எறும்பு தின்னி *
எறும்பு தின்னியின் நிதானம்.
திடமான கால்களுடன் மந்தமான கண்களுடன்
கனமாக அசைந்து செல்கிறது.
அதன் குளிர்ந்த நாக்கு
எறும்புப் புற்றுகளுக்குள்ளே நெளிந்தேறுகிறது.
அதன் குளிர்ந்த மூச்சு
அங்குள்ள கூடுகளைச் சிதறடிக்கிறது.
உள்ளே ஓலங்கள்
உயிரின் குருட்டு வெறி
தினம் அதுகாண்பது அக்காட்சி.
மரணம் ஒரு பெரும் பதற்றம்
என அது அறிந்தது.
எனவே
வாழ்வு ஒரு நிதானமான நடை எனப்
புரிந்து கொண்டது.
இரு பறவைகள் *
வல்லூறு ஆற்றல் மிகுந்த பறவை
காற்றின் படிக்கட்டுகள்
அதன் கண்களுக்கு மட்டுமே தெரியும்
பூமி ஒரு கசங்கிய போர்வை அதற்கு.
சிட்டுக்குருவி சின்னஞ்சிறியது
கிளைகள் மீது எம்பித்தாவுகிறது
வானம் அதற்கு
தொலைதூரத்து ஒளிகடல்.
இரு பறவைகள்
இரண்டிலிருமிருந்து வானம்
சமதூரத்தில் இருக்கிறது.
-ஜெயமோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ புதினத்திலிருந்து.
வெளியீடு: தமிழினி ,
விலை ரூ.290.
342,டிடிகே சாலை,
ராயப்பேட்டை,
சென்னை – 600 014
இணையமுகவரி: http://www.intamm.com/tamilini
மின்னஞ்சல்:tamilini@intamm.com
Keyin- Gokulakannan
திண்ணை
|