன்களும், அருணாசலமும் அந்தக கட்டளையைப் பின்பற்றாமல் எப்படி பெரியாரின் சீடர்கள் என்று சொல்லிக் கொள்ள முடியும் என்பது என் கேள்வி.

4. பெரியாரின் அடையாளம் என்ன ? ஞாநி கூற்றுப்படி பிராமண எதிர்ப்பு பெரியாரின் அடையாளம் அல்ல என்று புரிந்து கெள்கிறேன். அது சரிதானா ? பெரியாரை அடையாளப்படுத்துகிற அடிப்படையான கருத்துருவம் எது ? நாத்திகமா ? நிச்சயமாக இல்லை. கம்யூனிஸ்ட்கள் நாத்திகத்தைத் தம்முடைய பாலபாடமாகக் கொண்டவர்கள். கோரா என்ற ஒருவர் நாத்திகன் தான் உண்மையான அகிம்சாவாதியாய் இருக்க முடியும் என்று காந்தியின் சீடராகவே கடைசி வரை வாழ்ந்தவர். தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றமா ? அதுவும் இல்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் அம்பேத்காரையும். காங்கிரஸையும் தான் நாடினார்களே தவிர பெரியாரின் இயக்கத்தையல்ல. தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கிடைத்த வேலை மற்றும் படிப்பு முன்னுரிமையும் பெரியாரின் இயக்கத்தினால் ஏற்பட்ட பலன் அல்ல. அம்பேத்காரின் அயராத உழைப்பினால் ஏற்பட்ட பலன் அது. சாதி எதிர்ப்பா ? சாதி எதிர்ப்பினைக் கைக்கொள்ளாத எந்தத் தலைவர் இருக்கிறார் ? இருந்தார் ? எனவே சாதி ஒழிப்பும் அவருடைய அடையாளம் என்று சொல்ல முடியாது. இந்துமத எதிர்ப்பா ? ஆமாம் அது ஒன்று தான் அவருடைய அடையாளம் என்று சொல்லமுடியும். இதிலும் கூடப் பிராமண எதிர்ப்புத் தானே முன்னிற்கிறது. அவர் தமிழ் இலக்கியங்கள் மீதும், தமிழ் கலாசாரம் மீதும் வைத்த எதிர்ப்பும், தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதும் எந்த உறுத்தலும் இல்லாமல் ஒதுக்கி விட்டு, பிராமண எதிர்ப்புடன் ஒப்பிடும் போது மிக லேசானதாய் இருப்பதால் தான் அருணாசலம் போன்றவர்கள் தம்முடைய தமிழ்பஜனைக்கு பெரியாரின், பிராமண எதிர்ப்பை முன்னிறுத்தி சப்பைக் கட்டுக் கட்டுகிறார்கள். ஏனென்றால் பெரியாரிடம் அவர்கள் பெற்ற சுயமரியாதை, மற்றும் பகுத்தறிவிற்கு பிராமண எதிர்ப்பு என்ற ஒரே ஒரு பரிமாணம் தான் இருக்கிறது. ஏனென்றால் பெரியாரும் இந்தப் பரிமாணத்தையே மற்ற பரிமாணங்களைக் காட்டிலும் வலியுறுத்தியிருக்கிறார்.

4. இன்னொரு புளகாங்கிதம் அடைய வைக்கும் அருள் வாக்கு : ‘இந்து என்று வரலாற்றில் யாரும் கிடையாது. அது அண்மைக்கால உருவாக்கம் மட்டுமே. ‘ இதுதான் இடதுசாரிகளும், பாகிஸ்தான் அரசாங்கமும், ஜவஹர்லால் நேருபல்கலைக்கழகத்தாரும், நேரு வழி வரலாற்றாசிரியர்களான கேஎன் பணிக்கர், ரோமிலா தாப்பர் போன்றோரும் தொடர்ந்து பேசிவரும் வாசகம். அப்படிப்பார்த்தால் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு முஸ்லீம் என்று கூடத்தான் வரலாற்றில் யாரும் கிடையாது, அதுவும் அண்மைக்கால உருவாக்கம் தானே ? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரிஸ்துவர்கள் என்று கூடத்தான் யாரும் வரலாற்றில் கிடையாது, அதுவும் அண்மைக்கால உருவாக்கம் தானே ? அண்மைக்காலம் என்ன என்பதுதான் ஆள் ஆளுக்கு எதை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். பெளத்தப் பேரரசுகளுக்குப் பின்னர் உருவான இந்து பேரரசுகளும் என்ன மதத்தை ஸ்தாபித்தார்கள் ? அவர்கள் இந்து எல்ல என்றால் வேறு என்ன பெயர் சொல்லி அவர்களை அழைக்கலாம். இந்து என்ற பெயர் புதிதாய் இருக்கலாம். ஆனால் , அந்தப் பெயர் அடையாளப் படுத்தும் விஷயம் புதிதல்லவே. ஏன் இந்தோனேஷியாவில், ஒரே கோவிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரின் சிலைகளும் இருக்கின்றன ? அப்படி மூவரின் சிலைகளும் இருக்கும் கோவில்களை என்ன பெயர் சொல்லி அழைப்பது. சரி சனாதன தர்மம் என்று சொல்லலாம். பெயரில் என்ன இருக்கிறது ? இரண்டும் ஒரே விஷயத்தைக் குறிக்கும் ஒரு பொருள் பல மொழிதானே ? கிறிஸ்தவம் ரோமன் கத்தோலிக்கம், புரொடஸ்டண்ட், பாப்டிஸ்ட், லூதரன் என்று பல்வாறாய் வளரவில்லையா ? அதனால் கிறுஸ்தவம் என்ற பொதுப்பெயர் அல்லது அடையாளம் அர்த்தமில்லாததா ? இந்த அபத்தம் ஞாநி என்று பெயர் சூட்டிக் கொண்ட ஒருவர் பேசுவதா ? இது தான் ஞானமா ? ஞாநியின் மனைவி அல்லது அம்மா சென்று வரும் கோயில்கள் – மாரியம்மன் கோயிலும், கணபதி கோயிலும் கிறுஸ்தவக் கோயில்களா ?

5. பெரியார் ஆட்சிப்பொறுப்பில் இருந்திருந்தால் என்று பேசுவது கவைக்குதவாத அனுமானமே தவிர வேறு ஒன்றுமில்லை. அவர் ஆட்சிப் பொறுப்பில் இருக்கலாகாது என்ற கருத்தில் மிக மூர்க்கமாய்ச் செயல்பட்டவர் என்பது எவரும் அறிந்த ஒன்று. எனவே அவர் எக்காலத்திலும் செய்யத் தயாராய் இல்லாத ஒரு செயலை அவர் செய்திருந்தால் பொற்காலம் ஆகியிருக்கும் என்று பேசுவது அர்த்தமில்லாத பேச்சு.

6. ஒரு வாதத்தில் உள்ள ஓட்டைகளை எடுத்துக்காட்ட விதண்டாவாதமாக flippantஆக எழுதுவது பத்திரிகை உலக உத்திகளில் ஒன்று தான் என்பதும் ஞாநிக்குத் தெரிந்து தான் இருக்கும்.

7. பெரியாரால் மேல்சாதி ஆதிக்கத்தைத் தவிர்க்க முடிந்தது என்று எழுதுகிறார் ஞாநி. எங்கே முடிந்தது ? இன்னமும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான ஒதுக்கீடு கூடச் சரியான முறையில் நடைமுறைப்படுத்த முடியாமல், பிராமணரல்லாத மேல்சாதியினர் தான் தமிழ் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். நீதிக்கட்சியும், திராவிட இயக்கங்களும் கொண்ட வெற்றி அது ஒன்று தான். ஆனால் கலாசார ரீதியாய் இன்னமும் பிராமணரின் ஆட்சி தான் நடைபெறுகிறது. இந்துவும், விகடனும் தன் வேறு வேறு பெயர்களில் உலா வருகின்றன. கே பாலசந்தரும் விசுவும் தான் பிரபல சினிமாவின் ‘அறிவு ஜீவிகள் ‘ . மற்ற மேல்சாதியினரும் சரி இவர்களின் வழியில் தான் தம்முடைய கலாசார அடையாளங்களை அமைத்துக் கொள்கிறார்கள். இவற்றிற்கு எதிராக ‘ நந்தன் வழி ‘ பாமரர்கள் நிறுத்துவது திருவாரூர் கே தங்கராசு போன்ற அடிப்படை இலக்கிய அறிவற்ற தற்குறிகள்.

8. நான் எழுப்பிய தீவிரமான கேள்விகளை ஞாநியும் சரி மற்றவர்களும் தொடாமலே விலகுவது தான் ஏன் என்று எனக்குப் புரியவில்லை.

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்