கரு. ஆறுமுகத்தமிழன்
தொன்மொழியான தென்மொழி தோன்றிய குமரிக்கண்டத்தைக் கடல்கொண்ட காலம் தொடங்கி, கன்னியாகுமரிவரை மட்டுமாகத் தமிழ்நிலம் குறுகிப்போய்விட்ட இன்றைய காலம்வரையிலான பல்லாயிரம் ஆண்டுகளின் பரப்பைக் களமாகக் கொண்டிருக்கிறது ‘கொற்றவை. ‘
சிலப்பதிகாரத்தின் மையம், தீதிலா வடமீனின் திறமுடைய கண்ணகி. ‘கொற்றவையின் ‘ மையம், பெற்றும் புரந்தும் புதைத்தும் தெய்வமாக நிலைபெற்றிருக்கிற கொற்றவை.
‘கொற்றவை ‘ கண்ணகியின் கதையைத் தன்னில் ஒரு பாகமாக்கிப் புனைந்து செய்த புதுக்காப்பியம். சிலப்பதிகாரத்தின் மையம் சிதைவுபடாமல், ஆனால் சிலப்பதிகாரம் கொடுக்கிற இடைவெளிகளை வளமான கற்பனையால் இட்டு நிரப்புகிற காப்பியம். காப்பியத்துக்குச் சொல்லப்படுகிற எல்லா அமைதிகளையும் பெற்று நிற்கிறது இது. கதையை வேறுபட்ட, ஒன்றுக்கொன்று மாறுபட்ட பல்வேறு பார்வைகளின் ஊடாக நகர்த்திச் செல்கிறது. உரைநடை வடிவில் இருக்கிறதென்று பெயரே ஒழிய, பாவியமாகவே எழுதப்பட்டிருப்பதுபோன்ற உளமயக்கை உருவாக்குகிறது. திசைச் சொற்களின் துணையின்றி முற்றாகத் தமிழிலேயே இயல்கிறது இக்காப்பியம். தன்னேரில்லாத் தமிழின் வளமைக்கும் அழகுக்கும் மீண்டும் ஒரு சான்று இது.
பெண்களைப் பேசுகிறது ‘கொற்றவை. ‘ ‘ ‘முளைக்காத கல்விதை நான். மண்ணில் புதைந்த சொல்லாக் கதைகளின் தொல்விதை நான் ‘ ‘ என்கிறாள் ஒருத்தி. ‘ ‘ஐவகை நிலமும் எங்கள் பெருந்துயர் வெளியே. மூவகைத் தமிழும் எங்கள் கடுந்துயர் மொழியே ‘ ‘ என்கிறாள் மற்றொருத்தி. பெண்ணியம் பேசுகிறாள் நீலி ஒருத்தி. மரபுகள் எல்லாவற்றையும் மறுதலிக்கிறாள் ஒரு சார்வாகப் புறச்சேரிப் பெண். பெண்களின் பாடுகளை, கேட்கச் செவி தருவாரில்லாமல் தங்கள் உள்ளத்தைத் தங்களுக்குள்ளேயே ஒளித்துக் கொள்கிற அவர்களுடைய உள்ளொடுக்கத்தை, கடலன்ன காமம் உழந்தும் மடலேறாத் தொல்பெருந்தகைமையை, துனபங்கள் எல்லாவற்றையும் தாய்மையினால் வென்று மேற்செல்கிற தெய்வநிலையைப் பேசுகிறது கொற்றவை. அன்னையர் பிறக்க, அன்னையர் மறைய, தாய்மை மட்டும் அழியாமல் வாழ்கிறது என்பதுதான் ‘கொற்றவையின் ‘ காப்பிய மையம்.
தெய்வங்களின் தோற்றத்துக்குப் பகுத்தறிவும் ஏற்றுக்கொள்கிற காரணங்கள் கற்பிக்கிறார் ஜெயமோகன். ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் ‘ முன்தோன்றிய மூதன்னை ஒருத்தி அவளுடைய சமூகத்தால் கொற்றவைத் தெய்வமாக்கப்படுகிறாள். அவளுடைய கால்வழித் தோன்றல்களான முக்கண்ணன், திருமால், முக்கண்ணனின் மக்களான ஆனைமுகன், ஆறுமுகன் என்று நினைக்கத்தக்க பெருவாழ்வு வாழ்ந்த முன்னோர்கை ளத் தெய்வமாக்கும் இந்த மரபுதான் கண்ணகியையும் தெய்வமாக்குகிறது. தமிழ்மரபின் தெய்வங்கள், மனிதர்கள் கால்பாவி நடக்கிற தரையிலிருந்து, அத்தரையில் கூடியும் முரண்பட்டும் அவர்கள் வாழ்கிற சமூகங்களிலிருந்தே கிளம்பியிருக்கிறார்களேயன்றி விண்ணிலிருந்து இறங்கி வந்துவிடவில்லை என்று தெய்வக்குழப்பம் கொண்ட மாற்று மரபுகளுக்குத் தாய்மையை அடையாளம் காட்டிச் சொல்கிறது ‘கொற்றவை. ‘
தொல்தமிழ் மரபின் கூட்டு நனவிலியில் ஆழ்ந்து கிடக்கும் அறவுணர்வுகள் கண்ணகியின்வழியாகச் சன்னதமாக வெளிப்பட்டு, அரைசியல் பிழைத்தோர்க்குக் கூற்றாவதை, அதன்வழி, ஒரு முலை குறைத்த திருமாபத்தினி உலகோர் ஏத்தும் தெய்வமாவதைக் காட்சிப் படுத்துகிறது ‘கொற்றவை. ‘
மணிமேகலையும் காப்பியப் புனைஞர்களான சாத்தனாரும் இளங்கோவடிகளும் ‘கொற்றவையின் ‘ கதைமாந்தர்களாக உலவுகிறார்கள். தமிழ் வழிபாட்டு மரபின் அடிப்படையில், தென்தமிழ்ப் பாவைக்குக் காப்பியம் செய்த இளங்கோ சபரண மலையில் பெருநிலை பெற்று ஐயப்பன் எனத் தெய்வமாகிறார்.
ஜெயமோகனின் புனைவாற்றலுக்குக் காற்றின் விரைவு. அறியாக் கடலாழத்தில் அது மீனின் சிறகலைப்பு. தர்க்கத்தின் அடர்காடுகளில் அது தாவும் மானின் குளம்பு. உள எழுச்சியில் அது விண்ணளக்கும் பருந்து.
—-
arumugatamilan@yahoo.com
- பாட்டி
- சங்கனாச்சேரியும் ‘ஸ்டார்டஸ்டு ‘ம்
- விண்வெளியில் செல்லும் வால்மீன் ஒளிமுகில் மாதிரித் தூளைப் பிடித்து வந்த விண்சிமிழ் (Stardust Space Ship Collects Comet ‘s Coma Sa
- பிரபஞ்சத்தில் ஒரு நீலப்படம் ? (Between the Black-hole and the White-hole there is a Worm-hole)
- இரண்டாம் அர்த்த வரிசையின் கதை- சல்மாவின் நாவலை முன்வைத்து
- நான் கண்ட சிஷெல்ஸ் – 7
- மு புஸ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்கள் ‘
- சி.கனகசபாபதியின் ‘ புனைகதைகள் ‘
- உயிர்ப்பு தொகுப்பின் பத்து சிறுகதைகள்
- சேதிராயர்
- ஜெயமோகனின் கொற்றவை
- சுப்ரபாரதிமணியன் படைப்பு மனத்தின் செயல்பாடுகள்
- ஸி. செளரிராஜன் கவிதைகள்
- ஹெச்.ஜி.ரசூலுக்கு….
- ஹெச்.ஜி. ரசூலின் ‘வாகாபிசமும் நவீன முதலாளியமும் ‘ கட்டுரைக்கு எதிர்வினை
- கடிதம்
- ஜெயந்தி சங்கரின் மூன்று நூல்கள் வெளியீடு
- எச்சங்கள் இன்னும்
- கீதாஞ்சலி (58) ஒளிந்திருக்கும் காதலன்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- ஈரமான தீ
- அபத்தங்களின் சுகந்தம்
- கவிதைகள்
- துக்கத்தின் அலையோசை – கோகுலக்கண்ணனின் ‘இரவின் ரகசியப் பொழுது ‘
- (இங்கிலாந்து இடம் பெறாத) எடின்பரோ குறிப்புகள் – 7
- யமேய்க்கனுடன் சில கணங்கள்!
- வீடற்றவன்…
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 5
- கல்லறைக்குச் செல்லும் வழி (மூலம் : தாமஸ் மன் (ஜெர்மனி) )
- மிட்டாதார்
- முதலாம் தீர்மான கோட்பாடு
- பிளவுண்ட சமூகம் என்பதால் என்றென்றும் பிளவுபட்டிருப்பதா ?
- பிறவழிப் பாதைகள் : அன்புள்ள குட்டி ரேவதி
- சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு!
- தனிநபர்-புரட்சி-முன்னெடுப்பு, சில அபிப்பிராயங்கள்!
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-6) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- ஒருவரையொருவர் காயப்படுத்தி ரத்தம் ருசித்தலா விவாதம் ?
- மாயச் சரக்குப் பெட்டிகள் (Phantom Cargo)
- கைநுனி மின்மினி
- பெரியபுராணம் – 74 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- காத்திரு காத்திரு
- சாத்தானுடன் போகும் இரவு
- விதிகளின் மீறுகை
- செரிபடட்டும்
- வீடு
- ஹெச்.ஜி.ரசூல் கவிதைகள்